என் மலர்
இந்தியா
- ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
- பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது.
சென்னை:
ஒரு காலத்தில் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரை கொம்பாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது அது எளிதாகிவிட்டது. அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதாக பட்டா பெற்றுக்கொள்ளலாம். அதேபோல இப்போது பத்திரப்பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கு உடனடி பட்டா மாறுதலும் செய்யப்படுகிறது.
தற்போது சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வருவாய்த்துறை புதிய ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி ஒரு சொத்தின் உரிமையாளர் யார், அவரது பெயர் என்ன? இதற்கு முன்பு இந்த சொத்து யார் பெயரில் இருந்தது? அதோடு வங்கியில் இந்த சொத்து அடமானத்தில் இருக்கிறதா? இந்த சொத்தின் மீது என்னென்ன பறிமாற்றங்கள் நடந்து இருக்கிறது என்பதை பத்திரப்பதிவு துறை வழங்கும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில் ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பட்டாவில், பத்திரப்பதிவுத்துறை வழங்கும் வில்லங்க சான்றிதழ் போல் அனைத்து விவரங்களையும், பரிமாற்றங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தமிழக அரசு, அதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது''பட்டா வரலாறு" என்ற புதிய சேவையை பொதுமக்களுக்காக கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம், அந்த நிலத்தின் முன்பிருந்த பட்டா வைத்திருந்தவர்களின் பெயர்கள், பெயர் எப்போது மாற்றப்பட்டது, எந்த ஆணையின் பேரில் மாற்றம் நடைபெற்றது, பட்டா எந்த காலக்கட்டத்தில் யாரிடம் இருந்தது போன்ற விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.
இந்த பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது. முதல்கட்டமாக ஒரு தாலுகாவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பட்டா வில்லங்க சான்றிதழ் பெற பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். சோதனை முறை வெற்றி பெற்றுவிட்டால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார். மேலும் தற்போதைய நிலையில் இந்த பட்டா வரலாறு 2014-ம் ஆண்டு முதல்தான் இப்போதைக்கு எடுக்க முடியும்.
- இந்த ஆண்டு இதுவரையில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- 14.3 சதவீத குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலம் பார்வையை சரி செய்ய வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கண்புரை 82 சதவீதம், விழித்திரை பாதிப்பு 5.6 சதவீதம், நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு 1 சதவீதம், கண் நீரழுத்த நோய் பாதிப்பு 1.3 சதவீதம் மற்றவை 10.1 சதவீதம் ஆகும். 14.3 சதவீத குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலம் பார்வையை சரி செய்ய வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரையில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 214 குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளி குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும்.
- காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 24-ந்தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வால், தமிழ்நாட்டில் இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளையும், நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
24-ந்தேதி (திங்கட்கிழமை) கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
- சாம்ராஜ் நகருக்கு வந்தால் அதிகாரம் போய்விடும் என்பது மூட நம்பிக்கை.
- முதல் மந்திரி மாற்றம் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என்றார்.
பெங்களூரு:
கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையா சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் மூட நம்பிக்கைகளை நம்புவது இல்லை.
சாம்ராஜ் நகருக்கு வந்தால் அதிகாரம் போய்விடும் என்பது மூட நம்பிக்கை.
அந்த மூட நம்பிக்கையை போக்க நான் இங்கு வருகிறேன்.
எனது அதிகாரம் (பதவி) இப்போதும் சரி, வரும் காலத்திலும் சரி பாதுகாப்பாக உள்ளது.
முதல் மந்திரி மாற்றம் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன்.
எங்களுக்கு மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய ஆதரவு வழங்கியுள்ளனர்.
மக்களின் ஆசைப்படி நாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வோம். அதன் பிறகும் காங்கிரசே மீண்டும் ஆட்சிக்கு வரும்.
மக்கள் எதுவரை விரும்புகிறார்களோ அதுவரை நானே பட்ஜெட் தாக்கல் செய்வேன் என தெரிவித்தார்.
- தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடந்து வருகின்றன.
- போதுமான திட்டமிடல், தகவல் தொடர்பு இல்லாதது எஸ்ஐஆர் செயல்முறையை சீர்குலைத்துவிட்டது.
கொல்கத்தா:
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் எஸ்ஐஆர் குளறுபடி குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு, மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் குழப்பமானது, வற்புறுத்தும் வகையில் உள்ளது.
இது மிகவும் ஆபத்தானது. இதை உடனே நிறுத்த வேண்டும். போதுமான திட்டமிடல் , தகவல் தொடர்பு இல்லாதது எஸ்ஐஆர் செயல்முறையை சீர்குலைத்துவிட்டது.
பெரும்பாலான பிஎல்ஓக்கள் உரிய பயிற்சி இல்லாமை, சர்வர் செயலிழப்புகள், மீண்டும் மீண்டும் தரவு பொருந்தாத தன்மை காரணமாக ஆன்லைன் படிவங்களுடன் போராடுகிறார்கள்.
இந்த வேகத்தில் டிசம்பர் 4-ம் தேதிக்குள் பல தொகுதிகளில் உள்ள வாக்காளர் தரவை தேவையான துல்லியத்துடன் பதிவேற்ற முடியாது என்பது கிட்டத்தட்ட உறுதி.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் தீவிர அழுத்தம் மற்றும் தண்டனை நடவடிக்கை குறித்த பயத்தின் காரணமாக பலர் தவறான அல்லது முழுமையற்ற உள்ளீடுகளைச் செய்யத் தள்ளப்பட்டனர்.
இது உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும். வாக்காளர் பட்டியலின் நேர்மையை பாதிக்கும்.
இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து பல அதிகாரிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது. எனவே அதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் பத்மகுமார் 2 முறை ஆஜரானார்.
- சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த சில மணி நேரங்களுக்கு பிறகு பத்மகுமார் கைது செய்யப்பட்டார்
திருவனந்தபுரம்:
சபரிமலை கோவிலில் உள்ள காவல் தெய்வத்தின் சிலைக்கு தங்க முலாம் பூசுவதற்கான தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் விசாரணையை கேரள மாநில உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது.
இதைத் தொடர்ந்து,எஸ்ஐடிஎனப்படும் சிறப்பு புலனாய்வு குழு, பெங்களூரு தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே கைது செய்தது.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட முராரி பாபு, வாசு ஆகியோர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பத்மகுமாருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இரண்டு முறை திருவனந்தபுரத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜரானார்.
இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பத்மகுமார் கைது செய்யப்பட்டார்
- ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
- காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும்.
ஜம்முவில் உள்ள பழமை வாய்ந்த 'காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (SIA) குழு இன்று சோதனை நடத்தியது.
சமீபத்திய டெல்லி பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், தேசத்தின் நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காகப் பத்திரிகையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் அங்கே ஏ.கே ரக துப்பாக்கி குண்டுகள், மற்றும் கையெறி குண்டு பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனை பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.
பத்திரிகை ஆசிரியர்களான அனுராதா பாசின் மற்றும் பிரபோத் ஆகியோர் இந்தச் சோதனை, "அரசாங்கத்தை விமர்சிப்பது அரசுக்கு விரோதமாக இருப்பதாக பொருள் அல்ல. எங்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் மிரட்டுவதற்கும், சட்டப் பூர்வ அங்கீகாரத்தைப் பறிப்பதற்கும், இறுதியில் அமைதியாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்று கூறியுள்ளனர்.
1954 ஆம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் வேத் பாசினால் தொடங்கப்பட்ட காஷ்மீர் டைம்ஸ், ஜம்மு-காஷ்மீரின் பழமையான ஆங்கில நாளிதழாகும். 2023 முதல் அச்சுப் பதிப்பை நிறுத்தி இணையத்தில் மட்டும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
- சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.
பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜேடியு தலைவர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பாஜக- ஜெடியு-வின் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆஜேடி-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது. இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
இந்நிலையில் தேர்தலுக்கு பின் முதல் முறையாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பொதுவெளியில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"பீகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கும், அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீகார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள்.
புதிய அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் அறிவிப்புகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் என்றும் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டு பீகார் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பீகார் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும்.
எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி யாதவ் எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மூத்த உறுப்பினர் முத்துவேலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பேசினார்.
- இதைக் கண்டு சிவகுமார் ஆனந்த கண்ணீர் விட்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 41-வது நாளாக நேற்று நடைபெற்ற 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் ஆலங்குளம் தொகுதி சார்பில் பங்கேற்ற தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் கலந்துகொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசிய சிவகுமார், "எங்க அப்பா முத்துவேல் 1967-ல் இருந்து திமுக உறுப்பினர். இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு. உங்க கூட போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா?'" என கோரிக்கை விடுத்தார்.
உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அப்பாவுக்கு போன் பண்ணுங்க, நானே பேசி வரச் சொல்லுறேன்" என கூறி, அவரது தந்தையுடனும் போனில் பேசினார். இதைக் கண்டு சிவகுமார் ஆனந்த கண்ணீர் விட்டார்.
இந்நிலையில் நேற்று தொலைபேசியில் பேசிய ஆலங்குளம் மூத்த உறுப்பினர் முத்துவேலை நேரில் அழைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கவுரவித்தார்.
அப்போது முதலமைச்சரிடம் பேசிய முத்துவேல், "எனது மகன்களுக்கு திராவிடமணி, ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கிறேன்" என்று கூறி பெருமிதம் அடைந்தார்.
- தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
- சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வசந்தா (64) மற்றும் அவரது மகள் தேன்மொழி (32) ஆகிய இருவரையும் வீட்டு வேலைக்கு வந்த சத்யா, தவ்லத் பேகம், இவர்களின் நண்பர் ஜெயக்குமார் இணைந்து கொலை செய்துள்ளனர். மேலும், தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
வீட்டின் உள்ளே மயங்கிக் கிடந்த சிறுமி, மறுநாள் காலை வெளியே வந்தபோதுதான் இந்த கொலைச் சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல்.
- திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை.
தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாக திமுக அரசு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
சமீபத்தில், "தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்" என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சி நடத்தினார் பொம்மை முதல்வர்.
இந்நிலையில், சென்னையில் 60% பேருக்குக் கூட உணவு விநியோகம் செய்யப்படவில்லை எனவும், பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும், தற்போது, கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தலுக்கு முன், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதைக் கேட்கும் தூய்மைப் பணியாளர்கள் ஜனநாயக உரிமையையும் பறித்துக்கொண்டு, அராஜகத்தால் அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி விட்டு, Damage Control ஆக ஒரு திட்டத்தைத் தருகிறேன் என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நடத்திவிட்டு, அதையும் கைவிட்டுவிட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர்.
ஆனால், குப்பை வண்டியில் சாப்பாடு போட்டு இழிவு படுத்துவது என்பது, இதற்கு இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றச் செய்கிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது எளிய மக்களை ஏமாற்றுவதிலும், ஆட்சிக்கு வந்தபின் அதே மக்களை இழிவுபடுத்துவதிலும் திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை!
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முறையாக, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
- அரும்பாடுபட்டு சாகுபடி செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டி வரும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்ததால், அவற்றை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் வருத்தமளிக்கின்றன.
நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அரும்பாடுபட்டு சாகுபடி செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டி வரும். எனவே, உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






