என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திமுக அரசு தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்துவதா?- எடப்பாடி பழனிசாமி கண்டனம்
- பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல்.
- திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை.
தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாக திமுக அரசு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
சமீபத்தில், "தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்" என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சி நடத்தினார் பொம்மை முதல்வர்.
இந்நிலையில், சென்னையில் 60% பேருக்குக் கூட உணவு விநியோகம் செய்யப்படவில்லை எனவும், பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும், தற்போது, கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தலுக்கு முன், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதைக் கேட்கும் தூய்மைப் பணியாளர்கள் ஜனநாயக உரிமையையும் பறித்துக்கொண்டு, அராஜகத்தால் அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி விட்டு, Damage Control ஆக ஒரு திட்டத்தைத் தருகிறேன் என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நடத்திவிட்டு, அதையும் கைவிட்டுவிட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர்.
ஆனால், குப்பை வண்டியில் சாப்பாடு போட்டு இழிவு படுத்துவது என்பது, இதற்கு இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றச் செய்கிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது எளிய மக்களை ஏமாற்றுவதிலும், ஆட்சிக்கு வந்தபின் அதே மக்களை இழிவுபடுத்துவதிலும் திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை!
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முறையாக, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






