என் மலர்
இந்தியா
- பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.
- ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
மத்திய அரசு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார்.
இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வருகிற 22-ந்தேதி தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.
இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர்.
இதையொட்டி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் 22-ந்தேதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
விமான நிலையத்துக்கு அருகே இந்த ஓட்டல் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது வசதியாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவினர் 22-ந்தேதி நடைபெறும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.
- அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி தனது நண்பர்களுக்கு விற்கிறது.
- அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
நாட்டின் உயிர்நாடியான ரெயில்வே துறை 'வென்டிலேட்டரில்' இருப்பதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ரெயில்வே துறையை தங்களின் நண்பர்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சிக்கிறதா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
மக்களவையில் ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட், 'வந்தே பாரத்' ரெயிலைக் காட்டி ரெயில்வேயின் மோசமான நிலையை மறைக்க முடியாது.
ரெயில்வே நாட்டின் உயிர்நாடி. இந்த உயிர்நாடி தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் உள்ளது. இந்தப் பணியை இந்த அரசு செய்துள்ளது.
ரெயில்வே நிதி நிலை குறித்து மிகுந்த கவலைப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களின் நிலையை படிப்படியாக மோசமாக்கி, பின்னர் அவற்றை தனது "நண்பர்களுக்கு" விற்று வருகிறது. வரும் நாட்களில் ரெயில்வேயும் நண்பர்களின் கைகளுக்குச் செல்லுமா?. அப்படி ஏதாவது சதி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமர்சித்த அவர், மற்ற நேரங்களில் அவர்கள் இன்ஸ்ட்டாகிராம் ரீலிஸ் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். விபத்து நடக்கும்போது, அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
விபத்துகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட 'கவாச்' பாதுகாப்பு அமைப்பை, பயணிகளின் பாதுகாப்பை விட, தனது பிம்பப்பத்தை பாதுகாத்துக்கொள்ள அமைச்சர் அதை தவறாகப் பயன்படுத்தி வருகிறார் என்று விமர்சித்தார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி டெல்லி ரெயில் நிலையத்தில் மகா கும்பமேளா செல்ல அதிகளவில் மக்கள் நடைமேடையில் காத்திருந்தபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.
அனுமதிக்கப்பட்ட ஜெனரல் டிக்கெட்டுகளை விட 13,000 கூடுதல் டிக்கெட்டுகள் அன்றைய தினம் விற்கப்பட்டன என ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- ஆலங்குடி அருகே 2-வது நாளாக பதட்டம் நீடிப்பு.
- சாமியை பல்லக்கில் வைத்து தூக்கி வருவது தொடர்பாக மீண்டும் மோதல்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த லோகநாயகி அம்பாள் உடனுறை பாலபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்துவது சம்பந்தமாக 2 சமூகத்தினர் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை அம்பாள் திருவீதி உலா நடைபெற இருந்த நிலையில் சாமியை பல்லக்கில் வைத்து தூக்கி வருவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இதனால் ஒரு தரப்பினரை கண்டித்து மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இதனை தடுக்க சென்ற ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதை கண்டித்து குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப ட்டனர்.
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த இன்ஸ்பெக்டரை பார்த்து நலம் விசாரித்தனர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கோவிலூரைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதல் காரணமாக இன்று 2-வது நாளாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக கோவிலில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
- கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் விலையை உயர்த்த கோரி பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ராஜா தலைமை தாங்கினார். சி.பி.எம். ஒன்றிய செயலாளர் வெள்ளை கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழ்நிலையில் பாலை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி, பசும்பாலுக்கு ரூ.45 எனவும், எருமை பாலுக்கு ரூ.51 எனவும் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.3 வீதம் 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும்,ஆவின் கலப்பு தீவனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு தீர்ப்பின்படி ஆரம்ப சங்கங்களில் இருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக அளவையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு நிபந்தனை இன்றி, வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதே போல் பழனி தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ராமப்பட்டினம் புதூர், கன்னிவாடி, வேடசந்தூர் புது ரோடு, குஜிலியம்பாறை ஆனைப்பட்டி, வத்தலக்குண்டு, விருவீடு, திண்டுக்கல் அரசனம்பட்டி ஆகிய பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
- மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகரில் ஆட்டோக்களில் இப்போது யாருமே மீட்டர் போடுவது கிடையாது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால், தோராயமாக ஒரு தொகை கேட்பார்கள். பயணிகள் அப்போது பேரம் பேசுவார்கள். இதில் உத்தேசமாக ஒரு தொகையை கேட்டு அதன் பிறகுதான் பயணம் செய்ய முடியும்.
இதுதான் இன்றைய யதார்த்தம். ஓலா, ஊபர், ராபிட்டோ, ஆட்டோ, கார்களில் அந்த அளவுக்கு பேரம் பேசுவதில்லை. ஒரு சிலர் தான் கூடுதலாக 20 ரூபாய் 50 ரூபாய் கேட்பது இப்போது தொடர் கதையாகி வருகிறது.
இது பற்றி ஆட்டோ சங்க நிர்வாகிகளிடம் கேட்டால் 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்கவில்லை என்கிறார்கள். தவறு எங்கள் மீது கிடையாது. அரசு மீதுதான் என்று கூறுகின்றனர். இப்போது ஆட்டோ சங்கங்கள் ஒன்று சேர்ந்து நாளை 'ஸ்டிரைக்' அறிவித்து உள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவித்து உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது:-
இன்றைய காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டுவது பெரும் சிரமமாக உள்ளது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப அரசு கட்டணத்தை முறைப்படுத்தவில்லை.
2013-ம் ஆண்டுதான் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்ச தூரத்துக்கு ரூ.25-ம், கி.மீ.க்கு ரூ.12 என்றும் உயர்த்தி நிர்ணயித்தது அன்றைய அரசாங்கம். இப்போது விலைவாசி பல மடங்கு ஏறி விட்டது. அன்றைக்கு 1 லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கு கிடைத்தது. இன்று 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டது.
எனவே ஆட்டோ கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 என்று நிர்ணயிக்குமாறு கேட்டு உள்ளோம். குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாய் தாருங்கள் என்கிறோம். அரசு இதில் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.
எனவே ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அண்ணாசாலை, தாராபூர் டவர் சாலை, தாராபூர் டவர் ஆகிய இடங்களில் நாளை காலை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறோம். இதில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது.
- பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 மாதங்களும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முத்தாய்ப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.
தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் வேறு எந்த ஸ்தலங்களிலும் இல்லாத சிறப்பாக தாய், தந்தையரின் திருமண கோலத்தை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.
அதேபோல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியின் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி ஆட்டு கிடா வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவிதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் சேவல் கொடி சாற்றப்பட்டு தங்க கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் திருக்கல்யாண அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மதுரையில் இருந்து சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருள வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிகள் கோவிலுக்கு புறப்பாடானார்கள். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
தொடர்ந்து கோவிலின் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடைபெற்று கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளினார்.
அப்போது மீனாட்சி அம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளினர் அங்கு திருமண நிகழ்ச்சிகள் நடை பெற்று மங்கள வாத்தியம் முழங்க சுப்ரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில ஆயிரக் கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப கோலாகலமாக நடை பெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
தொடர்ந்து ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் உபயோகாரர் சார்பில் கோயில் கந்த சஷ்டி மண்டபம் வள்ளி தேவசேனா திருமண மண்டபங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே மின்விசிறி வசதிகள், குளிர்சாதன வசதியும் குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 9 இடங்களில் திரைகள் வைக்கப்பட்டன.
இன்று மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை உடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (19-ந் தேதி) காலை 5 மணிக்கு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருள கிரிவல பாதை வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
- இன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி உள்ளது.
முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செங்கோட்டையன் சமீபகாலமாக அ.தி.மு.க. கூட்டங்களை புறக்கணித்து வருகிறார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல், வேளாண் பட்ஜெட் தாக்கல் அன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதேபோல் இன்று காலை நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையில் கலந்து கொள்ளவில்லை.
நான்கு நாட்கள் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை புறக்கணித்த செங்கோட்டையன், சட்டசபையின் 4-வது நாள் அமர்வில் பங்கேற்றுள்ளார்.
நேற்றைய தினம் நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சட்டசபை வளாகத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் செங்கோட்டையனை சமாதானப்படுத்தியதாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்திலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது பேசு பொருளாகி உள்ளது. மேலும், செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான கருத்து வேறுபாடு தொடர்வதாகவே பார்க்கப்படுகிறது.
- அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
- சென்னை எழும்பூர் புகார் சிராஜ் ஹாலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன்படி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ந்தேதி மாலை 5.30 மணியளவில் சென்னை எழும்பூர் புகார் சிராஜ் ஹாலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமுதாய மக்கள், கழகத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பணியாற்றி வரும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அன்பு சகோதரி, மரியாதைக்குரிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
- நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் மக்களின் நலனுக்காக உங்கள் சேவை தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
அன்பு சகோதரி, மரியாதைக்குரிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
மக்களின் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் சிறக்கவும், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் மக்களின் நலனுக்காக உங்கள் சேவை தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
- மேலாடையின்றி புனித நீராடி வினோத வழிபாடு.
- 108 முறை நான்கு திசைகள் நோக்கி பூமியை தொட்டு கும்பிட்டனர்.
சிங்கம்புணரி:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற மலையாள சாத்தையா அய்யனார் கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லியார், அய்யனார் சுவாமிகள் அருள்பாலித்து வரும் இந்த கோவிலில் பங்குனி பொங்கல் விழா 20 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதாவது இந்த திருவிழாவை நடத்துவது தொடர்பாக ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட போட்டி, பிரச்சினை காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக இக்கோவிலில் பங்குனி பொங்கல் விழா நடத்தப்படாமல் இருந்தது.
இதனால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பகையை மறந்து பாரம்பரிய முறைப்படி இந்த ஆண்டு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக 20 ஆண்டு பகையை மறந்து ஊரே ஒன்றுபட்டு பங்குனி பொங்கல் நடத்த முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் மலையாள சாத்தையா அய்யனார் கோவில் அருகே உள்ள செவந்தான் ஊரணியில் ஆண்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் புனித நீராடினர்.
பகை ஏற்பட்ட போது ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர். அந்த சாபம் நீங்குவதற்காக கிராமத்தினர் இந்த புனித நீராடலில் ஈடுபட்டனர்.
அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் வரிசையாக கைகளை கட்டிக்கொண்டு நின்றவாறு புனித நீராடி 108 முறை நான்கு திசைகள் நோக்கி பூமியை தொட்டு கும்பிட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஊர் மந்தையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய முறைப்படி வரிசையாக தலையில் பொங்கல் கூடை சுமந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மலையாள சாத்தையா அய்யனார் கோவிலை வந்த டைந்தனர். பின்னர் அங்கு அனைவரும் பொங்கல் வைத்தனர்.
பின்னர் ஸ்ரீவில்லியார் சுவாமிக்கு மஞ்சிகள் கட்டிய பசுமாடுகள் காளைகள் ஆங்காங்கே வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்டன. இந்த பங்குனி பொங்கல் விழாவில் கிராம பொதுமக்கள், பரம்பரை அறங்காவலர்கள், அனைத்து கோவில் பூசாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் மத நல்லிணத்தித்திற்கு அடையாளமாக கரிசல்பட்டி இஸ்லாமியர்கள் அய்யனார் கோவிலுக்கு இந்து பாரம்பரிய முறைப்படி தேங்காய், பழம், தலைவாழை இலை சீர் எடுத்து வருகை தந்து பூசாரியிடம் வழங்கினர்.
20 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி பொங்கல் திருவிழா நடந்துள்ளதால் வரும் காலங்களில் தங்கள் கிராமம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் உள்ளனர்.
- அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் சபாநாயகர் அப்பாவு எப்போதும் போல் அவையை வழி நடத்துகிறார்.
- டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாள் அமர்வு தொடங்கியது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெறுகிறது.
அ.தி.மு.க.வின் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் சபாநாயகர் அப்பாவு எப்போதும் போல் அவையை வழி நடத்துகிறார்.
சட்டசபையில் மறைந்த முன்னாள் உறுப்பினர் டி.கருப்புசாமிக்கு இரங்கல் தெரிவித்து குறிப்பு வாசிக்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர்.
டாஸ்மாக் முறைகேடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.
- திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
- சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரெயிலும் கண்டைனர் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் அயோத்தியா - ராய்பரேலி ரெயில்வே கிராஸிங் அருகே இன்று அதிகாலை இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
அதிகாலை 2.30 மணியளவில் அந்த தடத்தில் சரக்கு ரெயிலானது வந்துகொண்டிருந்தது. அப்போது திறந்திருந்த ரெயில்வே கேட் வழியாக கண்டைனர் லாரி கிராசிங்கை கடக்கும்போது அதன் மீது ரெயில் மோதியது.
இதில் படுகாயமடைந்த லாரியின் ஓட்டுநர் சோனு சவுத்ரி (28), மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் கூறினார்.
மேலும் சம்பவத்தின்போது கேட் மேன் அங்கு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் லாரி முற்றிலுமாக சேதமடைந்தது. சரக்கு ரெயிலின் முன் புறமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் ரெயில் பாதை மற்றும் மின்சார கட்டமைப்புகள் சேதமடைந்ததால் அவ்வழியாக ரெயில் இயக்கம் தடைபட்டுள்ளது. ரெயில் பாதையை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் போக்குவரத்து சீரமைக்கப்படும் என்றும் வடக்கு ரெயில்வேவின் லக்னோ பிரிவின் ரயில்வே கோட்ட மேலாளர் சச்சீந்தர் மோகன் சர்மா தெரிவித்தார்.






