என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
    • பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிப்பு.

    சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இதைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, இன்று மாலை அல்லது நாளை காலை அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொபர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்ப உள்ளார்.

    • தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புள் உருவாகும்.
    • தமிழகத்தில் 2 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

    தமிழக அரசுடன் டாடா மோட்டார்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சுமார் ரூ.9 ஆயிரம் கோடி இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    இதன்மூலம், தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 2 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

    கடந்த மாதம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    • மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியில் கிராம நிர்வாக அதிகாரியாக பேராச்சி செல்வி (வயது 35) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று பணியில் இருந்தபோது அங்குள்ள மறுகால்தலை பரும்பு பகுதியில் அனுமதியின்றி சிலர் சரள் மண் எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    உடனே அவர் வருவாய்த்துறை ஊழியர்களுடன் அங்கு சென்றார். அப்போது மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    ஒரு கட்டத்தில் மண் கடத்தல் கும்பல் வி.ஏ.ஓ.வை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர். இதுகுறித்து பேராச்சி செல்வி சீவலப்பேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் சீவலப்பேரியை சேர்ந்த செல்லத்துரை மகன் முருகேஷ் (30), அவினாப்பேரியை சேர்ந்த உலகநாதன் மகன் செல்லத்துரை (32) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அனுமதியின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி பேராச்சி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கொலை மிரட்டல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 19-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    இன்று முதல் 17-ந்தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாட்டு படகு மற்றும் வள்ளம் ஆகியவற்றிக்கு தங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பல்வேறு ஏழை குடும்பங்கள் வீடுகள் கட்டி அதற்கான வரியும் செலுத்தி வசித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்

    இந்த சந்திப்பின் போது கன்னியாகுமரி மாவட்டத்தின் அடிப்படை தேவைகளான சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும். சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர் செய்து தர வேண்டும்

    பல்வேறு இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகள் மூலமாக ஏற்படும் விபத்துக்களால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகின்றது ஆகவே சாலை தடுப்புகளினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்

    மேலும் மீனவ கிராம மக்களின் கோரிக்கைகளையும் முன் வைத்தார்.

    மணக்குடி கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள முகத்துவாரத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அலை தடுப்பு சுவரை நீட்டி வளைத்து, கூடுதலாக மேலும் 3 நேர் கற்களை அமைப்பதுடன், காயல் பகுதியில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி பாரம்பரிய நாட்டு படகு மற்றும் வள்ளம் ஆகியவற்றிக்கு தங்குதளம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    மேலும் மணவாளக்குறிச்சி கிராமத்திற்கு உட்பட்ட சின்னவிளை ஊரில் அமைந்திருந்த மிக பழமையான குருசடி கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட இடியால் பாதிக்கப்பட்டது. எனவே ஊர் மக்கள் அந்த குருசடியை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து கிட்டத்தட்ட 90% பணிகள் முடிவடைந்த நிலையில் ஒரு சில நிர்வாக காரணங்களால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

    ஆகவே தங்கள் இந்த பிரச்னையை குறித்து ஆராய்ந்து இதனை சுமூகமாக முடித்து வைக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

    கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மடத்து பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஏழை குடும்பங்கள் வீடுகள் கட்டி அதற்கான வரியும் செலுத்தி வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் ஆண்டாண்டு காலமாக குடிநீர் கட்டணம் மின்கட்டணம் வீட்டுவரி கட்டணம் போன்றவை செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் வங்கிகள் மூலமாக கடன்கள் பெற்று வீடுகள் கட்டியுள்ளனர் இந்த இடத்தில் வசித்து வரும் இவர்களின் முன்னோர்கள் தங்கள் வீடு மற்றும் இடத்தை விற்றும் வாங்கியும் மாற்றி மாற்றி பத்திரம் செய்தும் பயன்பாடுகளுக்கும் உட்படுத்தியுள்ளனர்.

    மேற்படி மடத்தின் நிலங்கள் தனிநபர்கள் பெயரில் நில உடைமைப்பதிவு மேம்பாட்டு திட்டத்தில் தவறுதலாக இணைத்து பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் பெயரில் எழுந்த புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் இந்த நிலங்களை ஆய்வு செய்துள்ளனர்.

    ஸ்ரீ ராமபகவதி கோவில் என்ற தனியார் கோவில் இவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ளது. இதனை தவறுதலாக மடம் சொத்து என்று அறிவிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த 10-10-2019 -அன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் தீர்ப்பு படி திருக்கோயில் மடம் நிலத்தை மட்டும்தான் மீட்டிருக்கவேண்டும். ஆனால் குடியிருப்பு பகுதியும் தவறுதலாக இணைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது மேலும் கடந்த 24-04-2020 அன்று அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களால் இந்த நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அகவே இங்கு வசித்து வரும் குடும்பங்களை இந்த நிலத்தில் தொடர்ந்து குடியிருக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அவர்களை சொத்து வரி செலுத்த அனுமதிக்க வேண்டும்.

    • பல்வேறு பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

    சென்னை:

    நெம்மேலியில் அமைந்துள்ள நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குடிநீர் உந்து குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 15-ந் தேதி மதியம் 2 மணி முதல் 16-ந்தேதி அதிகாலை 2 மணி வரை மண்டலம் 11, 12, 13, 14 மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுதூர், ராதா நகர் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நந்தம்பாக்கம், வளசரவாக்கம், நொளம்பூர், ராமாபுரம், ஆலந்தூர், வேளச்சேரி, பள்ளிப்பட்டு, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https:cmwssb.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.

    • மோடி வருகையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக நாளை மறுநாள் (15-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் தென் மாவட்ட பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அங்கு பிரசாரம் செய்கிறார். மோடி வருகையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து பாதுகாப்பு படை அதிகாரிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

    மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி பேச உள்ள நிகழ்ச்சிக்கான பந்தல் கால்கோள் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி, மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பொதுக்கூட்ட இடத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    பிரதமர் மோடி பேசவுள்ள மேடை தெற்கு இருந்து வடக்கு பார்த்து அமைக்கப்படுகிறது. மேலும் தொண்டர்கள் அமர்வதற்கு வசதியாக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமும் ஜேசிபி எந்திரம் மூலமாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    • போலீசார் தாக்கியதால் தான் முருகன் இருந்ததாக கூறி சம்பவத்திற்கு காரணமான 3 போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.
    • சங்கரன்கோவில் நகரில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 37) வேன் டிரைவர்.

    இவருக்கு மீனா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். முருகன் கடந்த 8-ந் தேதி சிவராத்திரி அன்று அச்சம்பட்டி கிராமத்தில் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். பழைய பஸ் நிலையம் அருகே முன்னாள் சென்ற வாகனத்தில் வேன் மோதிய சம்பவத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    அப்போது அங்கு வந்த போலீசார் போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாக இருந்ததாக கூறி முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

    பின்னர் வேனை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முருகன் மர்மமான முறையில் இறந்துள்ளார். தொடர்ந்து அவரது உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் போலீசார் தாக்கியதால் தான் முருகன் இருந்ததாக கூறி சம்பவத்திற்கு காரணமான 3 போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும். உயிர் இழந்த முருகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 6-வது நாளாக அவரின் உடலை வாங்க மறுத்து பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் சங்கரன்கோவில் தேரடி திடலில் இன்று ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சங்கரன்கோவில் நகரில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • திருத்தணி, திருப்பரங்குன்றம் கோவில்களிலும் திருப்பணிகள் நடக்கிறது.
    • உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுக் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. இந்த கூட்டத்தில் அறநிலையத் துறைக்கான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒரு தீர்மானம் தமிழ்க் கடவுளான முருகப் பக்தர்கள் மாநாடு நடத்துவது.

    அதன்படி உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மாநாடு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பழனியில் நடைபெறும்.

    2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதும் முருகன் கோவில்களை நிர்மாணித்துள்ள அறங்காவலர்கள் அழைக்கப்படுவார்கள். எப்படியும் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள்.

    வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். உள்ளூர் போக்குவரத்தும் இலவசமாக வழங்கப்படும்.

    2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் முருகனை பற்றிய ஆய்வுகள், முருகனின் புகழ் பரப்பும் கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள், இடம்பெறும்.


    மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். மாநாடு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ரூ.98 கோடி மதிப்பீட்டில் அழகு தமிழால் நடத்தப்பட்டது.

    படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அறநிலையத்துறை நிதி ரூ.100 கோடி மற்றும் தனியார் பங்களிப்பு ரூ.200 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது.

    இதே போல் திருத்தணி, திருப்பரங்குன்றம் கோவில்களிலும் திருப்பணிகள் நடக்கிறது.

    26 ராமர் கோவில்கள் கும்பாபிஷேகங்கள் நடத்தப் பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி மதத்துக்கு எதிரானதல்ல. கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கோவில்கள் தூய் மையாகவும், சிறப்பாகவும் பராமரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை தொகுதியில் சரத்குமார் போட்டியிடு வாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.
    • பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி உள்ளனர்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜனதாவும் 3-வது அணியாக தங்களது தலைமையில் கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது. அந்த வகையில் தமிழக முன்னேற்ற கழகம் உள்பட கட்சிகள் பா.ஜனதாவுக்கு தாவி வருகிறது.

    தற்போது டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பி.எஸ். அணி ஆகியவையும் பா.ஜனதாவுடன் கைகோர்த்துள்ளது. இதனால் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி வலு பெற்று வருகிறது.


    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார், பா.ஜனதாவுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜனதாவுடன் இணைப்பதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

    இந்த அறிவிப்பை கட்சியினரே எதிர்பாராத வகையில் சரத்குமார் அறிவித்தார். 2 கட்சிகளின் கொள்கையும் ஒத்துப்போவதால் கட்சியை இணைத்து விட்டதாகவும் அவர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தெரிவித்தார்.

    இதனால் பா.ஜனதாவின் கூட்டணிக்கு தற்போது மேலும் வலு சேர்ந்துள்ளது என்றே கூறலாம்.

    தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், குமரி ஆகியவற்றில் நாடார் சமுதாயத்தினர் அதிக அளவில் இருக்கும் நிலையில் சரத்குமாரின் இந்த இணைப்பு மூலமாக தென் மாவட்டங்களில் பா.ஜனதாவுக்கு வலு சேர்த்துள்ளதாகவே அக்கட்சியினர் கருதுகின்றனர்.

    இதற்கிடையே பா.ஜனதா சார்பில் நெல்லை தொகுதியில் சரத்குமார் போட்டியிடு வாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

    ஏற்கனவே சரத்குமார் சமீபத்தில் நெல்லையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அப்போது நெல்லை தொகுதியில் நிச்சயமாக போட்டியிடு வேன் என்று தெரிவித்திருந்தார்.


    அவர் இதற்கு முன்பு நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தாலும் அதில் கணிசமாக ஓட்டுக்களை பெற்றிருந்தார். இதனால் அவர் ஏதாவது ஒரு பெரிய கட்சியின் கூட்டணியில் நெல்லை தொகுதியில் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் கருதினர்.

    இதற்கிடையே கட்சியை அவர் பா.ஜனதாவுடன் இணைத்துள்ள நிலையில் எப்படியாவது நெல்லை தொகுதியில் போட்டியிடுங்கள் என்று கட்சியினர் அவரை வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், வருகிற 15-ந்தேதி குமரியில் நடைபெறும் பா.ஜனதா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் சரத்குமார் பங்கேற்க உள்ளார்.

    அப்போது சரத்குமார் நெல்லை தொகுதி வேட்பாளராக நிச்சயம் அறிவிக்கப்படுவார் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர். அதேநேரத்தில் அவருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி நிச்சயம் கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அதற்கு நிச்சயமாக வாய்ப்பு இல்லை என்பது போலவே நெல்லை மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகளின் குரல் ஒலிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே நெல்லை தொகுதியில் போட்டியிடுவதற்காக பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் காய் நகர்த்தி வருகிறார்.

    அவர் நெல்லை பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் மத்திய மந்திரி வி.கே.சிங்கை அழைத்து வந்து வீடு வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து பாராளுமன்ற அலுவலகத்தை நெல்லை சந்திப்பில் திறந்தார்.

    ஏற்கனவே மாநில தலைவர் அண்ணாமலை நெல்லையில் என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்ட நிகழ்வு கட்சி தொண்டர்களிடையே பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரது நடை பயணத்தால் நெல்லை மாவட்டத்திலும் பா.ஜனதாவின் மீது மக்கள் பார்வை பதிய தொடங்கியதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் பிரதமர் மோடியை நெல்லைக்கு அழைத்து வந்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி உள்ளனர். இதற்கு முழு மூச்சில் நயினார் நாகேந்திரன் செயல்பட்டு உள்ளார்.

    அவர் தனக்கு தான் நெல்லை பாராளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே தேவேந்திர குல வேளாளர் சமுதாய ஓட்டுக்களை பெற ஜான்பாண்டியன், யாதவ சமுதாய ஓட்டுக்களை பெற தேவநாதன் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை தங்கள் பக்கம் பா.ஜனதா இழுத்துள்ள நிலையில், தற்போது சரத்குமார் இணைந்துள்ளதால் நாடார் ஓட்டுக்களை கணிசமாக கிடைக்கும் என்று பா.ஜனதாவினர் கணக்கு போட்டுள்ளனர்.

    இதனால் நெல்லை தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் சீட்டை வாங்குவதற்கு பா.ஜனதா தேசிய தலைமையிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் அடிப்படையில் அவரது உத்தரவின் பேரில் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த தளவாய்புரம் பகுதியை சேர்ந்த காசித் துரை தலைவனார் (வயது 23), தூத்துக்குடியை சேர்ந்த முத்து கல்யாணி(22), கீழப்புதூரை சேர்ந்த லட்சுமணகுமார் (26), ராம்குமார்(27), சிந்தாமணிப்பேரி புதூரை சேர்ந்த கலைச்செல்வன்(19) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் அவர்களை போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்த சுமார் 7½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறுவன் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மாணவர்களின் நிலையை நினைத்து பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர்.
    • மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் விஜயபுரம் கடை வீதியில் அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது ஆட்சி காலத்தில் போதை பொருட்கள் பெரும் புழக்கத்தில் இல்லை. ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரி பகுதிகளில் இளைஞர்கள் பெருமளவு கூடும் இடங்களில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது.


    குறிப்பாக பல்வேறு விதமான போதைப் பொருட்கள் பல வண்ணங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் எளிதாக கிடைக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் நிலையை நினைத்து பெற்றோர்கள் கவலை அடைந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நல்வழியை ஏற்படுத்துகின்ற பாதுகாப்பான நிலையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    இரட்டை இலை சின்னம் தொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. தான் உண்மையான அ.தி.மு.க. என சுப்ரீம் கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் அறிவித்துவிட்ட நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×