search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காங்கேயம் அருகே சோகம்: அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலி
    X

    காங்கேயம் அருகே சோகம்: அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலி

    • காங்கேயம் அருகே அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் காங்கயம் ரோடு, நல்லிகவுண்டர் நகர் புதுநகர் 7-வது வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (60). திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்திவந்தார். இவரது மனைவி சித்ரா (57). இந்த தம்பதியர் மயிலாடுதுறை திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் கோவிலுக்கு சென்று 60-ம் கல்யாணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி சந்திரசேகரன், தனது குடும்பத்தினருடன், திருக்கடையூர் சென்று 60-வது கல்யாணத்தை முடித்துவிட்டு நேற்று மாலை 4 மணிக்கு அங்கிருந்து மீண்டும் திருப்பூருக்கு காரில் புறப்பட்டனர்.

    சந்திரசேகரனின் 2-வது மகன் இளவரசன் (26) காரை ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்துள்ள ஓலப்பாளையம் அருகே கரூர்-கோவை சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது திருப்பூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து சென்றது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக காரும்-பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில் சந்திரசேகரன், அவரது மனைவி சித்ரா, சந்திரசேகரனின் மருமகள் ஹரிவி வித்ரா (30), பேத்தியான 3 மாத பெண் குழந்தை ஷாக்ஷி, காரை ஓட்டி வந்த 2-வது மகன் இளவரசன் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

    காரில் வந்த சந்திரசேகரனின் மூத்த மகன் சசிதரன் (30) என்பவர் மட்டும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் விரைந்து வந்து பலத்த காயத்துடன் துடிதுடித்துக் கொண்டிருந்த அவரை அங்கிருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அரசு பஸ்சை ஓட்டி வந்த கரூர் மாவட்டம், கடவூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (51), கண்டக்டர் கரூர் மாவட்டம், நொய்யல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (53) மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதற்கிடையே பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால் இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. வெள்ளகோவில் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி, காரை உடைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர்.

    காரின் அருகே உறவினர்களுக்கு கொடுப்பதற்காக வாங்கி வந்த சாமி படங்கள், பூஜைப்பொருட்கள் சிதறிக்கிடந்தன. காங்கயம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக, வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×