search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
    X

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

    • அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.
    • வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார்.

    திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சை வந்த அவருக்கு அ.தி.மு.க. கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் தஞ்சை வல்லம் பிரிவு சாலையில் 65 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.

    இதையடுத்து கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    நான் முதல் முதலாக அ.தி.மு.க., பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கு வந்துள்ளேன். விளையும் பயிர் முளையில் தெரியும் என்பது போல், அடுத்து வரும் தேர்தலில் வெற்றி முகத்தை இந்த கூட்டத்தை பார்த்தே நிர்ணயித்து விடலாம். அடுத்த தேர்தல் வெற்றி தேர்தலாக அமையும்.

    இங்கிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது எதிரிகள் நமக்கு எதிரே இல்லை என்பதை நீருபித்துக்காட்டுகிறது.

    இந்த இயக்கத்திற்கு எவ்வளவு துரோகம் செய்தார்கள். அழிக்கவும், முடக்கவும் பார்த்தார்கள். அத்தனையும் ஒழித்துக்கட்டப்பட்டு விட்டது. நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்றோம். தேர்தல் ஆணையத்தின் மூலமாக நல்ல தீர்வை கண்டோம். அ.தி.மு.க.,வை இனி எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. இது எம்.ஜி.ஆர்., தோற்றுவித்த இயக்கம், ஜெயலிலதா கட்டி காத்த இயக்கம்.

    நமக்கு யார் கெடுதல் நினைத்தாலும், அவர்கள் தான் கெட்டு போவார்கள். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள். அ.தி.மு.க., தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, வலிமையான கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி. இதில் யார் உழைக்கின்றார்களோ உச்சபட்ச நிலையை அடைவார்கள். நீங்களும் வரலாம். இது அ.தி.மு.க.,வில் தான் முடியும். வேறு எந்த கட்சியிலும் முடியாது. இந்தியாவில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அ.தி.மு.க., தான். அ.தி.மு.க., எதிர்காலத்தில் நிச்சயம் ஆட்சிக்கு வரும்.

    எவ்வளவு கவர்ச்சிக்கரமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு எட்டு மாதங்களாகியும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு, திராவிட மாடல் ஆட்சி என சொல்லிக்கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின், நுாறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துக்கொண்டு இருக்கிறார்.

    மக்களுக்கு எல்லாம் இது நன்றாகவே தெரியும். விஞ்ஞான உலகத்தில் யாரையும் ஏமாற்ற முடியாது.

    தி.மு.க.,வை பொறுத்தவரை அது குடும்பகட்சி. அந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆட்சிக்கு அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் குறிக்கோள். மக்களை பற்றி கவலை கிடையாது.

    அ.தி.மு.க., மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்தது. ஆனால் தி.மு.க.,வில் விவசாயத்திற்கான தண்ணீர் கிடைப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு பயிர் காப்பீடு திட்டம் மூலம் நிவாரணம் கிடைக்கவில்லை. தேசிய பேரிடர் நிவாரணமாக 12 ஆயிரம் ரூபாய் தான் வழங்கினார்கள். ஆனால் அ.தி.மு.க., 20 ஆயிரம் ரூபாய் வழங்கியது.

    தற்போது சம்பா, தாளடிக்கு தண்ணீர் இல்லை. ஆனால் மத்திய அரசிடமும் ,கர்நாடக அரசிடமும் போராடி நமது பங்கு நீரை பெற்று தரவில்லை. இருப்பினும் பயிரிட்ட விவசாயிகளுக்கு கனமழையால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வேளாண்மையை பாதுகாத்தோம்.

    விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்வதற்காக அதிகளவில் கொள்முதல் நிலையங்களை திறந்தோம்.

    காவிரி பிரச்சனைக்காக சட்ட போராட்டம் நடத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மூலமாக நமக்கு வரவேண்டிய காவிரி நீரை பெற்றோம். ஆனால் தி.மு.க., விவசாயிகளை எதிரிகளை போல பார்க்கிறது. விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. துார்வாரும் திட்டத்தையும் கைவிட்டு விட்டார்கள்.

    அ.தி.முக. ஆட்சி காலத்தில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பயிர் காப்பீடு ரூ.9300 கோடி பெற்று தந்தோம். வறட்சி நிவாரணம் கொடுத்தோம். மும்முனை மின்சார திட்டம் அமல்படுத்தினோம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்த தேர்தல் தான் 2026 தேர்தலுக்கு அடித்தளமாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு ஒரத்தநாடு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மாட்டுவண்டியை தானே ஓட்டியபடி விவசாயிகளுடன் ஊர்வலமாக சென்றார் தொடர்ந்து அங்கு சிறப்புரையாற்றினார். இதையடுத்து அவர் அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×