என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் தினமும் குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது.
- ஆவடியில் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் குடிநீரில் கழிவுநீர் கலந்து இருக்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக தட்பவெட்ப நிலை மாறியுள்ளது. இதனால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவை பரவி வருகிறது. தொண்டை வலி, இருமலுடன் தாக்கும் இந்த மர்ம காய்ச்சல் சென்னையில் பரவுவதற்கு கொசு உற்பத்தியே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மேலும் சென்னையில் சில இடங்களில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 8 மாத குழந்தை மற்றும் 8 வயது சிறுவன் ஆகியோருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களிலும் சிலருக்கு டெங்கு பாதிப்பு இருக்கிறது.
சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களிலும், தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலும் பலருக்கு சளி, இருமலுடன் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தவும், பருவமழை தொடங்க உள்ள நிலையில் சுகாதார பணிகளை முடுக்கி விடவும், சென்னை மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆலந்தூர், பெருங்குடி மண்டலங்களில் வாரத்திற்கு ஒருமுறை குடிநீரின் மாதிரி சேகரிக்கப்பட்டு அதில் பாக்டீரியா, வைரஸ் தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் தினமும் குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. அண்ணாநகரிலும் அவ்வப்போது பரிசோதனை செய்யப்படுகிறது. ஆவடியில் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் குடிநீரில் கழிவுநீர் கலந்து இருக்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது.
அதற்கு ஏற்றபடி குடிநீர் வாரியத்துடன் இணைந்து குடிநீர் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு, தேவையான அளவு குளோரின் கலந்து, சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வரும் பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை அடிப்பது உள்ளிட்ட பணிகளும் மாநகராட்சி மூலம் நடந்து வருகின்றன.
- பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடியும், பீகாருக்கு ரூ.26 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சமீப காலமாக ரெயில் விபத்துகள் நடந்தபோதும் மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்து உள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு என்ற பெயரை ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடியும், பீகாருக்கு ரூ.26 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் பீகாரை தவிர்த்து வேறு மாநிலத்துக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனிடையே, வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக அசாம், இமாச்சல பிரதேசம், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கிய நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு எந்த நிதியுதவியும் அறிவிக்கப்படாதது கண்டித்து தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் - செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இதனிடையே, சமீப காலமாக ரெயில் விபத்துகள் நடந்தபோதும் மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
முன்னதாக, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- 9 இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.
சென்னை:
மின்சார கட்டண உயர்வு மற்றும் ரேசன் கடைகளில் பருப்பு, பாமாயில் போன்றவற்றை நிறுத்த முயற்சிப்பதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதன்படி கட்சி மாவட்டங்கள் அடிப்படையில் இன்று காலையில் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்தில் 9 இடங்களில் தி.மு.க. அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.
வடக்கு மாவட்டம் வடசென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையில் பழைய வண்ணாரப்பேட்டை கிருஷ்ணா தியேட்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தின் சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரு
மான ந.பாலகங்கா தலைமையில் தங்க சாலை மணிக்கூண்டு அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் அண்ணாசாலை தாராபூர் டவர் அருகில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்சென்னை (தெற்கு) மாவட்ட செயலாளர் எம்.கே.அசோக் தலைமையில் வேளச்சேரி காந்தி சிலை அருகில் மின் கட்டண உயர்வை குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடசென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு தலைமையில் கொளத்தூரில் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் வி.என்.ரவி தலைமையில் எம்.ஜி.ஆர்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்சென்னை மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
- முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
- லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
திருச்சி:
திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்த முனியப்பன் (வயது 59) இவர் சொந்தமாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த மாதம் வாங்கியுள்ளார்.
அந்த மனையினை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 11.7.2024 அன்று விண்ணப்பித்துள்ளார். முனியப்பன் விண்ணப்பித்து ஒரு மாதம் ஆகியும் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
இதனால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று முனியப்பன் விசாரித்த பொழுது தனது மனையை உட்பிரிவு செய்து கொடுக்க கொட்டப்பட்டு பகுதிக்கான சர்வேயர் முருகேசன் (வயது 39) என்பவரை பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு முருகேசனிடம் பேசி உள்ளார்.
இதையடுத்து மனையை உட்பிரிவு செய்து கொடுக்க சர்வேயர் முருகேசன் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு முனியப்பன் லஞ்சப் பணத்தை குறைத்து கொள்ள வேண்டுமாறு முருகேசனிடம் கெஞ்சி கேட்டதன் பேரில் முருகேசன் 5 ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் உனக்கு உட்பிரிவு செய்து தர முடியும் என்று கட்டாயமாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முனியப்பன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேசன், பாலமுருகன் மற்றும் குழுவினருடன் முனியப்பனிடம் இருந்து சர்வேயர் முருகேசன் பத்தாயிரம் ரூபாய் லஞ்ச பணம் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
- வெளியுறவுத்துறை அமைச்சரையோ, பிரதமரையோ சந்தித்து இது குறித்து பேச எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக் கூடாது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்கள் தாங்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதிகளில் தான் மீன் பிடித்து வருகின்றனர் என்ற போதிலும், அவர்களை சிங்களக் கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
வங்கக்கடலில் மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்ட 2 மாத தடைக் காலம் முடிவடைந்து ஜூன் 16-ஆம் தேதி தான் தமிழக மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அதன் பின் 35 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், இதுவரை 7 கட்டங்களில் மொத்தம் 89 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் 35 நாட்களுக்கும் மேலாக சிறையில் வாடும் நிலையில் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து கைது செய்தது மட்டுமின்றி, அவர்களை ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைத்து வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 89 மீனவர்கள் சிறையில் வாடி வரும் நிலையில், அவர்களை நம்பியுள்ள குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றன.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய - இலங்கை அதிகாரிகள், தமிழக - இலங்கை மீனவர்கள் ஆகியோர் பங்கேற்கும் பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து, இந்திய, இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பலமுறை பா.ம.க. வலியுறுத்தியும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. தமிழக முதல்வரோ, ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போது வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவதுடன் அவரது கடமையை முடித்துக் கொள்கிறார். வெளியுறவுத்துறை அமைச்சரையோ, பிரதமரையோ சந்தித்து இது குறித்து பேச எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் இனியும் தொடரக் கூடாது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மத்திய அரசுக்கு அனைத்து வழிகளிலும் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தி நின்று தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
திருப்பூர்:
தமிழகத்தில் தி.மு.க., அரசு 3-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று திருப்பூர் குமரன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சிவசாமி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், விஜயகுமார் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும், ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சி செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, என்.எஸ்.என்.நடராஜன், திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன், துணைச்செயலாளர் புதுப்பட்டி பாலு, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அட்லஸ் லோக நாதன், வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிசாமி,எம்ஜிஆர்., மன்ற செயலாளர் சிட்டி பழனிசாமி, எம்ஜிஆர்., இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன், மாணவரணி செயலாளர் சதீஷ், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், முன்னாள் கவுன்சிலர் ஆண்டிபாளையம் ஆனந்த், பகுதி செயலாளர்கள் பட்டுலிங்கம், குமார், கண்ணன், கருணாகரன், ஹரிஹரசுதன், பி.கே.முத்து, நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் தனபால், ஆண்டவர் பழனிச்சாமி, கவுன்சிலர் தங்கராஜ், மற்றும் சூர்யா செந்தில், நல்லூர் சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரிக்கேன் விளக்குகளை கையில் ஏந்தி நின்று தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
- ரூபன் நாடார் துணைத்தலைவர் மணி நாடார் சுரேஷ் குமார் நாடார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருமண மண்டபத்தில் நாடார் பேரவை தலைவர் வி எஸ் கணேசன் நாடார் தலைமையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கோடம்பாக்கம் வட்டார நாடார் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

கோடம்பாக்கம் நாடார் சங்க தலைவர் மாம்பழம் ராஜேந்திரன் நாடார் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜாவுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.
முன்னதாக கோடம்பாக்கம் நாடார் சங்க நிர்வாகிகளில் ஒருவரான மறைந்த டாக்டர் சபாபதி அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சங்க நிர்வாகிகளின் குழந்தைகளுக்கு உதவி வழங்கினோம்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பால் கனகராஜ் திரைப்பட நடிகர் ஜீவா தங்கவேல் ஜாக்குவார் தங்கம் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்த்ராஜ் நாடார், பொதுச்செயலாளர் சந்திரசேகர் நாடார் கோடம்பாக்கம் நாடார் சங்க காப்பாளர் ஜார்ஜ் நாடார், முன்னாள் தலைவர் ஐ கே ரூபன் நாடார், சாந்தகுமார் நாடார் சங்க ஆலோசகர் ரூபன் நாடார் துணைத்தலைவர் மணி நாடார் சுரேஷ் குமார் நாடார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று முன்னதாக பம்மல் நாடார் பேரவை சார்பில் குடும்ப விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாடார் பேரவை தலைவர் வி எஸ் கணேசன் நாடார் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேரவை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு காமராஜர் புகழ் பாடினேன்.
- சைலேந்திரபாபு புகைப்படத்தை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி
- விழிப்புடன் இருக்க சைலேந்திரபாபு அறிவுரை.
சைபர் கிரைம் மோசடி கும்பல் பல்வேறு விதமாக பொதுமக்களிடம் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுங்கத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சி.பி.ஐ. அதிகாரிகள் என தொடர்பு கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெற்றோர்களை குறிவைத்து சைபர் கிரைம் மோசடி கும்பல் நூதன முறையில் மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
வாட்ஸ் அப் கால் மூலமாக தொடர்பு கொண்டு உங்களது மகன் அல்லது மகள் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும். குறிப்பாக மகள் என்றால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், வங்கி மோசடியில் தொடர்பு இருப்பதாகவும் கூறி மிரட்டுகின்றனர்.
வாட்ஸ் அப் காலில் சுங்கத்துறை அதிகாரிகள் போல் பேசி பெற்றோர்களை பயப்பட வைக்கின்றனர். அதுமட்டுமல்லாது அழுகுரல் ஒன்றையும் ஒளிபரப்பி மகன் அழுவது போன்ற ஒன்றையும் ஒலிபரப்பி அவர்களை நம்ப வைக்கின்றனர்.
உண்மையை அறியாத சில பெற்றோர்கள் அவர்களது மகன் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக நினைத்து வாட்ஸ் அப் காலில் பேசும் நபர் கூறியபடி செய்து மகனை காப்பாற்றலாம் என நினைக்கின்றனர்.
பணத்தை கொடுத்தால் வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என கேட்டு நினைக்கும் போது, பணத்தை கொடுத்து பெற்றோர்கள் சிலர் ஏமாறுகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதோடு ஏமாற்றி பணம் பறித்த வீடியோ ஆதாரத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
அதில் பாகிஸ்தான் சைபர் குற்றவாளிகள் தனது புகைப்படத்தை பயன்படுத்தி இந்தியர்களிடம் பணம்பறிக்க முயற்சி செய்கிறார்கள். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற வீடியோ அழைப்பு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
- மக்களும் தி.மு.க. அரசுக்கு துணை நிற்பார்கள்.
- தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியமாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
மாதவரம்:
புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும். மக்களும் தி.மு.க. அரசுக்கு துணை நிற்பார்கள் என்பதை பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40க்கு வெற்றி பெற செய்து நிரூபித்து உள்ளீர்கள். இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த ஆடை அவசியம். இதனை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. இதன் அவசியம் அறிந்து 1970-ல் கலைஞர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தொடங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியமாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,முத்துச்சாமி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பும் பாமாயிலும் 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் கிடைக்காமல் அல்லல்படுத்துகிறது.
- துவரம் பருப்பு-பாமாயில் ஆகியவை தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி, மக்களை நேரடியாகவும், மின் கட்டண உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வால் மறைமுகமாகவும் வாட்டி வதைக்கின்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசை கண்டித்து
அதிமுக சார்பில் கழக அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெறுகிறது.
அன்று எதிர்க்கட்சித் தலைவராக "ஷாக் அடிப்பது மின்சாரமா மின் கட்டணமா" என்று ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு, இன்று முதல்வராக இருக்கும் அவருக்கு, இந்த விடியா ஆட்சியில் "ஷாக்அடிக்கும்_மின்கட்டணம்" என்று மக்கள் பதில் அளிக்கின்றனர்.
நிர்வாகத் திறமையின்மையே உருவான இந்த அரசு, ஒருபுறம் மின் கட்டண சுமையை மக்கள் மீது ஏற்றியதுடன், மறுபுறம் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பும் பாமாயிலும் 3 மாதங்களாக ரேஷன் கடைகளில் கிடைக்காமல் அல்லல்படுத்துகிறது.
போதைப்பொருள் எங்கும் கிடைக்கும் விடியா திமுக ஆட்சியில் பருப்பு_பாமாயில்_எங்கே ஸ்டாலின் என்று மக்கள் கேட்கிறார்கள்
மின் கட்டணத்தை உயர்த்தியும் ரேஷன் கடைகளில் பருப்பு பாமாயில் வழங்கப்படுவதை நிறுத்த முயற்சித்தும் மக்கள் விரோதப் போக்கில் செயல்படும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
அநியாயமாக மக்கள் தலையில் சுமத்தப்படும் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுமாறும், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு-பாமாயில் ஆகியவை தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது.
- 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
தக்கலை:
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அமராவதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது38). வெளிநாட்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், தனது மனைவி ஷோபியுடன் தக்கலையில் உள்ள வட்டம் அண்ணா நகரில் ஒரு வீட்டின் மாடியில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் மகேஷ் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மகேசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு முதலில் திருமணமாகி மனைவி பிரிந்து விட்டதும், அதன்பிறகு விமானத்தில் ஏற்பட்ட பழக்கத்தில் சென்னையை சேர்ந்த ஷோபி என்பவரை 2-வது திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது.
ஷோபி தனது பெற்றோரை பார்க்க சென்னை சென்றிருந்த நேரத்தில் தான் மகேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தது யார்? என்று போலீசார் விசாரணையில் இறங்கினர். சம்பவ இடத்திலும், மகேசின் வீட்டிலும் மது பாட்டில்கள் கிடந்ததால், அவர் நண்பர்களுடன் மது அருந்தி இருக்கலாம் என்றும், அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதினர்.
அதனடிப்படையில் கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியதில் திருவிதாங்கோடு மல்லன்விளையை சேர்ந்த மெக்கானிக் பெனிட்(27), பொற்றைகாட்டுவிளை பெயிண்டர் திரேன்ஸ்(23), மல்லன்விளை பிபின் ஜேக்கப்(23) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் 3 பேர் மீதும் போலிசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர்.
கேரளா மற்றும் சென்னைக்கு விரைந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்தநிலையில் மகேசின் உறவினர்கள் நேற்று தக்கலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர்.
அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள், மகேஷ் உடல் வைக்கப்பட்டு இருந்த ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் மகேஷ் கொலையில் தேடப்பட்ட பிபின் ஜேக்கப், கோவையில் பதுங்கிருப்பது செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படையினர் கோவை விரைந்தனர். அவர்கள் பிபின் ஜேக்கப் தங்கியிருந்த வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்தனர்.
பின்பு வீட்டுக்குள் இருந்த பிபினை கைது செய்தனர். கைது செய்த அவரை தனிப்படை போலிசார் இன்று காலை தக்கலைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
பிபின் ஜேக்கப் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மற்ற 2 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
- விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- தடை ஆணை ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரம்:
தமிழக முதலமைச்சரை அவதூறாகவும், தமிழக அரசை விமர்சித்து பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி., மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி. சண்முகம் எம்.பி. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
விசாரணையின் போது சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள தடை ஆணை ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.






