என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr.Ramadoss"

    • அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.
    • டாக்டர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்திற்கு முழுநேர பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு வழங்கப்படும் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அருள் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சமீப காலமாக நெருக்கடியான சூழலும், குழப்பங்களும் நிலவி வருவதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கிய மருத்துவர் தொடர்ந்து 46 ஆண்டு காலம் இயக்கம் நடத்தி வருகிறார்.

    தமிழ்நாட்டில் பாமக-வினர் மத்தியிலும், பொதுமக்கள், அனைத்து கட்சித்தலைவர்கள், அரசு அதிகாரிகள் மத்தியிலும் அரசியலில் மூத்த தலைவர் மருத்துவர் மக்கள் மேம்பாட்டுக்கு, ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருபவர் என்பதை அனைவரும் அறிவர்.

    மருத்துவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். தற்போதைய பாமக-வின் நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையில் மருத்துவர் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவதால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானதாக இல்லை.

    எனவே அவருடைய பாதுகாப்பு கருதி முழுநேரமும் மருத்துவர் அய்யா வசித்து வரும் தைலாபுரம் தோட்டம் மற்றும் அவர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    மேலும் தைலாபுரம் தோட்டத்திற்கு மருத்துவர் அய்யாவை சந்திக்க வருவோர் அனைவரையும் பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கும் வகையில் நுழைவாயிலி பரிசோதனை கருவி (Metal detector) அமைத்திட கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அருள் எம்.எல்.ஏ. அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • பெண்களுக்கு பெருமை சேர்க்கவும், பெண்மையை போற்றவும், பெண் கல்வியை வலியுறுத்தவும்...
    • பெண்கள் இல்லாமல் குடும்பமோ- நாடோ இல்லை என்பதை உலகிற்கு உரத்து சொல்லவும் இந்த மாநாடு அடையாள திருவிழாவாக போற்றப்பட வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவுள்ள, வன்னியர் சங்கம் ஒருங்கிணைக்கும் மகளிர் மாநாட்டுக்கு, குடும்பம்- குடும்பமாய், அணி, அணியாய் திரண்டு வந்து மாநாட்டை வெற்றிபெற வைக்குமாறு உங்களிடம் வேண்டுகிறேன்.

    பெண்களுக்கு பெருமை சேர்க்கவும், பெண்மையை போற்றவும், பெண் கல்வியை வலியுறுத்தவும், பெண்கள் இல்லாமல் குடும்பமோ- நாடோ இல்லை என்பதை உலகிற்கு உரத்து சொல்லவும் இந்த மகளிர் மாநாடு அடையாள திருவிழாவாக போற்றப்பட வேண்டும்.

    கண்ணகிக்கு பெருமை சேர்க்கிற பூம்புகார் மண்ணில், காவிரித்தாய் வங்கக்கடலில் கலக்கிற மண்ணில் வன்னியர் சங்கம் சார்பில் என்னுடைய தலைமையில் நடைபெறுகிற இந்த பிரம்மாண்டத் திருவிழாவில் பெண் தெய்வங்களே, பெண் தேவதைகளே, சகோதரிகளே உங்களை பாசத்தோடு எதிர்பார்த்து, வழிமேல் விழிவைத்து நான் அங்கே காத்துக் கொண்டிருப்பேன்.

    உங்கள் வீரமும், எழுச்சியும் நிரம்பிய பாசத்திருமுகங்களை எதிர்பார்த்து நான் காத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் வருகையால் நான் மகிழவும், என்னைப் பார்த்து நீங்கள் மகிழவும் இந்தநாள் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும்.

    பெண்களுக்கு எல்லா நிலையிலும் பாதுகாப்பு, சம உரிமை, கல்வியிலும், வேலையிலும் முன்னுரிமை, குழந்தைகள் நலன், மது- போதைப் பொருள்கள் ஒழிப்பில் தீவிரம், முழுமையான சமூகநீதி போன்ற எண்ணற்ற நலன்களை போற்றும் பிரகடனங்களை மாநாட்டில் முன் மொழிவதோடு அவற்றை சிந்தாமல், சிதறாமல் அறுவடை செய்வது எப்படி என்கிற திட்ட வடிவத்தையும் மாநாட்டில் பேசுவோம், செயலாற்றுவோம்.

    முக்கியமாய் பெண்கள் உணர வேண்டிய ஒன்றாக, வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு இருக்கிறது. அதை முழுமையாய் வென்றெடுக்க, மகளிர் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமே இல்லை. அது எப்படி என்பதையும் என் சகோதரிகளுக்கு மாநாட்டில் விளக்கப் போகிறேன். அதேபோல் அனைத்து சமூகத்தவருக்குமான உரிய இட ஒதுக்கீடு, சாதி வாரியான கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்தும் மாநாட்டில் பேசுவோம்.

    கண்ணகி- கோவலன் வாழ்வியலை கண்முன்னே நிறுத்தக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாடகம், அன்றைய நாளில் பூம்புகார் மண்ணில் நடக்கவுள்ளது என்பதையும்; மகளிர் பெருமளவு பங்கேற்கும் வீரதீர சாகச கலை நிகழ்ச்சிகளும் அன்றே நடைபெறவுள்ளது என்பதையும்; தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க.வினரும், வன்னியர் சங்க நிர்வாகிகளும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வார்டு நிர்வாகிகளும், உறுப்பினர்களும்; மாநாட்டு மேடையை நோக்கி வருவீர்கள் என்று உறுதிபட நம்புகிறேன்.

    தமிழ்நாடே திரும்பிப் பார்த்திடவும், "ஆகா, இதுவன்றோ, மகளிர் மாநாடு" என்று வியந்து நிற்கவும்; இந்த மாநாட்டை ஒரு அடையாள மாநாடாகவே நடத்திக்காட்டப் போகிறோம். அதை செய்து முடிக்கப் போவது ராமதாசு ஆகிய நான் அல்ல; நீங்கள் தான்; மகளிர்தான்; மகளிரை முழுமையாக கொண்டாடி, மகளிரை போற்றி, மகளிர்க்கான எல்லா வகையிலான நீதியும் தடையின்றி கிடைப்பதற்கு உறுதியேற்கும் ஒரே விழா; இந்த விழாதான்.

    விரைந்தும், மகிழ்ச்சியுடனும், பூம்புகார் வருவீர்; அங்கே நாம் சந்திப்போம்; நம்முடைய வெற்றிகளுக்கான புதிய பாதை குறித்து கூடி சிந்திப்போம்; பேசி முடிவெடுப்போம்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக உதவி பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மனிதனின் உழைப்பை சுரண்டிக்கொண்டு, அதற்கான அங்கீகாரத்தையும் ஊதியத்தையும் அளிக்க மறுப்பதைவிட மிக மோசமான சமூக அநீதி இருக்க முடியாது. தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும், பணி நிரந்தரமும் வழங்க மறுப்பதன் மூலம் அத்தகைய சமூக அநீதியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் இழைத்து வருகின்றன.

    அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 25 சதவீதத்தினர் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள 75 சதவீத ஆசிரியர்கள் தற்காலிகப் பணியாளர்களாவர். இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, ஆசிரியர்களின் 6 மாத ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், அடுத்த பணி நாள் முதல் புதிய ஒப்பந்தம் வழங்காமல், ஓரிரு நாட்கள் தாமதம் செய்துவிட்டு, அதன்பிறகே புதிய ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களில் ஒருவர்கூட தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி செய்யாமல் தடுக்கப்படுகின்றனர்.

    அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களிலும், அவற்றின் உறுப்புக் கல்லூரிகளிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் அனைவரையும் அவர்களின் தகுதிக்கு ஏற்ற நிலைகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தின் நிதிநிலை அதற்கு இடம் தராவிட்டால் உறுப்புக்கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றி அவற்றில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்களை அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களாகவும், மற்றவர்களை அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களாகவும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் அனைத்து உதவிப் பேராசிரியர்களுக்கும் அரசு இதே முறையில் சமூகநீதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்ற பெயரில் கொள்ளை நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்ற பெயரில் கொள்ளை நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை ஈடுகட்டுவதற்காக பெட்ரோல்-டீசல் விலைகளை தினமும் 10 பைசா முதல் 20 பைசா என்ற அளவில் உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இப்போது கடந்த 19 நாட்களில் செய்யப்படாத விலை உயர்வை ஈடு கட்டுவதற்காக தினசரி விலை உயர்வை இருமடங்காக உயர்த்தயுள்ளன.

    இது கத்தியைக் காட்டாமல் எரிபொருள் நிரப்பும் குழாய்களின் முனையைக் காட்டி நடத்தப்படும் கொள்ளை ஆகும்.

    இந்தியாவில் கடந்த 2014-2015-ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. அதையும் சேர்த்து எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இது பெரு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகம் ஆகும்.

    எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற பெயரில் நடத்தப்படும் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அதற்காக பெட்ரோல், டீசல் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்து எரிபொருட்களின் விலை கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு குறைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×