பெண் வி.ஏ.ஓ.வுக்கு கொலை மிரட்டல்- 2 வாலிபர்கள் கைது

மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.
பெண் வி.ஏ.ஓ.வுக்கு கொலை மிரட்டல்- 2 வாலிபர்கள் கைது
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியில் கிராம நிர்வாக அதிகாரியாக பேராச்சி செல்வி (வயது 35) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று பணியில் இருந்தபோது அங்குள்ள மறுகால்தலை பரும்பு பகுதியில் அனுமதியின்றி சிலர் சரள் மண் எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உடனே அவர் வருவாய்த்துறை ஊழியர்களுடன் அங்கு சென்றார். அப்போது மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

ஒரு கட்டத்தில் மண் கடத்தல் கும்பல் வி.ஏ.ஓ.வை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர். இதுகுறித்து பேராச்சி செல்வி சீவலப்பேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சீவலப்பேரியை சேர்ந்த செல்லத்துரை மகன் முருகேஷ் (30), அவினாப்பேரியை சேர்ந்த உலகநாதன் மகன் செல்லத்துரை (32) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அனுமதியின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி பேராச்சி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கொலை மிரட்டல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com