என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும்.
    • கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெண்கள் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1680க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக சட்டைக்கு ரூ.22, கால்சட்டைக்கு ரூ.42 கூலி வழங்கப்படுகிறது. பெரும்பாலான சீருடைகள் மாணவர்கள் அணியும் நிலையில் இல்லை என்றும், தரமாக தைக்கப்படவில்லை என்றும் புகார் வந்ததையடுத்து சமூக நலத்துறை அலுவலர் சியாமளா தேவி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

    அதன்படி தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும். கேன்வாஸ் வைத்து தரமான பட்டன் காஜா வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.

    ஆனால் கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ.20 செலவாகும். இந்த தொழிலை நம்பி ஏராளமான மாற்றுத் திறனாளிகள், விதவைகள் உள்ள நிலையில் அவர்களுக்கு இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    எனவே இந்த உத்தரவுகளை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். ஆனால் அதற்கு ஷியாமளா தேவி மறுத்ததுடன் சங்கத்தை பூட்டி விட்டார். உங்களுக்கு வேலை கிடைக்காது என்று தெரிவித்தார். இதனால் தையல் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தொழிலாளர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தால் அது குறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஷியாமளா தேவி உறுதியளித்தார். இதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • ஜெயஸ்ரீ உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே தனது தோழிகளுடன் படிக்க வேண்டும் என விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
    • வீட்டில் விஜயஸ்ரீ தனியாக விட்டுவிட்டு தாய் முத்துலட்சுமி வெளியில் சென்றுள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் ஒன்றியம் வைப்பூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியின் மகள் விஜயஸ்ரீ (வயது 13). இவர் வைப்பூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதமே நடந்து வருகிறது. அதனால் விஜயஸ்ரீயை திருவாரூரில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்க்க திட்டமிட்டு விஜயஸ்ரீயை நேற்று அப்பள்ளிக்கு அவரது தாயார் முத்துலட்சுமி அழைத்துச் சென்றார்.

    ஆனால் ஜெயஸ்ரீ உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே தனது தோழிகளுடன் படிக்க வேண்டும் என விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் திருவாரூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விவரங்களை கொடுத்து சேர்க்கை படிவத்தில் கையெழுத்துட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    வீட்டில் விஜயஸ்ரீ தனியாக விட்டுவிட்டு தாய் முத்துலட்சுமி வெளியில் சென்றுள்ளார்.

    தனது விருப்பத்திற்கு மாறாக தோழிகளை பிரிந்து வெளியூர் சென்று படிக்க வேண்டியுள்ளது என விஜயஸ்ரீ மன வேதனை அடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று விட்டு திரும்பிய முத்துலட்சுமி மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வைப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி விஜயஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வைப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தோழிகளை பிரிவதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • டெல்லியில் இருந்து பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகளும் வந்துள்ளனர்.
    • பிரதமர் மோடி பேச உள்ள மேடை தெற்கிலிருந்து வடக்கு பார்க்கவும் அமைக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற பாரதிய ஜனதா முனைப்பு காட்டி வருகிறது. இதையடுத்து பிரதமர் மோடி தமிழகத்தை குறி வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் அடுத்தடுத்து பிரசாரம் மேற்கொண்ட அவர், நாளை (15-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார்.

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக நாளை காலை 11 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வருகிறார்.

    கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்கும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திற்கு வருகிறார். அங்கு பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி எல்.முருகன், மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த பொதுக்கூட்டம் முடிவடைந்து பகல் 12.15 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி திருவனந்தபுரம் செல்கிறார். பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்பட தென் மாவட்டங்களில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    டெல்லியில் இருந்து பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகளும் வந்துள்ளனர். அவர்கள் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிரதமர் மோடி வருகையை தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள ஹெலிகாப்டர் தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

    கன்னியாகுமரியில் உள்ள ஹெலிபேடில் மோப்ப நாய் மூலம் போலீசார் சோதனை செய்த காட்சி - கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

    கன்னியாகுமரியில் உள்ள ஹெலிபேடில் மோப்ப நாய் மூலம் போலீசார் சோதனை செய்த காட்சி - கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் நேற்று மாலை ஹெலிகாப்டர் மூலம் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான மூன்று ஹெலிகாப்டர்கள் கன்னியாகுமரிக்கு வந்து சென்றது. கன்னியாகுமரி முதல் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வரையிலும் பிரதமர் மோடி செல்ல உள்ள பாதையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    சாலையின் இருபுறமும் 5 அடிக்கு ஒரு போலீசாரை நிறுத்தி பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் அந்த சாலையில் போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்யவும் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் விழா நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    பிரதமர் மோடி பேச உள்ள மேடை தெற்கிலிருந்து வடக்கு பார்க்கவும் அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மாலைக்குள் பணிகள் அனைத்தையும் முழுமையாக முடிக்க முனைப்பு காட்டி வருகிறார்கள். பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடியின் வருகை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா வெற்றிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமையும் என்று பாரதிய ஜனதா நிர்வாகிகள் கருதுகிறார்கள். மோடி வருகையையடுத்து பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

    நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு பிரதமர் மோடி வருகிற 18-ந்தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 19-ந்தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    • யாத்திரை இறுதி நிகழ்வை வெற்றி அடைய செய்ய எங்களுடன் இணைந்து கொள்ள அழைக்கிறேன்.
    • பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால் பங்கு பெற வேண்டும்.

    சென்னை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த மாதம் 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். 15 மாநிலங்கள் மற்றும் 6700 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    ராகுலின் யாத்திரை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். யாத்திரையின் போது சக்தி வாய்ந்த முழக்கங்களை காங்கிரஸ் எடுத்து செல்கிறது.

    ராகுலின் யாத்திரை வெற்றி அடைந்து வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மும்பையை அடைகிறது.

    இதையொட்டி மும்பை சிவாஜி பூங்காவில் மாலை 7 மணிக்கு யாத்திரை நிறைவு விழா நடைபெறுகிறது.

    இந்தியா நீதி ஒற்றுமை யாத்திரை நிறைவு பெறும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

    இதில் பங்கேற்க இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து யாத்திரையின் நோக்கம் வெற்றி அடைந்ததை விளக்கி பேசுகின்றனர்.

    யாத்திரை நிறைவு விழாவில் பங்கு பெற இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    யாத்திரை இறுதி நிகழ்வை வெற்றி அடைய செய்ய எங்களுடன் இணைந்து கொள்ள அழைக்கிறேன். பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால் பங்கு பெற வேண்டும். ஒரு மதச்சார்பற்ற வலுவான ஜனநாயகத்தை நிறுவுவதற்கு உதவும் என்று அக்கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

    கார்கேவின் அழைப்பை ஏற்ற திருமாவளவன் மும்பைக்கு செல்கிறார். யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்.

    • பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி விட்டதால் அவரை அமைச்சரவையில் மீண்டும் சேர்த்துக்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 6.20 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். சனிக்கிழமை மதியம் அவர் சென்னை திரும்புவார் என கவர்னர் மாளிகை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

    டெல்லியில் அவர் யாரை சந்திக்க உள்ளார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஐகோர்ட்டு 3 ஆண்டு சிறை மற்றும் 50 லட்ச ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த காரணத்தால் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார். இதனால் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

    பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி விட்டதால் அவரை அமைச்சரவையில் மீண்டும் சேர்த்துக்கொள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார். இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலை கடிதம் எழுதி உள்ளார். ஆனால் முதலமைச்சரின் கடிதத்துக்கு கவர்னர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் கூறப்படவில்லை.

    இதற்கிடையே கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை 6.20 மணிக்கு விஸ்காரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

    பொன்முடி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இன்றும் 2 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழலில் அதன் பிறகு பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கலாமா? கூடாதா? என்பது பற்றி சட்ட நிபுணர்களிடம் விளக்கம் பெறுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விடும்.
    • அலுவலகங்களுக்கு இப்போது பொது மக்கள் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளும் வந்து செல்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு தேர்தல் தேதி அநேகமாக வருகிற சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்து விடும்.

    அதன் பிறகு முதலமைச்சர் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை கட்சிப் பணிக்கு செல்லும் போது அரசு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. சொந்த கார் அல்லது தனியார் வாகனங்களை பயன்படுத்தி கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும்.

    அதுமட்டுமின்றி சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி தோறும் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு இப்போது பொது மக்கள் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளும் வந்து செல்கின்றனர். அரசியல் ஆலோசனை கூட்டங்களும் இங்கு நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அங்கு கட்சி நிர்வாகிகள் வரக் கூடாது என்பதற்காக அரசு சார்பில் உள்ள எம்.எல்.ஏ.க் கள், எம்.பி.க்கள் அலுவலகங்களை பூட்ட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

    மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உத்தர விடுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் இப்போதே தங்களது அலுவலகத்தில் உள்ள சொந்த பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    • தங்கம் விலை நேற்று சவரன் 48 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
    • தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று சவரன் 48 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 49 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 காசு உயர்ந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    • எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கூக்குரலுடன் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.
    • மீண்டும் தனது மகன் ரவீந்திரநாத்தை தேனி தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    மதுரை:

    2024 பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பெரும்பாலான மாநிலங்களில் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும்கட்சியான தி.மு.க. முதலிடத்தை பிடித்துள்ளது. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் என்ற கூக்குரலுடன் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டது.

    இதற்கிடையே தமிழகத்தின் மற்றொரு பிரதான கட்சியான அ.தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஏராளமான சிறிய கட்சிகள், அமைப்புகள் தங்களது ஆதரவினை அளித்த போதிலும் பெரிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதில் இழுபறி நிலையே தற்போது வரை நீடிக்கிறது. இருந்தபோதிலும் வலுவான கூட்டணியை அ.தி.மு.க. அமைக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஜெயல லிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமையில் செயல்பட்டு வந்த அ.தி. மு.க. தற்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. இதனால் தனித்துவிடப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். 10 தொகுதிகள் வரை பா.ஜ.க. மேலிடத்தில் கேட்டு வரும் நிலையில் இன்னும் தொகுதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை வைத்து தான் தனக்காக பலத்தை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக கருதி அதற்கேற்ப ஓ.பன்னீர்செல்வம் காய் நகர்த்தி வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொண்டார்களா? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தனது தலைமையிலான அ.தி.மு.க.வின் பயணத்தை இந்த தேர்தலில் வெற்றியுடன் தொடங்க வியூகம் வகுத்து வருகிறார்.

    அதேவேளையில், தென் மாவட்டங்களில் தனக்கான செல்வாக்கை பயன்படுத்தி அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் பா. ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளார். பா.ஜ.க.வுடன் அமைத்துள்ள கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் தனது மகன் ரவீந்திரநாத்தை தேனி தொகுதியில் போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    அவ்வாறு நிறுத்தினால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார், அந்த தொகுதியில் செல்வாக்கு மிகுந்த மகேந்திரனை களமிறக்க முடிவு செய்து அதற்கான வேலை களையும் தொடங்கியுள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த தேர்தலில் கொடுக்கும் 'அடி' தங்களுடன் மீண்டும் மோதக்கூடாது என்பதை மையமாக கொண்டிருக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. ரவீந்திரநாத்தை தோற்கடித்து அதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்க தயாராகி வரும் அ.தி.மு.க. அதற்கேற்றவாறு காய்களை நகர்த்தி வருகிறது.

    இதுபோன்ற காரணங்கள் அறிந்த ஓ.பன்னீர்செல்வம், தேனி தொகுதியில் இருந்து மாறி தனது மகன் ரவீந்திரநாத்தை மதுரை தொகுதியில் போட்டியிட வைக்கவும் திட்டம் வகுத்து வருகிறார். இதுபற்றி தான் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க. மேலிடத்திலும் இதுபற்றி ஆலோசித்து வருகிறார்.

    மதுரையில் பா.ஜ.க. ஆதரவுடன் போட்டியிட்டால் சவுராஷ்டிரா மக்கள் பேராதரவுடன் மற்ற சமு தாய வாக்குகளையும் எளிதாக பெற்றுவிடலாம் என்ற கணக்குடன் இந்த முயற் சியை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் கண்டிப்பாக தனது மகனுக்கே ஓட்டுப்போட வாய்ப்புள்ளதாகவும், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி களமிறங்குவதால் அவர்களை எளிதில் வென்றுவிடலாம் என்றும் கணித்துள்ளார்.

    அதேபோல் செல்வாக்கு மிகுந்த ராமநாதபுரம் தொகுதியை குறிவைத்தும் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்காக காய் நகர்த்தி அவரை எப்படியாவது வெற்றி பெறச்செய்து எம்.பி.யாக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை அவரது ஆதரவாளர்களும் வரவேற்று உள்ளனர்.

    • ரெயில் வந்ததை அறியாத மூதாட்டி மீது திடீரென்று ரெயில் மோதியது.
    • மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி ரெயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தை மூதாட்டி ஒருவர் கடந்து சென்றார்.

    அப்போது ரெயில் வந்ததை அறியாத அந்த மூதாட்டி மீது திடீரென்று ரெயில் மோதியது. இதில் மூதாட்டி உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்ததில் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த மூதாட்டி வைத்திருந்த பையில் அவரது வங்கி புத்தகம், ஆதார் அட்டை இருந்துள்ளது.

    மேலும், இறந்த மூதாட்டி ஆனந்தூர் அருகே உள்ள ரெட்டிபட்டி கிராமப்பகுதியைச் சேர்ந்த வெங்கட்டன் மனைவி மூக்கியம்மாள் என்பதும், அவர் அரசு வங்கியில் தனது முதியோர் உதவித்தொகை பணத்தை எடுப்பதற்காக ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மூக்கியம்மாள் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
    • கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.

    கோபி:

    தேர்தல் நடைபெறும் போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கு உத்தரவிடப்படுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், நம்பியூர், கடத்தூர், வரப்பாளையம், சிறுவலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இதுவரை 111 பேர் தங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

    • பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார்.
    • குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது.

    திருவேற்காடு:

    சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. அதில் 10-வது வார்டு கவுன்சிலராக நளினி குருநாதன் இருந்தார்.

    இந்தநிலையில் பெண் கவுன்சிலர் நளினி குருநாதனை, கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து திருவேற்காடு நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவிட்டார். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தை மீறியதால், சட்ட மீறல்கள் சட்டப்பிரிவு 32-ன் கீழ் கவுன்சிலர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக நகராட்சி கமிஷனர் குறிப்பிட்டு இருந்தார்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்ட கவுன்சிலருக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    பெண் கவுன்சிலர் நளினியின் கணவர் குருநாதன், நகராட்சியில் குப்பை எடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார். கவுன்சிலரின் குடும்பத்தினரே டெண்டர் எடுப்பது விதிமீறல் ஆகும். மேலும் வேட்பு மனு தாக்கலின் போது உறுதிமொழி பத்திரத்தில் தான் கூலி வேலை செய்து வருவதாக குருநாதன் போலியான தகவலை குறிப்பிட்டு இருந்தார்.

    மேலும் அவர், கடந்த ஆண்டு தனது வார்டில் எந்தவித பணிகளையும் செய்யவில்லை எனக்கூறி வார்டில் உள்ள பெண்களை அழைத்து வந்து நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை ஊற்றி நகராட்சி கமிஷனர் அறையில் அமர்ந்து அவதூறாக பேசியதாகவும் புகார்கள் வந்தது.

    தொடர்ந்து குருநாதன் மீது புகார்கள் வந்ததால் இதுபற்றி விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த விளக்கம் உண்மையானதாக இல்லை என்பதாலும் பெண் கவுன்சிலர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் மற்றும் கடிதம் வருவதை அறிந்த நளினி குருநாதன், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக நகர மன்ற தலைவர் மூர்த்தியிடம் ராஜினாமா கடிதத்தை நேற்று கொடுத்தார்.

    கவுன்சிலர் நளினி பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து திருவேற்காடு நகராட்சி இணையதளத்தில் உள்ள கவுன்சிலர்கள் பட்டியலில் இருந்து அவரது புகைப்படம் மற்றும் பதவி உடனடியாக நீக்கப்பட்டது. 10-வது வார்டு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    • தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • பல்லாவரத்தில் உள்ள கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் இன்று 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தி.நகர், முகப்பேர், கொளத்தூர், அண்ணாநகர், திருவான்மியூர், அம்பத்தூர், மயிலாப்பூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

    தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் பணிக்கான ஒப்பந்தத்தை எடுத்துள்ள நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனம் ஆகியவற்றில் இந்த சோதனை நடந்தது.

    குறிப்பிட்ட அரசியல் கட்சி ஒன்றுக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    12 இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் அலுவலகங்களில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆவணங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

    இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. சோதனைக்குள்ளாகி இருக்கும் தனியார் நிறுவனத்தின் அதிபர் தமிழக அரசியல் பிரமுகர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் என்றும் அவர் மூலமாகவே குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு நிதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது.

    இதேபோன்று பல்லாவரத்தில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சோதனை நடைபெற்ற இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×