என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- கல்வராயன் மலைப்பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவரும் விரைவில் நலம் பெற விழைகிறேன்.
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடையில் விற்கப்படும் மது, பார்களிலும், சந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படும் கலால் வரி செலுத்தப்படாத மது, தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயம் என மூன்று வகையான சாராயங்கள் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு கேடு விளைவித்து வருகின்றன. மதுவையும், கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தான் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படு்கிறது. ஆனால், டாஸ்மாக் மதுவுக்கு இணையாக கள்ளச்சாராயமும் விற்பனை செய்யப்படுகிறது. எதையுமே கட்டுப்படுத்த முடியாத செயலற்ற நிலையில் தான் காவல்துறையும், அரசும் முடங்கிக் கிடக்கின்றன.
சரியாக ஓராண்டுக்கு முன் தஞ்சாவூரில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு நஞ்சு கலக்கப்பட்டிருந்தது தான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்தது. அரசு மதுக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுவில் சயனைடு நஞ்சு எவ்வாறு கலக்கப்பட்டது? என்ற வினாவுக்கு ஓராண்டாக விடை இல்லை. இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு ஆணையிடப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மைக்கு இதுவே சாட்சி.
கடந்த ஆண்டு மரக்காணம் மற்றும் மதுராந்தகம் செய்யூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக் கொண்டு கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மதுவணிகம் செய்பவர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்திருக்கிறார். தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதற்கான முயற்சி தான் இது. இதில் உண்மை இல்லை. கல்வராயன் மலைப்பகுதிகளில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு மாவட்டம் முழுவதும் விற்கப்படுகிறது. சாக்லேட் சுவையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் அளவுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத் தொழில் நவீனமடைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு மாவட்ட ஆட்சியர் சொல்லும் கட்டுக்கதைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்.
கள்ளச்சாராயத்தை மட்டுமல்ல... டாஸ்மாக் மதுவை குடித்து விட்டு அட்டகாசம் செய்யும் குடிகாரர்களைக் கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில நாட்களுக்கு முன் கரூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் போதையில் ஒரு குடிகாரர் தவறாக நடந்திருக்கிறார். அதுகுறித்து காவல் நிலையத்தில் அந்த பெண்மணி புகார் அளித்தும் குடிகாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, புகார் கொடுத்த பெண்ணை சமாதானப்படுத்தி பேருந்தில் ஏற்றி அனுப்பியுள்ளது.
கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய தமிழக அரசு, அதற்கான தண்டமாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மரக்காணம் நிகழ்வில் வழங்கப்பட்டது போன்று தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் 10-க்கும் மேற்பட்டோருக்கு தரமான மருத்துவம் அளிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழப்பு:முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்!கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த சுரேஷ், பிரவீன், சேகர் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பத்துக்கும்…
— Dr S RAMADOSS (@drramadoss) June 19, 2024
- தி.மு.க. வேட்பாளரான அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
- நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா வருகிற 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவை தொடர்ந்து அங்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளது.
இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தி.மு.க.-பா.ம.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி உள்ளது. இதனால் 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் வெற்றி பெறுவதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.
தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் விக்கிரவாண்டியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். பா.ம.க. நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 14-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளான அன்று 5 சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 7 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தி.மு.க. வேட்பாளரான அன்னியூர் சிவா, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான ஜெகத்ரட்சகன் எம்.பி., அமைச்சர் பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் பொன்முடி கூறும்போது, கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.
'இதைத் தொடர்ந்து பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணியும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இருவரும் தங்களது ஆதரவாளர்களோடு ஊர்வலமாக சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ததால் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் களம் இன்று களைகட்டி காணப்பட்டது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளரான டாக்டர் அபிநயா வருகிற 20-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரசாரமும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. நாளை முதல் தி.மு.க. மற்றும் பா.ம.க. கட்சி களை சேர்ந்தவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து ஏற்கனவே அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய உள்ளனர்.
பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து சீமானும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
வருகிற 24-ந்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 26-ந்தேதி கடைசி நாளாகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. இதன் பிறகு தேர்தல் களம் மேலும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.
- அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினார்கள். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
"சாகர் கவாச்" என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் இந்த ஒத்திகை பின்னர் அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு ஒத்திகை தமிழகம்-புதுவையில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகையை கடலோர காவல் படையினர், உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து நடத்தி வருகிறார்கள்.
இதையொட்டி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தீவிரவாதிகள் போல மாறுவேடத்தில் ஊடுருவும் நபர் களை உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் மடக்கி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவே பாதுகாப்பு ஒத்திகையின் சாராம்சமாகும்.
இதன்படி தீவிரவாதிகள் போல வேடமிட்டு கடலோர பகுதிகளில் நுழையும் போலீசாரை பாதுகாப்பு படையினர் பல இடங்களில் மடக்கி பிடித்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை வேட்டையின் போது கவனக்குறைவாக செயல்படும் காவலர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை பாயும் என்பதால் மிகுந்த எச்ச ரிக்கையோடு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் செயல்பட்டு வருகிறார்கள்.
சென்னை
சென்னையில் மெரினா உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் சுற்றுலா கடற்கைரை பகுதிகள், காசிமேடு உள்ளிட்ட மீன்பிடி கடற்கரை பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதனை நாளை மாலை வரை நீட்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று சென்னையை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகள் அனைத்திலும் அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்
மாமல்லபுரம், கல்பாக்கம் கடற்கரை பகுதிகளிலும் தீவிர சோதனை நடந்தது. கல்பாக்கம் அணுமின் நிலையம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதியில் தாக்குதல் நடத்த மீனவர்கள் போன்று வேடமிட்டு வந்த போலீசாரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.
இதேபோல் கடலோர காவல் படையினர், போலீசார் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் படகில் சென்று சந்தேகப்படும் நபர்கள் படகில் வருகிறார்களா? எனவும் கண்காணித்தனர். கோவளம், திருவிடந்தை, மாமல்லபுரம் புறவழிச் சாலை, பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், கல்பாக்கம், வாயலூர் பகுதி, கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஒத்திகையில் மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் 89 போலீசார், 20 கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை-தூத்துக்குடி
நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகையில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உவரி, கூடங்குளம் சட்டம்-ஒழுங்கு போலீசார், மீன் வளத்துறை, வருவாய்த்துறை யினரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் மேற்பார்வையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
நாகை மாட்டம்
நாகை மாவட்டம், வேதா ரண்யம் கடலோர பகுதி களான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்ப வனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிரா மங்களில் டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் மேற்பார்வை யில் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் தமிழக போலீசார் 8,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.
- 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
வடவள்ளி:
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை பிரிவு, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளம் அறிவியல் மாணவர் சேர்க்கை நடந்தது.
நடப்பு கல்வியாண்டில் வேளாண் பல்கலையில் 14 இளம் அறிவியல் பாடப்பிரிவு, 4 பட்டயப்படிப்புகளில் 5,361 இடங்களுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் மூன்று தொழில் முறை பாடப்பிரிவில் 371 இடங்களும், அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இளம் அறிவியல் (வேளாண்மை) மற்றும் இளம் அறிவியல் (தோட்டக்கலை) பாடப்பிரிவுகளில் உள்ள 340 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த மே 7-ந் தேதி முதல் ஜூன் 12-ந் தேதி வரை பெறப்பட்டது. அதன்படி மொத்தம் 33,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 11,447 மாணவர்கள், 18,522 மாணவிகள் என29 ஆயிரத்து 969 பேரின் விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நடப்பாண்டில் பிளஸ்-2 வில் அறிவியல் பிரிவு படித்த மாணவர்கள் 27,300 பேர் மற்றும் தொழில்முறையில் வேளாண்மை படித்த மாணவர்கள் 1,900 பேர் என மொத்தம் 29,969 மாணவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களுக்கான தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 200-க்கு 200 மதிப்பெண்களை 4 பேரும், 199.5 மதிப்பெண் 8 பேரும், 199 மதிப்பெண்களை 10 பேரும் பெற்று உள்ளனர். மேலும், இன்று (19-ந் தேதி) மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இவர்களுக்கு இன்று அட்மிஷன் நடத்தப்படும். இதனை தொடர்ந்து ஆன்லைன் முறையில் கலந்தாய்வு வரும் ஜூன் 22, 23, 24 கலந்தாய்வு நடைபெறும்.
இந்த கலந்தாய்வின் போது மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரி மற்றும் துறைகளில் மாற்றங்கள் செய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், நடப்பாண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி வழக்கம் போல் திறக்காமல் புதுமையான முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஆகஸ்டு முதல் வாரத்தில் அழைத்து அவர்களுக்கு வேளாண்மை குறித்து கள நிலவரம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். இந்த பயிற்சி மூலம் மாணவர்களுக்கு வேளாண் படிப்பு குறித்த புரிதல் ஏற்படும். இதனை தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி திறக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
- உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
சென்னை:
கள்ளச்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு மதுவிலக்குத் துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், கள்ளக்குறிச்சியில் மீண்டும் 5 பேர், கள்ளச்சாராயத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 10 பேருக்கும் மேல், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்று தெரிகிறது.
மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில், கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்து ஒரு ஆண்டே ஆன நிலையில், கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது.
கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் 5 உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- நீட்டை நடத்தியே தீருவேன் என்னும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம்.
- ஆரம்பம் முதலே நீட் தேர்வை எதிர்த்த ஒரே இயக்கம் தி.மு.க. தான்.
சென்னை:
நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே நீட்டை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து வருகிற 24-ந்தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. நீட்டை நடத்தியே தீருவேன் என்னும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம். ஆரம்பம் முதலே நீட் தேர்வை எதிர்த்த ஒரே இயக்கம் தி.மு.க. தான்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமை தாங்குகிறார். ஆர்ப்பாட்டத்தில் மாணவரணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வரும் 21-ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூகநீதிக்கு எதிரான, குளறுபடிகள் நிறைந்த #NEET தேர்வை ரத்து செய்ய மறுக்கும் பாசிச பாஜக அரசுக்கு கடும் கண்டனங்கள்!
— DMK (@arivalayam) June 19, 2024
24.06.2024 காலை 09.00 மணி, சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாணவர் அணிச் செயலாளர் திரு @EzhilarasanCvmp எம்.எல்.ஏ., அவர்கள் அறிக்கை.… pic.twitter.com/NztBDnfyRR
- கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
- கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அப்பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 5 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் சராசரியாக ரூ.3773 ஆக உள்ள நிலையில் நகர்ப்புறங்களில் தனி நபர் செலவினம் ரூ.26,459 ஆக உள்ளது.
- தமிழ்நாட்டில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிலுமே தனி நபர்கள் அதிகம் செலவு செய்வதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தனி நபர் செலவினங்கள் குறித்த குடும்பங்களின் நுகர்வு செலவின கணக்கெடுப்பு [Human consumption expenditure survey -HCES ] 2022-23 அறிக்கை வெளியாகியுள்ளது. அதனபடி இந்தியாவின் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் சராசரியாக ரூ.3773 ஆக உள்ள நிலையில் நகர்ப்புறங்களில் தனி நபர் செலவினம் ரூ.26,459 ஆக உள்ளது.
தனி நபர் அதிக செலவு செய்யும் பட்டியலில் ஒரு சில மாநிலங்களே உள்ளன. அதில் தமிழ்நாடும் ஒன்று. கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தனி நபர் செலவினம் நகர்ப்புறங்களில் அதிகம் உள்ளதாகவும், அதுவே கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கிராமப்புறங்களில் தனி நபர் செலவினம் அதிகம் உள்ளதாகவும் அறிக்கையில் குறியப்படடுள்ள நிலையில் தமிழ்நாட்டில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என இரண்டிலுமே தனி நபர்கள் அதிகம் செலவு செய்வதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நகர்ப் புறத்தில் சராசரியாக ஒருவர் ரூ. 7,630 செலவழிக்கிறார். அதுவே கிராமப்புறத்தில் ஒரு நபரின் செலவினம் ரூ.5,310 ஆக உள்ளது. இந்திய அளவில் நகர்ப்புற கிராமப்புற செலவின வித்தியாசம் 71 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் அந்த வித்தியாசம் 44 சதேவீதமாக மட்டுமே உள்ளது.

இதற்கு முக்கிய கரணம் தமிழகத்தில் நாகபுரத்துக்கு ஈடாக கிராமப்புரத்தில் உள்ள இளைஞர்களுக்கு உரிய கல்வி கிடைப்பதால் அதன்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. எனவே தமிழகத்தில் நகர்புறத்துக்கு ஈடாக கிராமப்புறங்களிலும் தனி நபர் செலவினம் உள்ளதாகவே பார்க்கமுடிகிறது. மேலும் கலாசார மாற்றங்களும் தனி நபர் செலவினத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உடுத்தும் ஆடைகள், உண்ணும் உணவு வகைகள், பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவை இதற்கு முந்தைய காலத்தில் குறைவாகவே இருந்த நிலையில் தற்போது அவர்களும் விதவிதமான ஆடைகள், உணவுகள், பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தப் பழக்கப்பட்டுவிட்டனர் என்பதை நாம் பார்க்கலாம்.
குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கை முறை பெரிதும் மாறுதலுக்கு உள்ளாகியுள்ளது கண்கூடு. இதுதவிர்த்து இந்த செலவின அறிக்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வறுமை நிலையையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறிய முக்கிய ஆதாரமாக உள்ளது குறிப்பிடத்க்கது.
- தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதாலும் தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளாது.
- சட்டமன்றத்தில் வருகிற திங்கட்கிழமை என்னுடைய உரை வருகிறது அப்போது பாருங்கள்.
மதுரை:
விடாமுயற்சி கொண்ட ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார்.
அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து தனது 'எக்ஸ்' வலைதளம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் பொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிடும் வீடியோவை பகிர்ந்து நான் கவர்ந்த இளம் தலைவர் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவரது இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் இவரது கருத்து விவாதிக்க தொடங்கியது. அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளும் இந்த பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்து இருந்தனர். இதையடுத்து சில நாட்களில் அந்த பதிவை செல்லு ராஜூ திரும்ப பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இன்று காலை மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் இ-சேவை பிரிவை தொடங்குவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்லூர் ராஜூ, மீண்டும் ராகுல் காந்திக்கு புகழாரம் சுட்டியுள்ளார். அப்போது மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. அந்த வகையில் விடாமுயற்சி கொண்ட ராகுல் காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க.வுக்கும், எங்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டார். எதற்காக இந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்? இந்த தேர்தல் நேர்மையாக நடக்காது என்பதாலும் தேர்தல் ஆணையம் எதையும் கண்டுகொள்ளாது.
இடைத்தேர்தல் என்றாலே புது புது யுத்திகளை தி.மு.க. சட்டத்திற்கு புறம்பாக செய்யும். பணம் ஆறாக ஓடும், மக்களை எந்த வகையில் கவர்வதற்கும் தி.மு.க.வினர் செயல்படுவார்கள். பா.ம.க.வின் ஓட்டு வங்கி எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக அவர்கள் இந்த இடைத்தேர்தலில் நிற்கிறார்கள்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. அதனால் பக்கத்து வீட்டில் பூத்த மல்லிகை பூவிற்கு மனம் இல்லை என்று கூற முடியாது. ராகுல் காந்தி விடாமுயற்சி கொண்டவர். காங்கிரசை கட்டிக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தி.மு.க.வினர் வெற்றி பெற்ற மமதையில் பேசுகிறார்கள். எந்தக் கூட்டணியும் இல்லாமல் தி.மு.க. தனித்து நிற்க தயாரா? அ.தி.மு.க. போல் தி.மு.க. தனித்து நின்று அவரவர் திறமையை, செல்வாக்கை காண்பிக்கட்டும். மக்களிடத்தில் உங்கள் சாதனையை சொல்லி தேர்தலை சந்திக்க தயாரா? ஜெயலலிதா போன்று இன்றைய முதல்வர் ஸ்டாலினும், தி.மு.க. தலைவர்களும் முடிவெடுப்பார்களா? சட்டமன்றத்தில் வருகிற திங்கட்கிழமை என்னுடைய உரை வருகிறது அப்போது பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை.
- எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.
மதுரை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அமுதா, ஸ்டாலின் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 8,374 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 1928-ம் ஆண்டு தனியார் நிறுவனம் பெற்றது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 700 குடும்பத்தினர் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தோம். 2028-ம் ஆண்டில் குத்தகை முடிகிறது.
ஆனால் 4 ஆண்டுகள் முன்னதாகவே தனியார் நிறுவன குத்தகை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதால் எங்களை அங்கிருந்து காலி செய்யுமாறு தெரிவித்தனர். பல தலைமுறைகளாக தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றிய எங்களை திடீரென காலி செய்யுறுமாறு கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எங்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.
பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை. மாஞ்சோலை எஸ்டேட் முகவரியில் மட்டுமே ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளதால், அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் 700 குடும்பங்களை சேர்ந்த 2,150 பேர் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம்.
எனவே எங்களுக்கு தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கவும், கன்னியாகுமரி ரப்பர் தோட்ட கழகத்தில் வேலை வழங்கவும் வேண்டும். அதேபோல அங்கன்வாடி, பள்ளிகளில் சமையல் உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிகளை வழங்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி மகா தேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் லஜபதிராய், வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, ஊட்டியில் புலிகள் காப்பகத்துக்காக தேயிலை தோட்ட தொழிலாளர்களை காலி செய்யும் நடவடிக்கையின்போது வனத்துறை சார்பிலும் இழப்பீடு வழங்கப்பட்டது. அதுபோல மாஞ்சோலையையும் புலிகள் காப்பகத்துக்காக கையகப்படுத்தப்படுவதால், அங்குள்ள தொழிலாளர்களுக்கும் வனத்துறை இழப்பீடு வழங்க வேண்டும் என வாதாடினர்.
மேலும், மனுதாரர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்து தருவது அவசியம் எனவும் கோரினர். இதை பதிவு செய்து கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு உள்ளிட்ட மறுவாழ்வு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் வரை மாஞ்சோலையில் இருந்து அவர்களை வெளியேற்ற தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கு நாளை மறுநாள் ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
- அனைத்து மாநில தலைநகரங்களிலும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினருக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
- போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வரும் 21-ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைநகரங்களிலும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினருக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தொடர் மௌனத்தை கண்டித்து நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
- பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர்.
- விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலை ஓரம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விதிமுறைகள் மீறி விளம்பர பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. விளம்பர பேனர் வைக்க வேண்டும் என்றால் அந்தந்த நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி கோரி குறிப்பிட்ட தொகை செலுத்தி போலீசாரிடம் அனுமதி பெற்று வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
எனினும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்களை வைத்து உள்ளனர்.
இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலை ஓரம் ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. கடந்த சிலநாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர் ஒன்று காற்றில் சரிந்தது. அந்த பேனர் எப்போது வேண்டுமானாலும் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழும் அபாய நிலையில் காட்சி அளித்தது. இதனால் அவ்வழியே செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.
எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த விளம்பர பேனர்களை அகற்றி, விதிமுறைகள் மீறி விளம்பர பேனர்கள் வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






