என் மலர்
இந்தியா
- தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி!
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
சென்னை:
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களை கொண்டு வருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி!
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்!
அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்! என்று கூறியுள்ளார்.
- தான் ஒரு சட்ட மாணவனாக வாழக்கையை தொடங்கி, நீதியின் மாணவனாக வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- கடைசியாக மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று அவரின் அமர்வு தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர். கவாய் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார்.
நேற்று கடைசி வேலை நாளின்போது நடந்த பிரிவு உபசார விழாவில், தான் ஒரு சட்ட மாணவனாக வாழக்கையை தொடங்கி, நீதியின் மாணவனாக வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பி.ஆர்.கவாய் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் ஆவார்.
அதன்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும், முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு செல்லும், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்தது செல்லும், தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து, வக்பு சட்ட திருத்த சரத்துகள் சிலவற்றை நிறுத்தி வைத்த உத்தரவு, அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 3 ஆண்டு தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை, புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடிக்க தடை, நீண்டகாலம் சிறையில் இருந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது, மராத்தா, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து, சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது உள்ளிட்ட தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் பிஆர் கவாய் இடம் பெற்றிருந்தார்.
கடைசியாக மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
- சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, தேனி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விஜயகுமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
- கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கௌதம், நிரஞ்சன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் ரவுடி மௌலி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி விஜயகுமாரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.
ரவுடி விஜயகுமாரை பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதால் விஜயகுமார் மீது காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விஜயகுமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கௌதம், நிரஞ்சன் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
- வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
- இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
துபாயில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.
சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தது, விமானப்படை விங் கமாண்டர் நமான் சயால் என்பது தெரியவந்துள்ளது. இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
அவரின் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், "நாடு ஒரு துணிச்சலான, அர்ப்பணிப்பு கொண்ட விமானியை இழந்துவிட்டது. துயரமடைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமன் சியால் ஜியின் தைரியம் மற்றும் தேச சேவைக்கான அர்ப்பணிப்புக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
- மணமகள் ஆவணி காரை ஓட்டிச் சென்றார்.
- கார் மரத்தின்மீது மோதி விபத்தில் சிக்கியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தும்போலி அருகே முதலசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருடைய மகள் ஆவணி (25).
தனியார் பள்ளி ஆசிரியையான இவருக்கும், தும்போலி பகுதியைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஷாரோன் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் நேற்று ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற இருந்தது.
மணமகள் ஆவணி ஒப்பனை செய்வதற்காக அவரது அத்தையுடன் அருகே உள்ள அழகு நிலையத்துக்கு காரில் சென்றார்.
காரை ஆவணி ஓட்டிச் சென்றார். அங்கு செல்லும் வழியில் கார் மரத்தின்மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் ஆவணி மற்றும் அவரது அத்தையும் காயமடைந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த 2 பேரையும் எர்ணாகுளம் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற மணமகன் ஷாரோன் அங்கு மணமகள் ஆவணிக்கு தாலி கட்டினார்.
ஆனாலும், திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மண்டபத்துக்கு வந்தவர்களுக்கு அங்கிருந்தவர்கள் விருந்து உபசரித்தனர்.
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு மணமகன் தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சிறப்பு ரெயில்கள் மட்டுமின்றி, கூட்ட நெரிசலுக்கு ஏற்ப முக்கிய ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
தெற்கு ரெயில்வேயைப் பொறுத்தவரையில், கடந்த 2 ஆண்டுகளைவிட நடப்பாண்டில் அதிகளவு கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தெற்கு ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 7 மாதங்களில் ரெயில்களில் 5 ஆயிரத்து 436 கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.22.97 கோடி வருவாய் கிடைத்துள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முதல் டெஸ்டில் பாதியில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் வெளியேறினார்.
- இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுகிறார்.
கவுகாத்தி:
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்டில் சந்தித்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது. வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.
டெஸ்டில் தோற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் வெற்றிக்காக இந்தியா கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் ஆகியோரும் ஆல்-ரவுண்டர் வரிசையில் ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோரும் உள்ளனர்.
பந்துவீச்சில் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளனர்.
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அந்த அணியில் மார்க்ராம், டோனி டி ஜோர்ஜி, ரிக்கல்டன், மார்கோ ஜான்சன், முல்டர்,ஸ்டெப்ஸ், ஹார்மர், கேசவ் மகராஜ் ஆகியோர் உள்ளனர்.
கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி உள்ளது. டிரா செய்தாலே தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிவிடும். எனவே கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
- வீட்டில் தூங்கிகொண்டிட்ருந்த்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- அங்கு வந்த குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
அரியானா மாநிலம் ரோஹ்தக்கின் காஹ்னி கிராமத்தை சேர்ந்த 23 வயதான ஆட்டோ ஓட்டுநர் சூரஜை, சப்னா (23 வயது) தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணந்தார்.
இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். இதுநாள் வரை காஹ்னி கிராமத்திலிருந்து விலகி வாழ்ந்து வந்த தம்பதி அண்மையில் மீண்டும் கிராமத்திற்கு திரும்பினர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 9:40 மணியளவில், சப்னாவின் சகோதரர் சஞ்சு மற்றும் அவரது மூன்று நண்பர்கள் தம்பதியின் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் வீட்டில் தூங்கிகொண்டிட்ருந்த்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூரஜின் சகோதரர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானார். தாக்குதல் நடந்த நேரத்தில் சூரஜ் வீட்டில் இல்லாததால் உயிர்த்தப்பினார்.
அங்கிருந்து தப்பிய கும்பல் அன்றைய இரவே சூரஜையும், லடோத்-போஹர் சாலையில் வைத்து கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அவரை வழிமறிக்கத் தயாராகி வருவதாகவும் கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு சென்றனர்.
அங்கு வந்த குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். தற்காப்புக்காக போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில், நான்கு குற்றவாளிகளும் காயமடைந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக ரோஹ்தக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
- ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு பாடிய பாடல் மூலம் குறிவைக்கப்பட்டார்.
- ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமாக உண்மை சரிபார்ப்பு அறிக்கை பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல 'ஸ்டாண்டு அப்' காமெடியன் குணால் கம்ரா மும்பையில் கடந்த மார்ச் மாதம் நடந்த நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு பாடிய பாடல் மூலம் குறிவைக்கப்பட்டார்.
இந்த சர்ச்சை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் அண்மையில் தனது யூடியூப் சேனலில் ரெயில்வே துறை குறித்து பேசிய குணால் கம்ரா, 2023 ஆம் ஆண்டில் சுமார் 25,000 ரெயில் விபத்துகளில் சுமார் 22,000 பேர் இறந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்கள் கூறுவதாக தெரிவித்தார்.
அவரின் கூற்று குறித்து ரெயில்வே வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமாக உண்மை சரிபார்ப்பு அறிக்கை பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரெயில்வே வெளியிட்ட உண்மைச் சரிபார்ப்பில், 2023 ஆம் ஆண்டில் சுமார் 25,000 விபத்துகள் நடந்ததாக கூறப்படுவது தவறானது, அந்த ஆண்டில் நடந்த உண்மையான விபத்துகளின் உண்மையான எண்ணிக்கை 24,678 ஆகும். அதேபோல், 22,000 இறப்புகள் என்ற கூற்றுக்கு மாறாக, 21,803 இறப்புகள் மட்டுமே பதிவாகி உள்ளது என தெளிவுபடுத்தியது.
இந்த தெளிவுபடுத்தல் இணையத்தில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. ரெயில்வேயின் அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்த காம்ரா, தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த தெளிவுபடுத்தல் இணையத்தில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது. ரெயில்வேயின் அறிக்கைக்கு உடனடியாக பதிலளித்த காம்ரா, தான் கூறியதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ளார்.
2023 இல் நடந்து மிக மோசமான ரெயில் விபத்து ஒடிசாவில் நிகழ்ந்தது. ஜூன் 2 அன்று பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா பஜார் ரெயில் நிலையம் அருகே மூன்று ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிக்னல் பிழை காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
- 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும்.
2020ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் இன்று (நவ.21) முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தன.
இதில், ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஊதியக் குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல் குறியீடு என 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-
நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தது. புதிய சட்டம் தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு.
புதிய தொழிலாளர் சட்டம் விக்சித் பாரதம் 2047 என்ற இலக்கை அடைய புதிய உத்வேகத்தை வழங்கும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான நேரத்தில் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத்தை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம், பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் மரியாதையை புதிய தொழிலாளர் சட்டம் அளிக்கும். 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை உத்தரவாதம் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலளித்தார்.
- மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு நகர போக்குவரத்தில் பயணம் செய்வது விண்வெளியில் பயணிப்பதை விட மிகவும் கடினம் என்று இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை ஜூலை மாதம் சுபான்ஷு சுக்லா படைத்தார். இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில் நேற்று பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய சுக்லா, "நகரத்தின் மறுபக்கத்தில் உள்ள மராத்தஹள்ளியில் (பெங்களூருவில் இருந்து 34 கி.மீ. தொலைவில்) இருந்து மாநாடு நடைபெறும் இங்கு வருகிறேன். வழக்கமாக இந்த தொலைவை கடக்க ஒரு மணி நேரம் ஆகும்.
ஆனால் உங்கள் முன் எனது உரையை வழங்க எடுக்கும் நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரத்தை நான் இங்கு பயணித்து செலவிட்டேன். எனது மனஉறுதியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூற அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
அவருக்கு பின் நிகழ்வில் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே,"விண்வெளியில் இருந்து பெங்களூரை அடைவது எளிது, ஆனால் மாரத்தஹள்ளியிலிருந்து வருவது கடினம் என சுபான்ஷு சுக்லா கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற தாமதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்" என தெரிவித்தார்.
பெங்களூருவில் போக்குவரத்து பிரச்சனை மோசமடைந்து வரும் நிலையில், சுக்லாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட சராசரி பயண நேரம் 54 நிமிடங்களிலிருந்து 63 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 28வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது.
இந்த மாநாட்டில் சுமார் 56 நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் சுமார் 46,300 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டில் ஏஐ, தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பிரிவுகளில் 1,015 பேரின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.






