என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
    • எஸ்.ஜி.பட்டி, பா.கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (26ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குளத்தூர், காளனம்பட்டி, சூடாமணிபட்டி, புளியமரத்துப்பட்டி, நாயக்கனூர், நல்லமனார்கோட்டை, எஸ்.ஜி.பட்டி, பா.கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்ெபாறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • திருப்பதி சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து.
    • தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு சிறப்பு பேருந்து.

    திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

    அதேபோல், தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு அக்டோபர் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    http://tnstc.in என்ற இணையதளத்தில் சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை செய்யப்படும்.
    • பாப்பம்பாள் லேஅவுட், பார்க்டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி.

    கோவை:

    ரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையத்தில் நாளை (26ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

    தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, பந்தய சாலை, அவினாசி ரோடு (அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு (கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்பாள் லேஅவுட், பார்க்டவுன், கருணாநிதி நகர், அங்கண்ணன் வீதி. மேற்கண்ட தகவலை ரேஸ்கோர்ஸ் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்து உள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அவதூறாக பேசியதாக கூறி அதனை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இன்று மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற நிலையில் பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் வலுக்கட்டாயமாக அவரது உருவப்படத்தை போலீசார் வாங்கிச் சென்றனர்.

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் கூறுகையில்," எடப்பாடி பழனிசாமி எங்களது தலைவரை பற்றி அவதூறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் . அல்லது நிறுத்த வைப்போம்" என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் கெங்கராஜ், ரசூல்மைதீன், மாரியப்பன், மாவட்ட துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், தியாக சுரேஷ், வெள்ளபாண்டி, வண்ணை சுப்பிரமணியன், மூத்த தலைவர் லெனின் பாரதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் அருள்தாஸ், பொதுச்செயலாளர் சையது அலி, தச்சை மண்டல துணைத் தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் ஜோதிபுரம் தங்கராஜ், முத்துராமலிங்கம், சிந்தாமதார், வட்டாரத் தலைவர் கணேசன், சுந்தர் ராஜ், இளைஞர் காங்கிரஸ் ஜான் மோசஸ், அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தென்கலம் ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல.
    • விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன.

    பிச்சைக்காரர்கள் போல் ஒட்டுப் போட்ட சட்டை மாதிரி செல்வப்பெருந்தகை கட்சி மாறி வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய விமர்சனத்திற்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை 'பிச்சைக்காரன்' என்று இழிவுபடுத்துவது, ஒரு தனிநபரை பழிக்கிற செயல் மட்டுமல்ல, இது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய விஷம கருத்து, எவ்வளவு ஆழமாக அரசியலில் சமூக விரோத எண்ணங்கள் புதைந்துள்ளன என்பதையும், உண்மையான சிரமங்களை அறியாத செழிப்பின் அகந்தையையும் வெளிப்படுத்துகிறது. மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து, விளிம்புநிலை மக்களின் வாக்குகளால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், இறுதியில் ஊர்ந்து சென்று முதல்வராகவும் ஆனீர்கள். ஆனால், இன்று மக்களின் வலிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தூரத்தில் நிற்கிறீர்கள்.

    டெல்லியில் முகத்தை மறைத்துக் கொண்டு, வேறொருவரின் சொகுசு பென்ட்லி காரில் (Bentley) பயணிக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு எப்படி இந்த நாட்டின் ஏழைகள் எதிர்கொள்கின்ற துயரங்களும் நெருக்கடிகளும் தெரியும், புரியும்?

    என்னை 'பிச்சைக்காரன் - ஒட்டு போட்ட சட்டை' என்று அழைக்கும் போது, என்னை மட்டுமல்ல, எளிமையான நிலைமையில் வாழும் கோடிக்கணக்கான தமிழர்களின் மரியாதையையும் மதிப்பையும் இழிவுபடுத்துகிறீர்கள். நான் கிழிந்த துணி அணிந்திருந்தாலும், அந்த துணியில் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களின் கண்ணீர், கனவுகள், நம்பிக்கைகள் உள்ளன.

    விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், என் அரசியல் அடையாளமாகவும் இருக்கின்றன. அவர்கள் சுயமரியாதைக்கும், அன்றாட வாழ்வுப் போராட்டத்திற்கும் நான் கடமைப்பட்டவன். அந்த மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல.

    எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா.?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
    • பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளம்பெண்ணும், வீடியோகிராபரும் வந்தனர்.

    கோவை:

    கோவை நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 21-ந்தேதி இவர் சிலீவ் லெஸ் சுடிதார் அணிந்து கோவை பூ மார்க்கெட்டிற்கு வந்தார். அவரிடம் அங்கிருந்த பூ கடை உரிமையாளர் ஒருவர் அரைகுறை ஆடை அணிந்தபடி பூ மார்க்கெட்டிற்கு வரக்கூடாது என கூறியதாக தெரிகிறது. இதனால் இளம்பெண்ணுக்கும், வியபாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அந்த இளம்பெண், ஆடை சரியாக தான் இருக்கிறது. உங்களது பார்வையை சரியாக வைத்துக்கொள்ளுங்கள் என வியாபாரியிடம் தெரிவித்தார்.

    பூ மார்க்கெட்டில் இருந்த சில வியாபாரிகளும் அந்த இளம்பெண்ணுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து இளம்பெண் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், ஆடைகுறித்து ஆபாசமாக பேசிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தார். அதேபோன்று பூ வியாபாரிகள் சங்கத்தினரும் இளம்பெண் மீது புகார் அளித்துள்ளனர். அதில், பூ மார்க்கெட்டில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளம்பெண்ணும், வீடியோகிராபரும் வந்தனர். வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்ததால் வீடியோ எடுக்க வேண்டாம் என்றோம். வியாபாரிகளை தவறாக சித்தரித்து உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கோவை அண்ணாசிலை பகுதியில் நடந்த மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் பவன்குமாரிடம் நிருபர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறும்போது,

    போலீசார் இதுதொடர்பாக புகார் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.
    • டாக்டர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்திற்கு முழுநேர பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு வழங்கப்படும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அருள் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சமீப காலமாக நெருக்கடியான சூழலும், குழப்பங்களும் நிலவி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய மருத்துவர் தொடர்ந்து 46 ஆண்டு காலம் இயக்கம் நடத்தி வருகிறார்.

    தமிழ்நாட்டில் பாமக-வினர் மத்தியிலும், பொதுமக்கள், அனைத்து கட்சித்தலைவர்கள், அரசு அதிகாரிகள் மத்தியிலும் அரசியலில் மூத்த தலைவர் மருத்துவர் மக்கள் மேம்பாட்டுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருபவர் என்பதை அனைவரும் அறிவர்.

    மருத்துவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போதைய பாமக-வின் நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையில் மருத்துவர் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.

    எனவே அவருடைய பாதுகாப்பு கருதி முழுநேரமும் மருத்துவர் அய்யா வசித்து வரும் தைலாபுரம் தோட்டம் மற்றும் அவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும் தைலாபுரம் தோட்டத்திற்கு மருத்துவர் அய்யாவை சந்திக்க வருவோர் அனைவரையும் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் நுழைவாயிலி பரிசோதனை கருவி (Metal detector) அமைத்திட கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அருள் எம்.எல்.ஏ. அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    இதனிடையே இன்று முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 28-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாத்தினார் தடுக்கின்றனர்.
    • மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் செய்வதாக புகார்

    தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில் பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என ஆதிக்க சாதியினர் தடுக்கும் அராஜகம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை மீறி பள்ளி மாணவர்கள் பொது பாதையை பயன்படுத்தினர்.

    கலைச்செல்வி பாலசுப்பிரமணியன் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், "தஞ்சை ஒன்றியம், கொல்லாங்கரை கிராமத்தில், காலம்காலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த, பொது பாதையினை, சாதிய ஆதிக்கத்தின் பெயரில், பள்ளி செல்லும், பட்டியலின மாணவர்களை பொது பாதையில் செல்லக்கூடாது என தடுக்கும் அராஜகம்....... சிபிஐ(எம்),தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில், மிக வன்மையாக கண்டிக்கிறோம்!

    மாவட்ட நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நிரந்தர தீர்வு எடுக்காமல் அலட்சியம் காட்டியது மென்மேலும் வன்முறையை அதிகரிக்கச் செய்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.

    • 2 மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.
    • இருவரும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள டோனாவூரில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று 9-ம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதில் 2 மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை வகுப்பறைக்கு வந்த மாணவர் தன்னை அவதூறாக பேசிய மாணவரை அரிவாளால் வெட்டினார். இதனை தடுக்கச் சென்ற இன்னொரு மாணவரையும் அந்த மாணவர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதில் 2 மாணவர்களுக்கும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவரை பைக்குள் அரிவாளை மறைத்து கொண்டு வந்து சக மாணவர் வெட்டிய இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழா சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
    • வேளாண் வணிகத் திருவிழா மற்றும் கருத்தரங்கில் பெருவாரியான வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    சென்னை:

    வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    'வேளாண் வணிகத் திருவிழா-2025" நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி அன்று தொடங்கி வைத்து, உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழா சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

    பங்கேற்கும் துறைகள் மற்றும் நிறுவனங்கள் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, சர்க்க ரைத்துறை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), தமிழ்நாடு உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் பட்டு வளர்ச்சித் துறை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற அரசுத் துறைகள் மற்றும் அவை சார்ந்த கல்வி நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

    சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழர்களின் வேளாண் வணிகம், பனை, தென்னை, ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள், மூலிகைப்பயிர்கள், முருங்கை, மஞ்சள், பலா, முந்திரி, நிலக்கடலை போன்ற பல்வேறு வேளாண் விளைபொருட்களின் சிறப்புகள், மதிப்புக் கூட்டப் பட்ட பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம், உழவர் நல சேவை மையங்கள், நகர்ப்புரத் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நீர்ஊடகத் தோட்டம், ஊட்டச்சத்து வேளாண்மை, பாரம்பரிய காய்கறிகள் போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்கள். தேங்காய் மட்டை உரிக்கும் கருவி, எண்ணெய் செக்கு எந்திரம், பருப்பு உடைக்கும் எந்திரம் போன்ற மதிப்புக் கூட்டும் எந்திரங்கள், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி தொடர்பான விவரங்கள் போன்ற அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இக்கண்காட்சி அமையும்.

    இதுதவிர முன்னணி வேளாண் தொழில் முனைவோருடன் கலந்துரையாடலும் நடைபெறும். இக்கருத்தரங்குகளில், தொழில்நுட்ப வல்லுநர்களும், அனுபவமிக்க வேளாண் பெருமக்களும், ஏற்றுமதியாளர்களும், உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

    வேளாண் வணிகத் திருவிழா மற்றும் கருத்தரங்கில் பெருவாரியான வேளாண் பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்பதற்காக, சென்னைக்கு அருகாமையிலுள்ள 14 மாவட்டங்களிலிருந்தும் உழவர்களை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டார், வடசேரி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை கொட்டி வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலையில் மழை நீடித்தது. நாகர்கோவில் நகரில் அதிகாலை முதலிலேயே பரவலாக மழை பெய்து வருகிறது.

    பார்வதிபுரம், செட்டிகுளம், கோட்டார், வடசேரி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. காலையில் இருந்தே மழை பெய்து வருவதால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசி வருகிறது.

    மயிலாடி, தக்கலை, இரணியல், அடையாமடை, ஆணைக்கிடங்கு, சுருளோடு, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

    சிற்றாறு-1 அணை பகுதியில் அதிகபட்சமாக 31.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலை யோர பகுதியிலும், அணைப்பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 37.27 அடியாக இருந்தது. அணைக்கு 672 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 764 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 54 அடியாக இருந்தது. அணைக்கு 208 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 385 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 30.4, பெருஞ்சாணி 21, சிற்றார் 1-31.4, சிற்றார் 2-8.2, மயிலாடி 4.2, நாகர்கோவில் 11.6, கன்னிமார் 2.4, ஆரல்வாய்மொழி 3.4, பூதப்பாண்டி 3.6, புத்தன்அணை 8.6, பாலமோர் 22.4, தக்கலை 8.2, குளச்சல் 14, இரணியல் 13.2, அடையாமடை 14.2, குருந்தன்கோடு 4.2, கோழிபோர்விளை 12.2, மாம்பழத்துறையாறு 11, ஆணைக்கிடங்கு 10.6, களியல் 6, குழித்துறை 8.8, சுருளோடு 21.4, திற்பரப்பு 12.2, முள்ளங்கினாவிளை 17.2.

    ×