search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சிகள் தி.மு.க.-காங்கிரஸ்: விஜயதாரணி குற்றச்சாட்டு
    X

    பெண்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சிகள் தி.மு.க.-காங்கிரஸ்: விஜயதாரணி குற்றச்சாட்டு

    • தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.
    • மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார்.

    நாகர்கோவில்:

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார். அதன் பிறகு முதல் முறையாக இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    அவருக்கு குமரி மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை தருவதை வரவேற்கிறேன். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம் ஜெயலலிதாவால் கொண்டு வந்த காரணத்தால் அதை நிறுத்தி உள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை நியாயமான பெண்களுக்கு சென்று சேரவில்லை. கட்சியை சேர்ந்த பெண்களுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்குவதாக கூறியிருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதைதான் குஷ்பு கேட்டுள்ளார். அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

    உரிமை தொகை வாங்குபவர்கள் பிச்சைக்காரிகள் என்று குஷ்பு கூறியிருப்பது அவருடைய கருத்து. என்ன அர்த்தத்தில் அவர் பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு இல்லை. நிறைய பெண்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள்.

    நன்றாக பேசுபவர்கள் சட்டசபையில் முன் இருக்கையில் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு முன் இருக்கையில் அமர வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-வது முறையாக வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சிகள்தான் காங்கிரசும், தி.மு.க.வும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களுக்கு பதவி கொடுக்காமல் எப்போது வேலை பார்த்தீர்கள் என்று ஒரு பெண்ணிடம் கேட்க முடியாது.

    பாரதிய ஜனதாவில் எனக்கு பதவி கண்டிப்பாக கொடுப்பார்கள். விரைவில் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பெண்களுக்கு எந்த சீட்டு கொடுத்தாலும் சரி, பதவிகள் கொடுத்தாலும் சரி, அதற்கு 2 விஷயங்கள் மையமாக கொண்டிருக்கும்.

    ஒன்று பெண்களை அங்கீகாரப்படுத்தும், அதிகாரப்படுத்தும் முயற்சி இருக்கும். பெண்கள் களப்பணி ஆற்று தளத்தை உருவாக்குவார்கள். அது தான் பாரதிய ஜனதாவின் சீரிய தன்மை. அதை விரைவில் செய்வார்கள்.


    பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் வந்துள்ளோம். குடும்பக் கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த சுயநலமும் இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் பணியை மட்டுமே பிரதான பணியாக நினைக்க கூடியது பாரதிய ஜனதா. மக்கள் பணி ஆற்றுவதற்காக சுயநலம் இல்லாமல் பணியாற்ற நான் பாரதிய ஜனதாவில் இணைந்து உள்ளேன்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தந்தை எம்.பி.யாக இருந்தால் மகன் எம்.எல்.ஏ.வாக இருப்பார். என்னைப் பொறுத்தவரை சாமானிய மக்கள் பதவிக்கு வர வேண்டும். நான் சாமானிய பெண். ஆனால் என்னை உயர்த்த காங்கிரஸ் கட்சி நினைக்கவில்லை.

    அதே நேரம் அவர்களது குடும்ப வாரிசுகளை தலைவர் ஆக்குவார்கள். வாரிசுகள், அதிகாரம், பணம் இருப்பவர்கள் காங்கிரசில் இருக்க முடியும். ஆனால் சாமானிய மக்களால் பாரதிய ஜனதாவில் இருக்க முடியும்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியிலும் வாரிசுக்கு தான் சீட்டு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த 3 ஆண்டுகளில் ஏதாவது பணிகள் நடந்து இருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார். எனவே அதற்கு ஏற்றார் போல் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ஒருவர் வர வேண்டும்.

    இங்கிருந்து 2014-ல் 39 எம்.பி.க்கள் சென்றார்கள். அவர்கள் சென்று என்ன பிரயோஜனம். எதுவும் இல்லை. பாராளுமன்ற வாசலில் போராட்டம் நடத்தி விட்டு வந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு எதுவும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.

    மத்தியில் ஆளக்கூடிய கட்சி இங்கும் வெற்றி பெற வேண்டும். இங்கு வெற்றி உறுதி செய்யப்பட்டால் தான் மக்களுக்கு இன்னும் பலன்கள் கிடைக்கும். இந்த முறை களம் பெரிய அளவில் மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த மாற்றமும் ஏற்றமும் பாரதிய ஜனதாவை உயர்த்தி பிடிக்கும். அதை நாங்கள் உறுதியாக எடுத்து செல்வோம்.

    தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வெளியே போய்விடுகிறார்கள். விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டீர்கள்? ஆனால் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட போவதில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை முடிவு செய்தால் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×