என் மலர்
இந்தியா
- அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் சபாநாயகர் அப்பாவு எப்போதும் போல் அவையை வழி நடத்துகிறார்.
- டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாள் அமர்வு தொடங்கியது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது.
அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் சபாநாயகர் அப்பாவு எப்போதும் போல் அவையை வழி நடத்துகிறார்.
சட்டசபையில் மறைந்த முன்னாள் உறுப்பினர் டி.கருப்புசாமிக்கு இரங்கல் தெரிவித்து குறிப்பு வாசிக்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.
டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
- திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
- சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரெயிலும் கண்டைனர் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் அயோத்தியா - ராய்பரேலி ரெயில்வே கிராஸிங் அருகே இன்று அதிகாலை இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
அதிகாலை 2.30 மணியளவில் அந்த தடத்தில் சரக்கு ரெயிலானது வந்துகொண்டிருந்தது. அப்போது திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
இதில் படுகாயமடைந்த லாரியின் ஓட்டுநர் சோனு சவுத்ரி (28), மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் கூறினார்.
மேலும் சம்பவத்தின்போது கேட் மேன் அங்கு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் லாரி முற்றிலுமாக சேதமடைந்தது. சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் ரெயில் பாதை மற்றும் மின்சார கட்டமைப்புகள் சேதமடைந்ததால் அவ்வழியாக ரெயில் இயக்கம் தடைபட்டுள்ளது. ரெயில் பாதையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என்றும் வடக்கு ரெயில்வேவின் லக்னோ பிரிவின் ரயில்வே கோட்ட மேலாளர் சச்சீந்தர் மோகன் சர்மா தெரிவித்தார்.
- கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர்.
- சொத்து தகராறில் கும்பல் வெறிச்செயல்.
நெல்லை:
நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 57). இவர் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.
அதன்பிறகு இவர் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தைக்காவிற்கு தொழுகைக்கு சென்றார்.
பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு தெற்கு மவுண்ட்ரோடு வழியாக நடந்து வந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த கும்பல் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரி வெட்டிக்கொலை செய்தது.
பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது. அவ்வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து நெல்லை மாநகர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கீதா, டவுன் உதவி கமிஷனர் அஜிகுமார் உள்ளிட்டோரும் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது முகம் மற்றும் பின் தலை பகுதிகள் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள தொட்டிப்பாலம் தெருவை அடுத்த பிரதான சாலையில் 36 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் தொடர்பாக ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை முற்றிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜாகீர் உசேன் பிஜிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் 2 தரப்பினருக்கும் இடையே மேலும் முன்விரோதம் அதிகரித்த நிலையில், எதிர்தரப்பினர் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களினால் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலிக்கு மனைவி, 1 மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
நெல்லை மாநகரின் முக்கிய இடத்தில் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அடித்து கொலை செய்தார்.
- போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரதீப் குர்ஜாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் அடுத்த குவாலியரை சேர்ந்தவர் பிரதீப் குர்ஜார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இதனால் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். டி.வி. நாடகங்களில் வரும் குற்ற சம்பவங்களை பார்த்து அதன்படி மனைவியை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த மனைவியை அடித்து கொலை செய்தார்.
பின்னர் மனைவியின் பிணத்தை தனது பைக்கில் எடுத்து சென்று தேசிய நெடுஞ்சாலையில் வீசினார். அந்த வழியாக வந்த வாகனங்கள் பிணத்தின் மீது ஏறி இறங்கி சென்றதால் உடல் சிதைந்தது.
இதுகுறித்து பிரதீப் குர்ஜார் கம்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தானும் தனது மனைவியும் பைக்கில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. இதில் எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு காயங்கள் ஏற்பட்டது என போலீசாரிடம் தெரிவித்தார்.
போலீசார் விபத்து என வழக்கு பதிவு செய்தனர். பிரதீப் குர்ஜாரின் மனைவிக்கு இறுதி சடங்குகள் நடந்த போது அவரது உறவினர்கள் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்து வந்தார். இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தனர்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் பிரதீப் குர்ஜாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மனைவியை கொலை செய்து விபத்து நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரதீப் குர்ஜாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ஒருவரை படகுடன் காணவில்லை, மற்றொருவர் நிலை தடுமாறி விழுந்தார்.
- கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைப் பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 57). இவர் நேற்று முன்தினம் இரவு தனக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார்.
நேற்று கண்ணதாசன் கரை திரும்பி இருக்க வேண்டும், ஆனால், அவர் கரை திரும்பவில்லை. பைபர் படகுடன் மாயமாகி விட்டார். இதையடுத்து அக்கரைப்பேட்டையில் இருந்து 5 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மாயமான கண்ணதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்க வில்லை.
பின்னர், இதுகுறித்து மீன்வளத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீன்வளத்துறையினர் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அவர்கள் கடலில் மாயமான கண்ணதாசனை கடற்படை கப்பல் மூலம் தேடி வருகின்றனர்.
இதேபோல், நாகையை அடுத்துள்ள நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (52). இவர் கடந்த 14-ந்தேதி நாகை மீன்பிடி துறை முகத்தில் இருந்து விசைப்படகில் 11 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.
அப்போது ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாணிக்கம் நிலை தடுமாறி கடலில் விழுந்துவிட்டார். இதனை கண்ட விசைப்படகில் இருந்த சக மீனவர்கள் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து, மீன்வளத்துறை தெரிவித்த தகவலின் பேரில் இந்திய கடற்படையினர் கடலில் தவறி விழுந்த மாணிக்கத்தை கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் அடுத்தடுத்து மாயமான சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பாராளுமன்றத்தில் எனக்கு 24 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது.
- நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து உருவானவன்.
ஒவ்வொரு நாடாக செல்கிற நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா என்று மாநிலங்களவையில் வைகோ பேசினார்.
மாநிலங்களவையில் தொடர்ந்து எம்.பி. வைகோ பேசியதாவது:
நான் பேசியதில் எந்த அன் பார்லிமெண்ட்ரி வார்த்தை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய வைகோ திடீரென,
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!
எம்பக்கம் புகுந்து வந்துவிடும் இந்தி
எத்தனை பட்டாளம் கூட்டிவரும்?
கன்னங் கிழிபட நேரும்
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்
என முழங்கினார்.
இந்த பாராளுமன்றத்தில் எனக்கு 24 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குப்பைத் தொட்டியில்தான் தூக்கி வீச வேண்டும் . புதிய கல்விக்கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
நான் வைகோ. என்னை பேசக்கூடாது என சொல்ல நீங்கள் யார்? நான் அண்ணாவின் இயக்கத்தில் இருந்து வந்தவன். நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து உருவானவன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்தி மொழியை ஏற்காத, புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இருக்கிறது.
இவ்வாறு வைகோ பேசினார்.
- நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8210-க்கும், சவரன் ரூ.65,680-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்து, மீண்டும் அதே மாதம் 19-ந்தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த வாரம் 13-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,960-க்கு விற்பனையானது. அடுத்த நாளில் தங்கம் விலை குறைந்தாலும், மறுநாளே 65 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் ரூ.65,760-க்கு விற்பனையானது.
நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8210-க்கும், சவரன் ரூ.65,680-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8250-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,000-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680
16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
15-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
14-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,400
13-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,960
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-03-2025- ஒரு கிராம் ரூ.113
16-03-2025- ஒரு கிராம் ரூ.112
15-03-2025- ஒரு கிராம் ரூ.112
14-03-2025- ஒரு கிராம் ரூ.112
13-03-2025- ஒரு கிராம் ரூ.110
- மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
- மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா?
மாநிலங்களவையில் எம்.பி. வைகோ பேசியதாவது:
மணிப்பூர் நிலவரம் பற்றி இங்கே ஆழமான விவாதம் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது?
நரேந்திர மோடி Not Prime Minister. அவர் Picnic Minister. ஒவ்வொரு நாடாக செல்கிற நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா என்று வைகோ பேசினார்.
இதை சபை குறிப்பில் இருந்து நீக்குவேன் என்று மாநிலங்களவை துணைத்தலைவர் கூறினார்.
- நாட்டை காப்பாற்றுவதற்காக தூக்கமில்லாமல்தான் போலீசார் வேலை பார்த்து வருகின்றனர்.
- திருச்செந்தூரில் முருக பக்தர் இறந்தது இயற்கையானதுதான்.
சென்னை புளியந்தோப்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அண்ணாமலை போன்ற மாநில தலைவர் தமிழ்நாட்டிற்கான மாபெரும் சாபக்கேடு
* நாட்டை காப்பாற்றுவதற்காக தூக்கமில்லாமல்தான் போலீசார் வேலை பார்த்து வருகின்றனர்.
* எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. இதுபோன்ற மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் அஞ்சி யாரும் பதுங்கி வீட்டிலே அமர்ந்துவிட மாட்டார்கள். முன்பைவிட வேகமாக முன்னோக்கி எட்டுகால் பாய்ச்சலில் தி.மு.க. பயணிக்கும்.
* முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கான நாளை குறிக்கட்டும் அண்ணாமலை.
* போலீசே இல்லாமல் தி.மு.க. தொண்டன் உங்களின் போராட்டத்தை தடுப்பான்.
* திருச்செந்தூரில் முருக பக்தர் இறந்தது இயற்கையானதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க. தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
- தமிழிசை சவுந்தரராஜன், கரு நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் 1,078 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், குடோன் மற்றும் பல்வேறு மதுபான தொழிற்சாலைகளில் அமலாக்கத்துறை கடந்த 6-ந்தேதி சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழலை கண்டித்து சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சென்னையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழிசை சவுந்தரராஜன், கரு நாகராஜன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் 1,078 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல் அனுமதியின்றி போராட்டம் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 1,078 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த சங்கர், அர்ஜூனன், முருகேசன் ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்தது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவம் மீனவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எதிர்பாராதவிதமாக கார் வழி தவறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.
- பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் இருந்த ஆற்றில் கார் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சூர்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் அருகே மந்தாரத்தொடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 57). இவரது உறவினர்கள் சதானந்தன், விசாலாட்சி, ருக்மணி, கிருஷ்ண பிரசாத். இவர்கள் 5 பேரும் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சதானந்தன் ஓட்டி சென்றார்.
அவர் செல்போனில் கூகுள் மேப் பார்த்தவாறு பாலக்காடு நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். திருச்சூர் அருகே கொண்டாழி-திருவில்யா மலை ஆகிய 2 பகுதிகளை இணைக்கும் காயத்ரி ஆற்றின் குறுக்கே எழுண்ணுள்ளத்து கடவு பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் வழி தவறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.
பின்னர் கார், நீரில் மூழ்க தொடங்கியது. ஆற்றில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நபராக 5 பேரும் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் இருந்த ஆற்றில் கார் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் மூலம், ஆற்றில் இருந்து கார் மீட்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






