என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது.
    • வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து நேற்று மாலை தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை பின்பற்றுகிற வகையிலான ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ளார். பள்ளி குழந்தைகள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதை கனடா பிரதமரும் தன்னுடைய நாட்டில் கொண்டு வந்து பாராட்டுகிறார். உலக நாடுகளும் நம் மாநிலத்தை எடுத்துக்காட்டாக சொல்கிற அளவுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.

    இதேபோல, பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். மேலும், 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார். ஜனநாயகமா, சர்வாதி காரமா, பாசிசமா, குடியரசு ஆட்சியா என்பதை தீர்மானிக்கிற ஒரு போர்க்களத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்கிற ஆணவத்தில் இருக்கின்றனர்.

    நம் நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்தனர். ஆனால், சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட இயக்கத்தை அழித்து, ஒழித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என பிரதமர் மோடி ஊருக்கு ஊர் பேசி வருகிறார். இது அவரது ஆணவத்தை காட்டுகிறது. இது பற்றி அவரை நேரில் சந்திக்கும்போது கேட்பேன்.

    இத்தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம், எதிர்காலத்தை சார்ந்ததாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.

    இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது. இதில், அரசியல் சட்டத்தை தீயிட்டு கொளுத்திவிட்டு, மனு நீதியை சட்டமாகக் கொண்டு வருவோம் என்றும், நம் நாட்டின் தலைநகராக வாரணாசியை அறிவிப்போம் எனவும், முஸ்லீம்களுக்கு வாக்குரிமை கிடையாது எனவும் தீர்மானித்தனர்.

    இவ்வளவு பேரபாயம் இருப்பதை அனைவரும் உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஜனநாயகத்தை காக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும்.இத்தேர்தல் என்பது 2-வது சுதந்திர போரை போன்றது.

    எனவே, ஒவ்வொருவரும் 10 வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க செய்யுமாறு கேட்டு கொள்ள வேண்டும். தஞ்சை தொகுதி வெற்றி வேட்பாளர் முரசொலியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காயமடைந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துவங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    சிவகாசியில் இருந்து தீப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒடிசாவிற்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 2.30 மணி அளவில் லாரி திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள முக்கன்பாலம் என்ற இடத்தில் செல்லும்போது அங்கு மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் நிலையில் மேம்பால பணிகள் நடைபெறுவதை கவனிக்காமல் லாரியை ஓட்டிச்சென்றதால் தடுப்புச் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இந்த தீப்பெட்டிகளில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.

    நேரம் செல்லச்செல்ல தீ கொளுந்து விட்டு எரிந்ததால் இது குறித்து துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உதவியாளர் என இருவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

    காயமடைந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துவங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நள்ளிரவில் தீப்பெட்டி ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல்.
    • மிச்சாங் புயல் முதற்கொண்டு அனைத்திலுமே பொய் சொல்லி வருகிறார் முதல்வர்.

    மதுரை :

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-

    * தி.மு.க. ஒரு கார்பரேட் கம்பெனி.

    * நான் தலைவன் அல்ல, தொண்டன். அ.தி.மு.க.வில் ஒரு தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியும். தி.மு.க.வில் வர முடியுமா?

    * தலைமை பதவிக்கு வாரிசாக வருவது தான் வாரிசு அரசியல்.

    * எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் என்று இருப்பது வாரிசு அரசியல் அல்ல.

    * மிச்சாங் புயல் முதற்கொண்டு அனைத்திலுமே பொய் சொல்லி வருகிறார் முதல்வர்.

    * 520 வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக பொய் சொல்கிறார் முதல்வர்.

    * நான் என்ன பொய் சொல்கிறேன் என்று அவர்கள் கூறட்டும், விளக்கம் அளிக்கிறேன்.

    * தமிழகத்தில் 35 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உகாதி - புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
    • தென்னகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு நமக்குரிய வரிப்பகிர்வைப் பெறும் ஆண்டாக அமையட்டும்!

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உகாதி - புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    புத்தாண்டு புதிய தொடக்கங்களுக்கு வித்திடட்டும்! தென்னகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு நமக்குரிய வரிப்பகிர்வைப் பெறும் ஆண்டாக அமையட்டும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • தி.மு.க.வும், காங்கிரசும் வாரிசு அரசியல் நடத்துகின்றன.
    • மோடி 3வது முறையாக பிரதமராக ஆட்சி அமைப்பார் என்பது உறுதி என்றார் ராஜ்நாத் சிங்.

    நாமக்கல்:

    நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று நாமக்கல்லில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற வாகன பேரணியில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங், திறந்த ஜீப்பில் நின்றவாறு பொதுமக்களை பார்த்து கையசைத்து, தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதன்பின், நாமக்கல் பஸ் நிலையம் அருகில் திறந்த ஜீப்பில் நின்றவாறு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:

    தமிழ் கலாசாரம் மிகச்சிறந்த பாரம்பரியம் மிக்க கலாசாரம் ஆகும். காங்கிரஸ் ஆட்சியில் 30 ஆண்டுகளில் இந்தியாவுக்கு செய்ய முடியாத பல நலத்திட்டங்களை பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளார். அதனால் பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் மரியாதை தருகின்றனர்.

    2014-ம் ஆண்டுக்கு முன் இந்தியா பொருளாதாரத்தில் உலக அளவில் 11-வது இடத்தில் இருந்தது. தற்போது 5-வது இடத்திற்கு வந்து உள்ளது. 2027-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் உலக அளவில் 3-வது இடத்திற்கு வருவது உறுதி.

    கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்கள் பெற்று ஆட்சி அமைத்தோம். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, மோடி 3-வது முறையாக பிரதமராக ஆட்சி அமைப்பார் என்பது உறுதி.

    தமிழகத்தில் உள்ள தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் வாரிசு அரசியல் நடத்திக்கொண்டு இருக்கின்றன. இதற்காக அவர்கள் கூட்டணி அமைத்து தங்களது குடும்பம் முன்னேறுவதற்காக பாடுபடுகின்றனர்.

    நாம் உலக அளவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல, நமது விமானப்படை, தரைப்படை உள்ள அனைத்து ராணுவ பிரிவுகளும் மிகவும் பலம் மிக்கது. நாம் ராணுவ தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். தற்போது எவ்வித ராணுவ தளவாடங்களும் இறக்குமதி செய்யப்படுவதில்லை.

    பிரதமர் மோடி தலைமையில் வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் அதிக சக்தி கொண்ட மிகப்பெரிய நாடாக மாறும். எனவே வரும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் சமீபத்தில் அகற்றப்பட்டது.
    • ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    டெல்லியில் கடந்த மாதம் 15-ந்தேதி மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பயன்படுத்த தயாரிக்கப்படும் வேதிப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்தஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் 9-ம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இருந்த சீல் சமீபத்தில் அகற்றப்பட்டது.

    இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

    இதேபோல், சென்னை தி.நகரில் உள்ள இயக்குனர் அமீர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • காங்கேயம் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் காங்கயம் ரோடு, நல்லிகவுண்டர் நகர் புதுநகர் 7-வது வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (60). திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்திவந்தார். இவரது மனைவி சித்ரா (57). இந்த தம்பதியர் மயிலாடுதுறை திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் கோவிலுக்கு சென்று 60-ம் கல்யாணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி சந்திரசேகரன், தனது குடும்பத்தினருடன், திருக்கடையூர் சென்று 60-வது கல்யாணத்தை முடித்துவிட்டு நேற்று மாலை 4 மணிக்கு அங்கிருந்து மீண்டும் திருப்பூருக்கு காரில் புறப்பட்டனர்.

    சந்திரசேகரனின் 2-வது மகன் இளவரசன் (26) காரை ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்துள்ள ஓலப்பாளையம் அருகே கரூர்-கோவை சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது திருப்பூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து சென்றது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக காரும்-பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில் சந்திரசேகரன், அவரது மனைவி சித்ரா, சந்திரசேகரனின் மருமகள் ஹரிவி வித்ரா (30), பேத்தியான 3 மாத பெண் குழந்தை ஷாக்ஷி, காரை ஓட்டி வந்த 2-வது மகன் இளவரசன் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

    காரில் வந்த சந்திரசேகரனின் மூத்த மகன் சசிதரன் (30) என்பவர் மட்டும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் விரைந்து வந்து பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த அவரை அங்கிருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அரசு பஸ்சை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், கடவூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (51), கண்டக்டர் கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (53) மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதற்கிடையே பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. வெள்ளகோவில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி, காரை உடைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

    காரின் அருகே உறவினர்களுக்கு கொடுப்பதற்காக வாங்கி வந்த சாமி படங்கள், பூஜைப்பொருட்கள் சிதறிக்கிடந்தன. காங்கயம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக, வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்
    • சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இதனை தொடர்ந்து நாகை மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார்வையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்காக ஏற்கனவே 10 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதனையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது. மசினகுடியில் டி23 புலியைப் பிடித்தது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    இந்நிலையில் சிறுத்தையை பற்றி தவறான தகவல்களை பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய பொய் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்வதுடன் வதந்தி பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • சென்னையில் இருந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் 2,970 சிறப்பு பேருந்துகள்.
    • ஏப்ரல் 20, 21-ந்தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பேருந்துகள்.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. சொந்த ஊரில் இருந்து பலர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்கவும், வாக்களித்த பின்னர் மீண்டும் வேலை செய்யும் இடத்திற்கு திரும்பவும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி சென்னையில் இருந்து 17 மற்றும் 18-ந்தேதிகளில் 2,970 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 7154 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பிற ஊர்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2 நாட்களுக்கு 3,060 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

    ஏப்ரல் 20 மற்றும் 21-ந்தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பேருந்துகள் என 2 நாட்களுக்கு மொத்தம் 6,009 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    அதேபோல் ஏப்ரல் 20 மற்றும் 21-ல் பிற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு திரும்ப 2,295 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மொத்தம் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நான் கோட்டாவில் வந்தவன் அல்ல என அண்ணாமலை சொல்வது பொய். பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஒதுக்கீட்டில் தான் அண்ணாமலை படித்து, ஐபிஎஸ் அதிகாரியாக வந்தார்
    • அண்ணாமலை ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. அவரை பண்ணையார் என சொல்ல வேண்டும்

    கோவையில் தி.மு.க சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது, "1974 ல் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது கொங்கு பகுதியை சேர்ந்த 24 சமுதாயங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அருந்தினர் இன மக்களுக்கு 3 சதவீத உள் கட ஒதுக்கீட்டை திமுக வழங்கியது. இப்பகுதி இளைஞர்களுக்கு ஆபத்தாக அண்ணாமலை வந்துள்ளார்.

    நான் கோட்டாவில் வந்தவன் அல்ல என அண்ணாமலை சொல்வது பொய். பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஒதுக்கீட்டில் தான் அண்ணாமலை படித்து, ஐபிஎஸ் அதிகாரியாக வந்தார். ஆடு மேய்த்தவரை அதிகாரியாக்கி அழகு பார்த்தது திராவிடம். அதிகாரியை ஆடு மேய்ப்பவராக மாற்றியது ஆரியம்.

    அண்ணாமலை ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. அவரை பண்ணையார் என சொல்ல வேண்டும். அண்ணாமலையை வைத்தே தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை அறிந்து கொள்ள முடியும். அண்ணாமலை நண்பர்களிடம் இருந்து வாங்கிய பணத்திற்கு வரி காட்டுகிறாரா என வருமான வரித்துறை சோதனை செய்ய வேண்டும்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அண்ணாமலை வண்டி டெல்லிக்கு போகாது. இங்கு தாமரை மலராது. மோடி ஆட்சி முடிவுக்கு வர உள்ளது.

    பாஜக மனித குல எதிரி என தென்னிந்திய மக்களுக்கு தெரியும். வாந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, பாஜகவிற்கு வாழ்வு தர மாட்டார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களை இழக்க வேண்டி இருக்கும். திராவிட கட்சிகளுக்கு 85 சதவீதம் வாக்குகள் உள்ளது. திராவிட சித்தாந்ததிற்கு எப்போதும் ஆபத்து வராது" எனத் தெரிவித்தார்.

    • கடந்த முறை தூத்துக்குடி தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்த நிலையில் கவர்னர் ஆனார்.
    • இந்த முறை பரிதாபம், அவர் தோல்வியடைந்த பிறகு கவர்னர் ஆக முடியாது, ஏனென்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது.

    தென்சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

    இன்று தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.யை ஆதரித்து திருவான்மியூரில் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு மாநில கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்த தொகுதியில் (தென்சென்னை) போட்டியிடுகிறார். அந்த கட்சியில் (பா.ஜனதா) வேட்பாளர்கள் இல்லை. ஆகேவே இரண்டு மாநில கவர்னர்களை ராஜினாமா செய்ய வைத்து, தேர்தல் களத்தில் பா.ஜனதா களம் இறக்கிவிட்டுள்ளது.

    கடந்த முறை தூத்துக்குடி தொகுதியில் இருந்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்த நிலையில் கவர்னர் ஆனார். இந்த முறை பரிதாபம், அவர் தோல்வியடைந்த பிறகு கவர்னர் ஆக முடியாது, ஏனென்றால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறது. கச்சத்தீவு பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி ஒருபோதும் பேசியது கிடையாது. தேர்தல் நெருங்கிய நிலையில், அவர்கள் அதைப் பற்றி பேசுகிறார்கள்" என்றார்.

    அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழிசை சவுந்தராஜன் கூறியதாவது:-

    தயது செய்து உங்களுடைய எம்.பி. பதவியின்போது செய்த சாதனைகள் சொல்லுங்கள் என கனிமொழியிடம் கேட்க விரும்புகிறேன். நான் ஆளுநராக நீடிப்பதா? அல்லது வேட்பாளராக போட்டியிடுவதா? என்று நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் பதட்டம் அடைகிறீர்கள்.

    அவர்களுக்கு (திமுக) தேர்தலில் போட்டியிடக்கூடிய கட்சிக்காரர்கள் இல்லையா?. அவர்களுடைய சொந்த உறவினர்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கியுள்ளனர். எங்களுடைய கட்சியில் சாதாரண தொண்டனும் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைய முடியும்.

    எங்களுடைய கட்சியில் வேட்பாளர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 15 பேர் விருப்ப மனு செய்திருந்தனர். அந்த 15 பேரில் நான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். திமுகவில் கனிமொழி மட்டுமே விருப்பமனு செய்திருந்தார்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    • தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் நாள் வரை கடைகள் மூடல்.
    • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு.

    இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தமிழகத்தில் கட்சி தலைவர்கள் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், 17-ந்தேதி மாலை ஐந்து மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும்.

    அதனால் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளில் இருந்து வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

    அதனைத்தொடர்ந்து தமிழக அரசு மூன்று நாட்களை டாஸ்மாக் மூடப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளது.

    ×