என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: பா.ம.க. நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்... அன்புமணி
- தமிழகத்தில் கஞ்சா போதையினால் எல்லா பகுதிகளிலும் வழிப்பறி, கொலை சம்பவம் நடக்கிறது.
- திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி சாராயத்தை கொடுத்து கெடுத்து தலைமுறையை நாசப்படுத்தி விட்டார்கள்.
மதுரை:
மதுரையில் நடைபெறும் நாடார் மகாஜன சங்க மாநாட்டில் பங்கேற்க வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமீபத்தில் தமிழகத்தில் இரண்டு பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் முல்லைப் பெரியாறு அணைக்கு நிகராக ஒரு புதிய அணையை கட்டுவோம் என்ற கவர்னரின் உரையும் தான். இந்த இரண்டையும் பா.ம.க. வன்மையாக கண்டிக்கிறது.
இப்போது இருக்கும் முல்லைப்பெரியாறு அணை வலிமையாக உள்ளது என உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு ஐந்து முறை உறுதி அளித்துள்ளது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை எல்லாம் பார்க்கும்போது வேண்டுமென்றே கர்நாடகா தமிழகத்திடம் மோதி கொண்டிருக்கிறது. தமிழக அரசு ஏமாந்து விடக்கூடாது, இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பை மற்ற மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி நலத் திட்டங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இருக்க காரணம் ஒரு பக்கம் மது, இன்னொரு பக்கம் கஞ்சா. கடந்த மூன்று ஆண்டு காலமாக போதை பொருள் பயன்பாடு 100 மடங்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் என்ன கிடைக்கிறதோ அத்தனை போதை பொருளும் தமிழ்நாட்டில் சரளமாக கிடைக்கிறது.
தமிழகத்தில் கஞ்சா போதையினால் எல்லா பகுதிகளிலும் வழிப்பறி, கொலை சம்பவம் நடக்கிறது. முதல்வர் அதில் கவனம் செலுத்த வேண்டும். திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி சாராயத்தை கொடுத்து கெடுத்து தலைமுறையை நாசப்படுத்தி விட்டார்கள்.
மருந்தகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில்தான் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
கடந்த காலத்தில் 20 லட்சம் கோடி 30 லட்சம் கோடி என்று வாய்க்கு வந்தபடி பேசினார்கள். ஆனால் பார்த்தால் ஒன்றுமே இல்லை. 1,700 ஏக்கரில் ஆரணி ஆற்றில் 4ஜி சிட்டி என்ற திட்டத்தை மதுரையில் கொண்டு வாருங்கள். ஏன் எல்லா திட்டத்தையும் சென்னையில் கொண்டு வருகிறீர்கள்? சென்னையில் போதிய இடமில்லை. 65 சதவீத தொழிற்சாலைகள் அங்கு தான் உள்ளன.
தென் மாவட்டங்களில் 12 சதவீதம் தான் தொழிற்சாலைகள் உள்ளன. சென்னையில் இன்னும் நான்கு மாதத்தில் தண்ணீர் பஞ்சம் வரப்போகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இவர்களிடம் திட்டமிடல் இல்லை. வெள்ளம் வருகிறதா, ரூ.6,000 கொடுத்து விடுவோம், அதிலும் 2,000 கமிஷன். ஆண்டாண்டு காலமாக இந்த இரண்டு கட்சிகளும் இதை தான் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ம.க. மூன்றாவது அணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்த பாராளுமன்ற தேர்தல் குறித்து எங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்றார். அதேபோல் விஜய் கட்சி ஆரம்பித்தால் அவரது கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, இன்னும் கல்யாணமே ஆகவில்லை. அதுக்குள்ள குழந்தைக்கு பேர் வைக்க சொல்கிறீர்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அரசியலுக்கு வந்து நல்லது செய்யுங்கள் என்றார்.






