என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திருத்தணி, திருப்பரங்குன்றம் கோவில்களிலும் திருப்பணிகள் நடக்கிறது.
- உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை:
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியதாவது:-
திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுக் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. இந்த கூட்டத்தில் அறநிலையத் துறைக்கான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானம் தமிழ்க் கடவுளான முருகப் பக்தர்கள் மாநாடு நடத்துவது.
அதன்படி உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மாநாடு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பழனியில் நடைபெறும்.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதும் முருகன் கோவில்களை நிர்மாணித்துள்ள அறங்காவலர்கள் அழைக்கப்படுவார்கள். எப்படியும் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள்.
வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். உள்ளூர் போக்குவரத்தும் இலவசமாக வழங்கப்படும்.
2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் முருகனை பற்றிய ஆய்வுகள், முருகனின் புகழ் பரப்பும் கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள், இடம்பெறும்.

மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். மாநாடு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ரூ.98 கோடி மதிப்பீட்டில் அழகு தமிழால் நடத்தப்பட்டது.
படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அறநிலையத்துறை நிதி ரூ.100 கோடி மற்றும் தனியார் பங்களிப்பு ரூ.200 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது.
இதே போல் திருத்தணி, திருப்பரங்குன்றம் கோவில்களிலும் திருப்பணிகள் நடக்கிறது.
26 ராமர் கோவில்கள் கும்பாபிஷேகங்கள் நடத்தப் பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி மதத்துக்கு எதிரானதல்ல. கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கோவில்கள் தூய் மையாகவும், சிறப்பாகவும் பராமரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல்லை தொகுதியில் சரத்குமார் போட்டியிடு வாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
- பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி உள்ளனர்.
நெல்லை:
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜனதாவும் 3-வது அணியாக தங்களது தலைமையில் கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முன்னேற்ற கழகம் உள்பட கட்சிகள் பா.ஜனதாவுக்கு தாவி வருகிறது.
தற்போது டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பி.எஸ். அணி ஆகியவையும் பா.ஜனதாவுடன் கைகோர்த்துள்ளது. இதனால் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி வலு பெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார், பா.ஜனதாவுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜனதாவுடன் இணைப்பதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பை கட்சியினரே எதிர்பாராத வகையில் சரத்குமார் அறிவித்தார். 2 கட்சிகளின் கொள்கையும் ஒத்துப்போவதால் கட்சியை இணைத்து விட்டதாகவும் அவர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தெரிவித்தார்.
இதனால் பா.ஜனதாவின் கூட்டணிக்கு தற்போது மேலும் வலு சேர்ந்துள்ளது என்றே கூறலாம்.
தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், குமரி ஆகியவற்றில் நாடார் சமுதாயத்தினர் அதிக அளவில் இருக்கும் நிலையில் சரத்குமாரின் இந்த இணைப்பு மூலமாக தென் மாவட்டங்களில் பா.ஜனதாவுக்கு வலு சேர்த்துள்ளதாகவே அக்கட்சியினர் கருதுகின்றனர்.
இதற்கிடையே பா.ஜனதா சார்பில் நெல்லை தொகுதியில் சரத்குமார் போட்டியிடு வாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
ஏற்கனவே சரத்குமார் சமீபத்தில் நெல்லையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது நெல்லை தொகுதியில் நிச்சயமாக போட்டியிடு வேன் என்று தெரிவித்திருந்தார்.

அவர் இதற்கு முன்பு நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தாலும் அதில் கணிசமாக ஓட்டுக்களை பெற்றிருந்தார். இதனால் அவர் ஏதாவது ஒரு பெரிய கட்சியின் கூட்டணியில் நெல்லை தொகுதியில் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் கருதினர்.
இதற்கிடையே கட்சியை அவர் பா.ஜனதாவுடன் இணைத்துள்ள நிலையில் எப்படியாவது நெல்லை தொகுதியில் போட்டியிடுங்கள் என்று கட்சியினர் அவரை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், வருகிற 15-ந்தேதி குமரியில் நடைபெறும் பா.ஜனதா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் சரத்குமார் பங்கேற்க உள்ளார்.
அப்போது சரத்குமார் நெல்லை தொகுதி வேட்பாளராக நிச்சயம் அறிவிக்கப்படுவார் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதேநேரத்தில் அவருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி நிச்சயம் கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால் அதற்கு நிச்சயமாக வாய்ப்பு இல்லை என்பது போலவே நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளின் குரல் ஒலிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே நெல்லை தொகுதியில் போட்டியிடுவதற்காக பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் காய் நகர்த்தி வருகிறார்.
அவர் நெல்லை பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் மத்திய மந்திரி வி.கே.சிங்கை அழைத்து வந்து வீடு வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து பாராளுமன்ற அலுவலகத்தை நெல்லை சந்திப்பில் திறந்தார்.
ஏற்கனவே மாநில தலைவர் அண்ணாமலை நெல்லையில் என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்ட நிகழ்வு கட்சி தொண்டர்களிடையே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரது நடை பயணத்தால் நெல்லை மாவட்டத்திலும் பா.ஜனதாவின் மீது மக்கள் பார்வை பதிய தொடங்கியதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி உள்ளனர். இதற்கு முழு மூச்சில் நயினார் நாகேந்திரன் செயல்பட்டு உள்ளார்.
அவர் தனக்கு தான் நெல்லை பாராளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தேவேந்திர குல வேளாளர் சமுதாய ஓட்டுக்களை பெற ஜான்பாண்டியன், யாதவ சமுதாய ஓட்டுக்களை பெற தேவநாதன் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை தங்கள் பக்கம் பா.ஜனதா இழுத்துள்ள நிலையில், தற்போது சரத்குமார் இணைந்துள்ளதால் நாடார் ஓட்டுக்களை கணிசமாக கிடைக்கும் என்று பா.ஜனதாவினர் கணக்கு போட்டுள்ளனர்.
இதனால் நெல்லை தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் சீட்டை வாங்குவதற்கு பா.ஜனதா தேசிய தலைமையிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
- புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் அவரது உத்தரவின் பேரில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த தளவாய்புரம் பகுதியை சேர்ந்த காசித் துரை தலைவனார் (வயது 23), தூத்துக்குடியை சேர்ந்த முத்து கல்யாணி(22), கீழப்புதூரை சேர்ந்த லட்சுமணகுமார் (26), ராம்குமார்(27), சிந்தாமணிப்பேரி புதூரை சேர்ந்த கலைச்செல்வன்(19) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்களை போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்த சுமார் 7½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறுவன் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- மாணவர்களின் நிலையை நினைத்து பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர்.
- மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:
திருவாரூர் விஜயபுரம் கடை வீதியில் அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது ஆட்சி காலத்தில் போதை பொருட்கள் பெரும் புழக்கத்தில் இல்லை. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரி பகுதிகளில் இளைஞர்கள் பெருமளவு கூடும் இடங்களில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக பல்வேறு விதமான போதைப் பொருட்கள் பல வண்ணங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் எளிதாக கிடைக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் நிலையை நினைத்து பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நல்வழியை ஏற்படுத்துகின்ற பாதுகாப்பான நிலையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. தான் உண்மையான அ.தி.மு.க. என சுப்ரீம் கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் அறிவித்துவிட்ட நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டசபை செயலகமும் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருக்கோவிலூர் தொகுதியை காலியிடமாக அரசிதழில் வெளியிட்டது.
- ராகுல் காந்தி விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே போல் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சென்னை:
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கில் விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து 2016-ம் ஆண்டு தீர்ப்பு கூறி இருந்தது.
இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு மறுபடியும் விசாரித்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து அதன் பிறகு பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.
இதனால் பொன்முடி அமைச்சர் பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
சட்டசபை செயலகமும் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருக்கோவிலூர் தொகுதியை காலியிடமாக அரசிதழில் வெளியிட்டது.

இந்த நிலையில் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், குற்றவாளி என தீர்மானித்த ஐகோர்ட்டின் உத்தரவை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அவரது தண்டனைக்கு தடையும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு வந்த நாளில் இருந்து பொன்முடி மறுபடியும் எம்.எல்.ஏ.ஆகி விட்டதாகவும், ராகுல்காந்தி விஷயத்தில் கடைபிடிக்கப்பட்டது பொன்முடிக்கும் பொருந்தும் என்று தி.மு.க. வழக்கறிஞர் வில்சன் எம்.பி. கருத்து தெரிவித்தார்.
சபாநாயகர் அப்பாவு கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் ராகுல் காந்தி விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே போல் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் தீர்ப்பின் நகல் வெளியானது. இதனால் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார்.
மேலும், தீர்ப்பு நகல் சட்டப்பேரவை செயலாளரிடம் கிடைத்தவுடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படும்.
- குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை.
- பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் அரசரடி, பொம்முராஜபுரம், நொச்சியோடை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வரும் நிலையில் மின்சாரம், சாலைவசதி என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர்.
இப்பகுதி வனத்துறைக்கு கட்டுப்பட்ட இடம் என கூறி எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தனர். வனத்தை சேர்ந்து வாழ்ந்து வந்த இப்பகுதி மக்கள் தங்கள் நிலங்களுக்கு உரம், பூச்சி மருந்து போன்றவற்றை வாங்கி செல்லக்கூட முடியவில்லை.
மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. சேதம் அடைந்த தங்கள் வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் கூட வனத்துறையினர் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மலை கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பின்பு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தங்கள் கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராததால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தராததால் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு இங்கு வர வேண்டாம் எனவும் மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கருப்புக் கொடி ஏற்றப்பட்ட கிராமங்களுக்கு ஆண்டிபட்டி தாசில்தார் காதர் செரீப் தலைமையிலான அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், பல ஆண்டுகள் தங்கள் கோரிக்கைக்காக போராடி எந்த பலனும் கிடைக்கவில்லை. ஓட்டு கேட்க மட்டும் ஊருக்கு வரும் கட்சியினர் அதன்பிறகு தங்களை கண்டுகொள்வதே இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
- நெல்லை மாவட்டத்தில் புதிய துணை இயக்குநர் அலுவலகம் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
- மண்டலத்திற்கு ஊர்தி மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரூ.68.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப்பணி துறையின் நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக மதுரையை தலைமையிடமாக கொண்ட தென்மண்டலத்தினை 2 ஆக பிரித்து நெல்லையை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் அமைக்கப்படும் என அரசு உத்தரவிட்டது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் புதிய துணை இயக்குநர் அலுவலகம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. பாளை என்.ஜி.ஓ.பி. காலனி பகுதியில் நடைபெற்ற இவ்விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதில் கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தீயணைப்பு மீட்புப்பணி துறை தென்மண்டல துணை இயக்குநர் விஜயக்குமார், நெல்லை மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மண்டலமானது நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 34 தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையங்களையும் உள்ளடக்கியது.
பேரிடர் மற்றும் அவசர காலங்களில் இம்மண்டல துணை இயக்குநர் உடனுக்குடன் விரைந்து சென்று பணிகளை மேற்பார்வையிடுவதற்கும், மண்டலத்திற்கு உட்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுரை மண்டல அலுவலக்திற்கு சென்று வருவதற்கான பயண நேரம் குறையும். இந்த மண்டலத்திற்கு ஊர்தி மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக ரூ.68.35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
- பல்வேறு நகரங்களில் தி.மு.க.வினர் குஷ்பு கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை:
சென்னையில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான பா.ஜனதா நிர்வாகி நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பல்வேறு நகரங்களில் தி.மு.க.வினர் குஷ்பு கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் தி.மு.க. மகளிர் அணியினர் இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஒட்டு மொத்த சென்னை மாவட்ட மகளிர் அணியினர் திரளாக பங்கேற்கும் இந்த போராட்டத்தில் குஷ்பு கொடும் பாவியையும் கொளுத்த இருக்கிறார்கள்.
மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தில் மகளிர் தொண்டர் அணியினர், மகளிரணி அமைப்பாளர்கள் திரளாக பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.
- மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார்.
நாகர்கோவில்:
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார். அதன் பிறகு முதல் முறையாக இன்று குமரி மாவட்டம் வந்தார்.
அவருக்கு குமரி மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை தருவதை வரவேற்கிறேன். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம் ஜெயலலிதாவால் கொண்டு வந்த காரணத்தால் அதை நிறுத்தி உள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை நியாயமான பெண்களுக்கு சென்று சேரவில்லை. கட்சியை சேர்ந்த பெண்களுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்குவதாக கூறியிருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதைதான் குஷ்பு கேட்டுள்ளார். அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
உரிமை தொகை வாங்குபவர்கள் பிச்சைக்காரிகள் என்று குஷ்பு கூறியிருப்பது அவருடைய கருத்து. என்ன அர்த்தத்தில் அவர் பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு இல்லை. நிறைய பெண்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள்.
நன்றாக பேசுபவர்கள் சட்டசபையில் முன் இருக்கையில் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு முன் இருக்கையில் அமர வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-வது முறையாக வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சிகள்தான் காங்கிரசும், தி.மு.க.வும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களுக்கு பதவி கொடுக்காமல் எப்போது வேலை பார்த்தீர்கள் என்று ஒரு பெண்ணிடம் கேட்க முடியாது.
பாரதிய ஜனதாவில் எனக்கு பதவி கண்டிப்பாக கொடுப்பார்கள். விரைவில் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பெண்களுக்கு எந்த சீட்டு கொடுத்தாலும் சரி, பதவிகள் கொடுத்தாலும் சரி, அதற்கு 2 விஷயங்கள் மையமாக கொண்டிருக்கும்.
ஒன்று பெண்களை அங்கீகாரப்படுத்தும், அதிகாரப்படுத்தும் முயற்சி இருக்கும். பெண்கள் களப்பணி ஆற்று தளத்தை உருவாக்குவார்கள். அது தான் பாரதிய ஜனதாவின் சீரிய தன்மை. அதை விரைவில் செய்வார்கள்.

பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் வந்துள்ளோம். குடும்பக் கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த சுயநலமும் இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் பணியை மட்டுமே பிரதான பணியாக நினைக்க கூடியது பாரதிய ஜனதா. மக்கள் பணி ஆற்றுவதற்காக சுயநலம் இல்லாமல் பணியாற்ற நான் பாரதிய ஜனதாவில் இணைந்து உள்ளேன்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தந்தை எம்.பி.யாக இருந்தால் மகன் எம்.எல்.ஏ.வாக இருப்பார். என்னைப் பொறுத்தவரை சாமானிய மக்கள் பதவிக்கு வர வேண்டும். நான் சாமானிய பெண். ஆனால் என்னை உயர்த்த காங்கிரஸ் கட்சி நினைக்கவில்லை.
அதே நேரம் அவர்களது குடும்ப வாரிசுகளை தலைவர் ஆக்குவார்கள். வாரிசுகள், அதிகாரம், பணம் இருப்பவர்கள் காங்கிரசில் இருக்க முடியும். ஆனால் சாமானிய மக்களால் பாரதிய ஜனதாவில் இருக்க முடியும்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியிலும் வாரிசுக்கு தான் சீட்டு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த 3 ஆண்டுகளில் ஏதாவது பணிகள் நடந்து இருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார். எனவே அதற்கு ஏற்றார் போல் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ஒருவர் வர வேண்டும்.
இங்கிருந்து 2014-ல் 39 எம்.பி.க்கள் சென்றார்கள். அவர்கள் சென்று என்ன பிரயோஜனம். எதுவும் இல்லை. பாராளுமன்ற வாசலில் போராட்டம் நடத்தி விட்டு வந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு எதுவும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.
மத்தியில் ஆளக்கூடிய கட்சி இங்கும் வெற்றி பெற வேண்டும். இங்கு வெற்றி உறுதி செய்யப்பட்டால் தான் மக்களுக்கு இன்னும் பலன்கள் கிடைக்கும். இந்த முறை களம் பெரிய அளவில் மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த மாற்றமும் ஏற்றமும் பாரதிய ஜனதாவை உயர்த்தி பிடிக்கும். அதை நாங்கள் உறுதியாக எடுத்து செல்வோம்.
தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வெளியே போய்விடுகிறார்கள். விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டீர்கள்? ஆனால் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட போவதில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை முடிவு செய்தால் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.
மதுரை:
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் வரி ஏய்ப்பு செய்து அதிக அளவில் தங்க நகைகளை சட்டவிரோதமாக கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
அவ்வாறு தங்கம் கடத்தி வரும் பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வந்த பயணி ஒருவரை விமான புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் உடமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.21 லட்சத்து 31 ஆயிரத்து 640 மதிப்பிலான 322 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பசை வடிவிலும், பவுடராகவும் மாற்றி கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்திய விமான பயணியிடம் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நம் மண்ணை, நம் தமிழை, நம் பண்பாட்டை, நம் பெருமையை பழிப்பவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்து விட்டது.
- ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவங்கள் நடந்தது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, நிறைவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிப்பட்டியில் இன்று நடந்தது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 560 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் 273 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். ரூ.489 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 57,325 பயனாளிகளுக்கு 223 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் எழுச்சிமிகு விழாவில் மகிழ்ச்சியோடு நான் பங்கேற்க வந்திருக்கிறேன். இந்த மாவட்டங்களுக்கெல்லாம், நான் தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிய மன உறுதியோடு, தெம்போடு, துணிவோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன். தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் அளித்த வாக்குகளின் பின்னால் இருக்கிற நம்பிக்கையை சிந்தாமல் சிதறாமல் பாதுகாத்து, வாக்களிக்க தவறியவர்களின் நம்பிக்கையை பெறுகிற வகையில் இதுவரை 3 ஆண்டு கால ஆட்சியை வழங்கிய பெருமையோடு உங்களின் முகங்களை நான் பார்க்கிறேன்.
நீங்கள் மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள். உங்களின் மகிழ்ச்சி, எழுச்சியை பார்க்கிறபோது பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலாக இருந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை வந்திருக்கிறது.
பொள்ளாச்சி என்றாலே கவிஞர் மருதகாசி எழுதிய பாடல்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அதிலும் இன்றைக்கு இன்ஸ்டாகிராமில் இருக்கிற இளைஞர்களிடம்கூட அவரது அந்த பாடல் போய் சேர்ந்திருக்கிறது. 'பொதியை ஏற்றி வண்டியில, பொள்ளாச்சி சந்தையில, விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு, நீயும் விற்று போட்டு பணத்த எண்ணு செல்லக்கண்ணு' என்ற இந்த பாடல் பொள்ளாச்சியின் வர்த்தக பெருமையை சொல்கிறது. அப்படிப்பட்ட இந்த பொள்ளாச்சி அமைந்துள்ள கோவை மாவட்டத்துக்கு 4 முறை வந்து 1 லட்சத்து 48 ஆயிரத்து 949 பேருக்கு ரூ.1441 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி இருக்கிறேன். இன்று 5-வது முறையாக வந்திருக்கிறேன்.
இது அரசு நிகழ்ச்சியா? அல்லது ஒரு பெரிய மண்டல மாநாடா? என்று எண்ணக்கூடிய அளவுக்கு இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள 4 மாவட்ட அமைச்சர்களுக்கும், 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், மகளிருக்கு விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம், மக்களு டன் முதல்வர் திட்டம், இதற்கெல்லாம் முத்தாய்ப் பாய் நீங்கள் நலமா திட்டம் ஆகிய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
நமது திட்டங்கள் மூலமாக பயன் அடைந்த ஒவ்வொருவரையும் செல்போனில் அழைத்து முதலில் நீங்கள் நலமா? என்று கேட்கிறேன். பின்னர் திட்டத்தின் பயன் வந்து சேர்ந்ததா? என்று கேட்கிறேன். அதில் ஏதாவது சிரமம் இருக்கிறதா? என்று கேட்கிறேன். கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல் கடைக்கோடியில் இருக்கும் மக்களிடமும் பேசுகிற முதலமைச்சராக இருக்கக்கூடியவன் நான்தான்.
இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள், அடக்கத்தோடு சொல்கிறேன். உரிமையோடு சொல்கிறேன். உங்கள் ஒவ்வொருவரின் உணர்வையும் மதிப்பவன் நான். உங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் காது கொடுத்து கேட்பவன் நான். உங்கள் கோரிக்கைகளை, தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உழைக்கிற முதலமைச்சர் நான். அதனால்தான் நீங்கள் நலமா? திட்டத்தை தொடங்கி இருக்கிறேன். இப்படி சிந்தித்து மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்குவதால் தான் தமிழ்நாட்டின் தொழில் வளம் உயருகிறது. வேலைவாய்ப்பு பெருகுகிறது. பொருளாதார வளம் வளருகிறது.
ஒட்டுமொத்த தமிழ்நாடு முன்னேறுகிறது. அதைப் பார்த்து சிலர் பொறாமைப்பட்டு தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் பொய்களையும், அவதூறுகளையும் பரப்ப வாட்ஸ் அப் யுனிவர் சிட்டி நடத்துகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தக்க பாடம் புகட்டும் நேரம் வந்து விட்டது.
நம் மண்ணை, நம் தமிழை, நம் பண்பாட்டை, நம் பெருமையை பழிப்பவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்து விட்டது. அதன் அடையாளம்தான் நீங்கள் திரண்டு வந்திருக்கும் காட்சி.
நான் ஒரு கோப்பில் கையெழுத்து போடும் போது லட்சக்கணக்கான மக்கள், கோடிக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று பொருள். அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய ஆட்சியாக கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது.
10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தது. அவர்களால் இப்படி பட்டியல் போட்டு சொல்ல முடியுமா? மேற்கு மண்டலத்தை தங்கள் கோட்டை என்று சொன்னார்கள். வாக்களித்த மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா? இத்தனைக்கும் மேற்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தனர்.
அவர்கள் இந்த மேற்கு மண்டலத்துக்கு செய்தது என்ன? மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது இந்த பொள்ளாச்சி சம்பவம். மறந்து விட முடியுமா? பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து தைரியமாக அ.தி.மு.க. ஆட்சியில் வலம் வந்தார்கள். புகார் கொடுத்தவர்களை மிரட்டினார்கள். தி.மு.க. மகளிர் அணி சார்பில் தான் போராட்டம் நடத்தினார்கள். பிறகு நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு நாடகம் போட்டார்கள். ஆனால் சாட்சிகள் மிரட்டப்படக்கூடிய வேடிக்கையை பார்த்தார்கள்.
அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்படி ஏதும் இல்லை, ஆதாரம் இருந்தால் கொடுங்கள் என்றார். அப்போது நான் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது இதை சும்மா விட மாட்டேன் என்று சொன்னேன். நிச்சயமாக இதற்கான நடவடிக்கையை எடுப்பேன் என்று அப்போதே உறுதி தந்திருக்கிறேன். இன்றைக்கும் மறந்து விடவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிய கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போட்டு இருக்கிற நிலையில் அந்த பெண்ணின் பெயரையும், முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. வழக்கு கோர்ட்டில் இருக்கிறது.
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவங்கள் நடந்தது. அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தியது யாருடைய ஆட்சியில். பெண் போலீஸ் எஸ்.பி.க்கே பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்? தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது யார் ஆட்சியில்? கஞ்சா, குட்கா, மாமூல் பட்டியலில் அமைச்சர், டி.ஜி.பி. இருந்தனர். அது யாருடைய ஆட்சியில்? அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய விடாமல் தடுத்த கூட்டணிதான் இன்றைக்கு உத்தமர் வேஷம் போடுகிறார்கள். இந்த கூட்டணி மறுபடியும் மக்களை ஏமாற்ற, பிரிந்த மாதிரி நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். டிராமா நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டு நலனுக்கும், தமிழர்களின் நலனுக்கும் எதிரான அ.தி.மு.க., பா.ஜ.க. கள்ளக்கூட்டணி ஒரு பக்கம் என்றால், தமிழ்நாட்டை வளமாக்க, தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இன்னொரு பக்கம் ஜனநாயக சக்திகளும், தி.மு.க.வும் ஒற்றுமையாக நிற்கிறோம். ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதே இத்தனை சாதனைகளை, திட்டங்களை நம்மால் கொடுக்க முடிகிறது என்றால், நமக்கு உதவி செய்கிற ஒன்றிய அரசு அமைந்தால் இன்னும் 10 மடங்கு சாதனைகளை இந்த தி.மு.க. செய்யும். அதற்கான நேரம் நெருங்கி வருகிறது.
நாட்டு மக்களுக்கு எதையுமே செய்து தராத பிரதமர் மோடியின் உத்தரவாதம் என்று பக்கம் பக்கமாக விளம்பரம், டி.வி.யில் விளம்பரம் செய்கிறார்கள்.
பிரதமர் மோடியே, நீங்கள் கொடுத்த பழைய உத்தரவாதமான ஒவ்வொரு வருக்கும் 15 லட்சம் ரூபாயின் இன்றைய கதி என்ன? இளைஞர்கள் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் கொடுத்தீர்களே அந்த கதி என்ன? அதை பிரதமர் சொல்ல வேண்டும்.
அடுத்த வாரத்தில் அவர் தமிழ்நாட்டுக்கு வருவதாக செய்தி வந்திருக்கிறது. தமிழ் நாட்டுக்கு செய்து கொடுத்திருக்கிற சிறப்பு திட்டங்களை பட்டியல் போடுங்கள். என்ன சிறப்பு திட்டங்களை கொண்டு வந்தீர்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் கேட்கணும். பதில் சொல்லுங்கள் பிரதமரே என்று எல்லோரும் கேட்கணும்.
போனமுறை வந்தபோது பா.ஜ.க. தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை தி.மு.க. தடுக்கிறது என்று சொன்னார். நீங்கள் அண்ட புளுகு ஆகாச புளுகு என்று ஒரு பழமொழி கேட்டு இருப்பீர்கள். இது மோடி புளுகு. அதை நம்பாதீர்கள். அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார் நாம் தடுப்பதற்கு.
எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று சொல்வாரா? நான் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2014-ம் ஆண்டு அறிவித்தீர்கள். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா. அவர் தடுத்தாரா? இல்லையே. அடுத்து உங்கள் நண்பர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அவர்கள் தடுத்தார்களா? இல்லையே. 2021-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். நாங்கள் தடுத்தோமா? இல்லை. தமிழ்நாட்டு மக்கள்தான் தடுத்தார்களா? இல்லையே. உங்களை யாரும் தடுக்கவில்லை. ஆட்சியில் இருந்த 10 வருடமாக தமிழ்நாட்டை திரும்பி பார்க்காமல், தேர்தலுக்கு முன்பு 10 நாள் வந்து பொய் சொன்னால் தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் இளிச்சவாயர்களா? பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும் தான் பா.ஜ.க.வின் உயிர் மூச்சு.
இனி இந்த பொய்களும், கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது. மாநிலத்தை கெடுத்த அ.தி.மு.க, மாநிலத்தை கண்டு கொள்ளாத பா.ஜ.க., இந்த கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனே முக்கியம் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கும் திராவிட மாடலுக்கு நீங்கள் துணை இருப்பது போல், உண்மையான வளர்ச்சியை நமது நாடு காண நாட்டின் மொத்த இந்திய மக்களும் தயாராகி விட்டார்கள். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். தமிழ்நாட்டை உயர்த்துவோம். இந்தியாவை காப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் 4-ம் கேட் அருகே சில்வர்புரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 43).
இவர் புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 2 பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை மோகன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மீளவிட்டான் சில்வர்புரம்- தூத்துக்குடி பிரதான சாலையில் சாலை விரிவாக்க பணி காரணமாக குறுகலான சாலையில் செல்லும் போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக திரும்பினார்.
அப்போது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் மோகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






