என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இரண்டு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
- சொத்து விவரங்கள் விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை குறித்து கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர் மற்றும் செந்தில் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ-யின் விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், துப்பாக்கி சூடு சம்பவத்தை நியாயமாக விசாரிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தவறிழைக்கவில்லை என எப்படி அறிக்கை அளிக்க முடியும் என்றும் சி பி ஐ க்கு கேள்வி எழுப்பினார்கள்.
விசாரணை அமைப்பின் முடிவு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை சிபிஐ-யின் கையாலாகாதனத்தை காட்டுவதாகவும் கண்டனம் தெரிவித்தனர். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் உள்ள சொத்து விவரங்களை சேகரித்து, இரண்டு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது முன்கூட்டியே திட்டமிட்டதாக தெரிகிறது ஒரு தொழிலதிபர் விரும்பியதால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- 14 நாட்கள் அமலாக்கத்துறை காவல் மனு மீது நாளை விசாரணை.
- சமூகத்தில் முக்கிய நபர்களாக இருக்கும் 4 நபர்களை இந்த வழக்கில் இணைக்க முயற்சி.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை ஜூலை 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 நாட்கள் அமலாக்கத்துறை காவல் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.
சமூகத்தில் முக்கிய நபர்களாக இருக்கும் 4 நபர்களை இந்த வழக்கில் இணைக்க அமலாக்கத்துறை முயற்சிக்கிறது என்று ஜாபர் சாதிக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் பெயரை கூற வேண்டும் என வற்புறுத்தி வருவதாக ஜாபர் சாதிக் நீதிபதியிடம் புகார் அளித்தார்.
அதன்படி, ஜாபர் சாதிக்கை நாளை வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது.
- யுஜிசியிடம் உரிய அனுமதி பெற்று உள்ளதா என்றும் நீதிபதி கேள்வி.
தஞ்சை மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, "தான் சித்த மருத்துவம் கிளினிக் நடத்துவதில் தலையிடக் கூடாது என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் பல்கலைக்கழகம் வழங்கும், சித்தா படிப்பு சான்றிதழை வைத்து சித்த மருத்துவம் பார்க்க முடியாது என சான்றிதழில் சிறிய அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது என பல்கலை தரப்பில் கூறப்பட்டது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் எதன் அடிப்படையில் சித்தா சான்றிதழ் படிப்பு வழங்குகிறது என்றும் சிகரெட் கம்பெனிக்கும், தமிழ் பல்கலைக்கழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா ? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், யுஜிசியிடம் உரிய அனுமதி பெற்று உள்ளதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு அனுமதி பெறாமல் சான்றிதழ் படிப்பு நடத்தினால் ஏன் பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க கூடாது என்றும் கூறினார்.
- பள்ளிகளில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
- எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் முதல்வர், அமைச்சர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினார். பள்ளிகளில் காமராஜரின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
காமராஜரின் பிறந்தநாளான இன்று அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் ஏழைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். கல்வி போன்ற துறைகளில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது இலட்சியங்களை நிறைவேற்றவும், நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.
- தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்துள்ளது.
- வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
வேலூரில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜா. இவர் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் இன்ஸ்பெக்டர் ராஜா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்துள்ளது.
இதையடுத்து வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா மீது அடுக்கடுக்காக புகார் எதிரொலி காரணமாக இன்ஸ்பெக்டர் ராஜாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வேலூர் எஸ்.பி. மணிவண்ணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
- கடந்த 13ம் தேதி ஒரே குடும்பத்தை சேரந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
- ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உடல்கள் மீட்பு.
கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவத்தில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்த ஐடி ஊழியர் சுதன்குமார், அவரது மகன் மற்றும் தாய் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் அருகே கடந்த 13ம் தேதி ஒரே குடும்பத்தை சேரந்த 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், பின்னர் உடல்கள் எரிக்கப்பட்டதாக இன்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு அறையில் ஒருவர் என தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த கொலை வழக்கில், 5 தனிப்படைகள் அமைத்து கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் குறித்து கடலூர் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
- பெருந்தலைவர் காமராஜர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இடையே இருந்த அன்பும் நட்பும் நாடறிந்தவை.
- நம் மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூகவலைதளத்தில் கூறியிருப்பதாவது,
கல்வியை கனவில் கூட நினைக்கத் தயங்கிய ஒரு தலைமுறையை பள்ளிக்கூடங்கள் நோக்கி அழைத்து வந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.
கடைக்கோடி மனிதர்களின் முன்னேற்றம் என்ற ஒருமித்த சிந்தனையோடு, பெருந்தலைவர் காமராஜர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இடையே இருந்த அன்பும் நட்பும் நாடறிந்தவை.
விடுதலைப் போராட்டம் மாநில முன்னேற்றத்துக்கான ஆட்சி நிர்வாகம் - ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் என்று உழைத்த காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிவித்தார்கள்.
இன்று காமராஜரின் பிறந்த நாளில், உலகமே போற்றி பின்பற்றுகிற காலை உணவுத் திட்டத்தை, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்துள்ளார்கள் நமது முதலமைச்சர்.
இதனால் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது.
கல்வி வளர்ச்சி நாளையொட்டி விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவுத்திட்டம், நம் மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பணிகளை என்றும் போற்றுவோம். அவரது புகழ் ஓங்கட்டும் என்று கூறியுள்ளார்.
- நெரிசல் மிகுந்த சாலைகளை கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
- தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
சென்னையில் தற்போது வாகனங்கள் பெருகிவிட்டதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் குறித்த நேரத்துக்கு குறித்த இடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
இதையடுத்து சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நெரிசல் மிகுந்த சாலைகளை அகலமாக்குவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக நெரிசல் மிகுந்த சாலைகளை கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, திருவான்மியூர் லட்டிஸ் பாலம் சாலை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை ஆகிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை 30.5 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் மயிலாப்பூர், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் போக்கு வரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்டிஸ் பாலம் சாலையின் அகலம் 30.5 மீட்டராகவும், பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் நியூ ஆவடி சாலை 18 மீட்டராகவும் அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சில சாலைகளை விரிவுபடுத்துவதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 4 சாலைகள் அகலப்படுத்தப்பட உள்ளன. அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் மற்ற சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படும். சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் சாலையின் மேற்பரப்பை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
- சாலையில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஆவடி:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சூறைக்காற்றுடன் கனமழை கொட்டுவதால் பருவமழை காலம் போல் நிலைமை மாறி உள்ளது. இன்று காலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் முழுவதும் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றுமுன்தினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆவடியில் 10 செ.மீட்டர் மழை பதிவானது. தொடர்ந்து ஆவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை வெளுத்து வாங்குகிறது.
இதனால் திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 16, 17, வார்டுகளில் உள்ள பெரியார்நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீடுகளை மழை நீர் வெள்ளமாக குளம் போல் தேங்கிநிற்கிறது.
சாலையில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழையின் போது கனமழை கொட்டும் போது இது போன்று தண்ணீர் தேங்குவது வழக்கம்.
ஆனால் தற்போது ஒரு நாள் மழைக்கே தண்ணீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால்பாம்பு தவளை, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் தண்ணீரில் நீந்தி வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்து வருகின்றன. இதானல் மழை நீர் சூழ்ந்து நிற்கும இடங்களில் வசிப்பவர்கள் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது.
பெரியார்நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் பகுதிகள் திருநின்றவூர் ஈசா ஏரியை ஒட்டி உள்ள தாழ்வான பகுதி ஆகும். எனவே சிறிய மழைக்கே இப்பகுதி தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சிஅளிக்கிறது. எனவே இந்த பகுதியில் மழைநீர் வெளியேற நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆவடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது இதனால் பாரதி தாசனன் தெரு, கம்பர்தெரு உள்பட பல தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரியார்நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. பல தெருக்களில் வெள்ளம் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் பெரிய ஏரி உள்ளது. ஏரிநீரும் கசிந்து தெருக்களில் தேங்கிவிடுகிறது. திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம் உடனே மழைநீரை வெளியேற்றி இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். இப்போதே சிறி மழைக்கு இந்த நிலைமை என்றால் பருவழையின் போது கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும். இதனை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்றனர்.
- திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
- மத்திய அமைச்சர் பதவிகளே பெரிது என்று மௌனமாக இருந்து விட்டு, தற்போது நாடகம் ஆடுவது ஏன்?
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
காங்கிரஸ் ஆட்சியில், ஜனநாயகத்துக்கு விரோதமாகக் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை, அரசியலமைப்புச் சட்டம் படுகொலை தினமாக ஆண்டு தோறும் அனுசரிக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில், காங்கிரஸ் கட்சி சர்வாதிகாரமாகக் கொண்டு வந்த நெருக்கடி நிலை, பொதுமக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கும், எத்தனை துயரங்களையும், இடையூறுகளையும் ஏற்படுத்தியது என்பதை, இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மனதைக் குளிர்விக்க, ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெருக்கடிக் காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா என்று கேட்டுள்ளார்.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போதெல்லாம், திமுகவுக்கு இந்த கோரிக்கைகள் நினைவுக்கு வராதது ஆச்சரியம். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட பிறகு, அடுத்த வந்த 1980ஆம் ஆண்டு தேர்தலில், நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று இந்திரா காந்தி அவர்களுக்கும், அதன் பின் 2004ஆம் ஆண்டு, இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்று சோனியா காந்தி அவர்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியிலிருந்து, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற அவர் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் சொல்வாரா?
கடந்த 2006ஆம் ஆண்டு, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மத்தியில் அன்று காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஆட்சியில், அதிகாரமிக்கக் கட்சியாக, சர்வ வல்லமையுடன் சுற்றிவந்த திமுக, இந்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை? திமுக நினைத்திருந்தால், காங்கிரஸ் கட்சியை வலியுறுத்தியிருக்க முடியாதா? மத்திய அமைச்சர் பதவிகளே பெரிது என்று மௌனமாக இருந்து விட்டு, தற்போது நாடகம் ஆடுவது ஏன்?
கடந்த பத்து ஆண்டு காலமாக, திமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் இல்லை. இனி வரும் ஆண்டுகளிலும் இடம் கிடைக்கப் போவதில்லை. மத்திய அமைச்சர் பதவிகளிலிருந்து பல ஆயிரம் கோடி ஊழல் செய்தே பழகிய திமுகவுக்கு, தற்போது பதவி இல்லாமல் என்ன செய்வது என்றே தெரியாமல், பொதுமக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
திமுக அரசு, தமிழகத்தில் தங்கள் முதல் கடமையான சட்டம் ஒழுங்கைச் சரிசெய்ய முதலில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும். நீட் தேர்வு மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கும் கிடைத்து வரும் மருத்துவக் கல்வியை, தங்கள் கட்சியினர் வருமானத்துக்காக மட்டுமே பயன்படுத்த முயற்சி செய்வதற்காக, மாநில உரிமை என்ற போலி நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் என்றும் தமிழக பா.ஜ.க. சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியா செல்வதற்காக வந்தார். அவரின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது அவர் வைத்திருந்த இரண்டு அட்டைப்பெட்டிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதில் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு வகைகள் இருப்பதாக கூறினார்.
ஆனால் அந்த அட்டைப்பெட்டிகள் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் அட்டைப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் உயிருடன் 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், அந்தப் பயணியை கைது செய்தனர். மேலும் அட்டை பெட்டிகளில் இருந்த நட்சத்திர ஆமைகளையும் பறிமுதல் செய்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சுங்க அதிகாரிகள் அந்த பயணியின், மலேசியா பயணத்தை ரத்து செய்தனர். விசாரணையில் இந்த நட்சத்திர ஆமைகளை, ஆந்திர மாநிலம் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும், இந்த நட்சத்திர ஆமைகளுக்கு இங்கு ரூ.50 முதல் ரூ. 100 வரையில் விலை ஆனால் மலேசியா நாட்டில் இந்த நட்சத்திர ஆமைகள் ரூ.5 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்குவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் அங்குள்ள வீடுகளில் நட்சத்திர ஆமைகள் வளர்க்கப்படுகின்றன. நட்சத்திர விடுதிகளில், இறைச்சி மற்றும் சூப்புக்காகவும், மருத்துவ குணமுடைய நட்சத்திர ஆமைகளை, மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்துவதால் கடும் கிராக்கி இருப்பதாக தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- விவசாயிகள் வாழ்க்கை கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது.
- தமிழக விவசாய மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசினுடைய மிக முக்கிய கடமையாகும்.
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது மட்டும் அல்லாமல், முறைப்படி நீதிமன்றத்தையும் அணுகி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் உரிய நேரத்தில் அரசு பெற்று தர வேண்டும் இன்றைக்கு தண்ணீர் இல்லாமல் டெல்டா பகுதி முழுவதும் பாலைவனமாக மாறிவரும் நிலையில், விவசாயிகள் வாழ்க்கை கேள்விக் குறியாக்கப்பட்டிருக்கிறது.
எனவே கர்நாடக அரசு தர மறுக்கும் தண்ணீரை உடனடியாக தமிழகத்திற்கு பெற்று நமது தமிழக விவசாய மக்களை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசினுடைய மிக முக்கிய கடமையாகும். எனவே நீதிமன்றத்திற்கு சென்ற பிறகும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுத்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியையும் கூட்டி தமிழக விவசாயிகள் நலனை காக்க மாபெரும் ஆர்ப்பாட்டத்தை தமிழக அரசே முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்ற கூறியுள்ளார்.






