என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பூங்கா அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் ஒதுக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வெள்ளிமலை பேரூராட்சிக்குட்பட்ட சாத்தன்விளை முத்தாரம்மன் கோவில் அருகே சிறுவர் பூங்கா அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பூங்காவை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.


    இந்த நிகழ்ச்சியில் வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் முறைப்படி பேச்சு வார்த்தைக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
    • பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சி களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் தே.மு.தி. க.வும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது.

    அப்போது பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க.வுடனேயே கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து பேட்டி அளித்த பிரேமலதா, 14 தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. சீட்டை தரும் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக நேற்று மீண்டும் கருத்து தெரிவித்த பிரேமலதா கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளே பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதன்மூலம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிரேமலதா தயாராக இருப்பதாகவே கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொகுதி பங்கீடு பற்றி பேச்சு நடத்துவதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் அடங்கிய குழுவை பிரேமலதா விரைவில் அமைக்க உள்ளார். இதன் பின்னர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை மீண்டும் கூட்டி ஆலோசனை நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.

    இந்த கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது. மாவட்ட செயலாளர்கள் தொகுதி பங்கீட்டு குழு ஆகியோருடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளார். இதன் பிறகே அ.தி.மு.க. சார்பில் முறைப்படி பேச்சு வார்த்தைக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

    இந்த அழைப்பை ஏற்று தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழு, அ.தி.மு.க. குழுவுடன் பேச்சு நடத்த உள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க. வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

    அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு நடத்த செல்லும்போது தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் தே.மு.தி.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.விடம் வழங்க உள்ளனர். இதனை பரிசீலித்த அ.தி.மு.க. உரிய தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • விவசாயிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
    • போராட்ட களத்தில் இருந்த அய்யாக்கண்ணுவை போலீசார் அழைத்துச்சென்று செல்போன் டவரில் ஏறிய விவசாயிகளை இறங்க கூறினர்.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.8100 வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு போராட அனுமதி அளிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதன் மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இதில் பங்கேற்ற விவசாயிகள் கோவணம் கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் தங்களது கைகளில் மண்டை ஓடுகளை ஏந்தி நின்றனர். மேலும் சில விவசாயிகள் சாலைகளில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விவசாயிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

    இந்த நிலையில் ராமச்சந்திரன், பரமசிவம், நவீன் குமார் உள்ளிட்ட 5 விவசாயிகள் திடீரென அந்த பகுதியில் உள்ள செயின் பால் காம்ப்ளக்ஸில் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த டவர் காம்ப்ளக்ஸ் மொட்டை மாடியில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ளது. இதில் 5 விவசாயிகளும் ஏறி நின்று கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உடனே போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவர்களை கீழே இறங்க கூறினர்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து இறங்க மறுத்து அடம்பிடித்தனர். அதைத்தொடர்ந்து போராட்ட களத்தில் இருந்த அய்யாக்கண்ணுவை போலீசார் அழைத்துச்சென்று செல்போன் டவரில் ஏறிய விவசாயிகளை இறங்க கூறினர்.

    பின்னர் தலைவர் வேண்டுகோளை ஏற்று அந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு டவரில் இருந்து இறங்கினர். இதற்கிடையே தலைவரை கைது செய்தால் செல்போன் டவரில் இருந்து குதிப்பதாக அந்த விவசாயிகள் மிரட்டல் விடுத்தனர்.

    இந்தப் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • சிறுவாணி அணையில் இருந்து 73 எம்.எல்.டி. தண்ணீர் வரவேண்டும் ஆனால் 38 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வருவதாகவும் கூறினார்.
    • பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சிறுவாணி அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கோவை மாநகர மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை இருப்பதாகவும் சிறுவாணி அணையில் இருந்து 73 எம்.எல்.டி. தண்ணீர் வரவேண்டும் ஆனால் 38 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வருவதாகவும் கூறினார்.

    இதன் காரணமாக 25 நாட்களுக்கு ஒரு முறை தான் கோவை மாநகர மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதாக தெரிவித்த அவர், கேரள அரசுடன் கலந்தாலோசித்து தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதேபோல், கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையில் வெள்ளலூரில் 62.61 ஏக்க நிலப்பரப்பில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 சதவீதம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுவாணி அணையில் இருந்து குறைவாகவே கேரளா அரசு தண்ணீர் தருவதாகவும், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளதாகவும், சிறுவாணி அணையில் இருந்து உரிய நீரை பெற அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதோடு, கோவை மாநகர மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிக்காக இணைப்பு சாலைகளை அகலப்படுத்த வேண்டிய தேவை உள்ளதால், அந்தப் பணிகளை முடித்த பிறகு இந்த ஆண்டிலேயே பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் துணைத்தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது மரபாகும்.
    • எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாருக்கு எனது அருகே முன் வரிசையில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் 4 முறை உங்களிடம் (சபாநாயகர்) சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பலமுறை நேரிலும் வலியுறுத்தியுள்ளோம்.

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் துணை தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது மரபாகும். எனவே எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாருக்கு எனது அருகே முன் வரிசையில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறும்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உங்களிடம் (சபாநாயகர்) தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அதற்கு நீங்களும் பதில் சொல்லி வருகிறீர்கள்.

    முன்னாள் சபாநாயகர் தனபாலு தீர்ப்பை சுட்டிக்காட்டி நீங்களும் பதில் கூறி உள்ளீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து ஆவண செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 இடங்களை எப்படியாவது கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் உறுதியாக உள்ளனர்.
    • வருகிற 17-ந் தேதி கமல்ஹாசன் சென்னை திரும்புவதற்கு வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப் படுத்தியுள்ளன.

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.

    இந்த பேச்சுவார்த்தையின் போது தி.மு.க.விடம் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் புதிதாக இடம்பெற உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் விரைவில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணியில் கோவை, தென் சென்னை, மதுரை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார்.

    3 இடங்களை எப்படியாவது கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக வெளிநாட்டில் இருக்கும் கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வெளிநாட்டில் இருந்து கமல்ஹாசன் நேற்றே சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வருகிற 17-ந் தேதி கமல்ஹாசன் சென்னை திரும்புவதற்கு வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இதன் பின்னர் அடுத்த வாரம் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் கமல் ஹாசன் பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை திரும்பியதும் கமல்ஹாசன் தி.மு.க. தலை வர் மு.க.ஸ்டாலினை சந் தித்து பேசவும் திட்டமிட்டு உள்ளார். 17-ந் தேதி கமல் ஹாசன் சென்னை திரும்பி னாலும் உடனடியாக சந்திப்பு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. வருகிற 22-ந் தேதி வரைவில் சட்ட சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டம் முடிந்த பின்னர் 23 அல்லது 24 ஆகிய தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
    • 21-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை, திருவொற்றி யூரில் உள்ள வடிவுடை யம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான மாசி திருவிழாவையொட்டி கோவிலில் நாளை (14-ந்தேதி) இரவு 7 மணியளவில் விநாயகர் உற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் (15-ந்தேதி) இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் மாசி திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை சூரிய பிரபையில் சந்திர சேகரர் உற்சவம், மாலை 7.30 மணியளவில் சந்திர பிரபையில் உற்சவம், இரவு தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சந்திர சேகரர் சுவாமி திருத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகர சுவாமி திரிபுரசுந்தரியுடன் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார்.

    தொடர்ந்து 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கல்யாண சுந்தரர்சுவாமி திருக் கல்யாண உற்சவமும், பிற் பகல் 2 மணியளவில் 63 நாயன்மார்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாடவீதி உற்சவமும் நடைபெறும். இரவு 9 மணி அளவில் சேவை உற்சவம் நடக்கிறது.

    • அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிக்கப்பட்டது.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடை நேரத்தில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிக்கப்பட்டது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீதமுள்ள 10சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டது என்றார்.

    சோதனை ஓட்டத்தில் ஒரு சில ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என கூறிய அவர், விடுபட்டுள்ள ஏரி குளங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளதாகவும், ஒரு சில இடங்களில் பைப் இணைப்பு நடந்து வருவதாகவும், விரைவில் அத்திக்கடவு அவிநாசி திட்ட தொடக்க விழா நடைபெறும் எனவும் உறுதி அளித்தார்.

    அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் 100 ஏரிகளுக்கு நீர் ஏற்றும் திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது இந்த திட்டம் சுணக்கமாக செயல்பட்டு கொண்டிருப்பதால் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    • ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கிறது.
    • விற்பனையாளர்கள் முதல் அதிகாரிகள் வரை மறைமுகமாக பண வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகள் மூலமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 5,300 கடைகள் மூலமாக விதவிதமான மது வகைகள் விற்பனை செய்ய 23 ஆயிரம் விற்பனையாளர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    பண்டிகை காலங்கள் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு 44 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு அதனை 46 ஆயிரம் கோடியாக ஆக உயர்த்துவதற்கு திட்டமிட்டு மது விற்பனை சுறு சுறுப்பாக நடைபெற்று வருகிறது.

    10 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை அளவுக்கு ஏற்ப மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கிறது.

    இதனை தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுக்கடைகள் முன்பு விலை பட்டியல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டது. ஆனால் பெரும்பாலான கடைகளில் அதனை அமல்படுத்தாமல் உள்ளனர். விற்பனையாளர்கள் வழக்கம் போல 10 ரூபாயை கூடுதலாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் வசூலித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்வதாக குடிமகன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரைபாட்டில் மதுபானத்தை கேட்டால் அதற்கு பதிலாக இரண்டு குவார்ட்டர் பாட்டி லை தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். 2 குவார்ட்டர் மது பாட்டிலை கொடுத்தால் ஒரு பாட்டிலுக்கு பத்து வீதம் 20 ரூபாய் வசூலிக்கலாம். ஆனால் அரை பாட்டில் மதுபானத்தை கொடுத்தால் பாட்டிலுக்கு ரூ.10 மட்டுமே வசூலிக்க முடியும் என்றும் மது பிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாகவே குவார்ட்டர் பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு மறைமுகமாக விற்பனையாளர்கள் வருவாயை ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இப்படி டாஸ்மாக் மதுக் கடைகளில் குவார்ட்டர் மது பாட்டில்கள் 70 சதவீதம் அளவுக்கு விற்பனையாகுவதாகவும் அரை பாட்டில் மதுபானங்கள் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இது தொடர்பாக மது பிரியர்கள் சிலர் கூறும் போது:-

    டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலான நேரங்களில் அரை பாட்டில் மதுபானங்களை விற்பனையாளர்கள் தருவதில்லை. 2 குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே கொடுத்துவிட்டு ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் 20 ரூபாய் வசூலித்து விடுகிறார்கள்.

    இதன் மூலம் விற்பனையாளர்கள் முதல் அதிகாரிகள் வரை மறைமுகமாக பண வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தனர். இந்த புகார் தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்ட போது,

    "மது பாட்டில்களை கூடு தல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதற்காகவே கடைகளின் முன்பு விலை பட்டியலை வைப்பதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கூடுதலாக விற்பனை செய்யும் விற்பனை யாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

    எனவே மது வாங்கும் குடிமகன்கள் விலை பட்டியலை பார்த்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தை மட்டுமே கொடுத்தால் போதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    ஆனால் இது போன்ற உத்தரவுகள் டாஸ்மாக் கடைகளில் எப்போதுமே காற்றில் பறப்பதாகவே இருந்து வருகிறது.

    கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுக்கவும் அதிக அளவில் சப்ளை செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மது பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறுசிறு பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்.
    • கிளாம்பாக்கத்தில் பிரச்சனைகள் இருந்தால் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நேரில் அழைத்து செல்கிறோம்.

    சென்னை:

    கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறுசிறு பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். திறப்பதில் அவசரம் காட்டியதாலேயே பயணிகளுக்கு சிரமம் என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்

    * கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து யாரும் புகார் கூறவில்லை.

    * கிளாம்பாக்கத்தில் 100 கோடி அளவிலான பணியை திமுக அரசு மேற்கொண்டது.

    * கிளாம்பாக்கத்தில் விரைவில் ரெயில் வசதி ஏற்படுத்தப்படும்.

    * கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதி இல்லை என்று யாரும் குறை சொல்லவில்லை.

    * இரவு நேரத்தில் பேருந்துகள் இல்லை என்ற குறைபாடு மட்டும்தான் வருகிறது என்று கூறினார்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக சிறுசிறு பிரச்சனைகள் குறித்து ஈபிஎஸ், அமைச்சர் சேகர்பாபு இடையே விவாதம் நடைபெற்றது.

    இந்நிலையில் பெரிய பிரச்சனைகளையும் தீர்த்த பிறகே பேருந்து முனையத்தை திறந்தோம் என்று ஈபிஎஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை தீர்த்து வைக்க தயாராக உள்ளோம்.

    கிளாம்பாக்கத்தில் பிரச்சனைகள் இருந்தால் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நேரில் அழைத்து செல்கிறோம். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம் என்று முதலமைச்சர் தெரிவித்து விவாதத்தை முடித்து வைத்தார்.

    • நோய்த்தொற்று அறிகுறி உள்ள நபர்களை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • மருத்துவ குழுவினருக்கு, நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா மாநிலத்திற்கு சென்று வந்தவர்களுக்கு குரங்கு காய்ச்சல் நோய் அறிகுறி உள்ளதா? என்பதை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கியாசனூர் பாரஸ்ட் வன நோயால்(குரங்கு காய்ச்சல்), சமீபத்தில் கர்நாடக மாநிலம் சிமோகா, உத்திரகனடா, சிக்மங்களூர் ஆகிய மாவட்டத்தில், 53 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் உயிரி ழந்துள்ளதாக தெரிகிறது. மனிதர்களுக்கு இந்நோய் பாதிக்கப்பட்ட குரங்கின் உண்ணி கடி மூலம் பரவுகிறது. குறிப்பாக காட்டில் வசிக்கும் வைரசால் பாதிக்கப்பட்ட குரங்குகளிடம் இருந்து பரவுகிறது.

    அவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது சமீபத்தில் உயிரிழந்த குரங்குகளிடமிருந்து ஆடு மற்றும் மாடுகளுக்கு பரவி, அவ்வழியே மனிதர்களுக்கும் நோய் பரவும்.

    ஆனால், மனிதர்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இந்த நோய் பரவாது. அத்துடன், உண்ணி கடித்த 3 முதல் 8 நாட்களுக்கு பிறகு காய்ச்சல், தலைவலி, குளிர், உடல் வலி ஏற்படும். அதிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகு ரத்த அணுக்கள் குறையலாம். சிலருக்கு இது 2 வாரங்கள் வரை நீடிக்கும்.

    பெரும்பாலோனோர் இதிலிருந்து குணம் அடைந்து விடுவார்கள். சிலருக்கு இரண்டாம் முறை காய்ச்சல் தலைவலியுடன் உடல் நடுக்கம், பார்வை மங்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.

    இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். போதுமான அளவிற்கு நீர் ஆகாரம் வழங்க வேண்டும். மேலும், உண்ணி கடி ஏற்படாமல் இருக்க, முழு நீள ஆடைகளை அணிய வேண்டும். ஆடு, மாடு ஆகியவற்றுக்கு உண்ணி பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வன அலுவலர்கள் காட்டில் குரங்கு இறந்துள்ளதா என்பதையும், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கால்நடை துறையினரும் கண்காணிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் ஓசூர், தளி, கெலமங்கலம் மற்றும் சூளகிரி வட்டாரங்களில், கர்நாடக மாநிலம் சென்று வந்தவர்களுக்கு, நோய் அறிகுறி உள்ளதா என்பதை சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நோய்த்தொற்று அறிகுறி உள்ள நபர்களை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ குழுவினருக்கு, நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.
    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆனாலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை மிக அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 முதல் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அதன் விலை மேலும் அதிகரித்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் பூண்டு பதுக்கப்பட்டுள்ளதா? இதனால் விலை உயர்ந்துள்ளதா? என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளதால் அது குறித்தும் அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த பூண்டு வியாபாரி ஒருவர் கூறுகையில், வட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பூண்டு பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிடவில்லை. இதனால் பூண்டு விளைச்சல் 4-ல் ஒரு மடங்காக குறைந்துள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மார்கெட்களுக்கு பூண்டு வரத்து தற்போது வரை அதிகரிக்கவில்லை.

    சென்னை கோயம்போடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக 30 லாரிகளில் கொண்ட வரப்படும் பூண்டு தற்போது 9 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்படுகிறது. இதே போல சேலம் மார்க்கெட்டுகளுக்கும் 4-ல் ஒரு பங்காக பூண்டு வரத்து குறைந்துள்ளது. தற்போது பூண்டு அறுவடை காலம் தொடங்கி உள்ளதால் இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலை குறையும். பூண்டுகளை பதுக்கினால் அழுகிவிடும், இதனால் பதுக்கவும் வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    ×