என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெருங்கும் திருக்கார்த்திகை தீப திருவிழா: கோவையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
    X

    நெருங்கும் திருக்கார்த்திகை தீப திருவிழா: கோவையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

    • திருக்கார்த்திகை தீபம் வருகிற டிசம்பர் 3-ந் தேதி நடக்க உள்ளது.
    • சிறியது முதல் பெரிய அளவிலான அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களான ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், பில்சின்னாம்பாளையம், கோட்டூர், ஓடையக்குளம், அம்பாரம்பாளையம், சமத்தூர், அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் மண்பாண்ட தொழிலில் ஈடுபடுவோர் ஏராளமானோர் உள்ளனர்.

    சமையலுக்கு தேவையான பானை மட்டுமின்றி, சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை, கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் என முக்கிய விசேஷங்களில் மண்பாண்ட தொழில் பரபரப்பாக இருக்கும்.

    இந்த ஆண்டில் திருக்கார்த்திகை தீபம் வருகிற டிசம்பர் 3-ந் தேதி நடக்க உள்ளது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு இருந்தே மண்பாண்ட தொழிலாளர்கள் பலரும், அகல் விளக்கு தயாரிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

    தீபம் ஏற்றி வழிபட களிமண்ணால் செய்யப்படும் விளக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் வெளியூர் வியாபாரிகள் பலர், விற்பனை செய்ய வாங்குவதற்காக ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    இதனால் சிறியது முதல் பெரிய அளவிலான அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று கவுண்டம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அகல் விளக்குகள் தயாரித்தாலும், அவ்வப்போது மழை காரணமாகவும், பனிப்பொழிவு ஆரம்பித்து விட்டதாலும் அதனை உலர வைக்கும் பணி மந்தமாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் மட்டுமே விரைவில் உலர வைக்க முடியும் என்னும் நிலை உள்ளது. இதனால் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகள் விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு அதிகளவு அனுப்பி வைக்கும் முயற்சியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அகல் விளக்கு தயாரிப்பு குறைந்துள்ளது. ஒரு டஜன் சிறிய அகல் விளக்கு ரூ.15 வரை விற்பனையாகிறது. கார்த்திகை தீப திருவிழாவுக்கு இன்னும் 2 வாரமே உள்ளதால் அகல் விளக்குகளை உலர வைத்து மார்க்கெட்டுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட உள்ளோம் என்றனர்.

    Next Story
    ×