என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
    • வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் அதிவிரைவு ரெயிலான வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் சென்னை-மைசூரு, பெங்களூரு-ஐதராபாத், பெங்களூரு-தார்வார், மங்களூரு-கோவா இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து தமிழக தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று மதுரை-பெங்களூரு இடையே வந்தேபாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு இடையே வருகிற 20-ந்தேதி முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த நிலையில் மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இன்று காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட ரெயில், திருச்சி (7.15/7.20), சேலம் (9.55/10.00) வழியாக மதியம் 1.15 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் மறுமார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சேலம் (5.00/5.05), திருச்சி (8.20/8.25) வழியாக இரவு 9.25 மணிக்கு மதுரையை வந்தடையும். வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    • பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள்.

    மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

    சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதல் சிறுவர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்த பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

    • மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
    • 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும்.

    மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். மாணவர் வாசிப்புத் திறன் மேம்பாட்டில் உயரதிகாரி முதல் ஆசிரியர் நிலை வரை ஒரு கூட்டு நடவடிக்கை அவசியமாகிறது.

    வாசிப்பு இயக்கத்தின் நோக்கம், தேவை, கதை வாசிப்புக்கான நேரம், தலைமை ஆசிரியர் பணிகள் போன்ற வழிகாட்டுதல்கள் இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன. இதை தலைமையாசிரியர்கள் முழுமையாக படிக்க வேண்டும்.

    இதுதவிர 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும். 4 முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கான கால அட்டவணையில் நூலக பாடவேளைகள் இருப்பது உறுதி செய்யப்படும்.

    இலக்கிய மன்ற செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வரலாற்று சுவடுகளை அப்பட்டமாக மூடி மறைக்கிற செயலாகும்.
    • பாஜக ஆட்சிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    கடந்த வாரம் வெளியான 12-ம் வகுப்புக்கான புதிய அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து சமூகத்தாலும் கொண்டாடப்பட்டது என்று இடம்பெற்றுள்ளது.

    குஜராத்தில் இருந்து அயோத்தி வரை பாஜக நடத்திய ரதயாத்திரை, 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நடந்த வன்முறை மற்றும் அதன் பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற வரலாற்று தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இதற்கு முன்பு பழைய பாடப்புத்தகத்தில் 16 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் பாபரின் நினைவாக அவரது தளபதி மீர் கட்டிய மசூதி தான் பாபர் மசூதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    தற்போது திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகத்தில் 1528 ஆம் ஆண்டில் ராமர் பிறந்த இடத்தில முக்குவிமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருந்தது என்று பாபர் மசூதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முக்குவிமான கட்டிடத்தில் இந்து சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்

    நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மிர்பாஹீ என்பவரால் அயோத்தியில் கட்டப்பட்ட பாபர் மசூதி இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தளமாக தொடர்ந்து இருந்தது. 1949 டிசம்பரில் பாபர் மசூதி தாழ்வாரத்தில் தான் ராமர் பிறந்தார் என்று கூறி உரிமை கொண்டாட இந்துத்துவ அமைப்புகள் முயற்சி செய்தனர். இதையொட்டி பாபர் மசூதி சர்ச்சைக்குரிய விஷயமாக மாறிவிட்டது. நீதிமன்ற வழக்குகள் என ஆரம்பித்து பாரதிய ஜனதா கட்சி அங்கே ராமர் கோவில் கட்டுவதை தனது அரசியல் நோக்கமாக பிரகடனம் செய்தது. அதற்காக கரசேவை என்ற போர்வையில் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினார்கள்.

    இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் பாபர் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் என்று கூறியது. ஆனால் அதே நேரத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்பு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும், சிறுபான்மை சமுதாயத்தினருக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அமைதியை விரும்புகிற சிறுபான்மை மக்கள் அந்த தீர்ப்புக்கு எதிராக போராட்டம் எதுவும் நடத்தாமல் அமைதியாக இருந்தார்கள். இது அவர்களது சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து நரேந்திர மோடி ஆட்சியில் அங்கு ராமர் கோவில் சமீபத்தில் கட்டப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டது.

    இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்கியிருக்கிறது. இது வரலாற்று சுவடுகளை அப்பட்டமாக மூடி மறைக்கிற செயலாகும். இப்படி நீக்குவதன் மூலமாக வரலாற்றில் இருந்து பாபர் மசூதியை நீக்கிவிடலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருதுகிறது. இதன் மூலம் ஒன்றிய பாஜக ஆட்சிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நரேந்திர மோடி அரசு வரலாற்றிலிருந்து பாபர் மசூதியை நீக்கும் திரிபுவாதங்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையுமாக கண்டிக்கிறேன்.

    • பக்ரீத் பண்டிகையை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    • சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் 8 மணி மற்றும் பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிமுகவில் தற்போது குறிபிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கிறார்கள்
    • திமுக குடும்பத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் தான் அரசியலுக்கு வருவார்கள்

    சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    நான் நடப்பதை எல்லாம் பொறுமையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எம்.ஜி. ஆர் என்னுடன் பல அரசியல் விவகாரங்களை பேசியிருக்கிறார். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது.

    அதிமுகவில் ஒரு சாதாரண ஏழைகூட எம்எல்ஏ ஆகலாம், எம்பி ஆகாலாம் இது நமது கட்சிக்கு உள்ள முறைகள். ஆனால் திமுகவில் எல்லோரும் உழைக்கணும், எல்லோரும் வேலை செய்யணும் ஆனால் திமுக குடும்பத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் தான் அரசியலுக்கு வருவார்கள். மற்றவர்கள் தேர்தலுக்கு வேலை செய்துவிட்டு சத்தம் போடாமல் இருக்கணும். ஆனால் நம் தலைவர்கள் அப்படி இல்லை. அவர்களையே நானும் பின்பற்றி வருகிறேன். எனக்கு குறிப்பிட்ட சாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதா ஜாதி பார்த்து பழகியவர் அல்ல.

    ஆனால் அதிமுகவில் தற்போது குறிபிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கிறார்கள். நான் ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன். அதிமுக தற்போது 3வது இடத்துக்கும், 4வது இடத்துக்கும் சென்றுள்ளது. தானும் கெட்டு கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர்.

    அதிமுகவில் தனது பிரவேசம் தொடங்கிவிட்டது. இனி கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.

    • தீயை அணைக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • தீ மேலும் பரவாமல் இருக்க குடோனில் இருந்த பெயிண்ட் பேரல்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

    சென்னை:

    சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். தீயை அணைக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தீ மேலும் பரவாமல் இருக்க குடோனில் இருந்த பெயிண்ட் பேரல்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

    தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சசிகலா போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.
    • 2026 சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியதையடுத்து சசிகலா வெளியிட்ட அறிக்கையில் அ.தி.மு.க. தொண்டர்கள் தளர்ந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலை சசிகலா போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.

    இதனை தொடர்ந்து போயஸ் கார்டனில் அவர் ஆலோசனை நடத்த உள்ள வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று சேர்ந்து வென்று காட்டுவோம். சசிகலாவின் இலக்கு 2026 என்கிற வாசகங்களும் போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன.

    ஒற்றுமை... ஒற்றுமை... ஒற்றுமை... புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே, அம்மாவின் அன்பு தொண்டர்களே சின்னம்மா தலைமையில் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம் என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சசிகலாவின் அழைப்பை ஏற்று இன்று மாலையில் அவரை எத்தனை பேர் சந்திக்க உள்ளனர்? என்பது இன்று மாலையில் தான் தெரிய வரும்.

    • பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
    • இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்து வருமாறு:-

    நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம்-சகோதரத்துவம்-அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்.

    ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை 'ஈத்துவக்கும் இன்பம்' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன.

    நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    இறை நம்பிக்கை உள்ள வர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    ஓ.பன்னீர்செல்வம்

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:- "ஒற்றுமையே உயர்வு தரும்" என்பதற்கேற்ப, அனைவர் வாழ்விலும் ஒன்றுமை உணர்வுமே லோங்கிட வேண்டும், வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்பதை தெரிவித்து எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:-

    இஸ்லாமிய சமுதாயத்தினரின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    பக்ரித் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது; மாறாக, எங்கும் அன்பு, சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மட்டுமே தழைத்தோங்கும். அத்தகைய நிலையை ஏற்படுத்த கடுமையாக உழைப்போம்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, பெருந் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், விஜய்வசந்த் எம்.பி., ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 10 மாதங்களாக பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார்.
    • விசாரணையில் பன்னீர்செல்வம் பணம் எடுப்பது போல் ஏ.டி.எம்.மிற்கு செல்வார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கேயம், பல்லடம் மற்றும் திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவி செய்வது போல் அவர்கள் ஏ.டி.எம். கார்டை வைத்து பணம் திருடும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு புகார்கள் வரவே அதிரடி விசாரணை நடத்தினர்.

    அப்போது திண்டுக்கல் மாவட்டம் மடூர், புகையிலைப்பட்டி, கிழக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 29) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பன்னீர்செல்வம் பணம் எடுப்பது போல் ஏ.டி.எம்.மிற்கு செல்வார். அங்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை முதலில் குறி வைப்பார். அதன் பிறகு அவர்களுக்கு தானாக வந்து உதவி செய்வது போல உதவி செய்வார் . அப்போது பணம் எடுக்க தெரியாத முதியவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து, முதியவர்கள் தெரிவிக்கும் 4 இலக்க பின் நம்பரை புத்திசாலித்தனமாக தன் நினைவில் வைத்து கொள்வார்.

    அதன் பிறகு முதியவர்கள் கேட்கும் பணத்தை மட்டும் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொடுக்கும் பன்னீர்செல்வம் முதியவர்களின் ஏடிஎம்., கார்டை அவர்களுக்கு திருப்பி கொடுக்க மாட்டார். அதற்கு பதிலாக அவர் ஏற்கனவே போலியாக வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை முதியவர்களிடம் கொடுத்து விடுவார்.

    முதியவர்கள் ஏ.டி.எம்.மில் இருந்து சென்ற பிறகு அவர்களின் கார்டை வைத்து வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுத்துள்ளார். இந்தநிலையில் தாராபுரத்தில் முதியவர்களின் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் தானாக எடுக்கப்படுவதாக தொடர்ந்து தாராபுரம் குற்றவியல் போலீசாருக்கு புகார்கள் வரவே, தாராபுரம் காவல் ஆய்வாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி நபரை தேடி வந்தனர்.

    தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் பன்னீர்செல்வம் என்பதும் , முதியவர்களின் ஏ.டி.எம். கார்டுகள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மாஸ், தொப்பி அணிந்து டிப்-டாப்பாக வலம் வந்த அவர், அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடித்து வந்துள்ளார். கடந்த 10 மாதங்களாக பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்ததை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டார். கைதான அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மருத்துவமனையில் நடைபெறும் புதிய கட்டிடப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அமைச்சர் சந்தித்து நலம் விசாரித்தார்.

    அவினாசி:

    கோவையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை அவிநாசி அரசு பொது மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மருத்துவ மனையில் உள்ள மருந்தகம், ஆண்கள் - பெண்கள் மருத்துவ பகுதி, அறுவை சிகிச்சை அரங்கம் , மருத்துவ மனையில் நடைபெறும் புதிய கட்டிடப் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    மேலும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

    • 19-ந்தேதி வைகை வடகரை பகுதிகளான வார்டு 10-16, 21-35-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.
    • அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    மதுரையில் பிரதான குடிநீர் குழாய்களில் இணைப்பு பணி நடைபெற உள்ளதால் 2 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தப்படுகிறது.

    19-ந்தேதி வைகை வடகரை பகுதிகளான வார்டு 10-16, 21-35-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.

    21-ந்தேதி வைகை தென்கரை பகுதிகளான வார்டு 46-49, 53, 70, 72, 74-ல் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    அத்தியாவசியமான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×