என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 40 தொகுதியும் வென்ற தி.மு.க. கூட்டணி இனிமேலாவது மக்களுக்கு பயனுள்ளவாறு செயல்பட வேண்டும்.
    • கடந்த 5 ஆண்டு வெளிநடப்பு மட்டுமே செய்தது தி.மு.க .கூட்டணி.

    நெய்வேலி:

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க. சார்பில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனினும் இயக்குனர் தங்கர் பச்சான் கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

    அதன்படி, அவர் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சமட்டிக்குப்பம் புலியூர் சத்திரம் ஆயிப்பேட்டை, வெங்கடாம்பேட்டை, பாச்சாரப்பாளையம், வடக்குத்து, வடக்குமேலூர், இந்திராநகர், 30 வட்டம் அடங்கிய நெய்வேலி நகரம் உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து நன்றி கூறினார். அப்போது நிருபரிடம் அவர் கூறியதாவது,

    மக்களை சந்தித்து நான் நன்றி சொன்னால் மக்கள் எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள். என்னை பார்த்து கண்ணீர் விடுகிறார்கள். நான் தோற்றாலும் என் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்.

    40 தொகுதியும் வென்ற தி.மு.க. கூட்டணி இனிமேலாவது மக்களுக்கு பயனுள்ளவாறு செயல்பட வேண்டும். கடந்த 5 ஆண்டு வெளிநடப்பு மட்டுமே செய்தது தி.மு.க .கூட்டணி.

    பாஜக மீதான விரோத போக்கை கைவிடப்பட்டால் மட்டுமே தமிழகத்திற்கு நல்லது நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிரி படைகளால் சூழப்பட்டபோது, ​​ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்து காவலில் எடுத்து விடாதபடி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
    • ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேரத் தூண்டி, இறுதியில் நமது சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது என்று கூறியுள்ளார்.

    சென்னை:

    சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவுநாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனை அவர் உயிர் நீத்த நாளில் தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்கிறது. சொந்த ஊர் மக்களுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சொல்லொணா அட்டூழியங்களை தன்னால் தாங்க முடியாதபோது, வாஞ்சிநாதன் காலனித்துவ சக்திக்கு சவால் விடுத்து, திருநெல்வேலியின் அடக்குமுறை மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷை படுகொலை செய்தார்.

    எதிரி படைகளால் சூழப்பட்டபோது, ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்து காவலில் எடுத்து விடாதபடி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது தணியாத துணிச்சல், தேச சுதந்திரம் மீதான காதல் மற்றும் நாட்டுக்கான அவரது உச்சபட்ச தியாகம் ஆகியவை ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேரத் தூண்டி, இறுதியில் நமது சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது என்று கூறியுள்ளார்.

    • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
    • தீ கட்டுக்குள் அடங்காமல் கொழுந்து விட்டு 100 அடி உயரத்திற்கு கரும் புகையுடன் எரிய தொடங்கியது.

    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவருக்கு சொந்தமாக ஜெகதேவி சாலையில் குடோன் உள்ளது. இந்த குடோனை சின்ன பர்கூரைச் சேர்ந்த வடிவேல் என்பவர் வாடகைக்கு எடுத்து அதில் ஜவுளி பண்டல்களை அடுக்கி வைத்திருந்தார்.

    நேற்று இரவு 12 மணியளவில் திடீரென அந்த குடோன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருந்தாலும் தீ கட்டுக்குள் அடங்காமல் கொழுந்து விட்டு 100 அடி உயரத்திற்கு கரும் புகையுடன் எரிய தொடங்கியது.

    இதனால் சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான துணி பண்டல்கள் எரிந்து சாம்பல் ஆனது. இது குறித்து கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்
    • உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

    சென்னை :

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இசுலாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

    • பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையைகலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், "நேர்மையுடனும், பாரபட்சமின்றியும் வாகன சோதனை நடத்துங்கள்" என்று தேர்தல் பறக்கும் படைக்கு உத்தரவிட்டார்.

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும், தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையையும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான பழனி ஆய்வு செய்தார். அந்த வகையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையைகலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வாகன சோதனையின்போது நேர்மையுடனும், கணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும், அதேநேரத்தில் எந்தவித பாரபட்சமும் பாராமல் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளும்படியும், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் பறக்கும் படையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    • தியாகத்தைக் கொண்டாட்டக் குறியீடாகக் கொள்ளும் பக்ரீத் சக மனிதனை நேசிக்கச் சொல்கிறது...
    • அண்டை வீட்டாருக்கும் ஏழைகளுக்கும் ஈகைப் பண்பாட்டை போதிக்கிறது.

    சென்னை:

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்து கவிஞரும், பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குடும்பம் நிறுவனம் அரசு

    என்ற எந்த அமைப்பும்

    யாரோ ஒருவரின்

    தியாகத்தை முன்வைத்தே

    கட்டமைக்கபடுகிறது

    அந்த தியாகத்தைக்

    கொண்டாட்டக்

    குறியீடாகக் கொள்ளும் பக்ரீத்

    சக மனிதனை

    நேசிக்கச் சொல்கிறது

    அண்டை வீட்டாருக்கும்

    ஏழைகளுக்கும்

    ஈகைப் பண்பாட்டை

    போதிக்கிறது

    குறிக்கோள் மிக்க

    இந்தக் கொண்டாட்டத்தை

    வாழ்த்துவதில்

    மகிழ்ச்சி அடைகிறோம்

    தருவோர் பெறுவோர்

    இருவரும் வாழ்க

    இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.


    • ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
    • வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் அதிவிரைவு ரெயிலான வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் சென்னை-மைசூரு, பெங்களூரு-ஐதராபாத், பெங்களூரு-தார்வார், மங்களூரு-கோவா இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து தமிழக தென்மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று மதுரை-பெங்களூரு இடையே வந்தேபாரத் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு இடையே வருகிற 20-ந்தேதி முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த நிலையில் மதுரை-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. இன்று காலை 5.15 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட ரெயில், திருச்சி (7.15/7.20), சேலம் (9.55/10.00) வழியாக மதியம் 1.15 மணிக்கு பெங்களூருவுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பின்னர் மறுமார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் சேலம் (5.00/5.05), திருச்சி (8.20/8.25) வழியாக இரவு 9.25 மணிக்கு மதுரையை வந்தடையும். வருகிற 20-ந்தேதி முதல் மதுரை-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் இயங்க உள்ளதால், அதன் வழித்தடம், கட்டண விவரம், நேரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    • பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பரிமாறி உற்சாகம் அடைந்தனர்.

    தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள்.

    மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

    சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதல் சிறுவர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்த பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

    • மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
    • 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும்.

    மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும். ஒரு கதை ஒரு புத்தகம் 16 பக்கங்கள் என்ற அடிப்படையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மையமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இதையடுத்து நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். மாணவர் வாசிப்புத் திறன் மேம்பாட்டில் உயரதிகாரி முதல் ஆசிரியர் நிலை வரை ஒரு கூட்டு நடவடிக்கை அவசியமாகிறது.

    வாசிப்பு இயக்கத்தின் நோக்கம், தேவை, கதை வாசிப்புக்கான நேரம், தலைமை ஆசிரியர் பணிகள் போன்ற வழிகாட்டுதல்கள் இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன. இதை தலைமையாசிரியர்கள் முழுமையாக படிக்க வேண்டும்.

    இதுதவிர 1 முதல் 12-ம் வகுப்பு வரை வாசிப்பு இயக்கப் புத்தகத் தொகுப்புகள் வழங்கப்படும். 4 முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கான கால அட்டவணையில் நூலக பாடவேளைகள் இருப்பது உறுதி செய்யப்படும்.

    இலக்கிய மன்ற செயல்பாடுகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வாசிப்பு இயக்க புத்தகங்கள் பயன்படுத்தப்படும். இதுகுறித்து ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வரலாற்று சுவடுகளை அப்பட்டமாக மூடி மறைக்கிற செயலாகும்.
    • பாஜக ஆட்சிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    கடந்த வாரம் வெளியான 12-ம் வகுப்புக்கான புதிய அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பு அனைத்து சமூகத்தாலும் கொண்டாடப்பட்டது என்று இடம்பெற்றுள்ளது.

    குஜராத்தில் இருந்து அயோத்தி வரை பாஜக நடத்திய ரதயாத்திரை, 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு நடந்த வன்முறை மற்றும் அதன் பின்பு பாஜக ஆளும் மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது போன்ற வரலாற்று தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இதற்கு முன்பு பழைய பாடப்புத்தகத்தில் 16 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் பாபரின் நினைவாக அவரது தளபதி மீர் கட்டிய மசூதி தான் பாபர் மசூதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    தற்போது திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகத்தில் 1528 ஆம் ஆண்டில் ராமர் பிறந்த இடத்தில முக்குவிமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருந்தது என்று பாபர் மசூதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முக்குவிமான கட்டிடத்தில் இந்து சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் வெளியாகி இருந்தது.

    இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்

    நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மிர்பாஹீ என்பவரால் அயோத்தியில் கட்டப்பட்ட பாபர் மசூதி இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தளமாக தொடர்ந்து இருந்தது. 1949 டிசம்பரில் பாபர் மசூதி தாழ்வாரத்தில் தான் ராமர் பிறந்தார் என்று கூறி உரிமை கொண்டாட இந்துத்துவ அமைப்புகள் முயற்சி செய்தனர். இதையொட்டி பாபர் மசூதி சர்ச்சைக்குரிய விஷயமாக மாறிவிட்டது. நீதிமன்ற வழக்குகள் என ஆரம்பித்து பாரதிய ஜனதா கட்சி அங்கே ராமர் கோவில் கட்டுவதை தனது அரசியல் நோக்கமாக பிரகடனம் செய்தது. அதற்காக கரசேவை என்ற போர்வையில் ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினார்கள்.

    இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் பாபர் மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம் என்று கூறியது. ஆனால் அதே நேரத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த தீர்ப்பு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும், சிறுபான்மை சமுதாயத்தினருக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அமைதியை விரும்புகிற சிறுபான்மை மக்கள் அந்த தீர்ப்புக்கு எதிராக போராட்டம் எதுவும் நடத்தாமல் அமைதியாக இருந்தார்கள். இது அவர்களது சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து நரேந்திர மோடி ஆட்சியில் அங்கு ராமர் கோவில் சமீபத்தில் கட்டப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டது.

    இந்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இருந்து பாபர் மசூதி பற்றிய குறிப்புகளை முற்றிலும் நீக்கியிருக்கிறது. இது வரலாற்று சுவடுகளை அப்பட்டமாக மூடி மறைக்கிற செயலாகும். இப்படி நீக்குவதன் மூலமாக வரலாற்றில் இருந்து பாபர் மசூதியை நீக்கிவிடலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருதுகிறது. இதன் மூலம் ஒன்றிய பாஜக ஆட்சிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நரேந்திர மோடி அரசு வரலாற்றிலிருந்து பாபர் மசூதியை நீக்கும் திரிபுவாதங்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையுமாக கண்டிக்கிறேன்.

    • பக்ரீத் பண்டிகையை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    • சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் 8 மணி மற்றும் பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிமுகவில் தற்போது குறிபிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கிறார்கள்
    • திமுக குடும்பத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் தான் அரசியலுக்கு வருவார்கள்

    சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    நான் நடப்பதை எல்லாம் பொறுமையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எம்.ஜி. ஆர் என்னுடன் பல அரசியல் விவகாரங்களை பேசியிருக்கிறார். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது.

    அதிமுகவில் ஒரு சாதாரண ஏழைகூட எம்எல்ஏ ஆகலாம், எம்பி ஆகாலாம் இது நமது கட்சிக்கு உள்ள முறைகள். ஆனால் திமுகவில் எல்லோரும் உழைக்கணும், எல்லோரும் வேலை செய்யணும் ஆனால் திமுக குடும்பத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் தான் அரசியலுக்கு வருவார்கள். மற்றவர்கள் தேர்தலுக்கு வேலை செய்துவிட்டு சத்தம் போடாமல் இருக்கணும். ஆனால் நம் தலைவர்கள் அப்படி இல்லை. அவர்களையே நானும் பின்பற்றி வருகிறேன். எனக்கு குறிப்பிட்ட சாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதா ஜாதி பார்த்து பழகியவர் அல்ல.

    ஆனால் அதிமுகவில் தற்போது குறிபிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கிறார்கள். நான் ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன். அதிமுக தற்போது 3வது இடத்துக்கும், 4வது இடத்துக்கும் சென்றுள்ளது. தானும் கெட்டு கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர்.

    அதிமுகவில் தனது பிரவேசம் தொடங்கிவிட்டது. இனி கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.

    ×