search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students attack"

    • பாலக்காடு மாவட்டம் பாறைக்களத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் இரவு நேரத்தில் பள்ளியின் சுவர் ஏறி குதித்து மாணவர் விடுதிக்குள் புகுந்தார்.
    • தொடர்ந்து மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வரும் சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் நவக்கரை அடுத்த மாவுத்தம்பதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கண்ணதாசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கே.ஜி.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மாவுத்தம்பதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதன் அருகே விடுதியும் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பாறைக்களத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் இரவு நேரத்தில் பள்ளியின் சுவர் ஏறி குதித்து மாணவர் விடுதிக்குள் புகுந்தார்.

    பின்னர் அங்கிருந்த மாணவர்கள் சிலரை தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசினார்.

    இதை அங்கு பணியில் இருந்த ஆசிரியை ஒருவர் பார்த்து தட்டி கேட்டார். அதற்கு அந்த சிறுவன், அவரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த சிறுவன் கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மாணவர் விடுதி மட்டுமின்றி, மாணவிகள் விடுதிக்குள்ளும் சென்று, அவர்களையும் தாக்கி, அவர்களை பயமுறுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அங்கு பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது.

    எனவே தொடர்ந்து மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வரும் சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் கே.ஜி.சாவடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவனை தாக்கும் வீடியோக்களை அங்கிருந்த மற்றொரு மாணவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சங்கர் பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்தக் கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்களுக்கும் ஜூனியர் மாணவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

    கடந்த வாரம் கல்லூரி விடுதிக்குள் புகுந்த 10 சீனியர் மாணவர்கள் விடுதி அறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு இருந்த ஒரு மாணவரிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் போதனைகளை கூற சொன்னார்கள். அவர் மறுத்தார்.

    இதனால் அவரை தாக்கினர். அடி தாங்காமல் துடித்த அவர் அந்த மதத்தின் போதனைகளை கூறினார். இருந்தாலும் சீனியர் மாணவர்கள் அந்த மாணவனை கடுமையாக அடித்து உதைத்தனர்.

    கீழே தள்ளி அவர் மீது வாலிபர் ஒருவர் உட்கார்ந்து கொண்டு கை கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

    அவருடன் வந்த மாணவர்கள் மாணவனை காலால் சரமாரியாக எட்டி உதைத்தும், முகத்தில் கைகளால் தாக்கியும் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் மாணவனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணி பர்சை எடுத்துக் கொண்டு சென்றனர். மாணவனை தாக்கும் வீடியோக்களை அங்கிருந்த மற்றொரு மாணவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சங்கர் பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தாக்கிய 5 சீனியர் மாணவர்களை கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    நெல்லை பல்கலைக் கழக மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். #MDMK #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியும், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திட முன் வரவில்லை.

    இதனைக் கண்டித்து மாணவர்கள் தீவிர முழக்கங்கள் எழுப்பிய பின்னரே, மாணவப் பிரதிநிதிகள் ஓரிருவரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

    முற்றுகையிட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முற்பட்ட போது அவர்களை சமாதானப்படுத்த முயலாமல், காவல் துறையினர் கண் மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர்.

    இந்தத் தாக்குதலில் மாணவ- மாணவியர் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியர் சிலரை காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர்களே முரட்டுத்தனமாக அடித்துத் தள்ளுகின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. போர்க்களம் போல் நேற்று நடந்த இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது மிகுந்த மன வேதனையைத் தருகிறது.

    மாணவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

    மாணவர்களின் உரிமைப் போராட்டத்தில் மிக மெத்தனமாகச் செயல்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

    அமைதியான முறையில் போராடும் மாணவர்கள் மீது அரக்கத்தனமான தாக்குதல் தொடருமேயானால், எதிர் விளைவுகள் ஏற்படும் என்பதை உணரவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MDMK #Vaiko
    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது கீழ்பேட்டை கிராமம். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த இன்பரசன் (வயது 19), துவரநாதன் (20), சுரேஷ்(16) உள்ளிட்ட 20 மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    அப்போது கீழ்பேட்டை மீனவர்குப்பத்தை சேர்ந்த ஒரு கும்பல் உருட்டு கட்டையுடன் அங்கு வந்தனர். திடீரென மாணவர்களை சரமாரியாக கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த தாக்குதலில் இன்பரசன், துவரநாதன், சுரேஷ் ஆகிய 3 மாணவர்களும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த கீழ்பேட்டை கிராம மக்கள் ஆத்திரம் அடைந்தனர். மாணவர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி அந்த பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கீழ்பேட்டை கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்களிடம் போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கிராமமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே மோதல் சம்பவம் தொடர்பாக கீழ்பேட்டை மீனவர் குப்பத்தை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மோதல் சம்பவத்தால் கீழ்பேட்டை கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    ×