என் மலர்tooltip icon

    இந்தியா

    • கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலளித்தார்.
    • மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    பெங்களூரு நகர போக்குவரத்தில் பயணம் செய்வது விண்வெளியில் பயணிப்பதை விட மிகவும் கடினம் என்று இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார்.

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை ஜூலை மாதம் சுபான்ஷு சுக்லா படைத்தார். இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

    இந்நிலையில் நேற்று பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய சுக்லா, "நகரத்தின் மறுபக்கத்தில் உள்ள மராத்தஹள்ளியில் (பெங்களூருவில் இருந்து 34 கி.மீ. தொலைவில்) இருந்து மாநாடு நடைபெறும் இங்கு வருகிறேன். வழக்கமாக இந்த தொலைவை கடக்க ஒரு மணி நேரம் ஆகும்.

    ஆனால் உங்கள் முன் எனது உரையை வழங்க எடுக்கும் நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரத்தை நான் இங்கு பயணித்து செலவிட்டேன். எனது மனஉறுதியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூற அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

    அவருக்கு பின் நிகழ்வில் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே,"விண்வெளியில் இருந்து பெங்களூரை அடைவது எளிது, ஆனால் மாரத்தஹள்ளியிலிருந்து வருவது கடினம் என சுபான்ஷு சுக்லா கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற தாமதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்" என தெரிவித்தார்.

    பெங்களூருவில் போக்குவரத்து பிரச்சனை மோசமடைந்து வரும் நிலையில், சுக்லாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

    அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட சராசரி பயண நேரம் 54 நிமிடங்களிலிருந்து 63 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 28வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது.

    இந்த மாநாட்டில் சுமார் 56 நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் சுமார் 46,300 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

    இந்த உச்சிமாநாட்டில் ஏஐ, தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பிரிவுகளில் 1,015 பேரின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு.
    • தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பவாரியா கொள்ளையர்களால் அதிமுக எம்எல்ஏ சுதர்சமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    மேலும், குற்றவாளிகள் மூவருக்கான தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2005ம் ஆண்டில் கும்மிடப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டில் நுழைந்து அவரைக் கொன்று கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

    கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் .... தேதி அன்று தானாகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து எம்எல்ஏ சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

    சுதர்சனத்தை கொன்று அவரது மனைவி, மகன்களை தாக்கி 62 சவரவன் தங்க நகைகளை பவாரியா கொள்ளையர்கள் திருடி சென்றனர். சுதர்சனத்தை கொன்ற பவாரியா கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

    பிடிபட்ட 9 பேரில் 3 பெண்கள் ஜாமினில் தலைமறைவான நிலையில் 2 பேர் சிறையில் உயிரிழந்தனர். இதில், மீதமுள்ள 4 பேரில் மூன்று பேரான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுதர்சனத்தை கொன்று கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் பின்னணியை வைத்து உருவானதே தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது.

    சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனமாக உள்ளது.

    மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இதுபற்றி பேச வேண்டும்.

    அதிமுக ஆட்சியில் தான் கோவை மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 2024ஆம் ஆண்டில் தான் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு அனுப்பி வைத்தது.

    கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது. திட்ட அறிக்கையை சமர்ப்பித்தபோது 2011 மக்கள்தொகையை திமுக அரசு குறிப்பிட்டது ஏன்? 2025ஆம் ஆண்டு மக்கள்தொகையை கணக்கிட்டு அனுப்பியிருந்தால் ஒப்புதல் கிடைத்திருக்குமே?

    கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்த உடன், கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்தது.
    • தானே முதல்வராக தொடருவேன் எனவும் அடுத்த மாநில பட்ஜட்டை தானே தாக்கல் செய்வேன் எனவும் சித்தராமையா உறுதிபட தெரிவித்துள்ளார்.

    கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

    தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    பல முறை இந்த அதிருப்தி வெளிப்பட்ட வண்ணம் இருந்தது. தனது ஆதரவாளர்களை டிகே சிவகுமார் கண்டிக்கும் அளவுக்கு இது சென்றது.

    இதற்கிடையே அண்மையில் "கர்நாடக காங்கிரசில் நிரந்தராக நீடிக்க முடியாது" என பேசிய டிகே சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் தொனியில் காய் நகர்த்தி உள்ளார். 

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் முதல்வர் பதவிக்கு டிகே சிவகுமாரும் தனது ஆதரவாளர்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மறைமுறைகமாக காய் நகர்த்துகிறாரா என்ற ஊகங்களும் எழுந்துள்ளது.  

     

    இதற்கிடையே காங்கிரஸ் அரசின் இரண்டரை ஆண்டு நிறைவை அடுத்து, டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று டெல்லிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    டெல்லி சென்ற டி.கே. சிவகுமார் பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களில் தினேஷ் கூலிகவுடா, ரவி கனிகா, குப்பி வாசு ஆகியோர் அடங்குவர்.

    அளித்த வாக்குறுதியின்படி டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சராக வாய்ப்பு வழங்குமாறு அவரது பிரிவின் எம்.எல்.ஏ.க்கள் கட்சி உயர்மட்டக் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறியப்படுகிறது.

    அவர்கள் இன்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் நாளை காலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபாலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் பயணம் குறித்து சித்தராமையா விளக்கம் கேட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தானே முதல்வராக தொடருவேன் எனவும் அடுத்த மாநில பட்ஜட்டை தானே தாக்கல் செய்வேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

    முன்னதாக டெல்லி சென்று திரும்பிய டி.கே.சிவகுமார் சகோதரர் சுரேஷ், முதல்வர் சித்தராமையா தனது வார்த்தையைக் காப்பாற்றுவார் என்று நம்புவதாகக் கூறினார். 

    • சஞ்சய் மல்ஹோத்ரா, அவர்படித்த ஐஐடி கான்பூருக்கு விஜயம் செய்தபோதும் இதே கேள்வி எழுப்பட்டது.
    • ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பொறுப்பேற்பதற்கு முன்பு, மத்திய நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராக பணியாற்றினார்.

    டெல்லி பொருளாதாரப் பள்ளியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோதரா மாணவர்களுடன்  உரையாடினார்.

    அப்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக ஆக சில டிப்ஸ்களை சொல்லுங்கள் என்று ஒரு மாணவரின் கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் மல்ஹோத்ரா, ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் வார்த்தைகளை நினைவு கூர்ந்து பேசினார்.

    அதாவது, "எதிர்காலத்தை நாம் கணிக்க முடியாது. உங்கள் கர்மாவைச் செய்யுங்கள். உங்கள் வேலையை ஆர்வத்துடனும் கடின உழைப்புடனும் செய்யுங்கள். நீங்கள் திரும்பிப் பார்க்கும்போதுதான் எப்படி முன்னேறுவது என்பது உங்களுக்குப் புரியும்" என்று சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

    முன்னதாக சஞ்சய் மல்ஹோத்ரா அவர் படித்த ஐஐடி கான்பூருக்கு விஜயம் செய்தபோதும் அங்கு ஒரு மாணவர் இதே கேள்வியை எழுப்பியபோதும் சஞ்சய் மல்ஹோத்ரா இதே பதிலை அளித்தார்.

    சஞ்சய் மல்ஹோத்ரா 1990 பேட்ச் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஐஐடி கான்பூரில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

    டிசம்பர் 11, 2024 அன்று ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பொறுப்பேற்பதற்கு முன்பு, மத்திய நிதி அமைச்சகத்தில் வருவாய் செயலாளராக சஞ்சய் மல்ஹோத்ரா பணியாற்றினார்.  

    • சென்னையில் மக்கள் சந்திப்பை நடத்த இடம் தேர்வு செய்துள்ளார்.
    • விஜய் புதிய பாணியில் மீண்டும் அதிரடி பிரசாரம் செய்து மக்களின் ஆதரவை திரட்ட உள்ளார்.

    வருகிற டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் த.வெ.க. விஜயின் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில்,

    விஜய் பிரசாரத்துக்கு முந்தைய நாள் 3-ந் தேதி கார்த்திகை தீபம் விழாவுக்காக திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் செல்வார்கள். அதே போல் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

    எனவே நீங்கள் கேட்கும் நாளில் அதாவது டிசம்பர் 4-ந்தேதி விஜய் பிரசார கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் விஜயின் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் நீங்கள் உங்கள் தலைமையை தொடர்பு கொண்டு வேறு தேதியை முடிவு செய்து மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுங்கள் என்றும் தெரிவித்து இருந்தனர். மேலும் இனி வரும் காலங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 4 வாரங்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

    இதற்கிடையே சேலத்தில் விஜயின் தேர்தல் பிரசார கூட்டம் தள்ளிப் போவதால் அதற்கு முன்பு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் முடிவு செய்தார்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் விஜயை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளார். சென்னையில் இந்த மக்கள் சந்திப்பை நடத்த இடம் தேர்வு செய்துள்ளார்.

    சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வு நடக்கிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்களை விஜய் சந்திக்கிறார். இதன் மூலம் விஜய் புதிய பாணியில் மீண்டும் அதிரடி பிரசாரம் செய்து மக்களின் ஆதரவை திரட்ட உள்ளார்.

    தமிழகத்தில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வெளியிடப்படாமல் கோர்ட்டு பரிசீலனையில் உள்ளது. இதனால் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி உள் அரங்கில் நடக்கிறது.

    • த.வெ.க. நிர்வாகிகள் சீலநாயக்கன்பட்டி மைதானத்தை தேர்வு செய்து கொடுத்தனர்.
    • போலீசார் திருகார்த்திகை பாதுகாப்பு பணியை காரணம்காட்டி அனுமதி கொடுக்க மறுத்து உள்ளனர்.

    சேலம்:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். அதை தொடர்ந்து அரியலூர், மற்றும் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    தொடர்ந்து செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நாமக்கல், கரூரில் பிரசாரம் செய்தார். அப்போது கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த அசம்பாவிதம் காரணமாக விஜயின் பிரசார சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த சம்பவத்துக்கு பிறகு நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விஜய் பேசினார். அப்போது நிர்வாகிகள், தொண்டர்கள் விஜய் மீண்டும் சேலத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை விஜய் ஏற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில் சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கப்போவதாக தகவல் வெளியானது. இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

    இதற்காக தமிழக வெற்றிக்கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் அனுமதி கேட்டு சேலம் போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரியிடம் நேற்று கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "அவர்கள் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வருகிற டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். அதற்காக சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மைதானம் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்து உள்ளோம். மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டு இருந்தனர்.

    இதையடுத்து போலீசார் 3 இடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுங்கள் என்றனர். அதன்படி த.வெ.க. நிர்வாகிகள் சீலநாயக்கன்பட்டி மைதானத்தை தேர்வு செய்து கொடுத்தனர்.

    இந்த நிலையில் வருகிற டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் விஜயின் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளனர்.

    அதில், விஜய் பிரசாரத்துக்கு முந்தைய நாள் 3-ந் தேதி கார்த்திகை தீபம் விழாவுக்காக திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் செல்வார்கள். அதே போல் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.

    எனவே நீங்கள் கேட்கும் நாளில் அதாவது டிசம்பர் 4-ந்தேதி விஜய் பிரசார கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் விஜயின் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் நீங்கள் உங்கள் தலைமையை தொடர்பு கொண்டு வேறு தேதியை முடிவு செய்து மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுங்கள் என்றும் தெரிவித்து இருந்தனர். மேலும் இனி வரும் காலங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 4 வாரங்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

    இது குறித்து சேலம் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வருகிற டிசம்பர் 4-ந் தேதி சேலத்தில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தோம். ஆனால் போலீசார் திருகார்த்திகை பாதுகாப்பு பணியை காரணம்காட்டி அனுமதி கொடுக்க மறுத்து உள்ளனர்.

    மேலும் வேறு ஒரு தேதியை தேர்வு செய்து மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுக்க கூறியுள்ளனர். போலீசார் வழங்கிய பதில் கடிதத்தை தலைமைக்கு அனுப்பி வைத்து விட்டோம்.

    அவர்கள் முடிவு செய்து வேறு ஒரு தேதியை அறிவிப்பார்கள். எனவே மீண்டும் நாளை அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்க உள்ளோம் என்றார்.

    எனவே டிசம்பர் 2-வது வாரத்தில் விஜயின் பிரசாரம் சேலத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • புரட்சி வெடிக்கும் என பதிவிட்டு பின்னர் டெலிட் செய்திருந்தார் ஆதவ் அர்ஜூனா.
    • ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தை தூண்டுதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரிவுகளில் வழக்கு.

    தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    போராட்டம் வெடிக்கும் என எக்ஸ் தளத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.

    கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டிலும் இளைஞர்களின் புரட்சி வெடிக்கும் என பதிவிட்டு பின்னர் டெலிட் செய்திருந்தார் ஆதவ் அர்ஜூனா.

    இதனால், ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தை தூண்டுதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரிவுகளில் பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. 

    • வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.
    • நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக, தமிழக அரசு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், தமிழக அரசு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.

    இந்நிலையில் அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மத நிகழ்விற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில்,

    * கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.

    * 5000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும்.

    * வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.

    * நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

    * நிகழ்ச்சியில் பொது, தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்.

    * கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு.

    * அனுமதித்த நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

    * நிகழ்ச்சி அனுமதிக்கான விண்ணப்பத்தில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ ஏற்பாடு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

    * திடீரென ஏற்பாடு செய்யக்கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு ஆட்சியர், சென்னை மாநகர காவல் ஆணையர் முடிவெடுக்க அதிகாரம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாநகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

    • AIIMS-உம் வராது, MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு.
    • பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்.

    கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை புறக்கணித்தது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று மதுரையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில், மதுரையில் நடந்த மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போராட்ட புகைப்படங்களை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    #AIIMS-உம் வராது, #MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்...

    அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
    • மத்திய அரசை கண்டித்தும், மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    மதுரை:

    சென்னைக்கு அடுத்தபடியாக கோவில் நகரம் என அழைக்கப்படும் மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

    அதன்படி மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 32 கி.மீட்டருக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் திருமங்கலம் முதல் வசந்த நகர் வரை உயர்நிலை பாலமும், வசந்த நகர் முதல் தல்லாகுளம் பெருமாள் வரை 10 மீட்டர் ஆழத்தில் பூமிக்கடியிலும், அதன்பின் ஒத்தக்கடை வரை உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதையடுத்து மெட்ரோ திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த முதற்கட்டமாக சென்னை மெட்ரோ நிர்வாகம் நிதி ஒதுக்கி, பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் இந்த திட்டத்திற்கு நிதியுதவி செய்ய விருப்பம் தெரிவித்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் மதுரை மற்றும் கோவையில் ஆய்வும் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணம் குறித்து மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    அதில், மதுரை, கோவை நகரங்களில் மக்கள் தொகை முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது. மதுரையில் தற்போதைய பயண தேவையை ஆய்வு செய்ததில் அதிவிரைவு பேருந்து போக்குவரத்து போன்ற குறைந்த அளவிலான திட்டங்கள் மட்டுமே பொருத்தமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவையை பொறுத்தவரை போக்குவரத்து பயண நேரம், மெட்ரோ ரெயிலில் பயண நேரத்தை விட குறைவாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மத்திய அரசு விளக்கம் அளித்தாலும், இதை விட மக்கள் தொகை குறைந்த நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

    இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை புறக்கணித்தது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரையில் இன்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ. (மதுரை மாநகர்), மணிமாறன் (மதுரை தெற்கு) மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    ×