search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "University of Agriculture"

    • ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • ஜூன் 6-ந்தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

    கோவை:

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்கும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் துக்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் வேளாண்மை தோட்டக்கலை உள்ளிட்ட 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் மீன்வள அறிவியல், மீன்வளப் பொறியியல் உள்ளிட்ட 6 இளம் அறிவியல் பாடப் பிரிவுகள், 3 தொழில்முறை பாடப் பிரிவுகளுக்கும், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கும் சேர்த்து இந்த மாணவர்சேர்க்கை நடைபெறும்.

    இந்த 3 கல்வி நிறுவனங்களிலும் ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை பயில நினைக்கும் மாணவர்கள் ஒரேயொரு விண்ணப்பத்தை இணையவழியில் பூர்த்தி செய்து அனுப்பினால் போதுமானது.

    விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

    மாணவர்களுக்கான வழி காட்டுதல்கள், மாணவர் சேர்க்கைக்கான வழி முறைகள் உள்ளிட்ட விவரங்களை www.tnau. ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 18 உறுப்புக்கல்லூரிகளில் 14 பட்டப் படிப்புகளுக்கும் சேர்த்து 2,555 காலி இடங்களும், 28 இணைப்புக் கல்லூரிகளில் 2,806 காலியிடங்களும் உள்ளன. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண்மை படிப்புக்கு 240 இடங்களும், தோட்டக்கலை படிப்புக்கு 100 இடங்களும் உள்ளன.

    மீன்வளப் பல்கலைக் கழகத்தில் 6 பட்டப் படிப்புகள், 3 தொழில்கல்வி பட்டப்படிப்புகளில் மொத்தம் 345 இடங்களும், 57 சிறப்பு இடஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.

    மாணவர்கள் வரும் ஜூன் 6-ந்தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். கலந்தாய்வுக்கான தேதி, செயல் முறைகள் போன்ற வை பல்கலைக்கழக இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படும்.

    வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 94886 35077, 94864 25076 என்ற எண்களிலும், மீன் வளப் பல்கலைக்கழகம் தொடர்பான விவரங்களுக்கு 04365 - 256430, 94426 01908 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

    கோவை:

    தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் மே இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ தொடங்கும். இந்த மழையானது செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

    கேரள மாநிலத்தில் அதிகம் பெய்யும் தென் மேற்கு பருவமழை அதனை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கொட்டித்தீர்க்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு பின்னரே பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பருவ மழையானது தமிழகத்தில் சராசரி அளவிலேயே பெய்யும் என கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:-

    எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்துக்கான (ஜூன் முதல் செப்டம்பர்) மழை பற்றிய முன்னறிவு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கம் ஆகியவை ஆராய்ச்சி மேற்கொண்டன.

    இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணினி கட்டமைப்பை கொண்டு 2023-ம் ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

    அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்ட பிரிவானது உளுந்து, பச்சை பயறு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பை அறிவித்துள்ளது.
    • 2-வது வாரத்தில் இருந்து தமிழ்நாட்டிலிருந்து புதிய வரத்து வர தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை,

    கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்ட பிரிவானது உளுந்து, பச்சை பயறு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பை அறிவித்துள்ளது.

    உளுந்து உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமான மாநிலமாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து பயிரிடப் பட்டு 2.25 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.கடலூர், நாகை, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகியவை உளுந்து உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். ஏ.டி.டீ 3, ஏ.டி.டீ.4, ஏ.டி.டீ.5, கே.கே.எம் 1. கோ 6, வம்பன் 5, வம்பன் 6 ஆகிய உளுந்து ரகங்கள், அதிகளவில் பயிரிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் உளுந்து நடப்பு மாதம் முதல் ஏப்ரல் வரை அதிகளவில் அறுவடை செய்யப்படுகிறது.

    வர்த்தக மூலங்களின் படி, உளுந்து வரத்தானது ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலகளிலிருந்து ஏற்கெனவே வர தொடங்கி உள்ளது, மேலும், நடப்பு 2-வது வாரத்தி லிருந்து தமிழ்நாட்டிலிருந்து புதிய வரத்து வர தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில், பச்சைப் பயறு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.60 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 0.58 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாகை, திருவாரூர், திருவள்ளூர், தூத்துக்குடி, சேலம் ஆகியவை பச்சைப் பயறு உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். ஏ.டி.டீ 3 மற்றும் வம்பன் 3 போன்ற ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

    விலை முன்னறிவிப்பு திட்ட குழு, கடந்த 15 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய உளுந்து பச்சைப் பயறுக்கான விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற் கொண்டது.

    ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், நடப்பாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் தரமான உளுந்தின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.69 முதல் ரூ.72 வரை இருக்கும்.

    தரமான பச்சைப் பயறுகளின் பண்ணை விலை ரூ.68 முதல் ரூ.70 வரை இருக்கும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. அரசு நேரடி கொள்முதல் செய்வதன் மூலம் பருப்பு வகை களின் விலையில் சற்று மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவு களை எடுக்குமாறு பரிந்துரைக்கப் படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2.56 கோடி டன் மக்காசோளம் உற்பத்தி செய்யப்பட்டது.
    • குவிண்டாலுக்கு ரூ.1,900 முதல் ரூ.2 ஆயிரமாக இருக்கும்.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மக்காசோளத்திற்கான விலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் ஆண்டுதோறும் 3.10 கோடி டன் மக்காள சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 36 ஆயிரம் டன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தியாவில் கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்கள் மக்கா சோளத்தை அதிகளவில் பயிரிடுகின்றன.

    தமிழ்நாட்டில் 2020-21-ம் ஆண்டில் 4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மக்கா சோளம் பயிரிடப்பட்டு, 2.56 கோடி டன் மக்காசோளம் உற்பத்தி செய்யப்பட்டது.

    சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மக்கா சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    வர்த்தக மூலங்களின்படி மக்காசோளம் அதிகமாக பயரிடப்படும் மாநிலங்களில் பயிரின் நிலைமை சீராக இருக்கிறது. கறிக்கோழி, முட்டையின் தற்போதைய விலை நிலவரம் மக்கா சோளத்தின் விலையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் அதிகரிக்கும் விலையானது ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளை பொருத்து அமையும். தென்னிந்திய மாநிலங்களில் மக்கா சோளத்தின் மகசூலில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.

    பல்கலைக்கழகத்தின் வேளாண் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்பு திட்டமானது கடந்த 27 ஆண்டுகளாக உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய மக்காசோளம் விலை சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

    அந்த ஆய்வுகளின் அடிப்படையில் தரமான மக்கா சோளத்தின் பண்ணை விலையானது குவிண்டாலுக்கு ரூ.1,900 முதல் ரூ.2 ஆயிரமாக இருக்கும். எனவே விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.



    ×