என் மலர்
இந்தியா
- AIIMS-உம் வராது, MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு.
- பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை புறக்கணித்தது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று மதுரையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், மதுரையில் நடந்த மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போராட்ட புகைப்படங்களை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
#AIIMS-உம் வராது, #MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்...
அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
- மத்திய அரசை கண்டித்தும், மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மதுரை:
சென்னைக்கு அடுத்தபடியாக கோவில் நகரம் என அழைக்கப்படும் மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
அதன்படி மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 32 கி.மீட்டருக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் திருமங்கலம் முதல் வசந்த நகர் வரை உயர்நிலை பாலமும், வசந்த நகர் முதல் தல்லாகுளம் பெருமாள் வரை 10 மீட்டர் ஆழத்தில் பூமிக்கடியிலும், அதன்பின் ஒத்தக்கடை வரை உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து மெட்ரோ திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த முதற்கட்டமாக சென்னை மெட்ரோ நிர்வாகம் நிதி ஒதுக்கி, பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் இந்த திட்டத்திற்கு நிதியுதவி செய்ய விருப்பம் தெரிவித்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் மதுரை மற்றும் கோவையில் ஆய்வும் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணம் குறித்து மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், மதுரை, கோவை நகரங்களில் மக்கள் தொகை முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது. மதுரையில் தற்போதைய பயண தேவையை ஆய்வு செய்ததில் அதிவிரைவு பேருந்து போக்குவரத்து போன்ற குறைந்த அளவிலான திட்டங்கள் மட்டுமே பொருத்தமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவையை பொறுத்தவரை போக்குவரத்து பயண நேரம், மெட்ரோ ரெயிலில் பயண நேரத்தை விட குறைவாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளக்கம் அளித்தாலும், இதை விட மக்கள் தொகை குறைந்த நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை புறக்கணித்தது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரையில் இன்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ. (மதுரை மாநகர்), மணிமாறன் (மதுரை தெற்கு) மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- மீனவர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில் (நாளை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23-ந்தேதி தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22-மற்றும் 23-ந்திகளில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், ஏனைய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24 மற்றும் 25-ந்தேதிகளில் தெற்கு, மத்திய அந்தமான் கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்பது நாட்டையும் நமது ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறை ஆகும்.
- நக்சலைட் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் மாநிலம் ஹரிபரில் நடந்த எல்லை பாதுகாப்பு படையின் 61-வது எழுச்சி தின விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் எல்லை மற்றும் பாதுகாப்புப் படைகள் சமரசம் செய்யாது என்பதை முழு உலகிற்கும் தெளிவாகியது. ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம், பயிற்சி முகாம்கள் மற்றும் ஏவு தளங்களை நமது ராணுவம் அழித்தது.
துரதிருஷ்டவசமாக, சில அரசியல் கட்சிகள் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முயற்சித்து வருகின்றன. ஊடுருவல்காரர்களை அகற்றும் பணியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன.
இந்த அரசியல் கட்சிகள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு ஆகியவற்றை எதிர்க்கின்றன.
ஊடுருவல்காரர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நமது நாட்டில் இருந்து அனைத்து ஊடுருவல்காரர்களையும் நாங்கள் அகற்றுவோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது எங்களது உறுதிமொழி ஆகும்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்பது நாட்டையும் நமது ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறை ஆகும்.
தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை முழுமையாக ஆதரிக்குமாறு நாட்டு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு பீகார் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கை ஆகும்.
நக்சலைட் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர். நாட்டை நக்சலைட் பாதிப்பில் இருந்து 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் விடுவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
- கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதன்படி தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் தலைவராக கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த ஏ.ஜே. ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மீனவர் நல வாரிய தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஏ. ஜே. ஸ்டாலின் இன்று நாகர்கோவில் வந்தார். அவருக்கு கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகம் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பேசும்போது போது, தமிழகம் முழுவதும் உள்ள மீனவ கிராமங்களில் சென்று மீனவ நலவாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மீனவ நல வாரிய திட்டத்தின் மூலம் மக்களுக்கு என்னென்ன நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்பதை மக்களிடம் எடுத்துரைத்து உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.
2007ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீனவர் நல வாரியம் கொண்டு வந்ததால் தான் இந்த பதவி தனக்கு கிடைத்ததாகவும், தனக்கு இந்தப் பதவியை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகரச் செயலாளர் ஆனந்த், அயழக அணி மாநிலத் துணைச் செயலாளர் பாபு விதி பிரைட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
- வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ் நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் காலை 10 மணியளவில் 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
இவ்வாறு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
- கேரள அரசும் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை SIR பணிகளை ஒத்திவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
- தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR (வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தம் பணி) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பருவமழை, அறுவடை நேரம் உள்ளிட்டவைகள் மேற்கொள்காட்டி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் SIR பணி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கேரள அரசும் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை SIR பணிகளை ஒத்திவைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு கடிதம் எழுதியுள்ள கடிதத்தில்,
தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் குழப்பமானது, வற்புறுத்தும் வகையில் உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து பல அதிகாரிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது. எனவே அதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்த உத்தரவிடக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வி.சி.க. தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் நடைபெறும் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தம் என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது முரணானது என்று தெரிவித்துள்ளது.
- டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது.
- சுவாச கோளாறுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் காற்று மாசு பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக அங்கு காற்றின் தரம் மோசமான நிலைக்கு சென்றது. இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 'மிகவும் மோசமான' பிரிவில் தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீர் என்ற செயலி வெளியிட்ட அறிக்கையின்படி இன்று காலை 9 மணிக்கு டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 370-ஆக பதிவாகி உள்ளது.
இதனால் டெல்லியில் தொடர்ந்து காற்றின் தர குறியீடு மோசமாக இருந்து வருகிறது. சாந்தினி சவுக், ஆனந்த் விகார், முன்ட்கா, பவானா, நரேலா, வஜீர்பூர் உள்பட18-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரக்குறியீடு 400-க்கு மேல் பதிவாகி உள்ளன.
இதற்கிடையே அடுத்த 6 நாட்களுக்கு டெல்லியின் காற்றின் தர குறியீடு மிகவும் மோசமான' முதல் 'கடுமையான' மண்டலத்தில் இருக்கும் என்று புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தர முன்னெச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. வாகன மாசு, பயிர் கழிவுகள் எரிப்பு, குளிர்காலம் ஆகியவை டெல்லியில் காற்றுமாசுக்கு காரணமாக உள்ளது.
காற்று மாசு காரணமாக டெல்லியில் சுமார் 80 சதவீத வீடுகளில் கடந்த மாதத்தில் குறைந்தது ஒருவராவது நோய்வாய்ப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 36 சதவீத வீடுகளில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் சுவாசம் அல்லது மாசுபாடு தொடர்பான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுவாச கோளாறுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மூச்சுத் திணறல், கண்களில் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
- திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வினயா சேர்க்கப்பட்டார்.
- வினயாவுக்கு தொற்று பரவியதற்கான மூலக்காரணம் தெரியவில்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவ தொடங்கியது. தேங்கியிருக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிக்கும் நபர்களுக்கு, அதில் இருக்கக்கூடிய அமீபா நாசி மற்றும் காது துவாரம் வழியாக சென்று மூளையை தாக்குவதால் அமீபிக் மூளைக்காய்ச்சல் வருகிறது.
இதனால் தேங்கியிருக்கும் அசுத்தமான தண்ணீரின் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டது. இருந்தபோதிலும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவல் கட்டுக்குள் வரவில்லை.
இந்த நோய் தொற்றுக்கு உயிர்பலியும் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இந்தநிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இளம்பெண் ஒருவர் பலியாகி விட்டார்.
திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் வினயா (வயது26). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார்.
அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வினயா சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு அமீபிக் மூளைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 40 நாட்கள் சிகிச்சையில் இருந்தநிலையில், சிகிச்சை பலனின்றி வினயா இறந்து விட்டார்.
வினயாவுக்கு தொற்று பரவியதற்கான மூலக்காரணம் தெரியவில்லை. அவர் அவருடைய வீட்டில் இருந்த கிணற்று தண்ணீரையே பயன்படுத்தி இருக்கிறார். இதனால் அவரது வீட்டின் கிணற்று நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
கேரள மாநி லத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு இந்த ஆண்டு இதுவரை 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் பலியாகி விட்டனர். மாநிலத்தில் இந்த மாதத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 17 பேரில் 7 பேர் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் பிரசார நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்ற தகவல் மனுவில் இல்லை.
- குறைகளை நிவர்த்தி செய்து மனு அளித்தால் பரிசீலிக்கப்படும்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக சேலத்தில் டிசம்பர் 4-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு நிர்வாகிகள் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனுவை நிராகரித்து சேலம் காவல்துறை த.வெ.க.வினருக்கு விளக்க கடிதம் அளித்துள்ளது. அதில்,
* டிச.4-ந்தேதி வெளி மாவட்டங்களில் பாதுகாப்பு பணிக்காக செல்வதால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் ஏற்படும்.
* விஜய் பிரசார நிகழ்ச்சியில் எவ்வளவு பேர் பங்கேற்பார்கள் என்ற தகவல் மனுவில் இல்லை.
* வெளி மாவட்டங்களில் இருந்து எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்ற தகவலும் இல்லை.
* குறைகளை நிவர்த்தி செய்து மனு அளித்தால் பரிசீலிக்கப்படும்.
* அடுத்த முறை மனு அளிக்கும்போது 4 வாரங்களுக்கு முன்னர் மனு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பல்வேறு விஷயங்கள் குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்த இருந்தார்.
- ராமதாசை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பல்வேறு அரசியல் கட்சிகள் முயன்று வருகிறது.
பா.ம.க.வில் தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
இந்த இரு அணியினரும் போட்டி கூட்டங்கள் நடத்தி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். தங்களுக்கு தான் மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டும் என இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இருவரும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருன்றனர். இந்த நிலையில் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் கடந்த 18-ந் தேதி பா.ம.க. வனனியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும் மறுநாள் (19-ந் தேதி) இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், போட்டி கூட்டங்கள் நடத்தி வரும் அன்புமணி அணியினரை எதிர் கொள்வதும் குறித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்த இருந்தார்.
2026 சட்ட மன்ற தேர்தல் பணிகளை கவனிக்க மூத்த தலைவர்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்புகள் கொடுத்து தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக திண்டிவனத்தில் நடைபெற இருந்த பா.ம.க. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும், இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இந்த கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் தற்போது மவுனம் காத்து வருகிறார். வழக்கமாக டாக்டர் ராமதாஸ் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை தோறும் நிருபர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் கடந்த வாரமும், நேற்றும் அவர் நிருபர்களை சந்திக்கவில்லை.
இந்த நிலையில் ராமதாசை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பல்வேறு அரசியல் கட்சிகள் முயன்று வருகிறது. ஆனாலும் அவர் எந்த அணிக்கும் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார்.
கூட்டணி தொடர்பாக டிசம்பர் மாதம் 30-ந் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே கூறி உள்ளார்.
இந்த கூட்டத்திற்கு முன் தேர்தல் ஆணையத்தின் பதில் கிடைத்து விடும் எனவும் அவர் நம்பிக்கையாக இருக்கிறார். எனவே தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பின்னரே அவர் கூட்டணி தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ராமதாசின் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்ட போது, தற்போது பெய்த மழை காரணமாக அவர் நிருபர்களை சந்திக்கவில்லை. தற்போது அவர் தைலாபுரம் தோட்டத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 3 நாட்களாக பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கவில்லை. விரைவில் அவர் பார்வையாளர்கள், நிருபர்களை சந்திப்பார் என கூறினார்.
இதற்கிடையே அன்புமணி தரப்பினரும் கட்சி, சின்னம் தங்களுக்கே சொந்தம் என கூறி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை பொறுத்தே இரு தரப்பினரும் தங்கள் காய்களை எவ்வாறு நகர்த்துவார்கள்? என்பது தெரிய வரும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், ராமதாஸ் தரப்பினர் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க.வை கைப்பற்றும் சட்ட போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் விதமாக தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக ராமதாஸ் ஆதரவாளர் ஒருவர் பெயரில் புதிய கட்சியை தொடங்க 100 பேரிடம் பிரமாண பத்திரத்தை பெறும் பணியானது தொடங்கியிருப்பதாக கூறுகின்றனர். மேலும் அக்கட்சியை 'அய்யா பா.ம.க.' என்ற பெயரில் பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
ராமதாஸ் ஒரு கட்சியின் நிறுவனராக இருப்பதால் அவர் பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய முடியாது என்பதால் ஆதரவாளர் பெயரில் தொடங்க திட்டம் எனவும் கூறப்படுகிறது.
- இளையராஜாவின் புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்.
- சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது.
யூடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பல்வேறு யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங் கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் என்னை அடையாளப்படுத்தும் வகையில் எனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன் படுத்தக் கூடாது.
சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி எனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் "இசை அமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை மார்பிங் செய்தும், ஏ.ஐ. தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி மாற்றியும் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்" என்று கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெயரை, புகைப்படங்களை பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வக்கீல், "இளையராஜாவின் புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாக பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர்.
இது அவரது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல் என்பதால், யூடியூப் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ், மீம்ஸ்களில் அனுமதி இன்றி இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுகிறது" என்றார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் மனுவுக்கு பதில் அளிக்கும்படி யூடியூப் சேனல்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.






