என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மெட்ரோ ரெயில் திட்டம் நிராகரிப்பு: மத்திய அரசை கண்டித்து தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
- மத்திய அரசை கண்டித்தும், மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மதுரை:
சென்னைக்கு அடுத்தபடியாக கோவில் நகரம் என அழைக்கப்படும் மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
அதன்படி மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 32 கி.மீட்டருக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் திருமங்கலம் முதல் வசந்த நகர் வரை உயர்நிலை பாலமும், வசந்த நகர் முதல் தல்லாகுளம் பெருமாள் வரை 10 மீட்டர் ஆழத்தில் பூமிக்கடியிலும், அதன்பின் ஒத்தக்கடை வரை உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து மெட்ரோ திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த முதற்கட்டமாக சென்னை மெட்ரோ நிர்வாகம் நிதி ஒதுக்கி, பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் இந்த திட்டத்திற்கு நிதியுதவி செய்ய விருப்பம் தெரிவித்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் மதுரை மற்றும் கோவையில் ஆய்வும் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணம் குறித்து மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், மதுரை, கோவை நகரங்களில் மக்கள் தொகை முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது. மதுரையில் தற்போதைய பயண தேவையை ஆய்வு செய்ததில் அதிவிரைவு பேருந்து போக்குவரத்து போன்ற குறைந்த அளவிலான திட்டங்கள் மட்டுமே பொருத்தமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவையை பொறுத்தவரை போக்குவரத்து பயண நேரம், மெட்ரோ ரெயிலில் பயண நேரத்தை விட குறைவாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளக்கம் அளித்தாலும், இதை விட மக்கள் தொகை குறைந்த நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை புறக்கணித்தது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரையில் இன்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ. (மதுரை மாநகர்), மணிமாறன் (மதுரை தெற்கு) மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.






