என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மீனவ நல வாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை- ஏ.ஜே. ஸ்டாலின்
- கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதன்படி தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் தலைவராக கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த ஏ.ஜே. ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மீனவர் நல வாரிய தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஏ. ஜே. ஸ்டாலின் இன்று நாகர்கோவில் வந்தார். அவருக்கு கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகம் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பேசும்போது போது, தமிழகம் முழுவதும் உள்ள மீனவ கிராமங்களில் சென்று மீனவ நலவாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மீனவ நல வாரிய திட்டத்தின் மூலம் மக்களுக்கு என்னென்ன நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்பதை மக்களிடம் எடுத்துரைத்து உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.
2007ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீனவர் நல வாரியம் கொண்டு வந்ததால் தான் இந்த பதவி தனக்கு கிடைத்ததாகவும், தனக்கு இந்தப் பதவியை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகரச் செயலாளர் ஆனந்த், அயழக அணி மாநிலத் துணைச் செயலாளர் பாபு விதி பிரைட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






