என் மலர்
நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்"
- ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
- மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகரில் ஆட்டோக்களில் இப்போது யாருமே மீட்டர் போடுவது கிடையாது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால், தோராயமாக ஒரு தொகை கேட்பார்கள். பயணிகள் அப்போது பேரம் பேசுவார்கள். இதில் உத்தேசமாக ஒரு தொகையை கேட்டு அதன் பிறகுதான் பயணம் செய்ய முடியும்.
இதுதான் இன்றைய யதார்த்தம். ஓலா, ஊபர், ராபிட்டோ, ஆட்டோ, கார்களில் அந்த அளவுக்கு பேரம் பேசுவதில்லை. ஒரு சிலர் தான் கூடுதலாக 20 ரூபாய் 50 ரூபாய் கேட்பது இப்போது தொடர் கதையாகி வருகிறது.
இது பற்றி ஆட்டோ சங்க நிர்வாகிகளிடம் கேட்டால் 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்கவில்லை என்கிறார்கள். தவறு எங்கள் மீது கிடையாது. அரசு மீதுதான் என்று கூறுகின்றனர். இப்போது ஆட்டோ சங்கங்கள் ஒன்று சேர்ந்து நாளை 'ஸ்டிரைக்' அறிவித்து உள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவித்து உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது:-
இன்றைய காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டுவது பெரும் சிரமமாக உள்ளது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப அரசு கட்டணத்தை முறைப்படுத்தவில்லை.
2013-ம் ஆண்டுதான் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்ச தூரத்துக்கு ரூ.25-ம், கி.மீ.க்கு ரூ.12 என்றும் உயர்த்தி நிர்ணயித்தது அன்றைய அரசாங்கம். இப்போது விலைவாசி பல மடங்கு ஏறி விட்டது. அன்றைக்கு 1 லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கு கிடைத்தது. இன்று 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டது.
எனவே ஆட்டோ கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 என்று நிர்ணயிக்குமாறு கேட்டு உள்ளோம். குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாய் தாருங்கள் என்கிறோம். அரசு இதில் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.
எனவே ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அண்ணாசாலை, தாராபூர் டவர் சாலை, தாராபூர் டவர் ஆகிய இடங்களில் நாளை காலை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறோம். இதில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓலா, ஊபர் செயலி (ஆப்) நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றன.
- அரசே ஒரு ஆட்டோ செயலி (ஆப்)யை தொடங்க வேண்டும்.
சென்னை:
மெட்ராஸ்-செங்கல்பட்டு ஆட்டோ டிரைவர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் எம்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆட்டோ சங்கங்கள் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கையை கட்டண நிர்ணயக்குழு ஏற்றுக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், அடுத்தடுத்த கிலோ மீட்டருக்கு ரூ.25-ம் நிர்ணயிக்கப்பட்டு பரிந்துரை வழங்கியது. ஆனால், ஓலா, ஊபர் செயலி (ஆப்) நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றன.
இந்த நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி உடனடியாக ஆணையிடவும், அரசே ஒரு ஆட்டோ செயலி (ஆப்)யை தொடங்கவும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை (ஸ்டிரைக்) அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிராவில் இரு சக்கர வாகன டாக்சிைய தடை செய்தது போல தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்.
- உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னை:
ஆட்டோ தொழிலையும், டிரைவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கக் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ஐகோர்ட்டு உத்தரவுபடி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். அரசின் ஆட்டோ செயலியை உடனே தொடங்க வேண்டும், டெல்லி, மகாராஷ்டிராவில் இரு சக்கர வாகன டாக்சிைய தடை செய்தது போல தமிழகத்தில் தடை செய்ய வேண்டும்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9-ந்தேதி காலை 9 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
இந்த போராட்டத்தை சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்கங்கள் நடத்துகின்றன. உண்ணாவிரதத்துக்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார். முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.மகேந்திரன் தொடங்கி வைக்கிறார். மாநில துணைத் தலைவர் வி.குமார் முடித்து வைக்கிறார்.
பைக் டாக்சியை முறைப்படுத்த வேண்டும். சென்னையில் 20 ஆயிரம் பைக் டாக்சிகள் ஓடுகின்றன. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனத்திற்கு வரி எதுவும் செலுத்தாமல் பொது போக்குவரத்து வாகனம் போல ஆட்களை ஏற்றி செல்ல அனுமதிக்கக் கூடாது. ஆட்டோவிற்கு சாலை வரி, எப்.சி. செய்து பணம் செலுத்துகிறோம்.
ஓலா, உபர், ரேபிட்டோ போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளால் பயணிகளின் பணம் கொள்ளை போவதை தடுக்க ஆட்டோ செயலியை தொடங்கிட வேண்டும்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வடசென்னை, மத்தியம், தென்சென்னை மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
- 700-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
சென்னை:
சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், அரசின் ஆட்டோ செயலியை உடனே தொடங்க வேண்டும், இருசக்கர வாகன டாக்சியை தடை செய்ய வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். வடசென்னை, மத்தியம், தென்சென்னை மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். உண்ணா விரதத்தில் மாநில துணை செயலாளர் குமார், ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் சிவாஜி, மாவட்ட செயலாளர்கள் உமாபதி, அனிபா, கபாலி, ஜெயகோபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். 700-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
- ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கேப் போன்ற போக்குவரத்தை பயன்படுத்திய பெண்கள் பஸ்களில் செல்ல தொடங்கி விட்டனர்.
- ஒரு நாளைக்கு ரூ.100 கூட வருமானம் கிடைக்கவில்லை எனவும் குடும்பம் பெரும் கஷ்டத்தில் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து அரசு பஸ்களிலும் பெண்களுக்கான இலவச திட்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தால் அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதற்கு ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆண்களுக்கு தனியாக பஸ்களை இயக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்திற்குப் பின் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கேப் போன்ற போக்குவரத்தை பயன்படுத்திய பெண்கள் பஸ்களில் செல்ல தொடங்கி விட்டனர்.
எனவே, தங்கள் வாழ்வாதாரமே அடிபட்டு போனதாக ஆட்டோ டிரைவர்கள் தொடர்ச்சியாக புகார் அளித்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு வடிவங்களில் எதிர்ப்பையும் போராட்டத்தையும் அவர்கள் காட்டத் தொடங்கினர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு பஸ்களுக்குள் ஏறிய ஆட்டோ டிரைவர்கள் அதில் இருந்த பயணிகளிடம் பாத்திரங்கள் ஏந்தியும் கை நீட்டியும் பிச்சை கேட்டு போராட்டம் செய்தனர்.
ஒரு நாளைக்கு ரூ.100 கூட வருமானம் கிடைக்கவில்லை எனவும் குடும்பம் பெரும் கஷ்டத்தில் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே ஆட்டோ டிரைவர்கள் பஸ்சில் பிச்சை எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.






