என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜய் பொதுக்கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு - வேறு ஒரு நாளில் நடத்த த.வெ.க.வினர் முடிவு
- த.வெ.க. நிர்வாகிகள் சீலநாயக்கன்பட்டி மைதானத்தை தேர்வு செய்து கொடுத்தனர்.
- போலீசார் திருகார்த்திகை பாதுகாப்பு பணியை காரணம்காட்டி அனுமதி கொடுக்க மறுத்து உள்ளனர்.
சேலம்:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். அதை தொடர்ந்து அரியலூர், மற்றும் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நாமக்கல், கரூரில் பிரசாரம் செய்தார். அப்போது கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த அசம்பாவிதம் காரணமாக விஜயின் பிரசார சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பிறகு நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விஜய் பேசினார். அப்போது நிர்வாகிகள், தொண்டர்கள் விஜய் மீண்டும் சேலத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை விஜய் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கப்போவதாக தகவல் வெளியானது. இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இதற்காக தமிழக வெற்றிக்கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் அனுமதி கேட்டு சேலம் போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரியிடம் நேற்று கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "அவர்கள் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வருகிற டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். அதற்காக சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மைதானம் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்து உள்ளோம். மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இதையடுத்து போலீசார் 3 இடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுங்கள் என்றனர். அதன்படி த.வெ.க. நிர்வாகிகள் சீலநாயக்கன்பட்டி மைதானத்தை தேர்வு செய்து கொடுத்தனர்.
இந்த நிலையில் வருகிற டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் விஜயின் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளனர்.
அதில், விஜய் பிரசாரத்துக்கு முந்தைய நாள் 3-ந் தேதி கார்த்திகை தீபம் விழாவுக்காக திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் செல்வார்கள். அதே போல் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
எனவே நீங்கள் கேட்கும் நாளில் அதாவது டிசம்பர் 4-ந்தேதி விஜய் பிரசார கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் விஜயின் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் நீங்கள் உங்கள் தலைமையை தொடர்பு கொண்டு வேறு தேதியை முடிவு செய்து மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுங்கள் என்றும் தெரிவித்து இருந்தனர். மேலும் இனி வரும் காலங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 4 வாரங்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
இது குறித்து சேலம் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வருகிற டிசம்பர் 4-ந் தேதி சேலத்தில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தோம். ஆனால் போலீசார் திருகார்த்திகை பாதுகாப்பு பணியை காரணம்காட்டி அனுமதி கொடுக்க மறுத்து உள்ளனர்.
மேலும் வேறு ஒரு தேதியை தேர்வு செய்து மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுக்க கூறியுள்ளனர். போலீசார் வழங்கிய பதில் கடிதத்தை தலைமைக்கு அனுப்பி வைத்து விட்டோம்.
அவர்கள் முடிவு செய்து வேறு ஒரு தேதியை அறிவிப்பார்கள். எனவே மீண்டும் நாளை அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்க உள்ளோம் என்றார்.
எனவே டிசம்பர் 2-வது வாரத்தில் விஜயின் பிரசாரம் சேலத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






