என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'அய்யா பா.ம.க.' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்குகிறாரா ராமதாஸ்?
- பல்வேறு விஷயங்கள் குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்த இருந்தார்.
- ராமதாசை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பல்வேறு அரசியல் கட்சிகள் முயன்று வருகிறது.
பா.ம.க.வில் தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
இந்த இரு அணியினரும் போட்டி கூட்டங்கள் நடத்தி ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். தங்களுக்கு தான் மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டும் என இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர்.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இருவரும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருன்றனர். இந்த நிலையில் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் கடந்த 18-ந் தேதி பா.ம.க. வனனியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும் மறுநாள் (19-ந் தேதி) இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், போட்டி கூட்டங்கள் நடத்தி வரும் அன்புமணி அணியினரை எதிர் கொள்வதும் குறித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்த இருந்தார்.
2026 சட்ட மன்ற தேர்தல் பணிகளை கவனிக்க மூத்த தலைவர்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்புகள் கொடுத்து தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக திண்டிவனத்தில் நடைபெற இருந்த பா.ம.க. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும், இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இந்த கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் தற்போது மவுனம் காத்து வருகிறார். வழக்கமாக டாக்டர் ராமதாஸ் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை தோறும் நிருபர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் கடந்த வாரமும், நேற்றும் அவர் நிருபர்களை சந்திக்கவில்லை.
இந்த நிலையில் ராமதாசை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பல்வேறு அரசியல் கட்சிகள் முயன்று வருகிறது. ஆனாலும் அவர் எந்த அணிக்கும் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார்.
கூட்டணி தொடர்பாக டிசம்பர் மாதம் 30-ந் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே கூறி உள்ளார்.
இந்த கூட்டத்திற்கு முன் தேர்தல் ஆணையத்தின் பதில் கிடைத்து விடும் எனவும் அவர் நம்பிக்கையாக இருக்கிறார். எனவே தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு பின்னரே அவர் கூட்டணி தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ராமதாசின் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்ட போது, தற்போது பெய்த மழை காரணமாக அவர் நிருபர்களை சந்திக்கவில்லை. தற்போது அவர் தைலாபுரம் தோட்டத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 3 நாட்களாக பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கவில்லை. விரைவில் அவர் பார்வையாளர்கள், நிருபர்களை சந்திப்பார் என கூறினார்.
இதற்கிடையே அன்புமணி தரப்பினரும் கட்சி, சின்னம் தங்களுக்கே சொந்தம் என கூறி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு உள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை பொறுத்தே இரு தரப்பினரும் தங்கள் காய்களை எவ்வாறு நகர்த்துவார்கள்? என்பது தெரிய வரும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், ராமதாஸ் தரப்பினர் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க.வை கைப்பற்றும் சட்ட போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் விதமாக தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக ராமதாஸ் ஆதரவாளர் ஒருவர் பெயரில் புதிய கட்சியை தொடங்க 100 பேரிடம் பிரமாண பத்திரத்தை பெறும் பணியானது தொடங்கியிருப்பதாக கூறுகின்றனர். மேலும் அக்கட்சியை 'அய்யா பா.ம.க.' என்ற பெயரில் பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
ராமதாஸ் ஒரு கட்சியின் நிறுவனராக இருப்பதால் அவர் பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய முடியாது என்பதால் ஆதரவாளர் பெயரில் தொடங்க திட்டம் எனவும் கூறப்படுகிறது.






