தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை 20 கட்சிகள் ஏற்றன

பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பை 20 கட்சிகள் ஏற்றன
Published on

சென்னை:

மத்திய அரசு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருகிறார்.

இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வருகிற 22-ந்தேதி தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்து வந்து உள்ளனர்.

இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

இதையொட்டி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் 22-ந்தேதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

விமான நிலையத்துக்கு அருகே இந்த ஓட்டல் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது வசதியாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழுவினர் 22-ந்தேதி நடைபெறும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com