என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காலணியில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
- 2 கிலோ கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆப்பிரிக்க நாடான கானாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பெண் பயணி ஒருவரிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது அந்த பெண்ணின் கைப்பை மற்றும் காலணியில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அந்த பெண்ணிடம் இருந்து ரூ.21 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
- பிரதமர் நரேந்திர மோடியையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கிண்டல் செய்யும் வகையில் பதிவு.
- இரண்டு சம்பவங்களையும் தொடர்புப்படுத்தி ஜெயக்குமார் பதிவு.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கிண்டல் செய்யும் வகையில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "கள்ளக்குறிச்சிக்கு போகவேயில்லையே எப்டி சமாளிச்சீங்க, ஸ்டாலின்..?
மணிப்பூருக்கேப் போகாம நீங்க சமாளிச்ச மாதிரி தான், மோடிஜி" என பதிவிட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த கலரத்தில் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இவ்வளவு கலவர சூழலிலும் மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதேபோல், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த நிலையில், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லவில்லை.
இவை இரண்டு சம்பவங்களையும் தொடர்புப்படுத்தி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
- நீட் தேர்வுக்கு தமிழகத்தின் எதிர்ப்பு இப்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.
- தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையில் சிக்கியது. இதனால் இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, நீட் தேர்வு விவகாரத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க செய்தன. பாராளுமன்ற இரு அவைகளிலும் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கடும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து முதலமைச்சர் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,
நீட் தேர்வுக்கு தமிழகத்தின் எதிர்ப்பு இப்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.
நீட் தேர்வை ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க BanNEET என்று கூறியுள்ளார்.
The opposition to #NEET from Tamil Nadu now resonates across India.
— M.K.Stalin (@mkstalin) June 28, 2024
Today, the Tamil Nadu Legislative Assembly unanimously passed a resolution urging the Union government to abolish NEET and allow states to conduct medical admissions based on class 12 marks, following the… pic.twitter.com/9CfjQthwLN
- திருப்போரூரில் உள்ள Godrej உற்பத்தி ஆலை வருகிற டிசம்பர் திறக்கப்பட உள்ளது.
- ஓசூரில் கண்டிப்பாக விமான நிலையம் அமையும்.
தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 1,500 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதம் புதிய மினி Tidel Park அமைக்கப்படும்.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் சுமார் 175 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி வட்டங்களில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 2,100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
திருப்போரூரில் உள்ள Godrej உற்பத்தி ஆலை வருகிற டிசம்பர் திறக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்த விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும்.
சுழற்பொருளாதார துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சுழற்பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கை வெளியிடப்படும்
முதலீடுகளை ஊக்குவிக்க உதவியாக 'Guidance TamilNadu' நோடல் ஏஜென்ஸியின் கிளை அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 'Guidance TamilNadu' நோடல் ஏஜென்ஸியின் ஊக்குவிப்பு அமைவு(Japan Desk) உருவாக்கப்படும்.
ஓசூரில் புதிய விமான நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெளியே இருக்கும் சிலர், இதில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
தீவிர ஆய்வுக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வெகுவிரைவில் தொடங்கும். சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுப்பு தொடங்கிவிட்டது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 2100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் எம்-சாண்ட் உற்பத்தி ஆலை சுமார் 25 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமுல் வாங்கியதாக குற்றச்சாட்டப் பட்டுள்ளது.
- கள்ளச்சாராய விவகாரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.
எதிர்கட்சிகள் இது தொடர்பாக சிபிஐ வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இரண்டு டிஎஸ்பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 டி.எஸ்.பி.க்கள் உட்பட 9 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமூல் வாங்கியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுவரை கள்ளச்சாராய விவகாரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
- இ-பாஸ் முறையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நீலகிரி மாவட்டம் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை தவிர்க்கும் நோக்கில் கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் அமல்படுத்தியதை போன்றே இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் கீழ் மே 7 ஆம் தேதியில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொடைக்கானல் வருவோர் இ பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை
உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது குறித்து நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என சென்னை ஐ.ஐ.டி., பெங்களூரு ஐ.ஐ.எம். ஆய்வு செய்துள்ளதாகவும், இ-பாஸ் முறையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- போலீசார் வருவதை அறிந்ததும் சத்யாவுடன் இருந்த கூட்டாளிகள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
திருப்போரூர்:
சீர்காழியை சேர்ந்த பிரபல ரவுடி சத்யா. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் ரவுடி சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் மாமல்லபுரம் அடுத்த இளந்தோப்பு பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரவுடி சத்யாவை கிரேன் மூலம் மலர் தூவி வரவேற்று உள்ளனர்.
இதுபற்றி போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் இன்று காலை ரிசார்ட்டுக்கு விரைந்து வந்தனர். இதற்குள் சத்யாவும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து காரில் தப்பிசென்றனர். இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் தப்பி செல்ல முயன்ற ரவுடி சத்யாவை போலீசார் சுற்றி வளைத்தனர்.
ஆனால் அவர் போலீசாரை தாக்கி தப்பி ஓட முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் சத்யாவை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதல் பலத்த காயம் அடைந்த சத்யாவை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் வருவதை அறிந்ததும் சத்யாவுடன் இருந்த கூட்டாளிகள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இரட்டை சதமடித்தார்.
சென்னை:
இந்தியா- தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோம் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிரிதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் மந்தனா-ஷபாலி வர்மா ஜோடி 90 வருட பெண்கள் கிரிக்கெட்டில் அரிய சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில், ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 205 ரன்னில் ரன் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 411 ஆக இருந்தது.
- கோயம்பேடு அருகே தலைமறைவாக இருந்த அனோவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- ஹபிபுல்லா என்ற பயங்கரவாதியை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த மேற்குவங்கத்தை சேர்ந்த அனோவர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்சார் அல் இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்புடன் அனோவர் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் ஏற்கனவே ஹபிபுல்லா என்ற பயங்கரவாதியை மேற்கு வங்க போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹபிபுல்லா கொடுத்த தகவலின் பெயரில் கோயம்பேடு அருகே தலைமறைவாக இருந்த அனோவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, உபா சட்டம், இந்திய அரசுக்கு எதிராக போர் தொகுக்க நினைத்தல் அல்லது தாக்குதல் நடத்த திட்டமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் மேற்குவங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோயம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் குடியிருப்பு வளாகம் அருகே கட்டுமான இடத்தில் பணிபுரிந்து வந்த அனோவரை மேற்குவங்க போலீசார் கைது செய்தனர்.
"அன்சார் அல் இஸ்லாம்" அமைப்பு அல்கொய்தா, வங்காளதேசம் நாட்டிற்கு ஆதரவாக உள்ள இயக்கமாக செயல்பட்டு வருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- அமைச்சர்கள் பேசும் போது கவனமாக பேசுங்கள் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.
- வீடியோ இணையத்தில் பரவி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. அதன்படி அவை கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் இரு வேளைகளும் பல்வேறு துறை மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அவை தொடங்கியது முதல் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து கொண்டு அவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதத்தின் போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய கருத்துக்கு சபாநாயகர் ராஜகண்ணப்பனை கடுமையாக விமர்சித்தார். மேலும் அமைச்சர்கள் பேசும் போது கவனமாக பேசுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் நேற்று சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு கீழே எச்சில் துப்புகிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இணைய வாசிகள் டிசிப்ளின் கிலோ என்ன விலை?? என்றும், 40/40 வெற்றி பெற்றவர்கள் அவர்கள் வேலையை தொடங்கிவிட்டார்கள் என்று கமெண்டுகளையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
'நக்கல்' முதல் 'எச்சில்' வரை - தொடர் சர்ச்சையில் அமைச்சர் ராஜகண்ணப்பன்#TamilNaduAssembly #MinisterRajakannapan #videoviral #maalaimalar pic.twitter.com/elygD3xxcw
— Maalai Malar தமிழ் (@maalaimalar) June 28, 2024
- முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம் 18,500க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
- மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சுற்றுப்பயணம் மூலம் ரூ.10,882 கோடி முதலீடுகள் ஈர்ப்பு.
உலக முதலீட்டாளர்களை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சிங்கப்பூர், ஜப்பான், மலேசியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட சுற்றுப்பயணம் மூலம் ரூ.10,882 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம் 18,500க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
விரைவில் அமெரிக்கா சென்று, பெரிய தொழில் நிறுவனங்களை சந்தித்து தொழில் முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்க்க உள்ளார்.
சென்னையில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில், 60% முதலீடுகள் பணிகளாக மாறியுள்ளன.
631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன.
அதிமுக ஆட்சியில் நடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினாலும், அவற்றில் சொற்பமானவை மட்டுமே பணிகளாக மாறின என்றார்.
- ஆற்றின் ஒரத்தில் நின்று யானைகள் தண்ணீர் குடித்தன.
- யானை ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த போது, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று, தர்மகிரி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு வந்தன. ஆற்றின் ஒரத்தில் நின்று யானைகள் தண்ணீர் குடித்தன.
அந்த சமயம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடி கொண்டிருந்தது.
அந்த யானை ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த போது, காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது. சிறிது தூரம் பாறைகளுக்கு மத்தியில் யானையும் அடித்து செல்லப்பட்டது. ஆனாலும் யானை கலங்காமல், நம்பிக்கையுடன் போராடி, ஆற்றில் எதிர்நீச்சல் போட்டு கரைக்கு வந்து சேர்ந்தது.
தன்னம்பிக்கையுடன் கலங்காமல் தனியாய் போராடிய காட்டு யானையின் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.






