என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சசிகலா போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.
- 2026 சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியதையடுத்து சசிகலா வெளியிட்ட அறிக்கையில் அ.தி.மு.க. தொண்டர்கள் தளர்ந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை சசிகலா போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனை தொடர்ந்து போயஸ் கார்டனில் அவர் ஆலோசனை நடத்த உள்ள வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று சேர்ந்து வென்று காட்டுவோம். சசிகலாவின் இலக்கு 2026 என்கிற வாசகங்களும் போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன.
ஒற்றுமை... ஒற்றுமை... ஒற்றுமை... புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே, அம்மாவின் அன்பு தொண்டர்களே சின்னம்மா தலைமையில் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம் என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சசிகலாவின் அழைப்பை ஏற்று இன்று மாலையில் அவரை எத்தனை பேர் சந்திக்க உள்ளனர்? என்பது இன்று மாலையில் தான் தெரிய வரும்.
- பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
- இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
சென்னை:
பக்ரீத் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்து வருமாறு:-
நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம்-சகோதரத்துவம்-அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்.
ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை 'ஈத்துவக்கும் இன்பம்' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன.
நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-
இறை நம்பிக்கை உள்ள வர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:- "ஒற்றுமையே உயர்வு தரும்" என்பதற்கேற்ப, அனைவர் வாழ்விலும் ஒன்றுமை உணர்வுமே லோங்கிட வேண்டும், வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்பதை தெரிவித்து எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:-
இஸ்லாமிய சமுதாயத்தினரின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
பக்ரித் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது; மாறாக, எங்கும் அன்பு, சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மட்டுமே தழைத்தோங்கும். அத்தகைய நிலையை ஏற்படுத்த கடுமையாக உழைப்போம்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, பெருந் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், விஜய்வசந்த் எம்.பி., ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- கடந்த 10 மாதங்களாக பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார்.
- விசாரணையில் பன்னீர்செல்வம் பணம் எடுப்பது போல் ஏ.டி.எம்.மிற்கு செல்வார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம், பல்லடம் மற்றும் திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவி செய்வது போல் அவர்கள் ஏ.டி.எம். கார்டை வைத்து பணம் திருடும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு புகார்கள் வரவே அதிரடி விசாரணை நடத்தினர்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் மடூர், புகையிலைப்பட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 29) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பன்னீர்செல்வம் பணம் எடுப்பது போல் ஏ.டி.எம்.மிற்கு செல்வார். அங்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை முதலில் குறி வைப்பார். அதன் பிறகு அவர்களுக்கு தானாக வந்து உதவி செய்வது போல உதவி செய்வார் . அப்போது பணம் எடுக்க தெரியாத முதியவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து, முதியவர்கள் தெரிவிக்கும் 4 இலக்க பின் நம்பரை புத்திசாலித்தனமாக தன் நினைவில் வைத்து கொள்வார்.
அதன் பிறகு முதியவர்கள் கேட்கும் பணத்தை மட்டும் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொடுக்கும் பன்னீர்செல்வம் முதியவர்களின் ஏடிஎம்., கார்டை அவர்களுக்கு திருப்பி கொடுக்க மாட்டார். அதற்கு பதிலாக அவர் ஏற்கனவே போலியாக வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை முதியவர்களிடம் கொடுத்து விடுவார்.
முதியவர்கள் ஏ.டி.எம்.மில் இருந்து சென்ற பிறகு அவர்களின் கார்டை வைத்து வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுத்துள்ளார். இந்தநிலையில் தாராபுரத்தில் முதியவர்களின் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் தானாக எடுக்கப்படுவதாக தொடர்ந்து தாராபுரம் குற்றவியல் போலீசாருக்கு புகார்கள் வரவே, தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி நபரை தேடி வந்தனர்.
தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் பன்னீர்செல்வம் என்பதும் , முதியவர்களின் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மாஸ், தொப்பி அணிந்து டிப்-டாப்பாக வலம் வந்த அவர், அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்து வந்துள்ளார். கடந்த 10 மாதங்களாக பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். கைதான அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மருத்துவமனையில் நடைபெறும் புதிய கட்டிடப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார்.
அவினாசி:
கோவையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை அவிநாசி அரசு பொது மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருத்துவ மனையில் உள்ள மருந்தகம், ஆண்கள் - பெண்கள் மருத்துவ பகுதி, அறுவை சிகிச்சை அரங்கம் , மருத்துவ மனையில் நடைபெறும் புதிய கட்டிடப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
- 19-ந்தேதி வைகை வடகரை பகுதிகளான வார்டு 10-16, 21-35-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.
- அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
மதுரை:
மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மதுரையில் பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி நடைபெற உள்ளதால் 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தப்படுகிறது.
19-ந்தேதி வைகை வடகரை பகுதிகளான வார்டு 10-16, 21-35-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.
21-ந்தேதி வைகை தென்கரை பகுதிகளான வார்டு 46-49, 53, 70, 72, 74-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
- பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.
மயிலம்:
மயிலம் அருகே செண்டூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கர்ண மோட்சம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, அதற்காக கோவில் வளாகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
இதில் அங்கிருந்த அவுட்டு மற்றும் சரவெடிகள் மீது எதிர்பாரத விதமாக தீப்பொறி விழுந்தது. இதனால் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் தீக்காயமடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் தீக்காயமடைந்த சக்திவேல் மகன்கள் கவியழகன் (வயது 7), தமிழழகன் (5) சுப்பிரமணியன் மகன் கவுஷிக் (7), காளி மகன் அன்பு (10), சிவமூர்த்தி மகன் உதயா (7), எடையப்பட்டு நாடக ஆசிரியர் சீனுவாசன் (47) ஆகியோரை மீட்டு திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் சிறுவன் உதயாவை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று முதல் 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் 20-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
- இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 14&ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக தம்பி பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார். உங்களில் ஒருவராக பல பத்தாண்டுகளாக களமாடி வரும் அவரைப் பற்றி பாட்டாளி சொந்தங்களாகிய உங்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.
விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உனது நினைவிலும் தோன்றுவது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன். தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமூகச் சூழலிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் கிடக்கும் வன்னியர்களுக்கு தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் அதிகாலை 12.01 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. அந்தப் போராட்டத்தை முறியடிக்க முடியாத காவல்துறை, சாலை மறியல் போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே என்னையும், என்னுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர் சங்கத்தினரையும் கைது செய்து விட்டு, மனித வேட்டையை தொடங்கியது.
பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது. அப்போதும் கொலைப்பசி அடங்காத காவல்துறை, பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தியாகம் செய்தனர்.

இவர்களில் சித்தணி ஏழுமலை தவிர மீதமுள்ள 7 மாவீரர்களும் சுட்டுவீழ்த்தப்பட்ட மண் விக்கிரவாண்டி தொகுதியில் தான் உள்ளது. அவர்களின் உயிர்த்தியாகம் ஈடு இணையற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் நாள் அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்தி வருகிறோம் என்ற போதிலும், இந்த ஆண்டு அதற்கும் முன்னதாக ஜூலை 13-ஆம் நாள் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று, அதற்கான சான்றிதழை சமூக நீதிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவுச் சின்னங்களில் வைப்பது தான் அவர்களுக்கு செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகுதியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த இராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7-ஆம் நாள் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதன்பின் 5 ஆண்டுகள் ஆகி விட்டன; திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது, தாங்களாக முன்வந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அப்போது ஏற்பட்ட கருத்து விவாதத்தின் போது நான் விடுத்த சவாலில் வெற்றி பெறும் வகையில், 2020-ஆம் ஆண்டில் தொடங்கி பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அப்போதைய ஆளும் அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் வன்னிய மக்களுக்கு 10.50% இடஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். அதற்கான நடைமுறைகளில் நிகழ்ந்த சில குளறுபடிகள் காரணமாக அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தொடரப் பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று 2022 மார்ச் மாதத்தில் தீர்ப்பளித்தது.
வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், அதைக் கூட நிறைவேற்றியிருக்க வேண்டியதில்லை. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியாவது உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அதைக்கூட செய்ய மனமில்லாதவர் தான் மு.க.ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் ஒரே மாதத்தில் தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 10 மாதங்கள் கழித்து தான் 2023 ஜனவரி 12-ஆம் நாள் வன்னியர் உள் இடஓதுக்கீடு பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணையிட்டார். அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு 3 முறைக்கும் மேல் நீட்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், வன்னியர்களுக்கு இன்று வரை சமூகநீதி வழங்கப்படவில்லை.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்; எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் 3 முறை முதலமைச்சரை சந்தித்து இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினர். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் அடங்கிய குழுவினர் 50 முறைக்கும் கூடுதலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனாலும் எந்த பயனும் இல்லை. காரணம்... வன்னியர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இருப்பது வன்மம் தானே தவிர, அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் அல்ல.
வன்னியர்களுக்கு திமுக துரோகம் செய்வது இது முதல் முறையல்ல. 1970-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட சட்டநாதன் ஆணைய அறிக்கையில், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16% தனி இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அது செயல்படுத்தப்பட்டு இருந்தால் இப்போது வன்னியர்களுக்கு மட்டும் 15%க்கும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்த மறுத்தது அப்போதைய முதலமைச்சர் கலைஞர். 1989-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முந்தைய ஆளுனர் ஆட்சியில் 12.12.1988-ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக வன்னியர்களுக்கு 16% தனி இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவ்வாறு இட ஒதுக்கீடு கிடைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் 107 சாதிகளுடன் வன்னியர்களையும் சேர்த்து 20% இட ஒதுக்கீடு கொடுத்து அடித்துக் கொள்ள வைத்தார் கலைஞர்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மூன்று முறை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த மூன்று வாய்ப்புகளையும் சீர்குலைத்தது திமுக அரசுகள் தான். தமிழ்நாட்டில் திமுக வளர்ந்ததற்கு காரணம் வன்னியர்கள் தான். ஆனால், வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு காரணமான வன்னியர்களுக்கு செய்ததெல்லாம் துரோகம் தான். திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கே துரோகம் செய்த கட்சி தான் திமுக. ஏ.ஜி. என்று அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு கூட திமுகவுக்கு மனம் இல்லை. 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. இட ஒதுக்கீட்டு ஈகியர்கள் 21 பேருக்கு நினைவு மண்டபம் கட்டும் அறிவிப்பும் செயல்படுத்தப்படவில்லை.

திமுகவின் வன்னியர் துரோகம் இத்துடன் நின்று விடவில்லை. திமுகவிலும் வன்னியர்கள் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திலும், பின்னர் விழுப்புரம் மாவட்டத்திலும் திமுகவில் கோலோச்சிய செஞ்சி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜியின் புதல்வர் ஏ.ஜி.சம்பத் ஆகியோர் திமுகவில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அண்மையில் மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி அவர்களுக்கு பதிலாக விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக வன்னியர் ஒருவரை நியமிப்பதற்கு கூட திமுகவுக்கு மனமில்லை. வன்னியர்களுக்கு திமுக இழைத்து வரும் துரோகங்களை பட்டியலிட்டால் அதற்கு பக்கங்கள் போதாது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் காரணமாக இருந்த இட ஒதுக்கீட்டுப் போராளிகளின் தியாகத்தை போற்றுவதற்கும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைப்பதை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துக் கொண்டிருக்கும் திமுகவின் துரோகத்திற்கு கணக்குத் தீர்ப்பதற்குமான களம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகும். எத்தனை, எத்தனை துரோகங்கள் செய்தாலும் வன்னியர்கள் நம்மை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் திமுக தலைமைக்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும். அப்போது தான் நமது வலிமை அவர்களுக்குத் தெரியும். இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும். அதனால் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தலை போர் என்று கூறுகிறேன். இதை பாட்டாளி சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்களும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
- பா.ஜ.க.வை பொறுத்தவரை மக்களுக்கு பணி செய்வதை தான் கடமையாக கொண்டு செயல்படும்.
- பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கோடிக்கணக்கான திட்டங்களோடு வருகிறார்.
கோவை:
வானதி சீனிவாசன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜகவுக்கு அதிகமான வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். மாநில தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய எழுச்சியை கொடுத்துள்ளார். கூட்டணி இல்லாமல் அவர் அதிகமான வாக்குகள் பெற்று மக்கள் ஆதரவை பெற்றுள்ளார். இதற்காக மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பா.ஜ.க.வை பொறுத்தவரை மக்களுக்கு பணி செய்வதை தான் கடமையாக கொண்டு செயல்படும்.
பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை, எளிய பெண்கள், விவசாயிகள், பட்டியலின மக்களின் நலனுக்காக எப்படி உழைத்தாரோ, அதை விட கூடுதலாக பணியாற்றுவார்.
கோவையில் நடந்த முப்பெரும் விழாவில் பேசியவர்கள் தமிழகத்தில் மீண்டும் 2026-ல் ஆட்சியை பிடிப்பதாக கனவு கண்டு வருகின்றனர். நாங்கள் 40 இடத்தை பிடித்து விட்டோம், பாராளுமன்றத்தில் பாருங்கள் என கூறுவதால் வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.விற்கு எதிரான மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மக்கள் விரும்பக்கூடிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது தென்னிந்தியாவில் ஏற்கனவே காலை பதித்து விட்டோம் தமிழகத்தில் ஆழமாக பதிந்துள்ளது. அதை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள்.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கோடிக்கணக்கான திட்டங்களோடு வருகிறார். ஆனால் தமிழக அரசின் மின் கட்டண, பத்திரப்பதிவு உள்ளிட்ட விலை உயர்வால் தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அதிக வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். இனி சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி வியூகங்களை வகுத்து பணிகளை தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அப்பாவின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் நாளாகும்.
- முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தந்தை யர் தினம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் அவரது அப்பாவின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கௌரவிக்கும் நாளாகும். இந்த நாள் உங்கள் தந்தைக்கு, வாழ்க்கையில் அவர் உங்களுக்காக செய்த தியாகம் மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டிட்டி நன்றி தெரிவிக்கலாம்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தை மு. கருணாநிதிக்கு நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தனது தந்தை அவருக்கும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
"தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடைய வேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!" என்று கூறியுள்ளார்.
- உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்குதல் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- விவசாய பெருமக்கள் ‘உழவர் செயலி’ மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.
சென்னை:
கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக விவசாய எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தரப்படுவதாக அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் உள்ள 4456 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 115 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான கடன்கள் வழங்குதல், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் வழங்குதல் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
2938 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான விவசாய எந்திரங்கள் மற்றும் கருவிகள் இருப்பில் உள்ளன. டிராக்டர், மினி டிராக்டர், நெல் நடவு எந்திரம், நெல் அறுவடை எந்திரம், கரும்பு அறுவடை எந்திரம், தானியங்களை தூற்றி சுத்தம் செய்யும் எந்திரங்கள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்ட விவசாய எந்திரங்களும், பவர் டில்லர், ரோட்டோ வேட்டர் தெளிப்பான்கள் உள்ளிட்ட விவசாய கருவிகளும் உள்ளன.
விவசாய பெருமக்கள் 'உழவர் செயலி' மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் விவசாயிகளின் கை பேசிக்கு, எந்திரங்கள் மற்றும் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான குறுந் தகவல் அனுப்பப்படும். முன்பதிவு செய்து, குறித்த தேதி மற்றும் நேரத்தில் விவசாயிகள், வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தலாம்.
மேலும் விவசாயிகள் rcs.tn.gov.in இணையதளத்தின் மூலம் 'Coop e-வாடகை' சேவை மூலமும் பதிவு செய்து பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- போதையில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
- நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேற்று நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மதுபோதையில் தலையில் ரத்தக்காயங்களுடன் வந்த வாலிபர் ஒருவர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தொந்தரவு செய்தார்.
அவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் மது போதையில் நிதானமற்ற வகையில் காணப்பட்டார். போதையில் வரும் வழியில் ஒரு உணவகத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த சிலர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த வாலிபருக்கு தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.
அவர் சீருடையில் இருந்த போலீசாரிடம் சென்று, தன்னை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். எனவே உடனடியாக போலீசாரை இங்கு வரச்சொல்லுங்கள் என்று கூறி அதிரடி காட்டினார். இதனால் போலீசார் அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தலையில் ரத்தக்காயத்துடன் இருந்த அந்த வாலிபரை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து நீண்ட நேரமாக போலீசாருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.
மேலும் போலீசாரை அவர் ஒருமையிலும் பேசினார். பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு அந்த நபரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பெறாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வாலிபர் யார் என்பது குறித்தும், அந்த வாலிபருக்கு தலையில் எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






