search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென் மாவட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு வலுசேர்க்கும் சரத்குமார்
    X

    தென் மாவட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு வலுசேர்க்கும் சரத்குமார்

    • நெல்லை தொகுதியில் சரத்குமார் போட்டியிடு வாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
    • பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி உள்ளனர்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜனதாவும் 3-வது அணியாக தங்களது தலைமையில் கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முன்னேற்ற கழகம் உள்பட கட்சிகள் பா.ஜனதாவுக்கு தாவி வருகிறது.

    தற்போது டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பி.எஸ். அணி ஆகியவையும் பா.ஜனதாவுடன் கைகோர்த்துள்ளது. இதனால் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி வலு பெற்று வருகிறது.


    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார், பா.ஜனதாவுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜனதாவுடன் இணைப்பதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

    இந்த அறிவிப்பை கட்சியினரே எதிர்பாராத வகையில் சரத்குமார் அறிவித்தார். 2 கட்சிகளின் கொள்கையும் ஒத்துப்போவதால் கட்சியை இணைத்து விட்டதாகவும் அவர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தெரிவித்தார்.

    இதனால் பா.ஜனதாவின் கூட்டணிக்கு தற்போது மேலும் வலு சேர்ந்துள்ளது என்றே கூறலாம்.

    தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், குமரி ஆகியவற்றில் நாடார் சமுதாயத்தினர் அதிக அளவில் இருக்கும் நிலையில் சரத்குமாரின் இந்த இணைப்பு மூலமாக தென் மாவட்டங்களில் பா.ஜனதாவுக்கு வலு சேர்த்துள்ளதாகவே அக்கட்சியினர் கருதுகின்றனர்.

    இதற்கிடையே பா.ஜனதா சார்பில் நெல்லை தொகுதியில் சரத்குமார் போட்டியிடு வாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

    ஏற்கனவே சரத்குமார் சமீபத்தில் நெல்லையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது நெல்லை தொகுதியில் நிச்சயமாக போட்டியிடு வேன் என்று தெரிவித்திருந்தார்.


    அவர் இதற்கு முன்பு நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தாலும் அதில் கணிசமாக ஓட்டுக்களை பெற்றிருந்தார். இதனால் அவர் ஏதாவது ஒரு பெரிய கட்சியின் கூட்டணியில் நெல்லை தொகுதியில் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் கருதினர்.

    இதற்கிடையே கட்சியை அவர் பா.ஜனதாவுடன் இணைத்துள்ள நிலையில் எப்படியாவது நெல்லை தொகுதியில் போட்டியிடுங்கள் என்று கட்சியினர் அவரை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், வருகிற 15-ந்தேதி குமரியில் நடைபெறும் பா.ஜனதா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் சரத்குமார் பங்கேற்க உள்ளார்.

    அப்போது சரத்குமார் நெல்லை தொகுதி வேட்பாளராக நிச்சயம் அறிவிக்கப்படுவார் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதேநேரத்தில் அவருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி நிச்சயம் கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அதற்கு நிச்சயமாக வாய்ப்பு இல்லை என்பது போலவே நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளின் குரல் ஒலிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே நெல்லை தொகுதியில் போட்டியிடுவதற்காக பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் காய் நகர்த்தி வருகிறார்.

    அவர் நெல்லை பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் மத்திய மந்திரி வி.கே.சிங்கை அழைத்து வந்து வீடு வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து பாராளுமன்ற அலுவலகத்தை நெல்லை சந்திப்பில் திறந்தார்.

    ஏற்கனவே மாநில தலைவர் அண்ணாமலை நெல்லையில் என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்ட நிகழ்வு கட்சி தொண்டர்களிடையே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது நடை பயணத்தால் நெல்லை மாவட்டத்திலும் பா.ஜனதாவின் மீது மக்கள் பார்வை பதிய தொடங்கியதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி உள்ளனர். இதற்கு முழு மூச்சில் நயினார் நாகேந்திரன் செயல்பட்டு உள்ளார்.

    அவர் தனக்கு தான் நெல்லை பாராளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே தேவேந்திர குல வேளாளர் சமுதாய ஓட்டுக்களை பெற ஜான்பாண்டியன், யாதவ சமுதாய ஓட்டுக்களை பெற தேவநாதன் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை தங்கள் பக்கம் பா.ஜனதா இழுத்துள்ள நிலையில், தற்போது சரத்குமார் இணைந்துள்ளதால் நாடார் ஓட்டுக்களை கணிசமாக கிடைக்கும் என்று பா.ஜனதாவினர் கணக்கு போட்டுள்ளனர்.

    இதனால் நெல்லை தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் சீட்டை வாங்குவதற்கு பா.ஜனதா தேசிய தலைமையிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×