என் மலர்tooltip icon

    இந்தியா

    • இளையராஜாவின் புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்.
    • சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது.

    யூடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், பல்வேறு யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங் கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் என்னை அடையாளப்படுத்தும் வகையில் எனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன் படுத்தக் கூடாது.

    சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி எனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் "இசை அமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை மார்பிங் செய்தும், ஏ.ஐ. தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி மாற்றியும் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்" என்று கூறப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெயரை, புகைப்படங்களை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது? எனக் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வக்கீல், "இளையராஜாவின் புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்.

    இது அவரது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்பதால், யூடியூப் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதி இன்றி இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது" என்றார்.

    இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி யூடியூப் சேனல்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும்.
    • சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3-வது தெரு, ஆண்டர்சன் சாலை.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (22.11.2025) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    நுங்கம்பாக்கம் : கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கே.என்.கே சாலை, வாலஸ் கார்டன் 1 முதல் 3-வது தெரு, ரட்லேண்ட் கேட் 1 முதல் 6-வது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3-வது தெரு, ஆண்டர்சன் சாலை, ஹாடோஸ் சாலை 1, 2-வது தெரு, நவாப் ஹபிபுல்லா 1, 2-வது அவென்யூ, பைக்ராப்ட் கார்டன் தெரு.

    • தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் தி.மு.க.வின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், இத்திட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்யத் தயாராக இருப்பதாக கூறியிருப்பதன் மூலம் புதிய ஓய்வூதியத் திட்டமே தொடரும்; பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

    அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர்களுக்கான அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதை ஏற்காமல் தி.மு.க. அரசு ஏமாற்றி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த ஆணையிட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது தான், தமிழக அரசு இவ்வாறு தெரிவித்திருக்கிறது.

    ''தமிழ்நாடு அரசுத்துறை ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பணியில் சேர்ந்து, அக்டோபர் வரை ஓய்வு பெற்ற 54,000 பேரில் 51,000 பேருக்கு முழுமையான பலன்கள் வழங்கப்பட்டுள்ளன'' என்று உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், இது அப்பட்டமான பொய் ஆகும்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியில் சேர்ந்தவர்களில் கடந்த மார்ச் மாத இறுதி வரை 45,625 பேரும், அக்டோபர் வரை சுமார் 54,000 பேரும் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவருக்குக் கூட ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. மாறாக, அவர்களின் பணிக்காலத்தில் அவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பங்களிப்பு ஊதியத் தொகை, அதற்கு இணையாக அரசின் சார்பில் செலுத்தப்பட்ட தொகை, அதற்கான வட்டி ஆகியவை மட்டுமே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஓய்வு பெறும் போது வழங்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது தொடர் வைப்புத்தொகை திட்டம் போன்று தான் செயல்படுத்தப்படுகிறதே தவிர, சமூகப் பாதுகாப்புத் திட்டமாக செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.

    மேலும், பங்களிப்பு தொகையை திரும்பக் கொடுக்கும் போது, இனி எந்தக் காலத்திலும் ஓய்வூதியம் கேடக மாட்டோம் என்று பத்திரத்தில் எழுதி வாங்கப்படுகிறது. இது அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கொத்தடிமைகளாக்கும் செயலாகும். அரசு ஊழியர்களை இதை விட மோசமாக அவமதிக்க முடியாது.

    அதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் குறைந்தது ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்குக் கூட அவர்கள் ஓய்வு பெறும் போது பணிக்கொடை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கு பணிக்கொடைக் கூட வழங்கப் படுவதில்லை என்பது தான் வேதனையான உண்மை. ஓய்வூதியத் திட்டம் என்பதன் உண்மையான நோக்கமே, ஓய்வுக்காலத்திற்கு பிறகு அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுவதன் மூலம் சமூகப் பாதுகாப்பு வழங்குவது தான். ஆனால், இப்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் சமூகப் பாதுகாப்பு, பணிக்கொடை ஆகிய இரண்டுமே வழங்கப்படுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஓய்வூதியத் திட்டம் என்று கூறுவதே கிஞ்சிற்றும் பொருத்தமற்றது ஆகும்.

    ஆனால், இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்றும், இதில் தேவையான திருத்தங்களை செய்து செயல்படுத்தப்போவதாகவும் கூறுவதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு மீண்டும் ஒரு துரோகத்தை செய்திருக்கிறது,. இதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மன்னிக்கவே மாட்டார்கள்.

    புதிய ஓய்வூதியத் திட்டத்தால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதால் தான் அரசு பணியாளர்களும், ஆசிரியர்களும் தங்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களை தி.மு.க. அரசு இரு வகைகளில் ஏமாற்றியும், துரோகமிழைத்தும் வருகிறது. முதலில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைப்பதற்காக மூத்த இ.ஆ.ப. அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. செப்டம்பர் மாதத்திற்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டிய அந்தக் குழு, இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ததுடன் முடங்கிக் கிடக்கிறது.

    இன்னொருபுறம், தமிழ்நாட்டில் புதிய ஒய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்ததன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பதை தி.மு.க. அரசு தெளிவுபடுத்தி விட்டது. ஒருவேளை ககன்தீப்சிங் பேடி குழு அதன் அறிக்கையை தாக்கல் செய்தாலும் கூட பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதில்லை என்பது தான் தி.மு.க. அரசின் நிலைப்பாடு ஆகும். தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்த அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதை விட மோசமான துரோகத்தை தி.மு.க.வால் செய்ய முடியாது.

    நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது தான் தி.மு.க.வின் வழக்கம் என்பது இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த துரோகத்திற்கான தண்டனையை தி.மு.க.வுக்கு வரும் தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வழங்குவார்கள். தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு அரசு ஊழியர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் மின்சார கம்பிகளில் தீப்பற்றியதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
    • மால் முழுவதும் சூழ்ந்துள்ள புகை மூட்டத்தை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு வணிக வளாகமாகும்.

    இந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள லிஃப்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. லிஃப்டில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பதறியடித்து ஓடினர். தீவிபத்து காரணமாக கடும் புகைமூட்டம் ஏற்பட்டதால் மாலுக்கு சென்றவர்கள் சிதறி ஓடினர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். மாலில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    மால் முழுவதும் சூழ்ந்துள்ள புகை மூட்டத்தை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மாலில் உள்ள 4 வழிகள் மூலமாகவும் புகையை வெளியேற்றப்படும் பணி நிறைவடைய 4 மணி நேரம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

    மாலில் உள்ள தியேட்டரில் சினிமா பார்க்கச் சென்றவர்கள் வெளியே காத்திருக்கின்றனர்.

    • மாநாட்டில் மீனவர் பிரச்சனை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    • ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பங்கேற்பார்கள் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நாம் தமிழர் கட்சி சார்பில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுத்து தொடர்ச்சியாக மாநாடு நடத்தப்படுகிறது.

    அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு-மாடு, மரங்களின் மாநாடு மற்றும் மலைகளின் மாநாடு போன்றவற்றை நடத்தினார். இந்த மாநாடுகள் இயற்கை சார்ந்த பாதுகாப்பை, கோரிக்கையாக முன்வைத்து நடத்தப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக கடல்சார் வாழ்வாதாரத்தையும், கடலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் 'ஆதி நீயே, ஆழித்தாயே' என்ற முழக்கத்தை முன்வைத்து கடலம்மா என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

    அதன்படி இன்று மாலை நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

    நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நடத்தும் இந்த கடலம்மா மாநாடு சீமானின் மற்ற மாநாடுகளை போல சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் மீனவர் பிரச்சனை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் மேடை அமைக்கப்பட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மூலம் ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பங்கேற்பார்கள் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

    • அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்படலாகாது!
    • மசோதாக்களின்மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது.

    சென்னை:

    மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயப்போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்!

    * சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்!

    குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற 8 ஏப்ரல் 2025 தீர்ப்பின் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது. சொல்லப் போனால்,

    * மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.

    * அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்படலாகாது!

    * சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் மறுப்பது / (தமிழ்நாடு ஆளுநர் செய்தது போல) காலவரையின்றி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பது எனும் நான்காவது விருப்பத் தேர்வு ஆளுநருக்கு இல்லை.

    * மசோதாக்களின்மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது. அப்படி, எந்த விளக்கமும் இல்லாமல் நீண்டகாலம் இழுத்தடித்தால், மாநிலங்கள் நீதிமன்றங்களை அணுகலாம். ஆளுநர்கள் வேண்டுமென்றே தாமதிப்பதற்கு எதிராக வழக்கு தொடுத்து, கேள்விக்குட்படுத்தி நியாயம் பெறலாம்.

    -என்பனவற்றைத் தனது விளக்கத்தில் உச்சநீதிமன்ற அமர்வு மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

    மேலும், புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத் v. குஜராத் அரசு (1974) 1 SCC 717 வழக்கின் தீர்ப்பில் (பத்தி 109), 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது, "நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்பவை அரசு தலைமை வழக்கறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் போன்றவை என்பதைக் கடந்து அவற்றுக்கென எந்த மதிப்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது.

    *காலவரையின்றிக் காலம் தாழ்த்தலாம்,

    *சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் மறுக்கலாம் எனும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் கூற்றை உச்சநீதிமன்றத்தின் நேற்றைய கருத்து மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது.

    தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உட்பட மாநில அரசுகளுடன் மல்லுக்கட்டும் அனைத்து ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வழியில் செயல்பட வேண்டும் என்பதையும், மக்களின் விருப்பத்தைச் சட்டமியற்றி நிறைவேற்றும்போது, வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் காலத்தைக் கடத்தினால் நீதிமன்றங்களில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டுமென்பதையும் நமது சட்டப் போராட்டத்தின் மூலம் கட்டாயமாக்கியுள்ளோம்! அரசியல்சட்டப்பிரிவு 361-க்குப் பின்னால் ஆளுநர்கள் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளோம்.

    அரசியல் சட்டத்தால் அமையப்பெற்ற எந்தப் பதவியும் அச்சட்டத்துக்கு அப்பாற்பட்டதில்லை என நான் திடமாக நம்புகிறேன். உயர்ந்த அரசியலமைப்புப் பதவிகளில் இருப்போரே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும், நீதிமன்றங்கள்தான் ஒரே நம்பிக்கை. ஆகவே, நீதிமன்றங்களின் கதவு தீர்வுபெறத் திறந்தே இருக்க வேண்டும். அது தனது கதவுகளை அடைத்தால், நமது அரசியலமைப்பின்படியான மக்களாட்சியில் சட்டத்தின் ஆட்சியைச் சிறுமைப்படுத்திவிடும்; அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்வதை ஊக்குவிக்கும்.

    தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தைச் சட்டங்களின்மூலம் நிறைவேற்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு அரசியலமைப்புக் கருவிகள் செயல்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்து உழைப்போம்! எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம்! என்று கூறியுள்ளார். 




    • திருக்கார்த்திகை தீபம் வருகிற டிசம்பர் 3-ந் தேதி நடக்க உள்ளது.
    • சிறியது முதல் பெரிய அளவிலான அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களான ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், பில்சின்னாம்பாளையம், கோட்டூர், ஓடையக்குளம், அம்பாரம்பாளையம், சமத்தூர், அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் மண்பாண்ட தொழிலில் ஈடுபடுவோர் ஏராளமானோர் உள்ளனர்.

    சமையலுக்கு தேவையான பானை மட்டுமின்றி, சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை, கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் என முக்கிய விசேஷங்களில் மண்பாண்ட தொழில் பரபரப்பாக இருக்கும்.

    இந்த ஆண்டில் திருக்கார்த்திகை தீபம் வருகிற டிசம்பர் 3-ந் தேதி நடக்க உள்ளது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு இருந்தே மண்பாண்ட தொழிலாளர்கள் பலரும், அகல் விளக்கு தயாரிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

    தீபம் ஏற்றி வழிபட களிமண்ணால் செய்யப்படும் விளக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் வெளியூர் வியாபாரிகள் பலர், விற்பனை செய்ய வாங்குவதற்காக ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    இதனால் சிறியது முதல் பெரிய அளவிலான அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று கவுண்டம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அகல் விளக்குகள் தயாரித்தாலும், அவ்வப்போது மழை காரணமாகவும், பனிப்பொழிவு ஆரம்பித்து விட்டதாலும் அதனை உலர வைக்கும் பணி மந்தமாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் மட்டுமே விரைவில் உலர வைக்க முடியும் என்னும் நிலை உள்ளது. இதனால் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு அதிகளவு அனுப்பி வைக்கும் முயற்சியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அகல் விளக்கு தயாரிப்பு குறைந்துள்ளது. ஒரு டஜன் சிறிய அகல் விளக்கு ரூ.15 வரை விற்பனையாகிறது. கார்த்திகை தீப திருவிழாவுக்கு இன்னும் 2 வாரமே உள்ளதால் அகல் விளக்குகளை உலர வைத்து மார்க்கெட்டுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட உள்ளோம் என்றனர்.

    • சீத்தாக்குளம்-சத்திரம் பகுதிக்கு இடைப்பட்ட இடத்தில் வந்தபோது மல்லிகார்ஜூன ரெட்டி திடீரென மயங்கி விழுந்தார்.
    • போலீசாரின் முதல் கட்ட அறிக்கையில் மாரடைப்பு காரணமாக மல்லிகார்ஜூன ரெட்டி இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூன ரெட்டி (வயது 42). இவர் கடந்த 19-ந் தேதி வண்டி பெரியாறு சத்திரத்தில் இருந்து புல்மேட்டு பாதை வழியாக 25 பேர் கொண்ட ஐயப்ப பக்தர்கள் குழுவுடன் சபரிமலை சன்னிதானத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

    சீத்தாக்குளம்-சத்திரம் பகுதிக்கு இடைப்பட்ட இடத்தில் வந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து சத்திரத்தில் உள்ள சுகாதார மையத்தில் மல்லிகார்ஜூன ரெட்டிக்கு முதல்-உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புல்மேட்டில் இருந்து வந்த மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.

    அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அவரது உடல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட அறிக்கையில் மாரடைப்பு காரணமாக மல்லிகார்ஜூன ரெட்டி இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

    • நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், பின்னர் இறங்குவதுமான சூழலே நீடிக்கிறது. அப்படியாக கடந்த 14-ந்தேதியில் இருந்து விலை குறைந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் விலை அதிகரித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,460-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,680 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.




    வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 169 ரூபாய்க்கும் கிலோவுக்கு நான்காயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,000

    19-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800

    18-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,200

    17-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,320

    16-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-11-2025- ஒரு கிராம் ரூ.173

    19-11-2025- ஒரு கிராம் ரூ.176

    18-11-2025- ஒரு கிராம் ரூ.170

    17-11-2025- ஒரு கிராம் ரூ.173

    16-11-2025- ஒரு கிராம் ரூ.175

    • தந்தையிடமிருந்து மதச்சார்பற்றவராக இருக்கக் கற்றுக்கொண்டேன்.
    • சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதியை மையமாகக் கொண்டிருக்கக்கூடாது.

    இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த மே மாதம் 14-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். விடுமுறை தினமான நவ.23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அவர் ஓய்வு பெற உள்ளதால் இன்று அவர் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கடைசி நாள் விசாரணையை மேற்கொள்கிறார்.

    டெல்லியில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் பி.ஆர்.கவாய் கூறியதாவது:

    புத்த மதத்தை பின்பற்றினாலும், இந்து மதம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் பிற மதங்கள் உட்பட அனைத்து மதத்தையும் நம்பும் உண்மையான மதச்சார்பற்ற நபர்.

    தந்தையிடமிருந்து மதச்சார்பற்றவராக இருக்கக் கற்றுக்கொண்டேன். அவர் உண்மையிலேயே மதச்சார்பற்றவராகவும், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சிறந்த சீடராகவும் இருந்தார்.

    நான் சுப்ரீம் கோர்ட்டில் என்னவாக இருக்கிறேனோ, அதற்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன். டாக்டர் அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தால்தான் நான் இந்த நிலையை அடைந்தேன்.

    தலைமை நீதிபதியாக தனது ஆறு மாத காலப் பணிக்கும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஆறரை ஆண்டுகள் பணிக்கும் நிறுவனத்தின் கூட்டு வலிமையே காரணம். கடந்த ஆறரை ஆண்டுகளில் என்னால் என்ன செய்ய முடிந்ததோ அதை செய்தேன்.

    சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதியை மையமாகக் கொண்டிருக்கக்கூடாது. மாறாக அனைத்து நீதிபதிகளையும் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன். முடிவுகள் என்னால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படவில்லை, ஆனால் முழு நீதிமன்றத்திற்கும், விசாரணைகளுக்கும் முன்பாக வைக்கப்பட்டன.

    சுப்ரீம் கோர்ட், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பதிவாளர்கள், ஊழியர்கள் போன்ற அனைவரின் பங்களிப்போடு சிறப்பாக செயல்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
    • பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

    ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

    உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். குறிப்பாக ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.

    மேலும் இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

    அத்துடன் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.



    • ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
    • பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது.

    சென்னை:

    ஒரு காலத்தில் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரை கொம்பாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது அது எளிதாகிவிட்டது. அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதாக பட்டா பெற்றுக்கொள்ளலாம். அதேபோல இப்போது பத்திரப்பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கு உடனடி பட்டா மாறுதலும் செய்யப்படுகிறது.

    தற்போது சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வருவாய்த்துறை புதிய ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

    அதன்படி ஒரு சொத்தின் உரிமையாளர் யார், அவரது பெயர் என்ன? இதற்கு முன்பு இந்த சொத்து யார் பெயரில் இருந்தது? அதோடு வங்கியில் இந்த சொத்து அடமானத்தில் இருக்கிறதா? இந்த சொத்தின் மீது என்னென்ன பறிமாற்றங்கள் நடந்து இருக்கிறது என்பதை பத்திரப்பதிவு துறை வழங்கும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

    அதே நேரத்தில் ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பட்டாவில், பத்திரப்பதிவுத்துறை வழங்கும் வில்லங்க சான்றிதழ் போல் அனைத்து விவரங்களையும், பரிமாற்றங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தமிழக அரசு, அதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது''பட்டா வரலாறு" என்ற புதிய சேவையை பொதுமக்களுக்காக கொண்டு வந்துள்ளது.

    இதன் மூலம், அந்த நிலத்தின் முன்பிருந்த பட்டா வைத்திருந்தவர்களின் பெயர்கள், பெயர் எப்போது மாற்றப்பட்டது, எந்த ஆணையின் பேரில் மாற்றம் நடைபெற்றது, பட்டா எந்த காலக்கட்டத்தில் யாரிடம் இருந்தது போன்ற விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.

    இந்த பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது. முதல்கட்டமாக ஒரு தாலுகாவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பட்டா வில்லங்க சான்றிதழ் பெற பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். சோதனை முறை வெற்றி பெற்றுவிட்டால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார். மேலும் தற்போதைய நிலையில் இந்த பட்டா வரலாறு 2014-ம் ஆண்டு முதல்தான் இப்போதைக்கு எடுக்க முடியும்.

    ×