என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குமரி மாவட்டம் முழுவதும் கொட்டிய கனமழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டார், வடசேரி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.
- திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை கொட்டி வருகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் மழை நீடித்தது. நாகர்கோவில் நகரில் அதிகாலை முதலிலேயே பரவலாக மழை பெய்து வருகிறது.
பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டார், வடசேரி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. காலையில் இருந்தே மழை பெய்து வருவதால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசி வருகிறது.
மயிலாடி, தக்கலை, இரணியல், அடையாமடை, ஆணைக்கிடங்கு, சுருளோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
சிற்றாறு-1 அணை பகுதியில் அதிகபட்சமாக 31.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலை யோர பகுதியிலும், அணைப்பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 37.27 அடியாக இருந்தது. அணைக்கு 672 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 764 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 54 அடியாக இருந்தது. அணைக்கு 208 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 385 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 30.4, பெருஞ்சாணி 21, சிற்றார் 1-31.4, சிற்றார் 2-8.2, மயிலாடி 4.2, நாகர்கோவில் 11.6, கன்னிமார் 2.4, ஆரல்வாய்மொழி 3.4, பூதப்பாண்டி 3.6, புத்தன்அணை 8.6, பாலமோர் 22.4, தக்கலை 8.2, குளச்சல் 14, இரணியல் 13.2, அடையாமடை 14.2, குருந்தன்கோடு 4.2, கோழிபோர்விளை 12.2, மாம்பழத்துறையாறு 11, ஆணைக்கிடங்கு 10.6, களியல் 6, குழித்துறை 8.8, சுருளோடு 21.4, திற்பரப்பு 12.2, முள்ளங்கினாவிளை 17.2.






