என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாத்தினார் தடுக்கின்றனர்.
    • மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் செய்வதாக புகார்

    தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில் பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாதியினர் தடுக்கும் அராஜகம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை மீறி பள்ளி மாணவர்கள் பொது பாதையை பயன்படுத்தினர்.

    கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், "தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில், காலம்காலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த, பொது பாதையினை, சாதிய ஆதிக்கத்தின் பெயரில், பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என தடுக்கும் அராஜகம்....... சிபிஐ(எம்),தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், மிக வன்மையாக கண்டிக்கிறோம்!

    மாவட்ட நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் காட்டியது மென்மேலும் வன்முறையை அதிகரிக்கச் செய்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.

    • 2 மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
    • இருவரும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று 9-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதில் 2 மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை வகுப்பறைக்கு வந்த மாணவர் தன்னை அவதூறாக பேசிய மாணவரை அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்கச் சென்ற இன்னொரு மாணவரையும் அந்த மாணவர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் 2 மாணவர்களுக்கும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவரை பைக்குள் அரிவாளை மறைத்து கொண்டு வந்து சக மாணவர் வெட்டிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழா சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
    • வேளாண் வணிகத் திருவிழா மற்றும் கருத்தரங்கில் பெருவாரியான வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    சென்னை:

    வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'வேளாண் வணிகத் திருவிழா-2025" நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி அன்று தொடங்கி வைத்து, உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழா சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

    பங்கேற்கும் துறைகள் மற்றும் நிறுவனங்கள் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, சர்க்க ரைத்துறை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), தமிழ்நாடு உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் பட்டு வளர்ச்சித் துறை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற அரசுத் துறைகள் மற்றும் அவை சார்ந்த கல்வி நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

    சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழர்களின் வேளாண் வணிகம், பனை, தென்னை, ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், மூலிகைப்பயிர்கள், முருங்கை, மஞ்சள், பலா, முந்திரி, நிலக்கடலை போன்ற பல்வேறு வேளாண் விளைபொருட்களின் சிறப்புகள், மதிப்புக் கூட்டப் பட்ட பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம், உழவர் நல சேவை மையங்கள், நகர்ப்புரத் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நீர்ஊடகத் தோட்டம், ஊட்டச்சத்து வேளாண்மை, பாரம்பரிய காய்கறிகள் போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்கள். தேங்காய் மட்டை உரிக்கும் கருவி, எண்ணெய் செக்கு எந்திரம், பருப்பு உடைக்கும் எந்திரம் போன்ற மதிப்புக் கூட்டும் எந்திரங்கள், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான விவரங்கள் போன்ற அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இக்கண்காட்சி அமையும்.

    இதுதவிர முன்னணி வேளாண் தொழில் முனைவோருடன் கலந்துரையாடலும் நடைபெறும். இக்கருத்தரங்குகளில், தொழில்நுட்ப வல்லுநர்களும், அனுபவமிக்க வேளாண் பெருமக்களும், ஏற்றுமதியாளர்களும், உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

    வேளாண் வணிகத் திருவிழா மற்றும் கருத்தரங்கில் பெருவாரியான வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக, சென்னைக்கு அருகாமையிலுள்ள 14 மாவட்டங்களிலிருந்தும் உழவர்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டார், வடசேரி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை கொட்டி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் மழை நீடித்தது. நாகர்கோவில் நகரில் அதிகாலை முதலிலேயே பரவலாக மழை பெய்து வருகிறது.

    பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டார், வடசேரி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. காலையில் இருந்தே மழை பெய்து வருவதால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசி வருகிறது.

    மயிலாடி, தக்கலை, இரணியல், அடையாமடை, ஆணைக்கிடங்கு, சுருளோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

    சிற்றாறு-1 அணை பகுதியில் அதிகபட்சமாக 31.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலை யோர பகுதியிலும், அணைப்பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 37.27 அடியாக இருந்தது. அணைக்கு 672 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 764 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 54 அடியாக இருந்தது. அணைக்கு 208 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 385 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 30.4, பெருஞ்சாணி 21, சிற்றார் 1-31.4, சிற்றார் 2-8.2, மயிலாடி 4.2, நாகர்கோவில் 11.6, கன்னிமார் 2.4, ஆரல்வாய்மொழி 3.4, பூதப்பாண்டி 3.6, புத்தன்அணை 8.6, பாலமோர் 22.4, தக்கலை 8.2, குளச்சல் 14, இரணியல் 13.2, அடையாமடை 14.2, குருந்தன்கோடு 4.2, கோழிபோர்விளை 12.2, மாம்பழத்துறையாறு 11, ஆணைக்கிடங்கு 10.6, களியல் 6, குழித்துறை 8.8, சுருளோடு 21.4, திற்பரப்பு 12.2, முள்ளங்கினாவிளை 17.2.

    • டி.டி.வி. தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
    • தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்.

    தூத்துக்குடி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தூத்துக்குடி தருவைகுளத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    மக்களை மட்டும் நம்பி தேர்தல் களத்துக்கு வந்த ஒரே தலைவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார். ஜூலை 7-ந் தேதி தொடங்கி இன்று 154-வது தொகுதியாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தொகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்திருக்கிறார்.

    இது எதை காட்டுகிறது என்றால் மக்கள் மீது உள்ள நம்பிக்கை அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் உண்டு என்பதை தான் காட்டுகிறது.

    கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமையும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கடைசி நேரத்தில் கூட கூட்டணி வரலாம். சேரலாம். இருக்கின்ற கூட்டணிகள் கூட பிரியலாம். ஆனால் மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி மக்களை சந்திப்பதற்கு வந்த இயக்கம் அ.தி.மு.க. அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாப்பிள்ளையூரணி பகுதியில் நடந்த அ.தி.மு.க. பாக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வருகிற சட்டசபை தேர்தலுக்காக முதன் முதலில் தேர்தல் களத்திற்கு வந்த இயக்கம் அ.தி.மு.க. மக்கள் மன்றத்தை மட்டும் நம்பி இதுவரை 154 தொகுதிகளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார்.

    மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே 2-வதுஇடத்தை பிடித்து யார் எதிர்க்கட்சியாக வருவது என்று தான் போட்டி உள்ளது.

    டி.டி.வி. தினகரன் நிலைப்பாடு பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

    4 ஆண்டு காலம் நல்ல ஆட்சி கொடுத்த எடப்பாடி பழனிசாமியை மக்கள் அடுத்த முதலமைச்சராக்க முடிவு செய்துவிட்டனர். நிழலின் அருமை வெயிலுக்குள் சென்றால் தான் தெரியும் என்பது போல அ.தி.மு.க. ஆட்சியின் நன்மையை மக்கள் புரிய தொடங்கி உள்ளனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும்.

    காங்கிரஸ் தலைவர் செல்லப்பெருந்தகை தி.மு.க.வின் தவறை சுட்டிக்காட்டவில்லை. நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கவில்லை. கொலைக்கான காரணம் கண்டுபிடிக்கவில்லை. அதையெல்லாம் கேட்காத செல்வப்பெருந்தகைக்கு அ.தி.மு.க. பற்றி பேச அருகதை இல்லை.

    காங்கிரஸ் கட்சியை தி.மு.க. விழுங்க பார்க்கிறது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அதை நிரூபணம் செய்யும் வகையில் காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி தலைவியை தி.மு.க.வில் சேர்த்துள்ளனர். காங்கிரஸ்காரர்கள் எச்சரிக்கையாக இருந்தால் சரியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
    • விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் அடுத்த கோட்டைபாளையத்தில், தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த காப்பகத்தில் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற 26 குழந்தைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த காப்பகத்தில் சிறுவர்கள் அனைவரும் அமர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் காப்பகத்தில் உள்ளவர், அங்கு படித்து கொண்டிருக்கும் சிறுவர்களில் ஒரு சிறுவனை எழுப்பி விசாரிக்கிறார். பின்னர் அந்த சிறுவனை தனது பெல்ட்டை எடுத்து தாக்குகிறார்.

    வலி தாங்க முடியாத அந்த சிறுவனோ நான் எதுவும் செய்யவில்லை என கூறியபடியே ஐயோ.. ஐயோ என கத்துகிறார். ஆனாலும் கொடூர நெஞ்சம் கொண்ட அந்த நபர், சிறுவனின் அலறல் சத்தத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிறுவனை தாக்கி கொண்டே இருக்கிறார்.

    வலியால் துடித்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பி கீழே சென்று அமர்ந்துள்ளார். அப்போதும் அந்த நபர், சிறுவனை பெல்ட்டால் சரமாரியாக தாக்குகிறார். இதனை அங்கு இருந்த மற்ற சிறுவர்கள் பார்த்து அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

    இப்படி சிறுவனை அந்த நபர் கொடூரமாக தாக்குவதும், சிறுவன் வலி தாங்க முடியால் அலறி கொண்டும் இருப்பதை அங்கு பணியில் இருந்த மற்றவர்கள் பார்த்து அதனை தடுக்காமல், ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் காப்பகத்தில் சிறுவனை நபர் ஒருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கலெக்டர் பவன்குமார் கூறும்போது, சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவன் பெல்டால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் கோவை மாவட்ட குழந்தைகள் நலத்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களின் முன்பகுதி, பின்பகுதி கடுமையாக சேதமானது.
    • வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு பலர் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    தினமும் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதையடுத்து ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது.

    வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை படத்தில் காணலாம்.


     

    அப்போது எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதியது. விபத்தில் சிக்கிய அனைத்து வாகனங்களின் முன்பகுதி, பின்பகுதி கடுமையாக சேதமானது. இந்த விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானது. இந்த விபத்தால் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • 750-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது.
    • 315-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    கோவை:

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வருகிற அக்டோபர் மாதம் 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. முதல்நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

    இந்த மாநாட்டிற்கான லோகோவையும் இணையதளத்தையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் 19 நாடுகளில் இருந்து 264 பங்கேற்பாளர்களுடன் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்தியாவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மத்திய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத்துறைகளும் பங்கேற்க உள்ளன. 750-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது. 315-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தலைமை செயல் அலுவலர் பதவியுடன் 70-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து, தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக இந்த ஸ்டார்ட் அப் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்டார்ட் அப் தொழில் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்தில் இருந்தது. 2021-ம் ஆண்டு மூன்றாம் இடத்திற்கு முன்னேறி, லீடர் விருதை பெற்றோம். 2022-ல் சிறந்த செயல்பாட்டாளர் விருதை பெற்றது. தற்போது முதல் இடத்தில் நிற்கிறோம். இந்தியாவின் இதுவரை எங்கும் நடக்காத ஸ்டார்ட்அப் மாநாடு நடைபெறுகிறது. மற்ற மாநிலங்கள் வியக்கக்கூடிய அளவில் இது நிச்சயம் அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிறுகுறு தொழிலாளர்களுக்கு, லைசென்ஸ் முதற்கொண்டு மின் இணைப்பு வரை எதுவும் விரைவாக கிடைப்பது இல்லை என குற்றம் சாட்டுகிறார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு எந்த பகுதியில் பிரச்சனை என்று கூறுங்கள், அதை நிச்சயம் சரிசெய்து கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

    • நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!
    • இந்த முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக். வளைகுடாவில், நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!

    இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், அபுதாபி #IUCNWorldConservationCongress2025-க்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

    இந்த முயற்சியில் பங்கேற்ற @tnforestdept, Omcar Foundation உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

    இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும்.
    • கே.கே.சி.பாலுவுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.

    சினிமா, கலைத்துறையில் சேவை புரிந்தவர்களை கவுரவப்படுத்தும் வகையில் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, சாய்பல்லவி, அனிருத் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக கே.கே.சி.பாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் கலைமாமணிக்கு பதிலாக கொலைமாமணி விருது அளிக்கலாம் என சமூக வலைத்தள பயனர்கள் காட்டமாக தெரிவித்து வருகின்றனர்.

    இதனிடையே, கே.கே.சி.பாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாடு அரசுக்கான 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், சினிமா என பல்வேறு துறைகளில் சாதனை செய்த ஆளுமைகளுக்கு இந்த கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வரவேற்க கூடியது.

    இந்தாண்டுக்கான கிராமிய கலைகளுக்கான கலைமாமணி விருதுகளில், கிராமிய பாடகர்களுக்காக வீர சங்கரும், பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்காக காமாட்சி அவர்களும், நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக மருங்கன்,

    பெரிய மேளத்துக்காக முனுசாமி அவர்களும் கலைமாமணி விருது பெறுகின்றனர். விருதாளர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் வாழ்த்துக்கள்.

    இந்த வரிசையில் வள்ளி கும்மியை முன்னெடுத்த கே.கே.சி. பாலு என்பவருக்கும் கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வள்ளி கும்மி மூலம் "வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம்" என சத்தியம் வாங்கி வருகிறார் சாதியவாதி பாலு.

    இது குடிபெருமை பேசி, சனாதனத்தை நிலை நிறுத்தும் நாகரீக சமூகத்துக்கு எதிரானதாகும். பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும்.

    அதுவும் பெண் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்தே இந்த சனாதன நச்சுக்கருத்தியலை முன்னெடுத்து வரும் கே.கே.சி.பாலுவுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.

    ஆகவே, தமிழ்நாடு அரசு பாலுவுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை திரும்ப பெறவேண்டும். சாதியத்தை பரப்பிவரும் வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • 3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது.
    • விஜய் பேசுவதற்கு கரூரில் 4 இடங்களை தமிழக வெற்றிக்கழகத்தினர் தேர்வு செய்துள்ளனர்.

    கரூர்:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் கடந்த 13-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

    முதல் நாளான 13-ந் தேதி திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். பின்னர் கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது.

    பின்னர் பிரசாரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு அன்றைய தினம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை மறுநாள்( சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    விஜய் பேசுவதற்கு கரூரில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், வெங்கமேடு எம்.ஜி.ஆர். சிலை அருகில், ஈரோடு ரோடு வேலுச்சாமி புரம், 80 அடி சாலை ஆகிய 4 இடங்களை தமிழக வெற்றிக்கழகத்தினர் தேர்வு செய்துள்ளனர்.

    காவல்துறை அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.

    அந்த வகையில் கரூரில் அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ள 4 இடங்களில் ஏதேனும் ஒரு இடம் பிரசாரத்துக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. அனேகமாக கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய இடம் ஒதுக்கப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    விஜய் கரூர் வருகையை முன்னிட்டு அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    ×