என் மலர்tooltip icon

    இந்தியா

    • ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.
    • மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள்

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் யஷ்வந்த் வர்மா. கடந்த 16ம் தேதி ஹோலி பண்டிகையின் போது இவரது வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் அவரது வீட்டுக்கு சென்று தீயை அணைத்தனர்.

    இதையடுத்து தீ பரவிய இடங்களில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது நீதிபதி வீட்டின் அருகே உள்ள ஒரு அறையில் பாதி எரிந்த நிலையில் 500 ருபாய் நோட்டுகள் ரூ.15 கோடி வரை பணம் இருந்ததாக தகவல் வெளியானது. எரிந்து நாசமாவதற்கு முன் ரூ.37 கோடி வரை பணம் இருந்து இருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.

    இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியில் இருந்து தாற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டார்.

    தற்போது விசாரணை நடந்து வரும் நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மாற்ற சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

    தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா ஏற்கெனெவே 2021 வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர் ஆவார்.

    தற்போதும் அவர் மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்கள் என்று பார் குழு தலைவர் அனில் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

    • எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் எனவும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட அட்டவணையில் தெரிவித்துள்ளது.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, மொத்தம் 7,535 காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தேச திட்ட அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் எனவும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1,915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலும், 1,205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட அட்டவணையில் தெரிவித்துள்ளது.

     

    • குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்க ஒப்புதல்.
    • அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து.

    2025-26 நிதியாண்டில் 5,259 கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் போர்டு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அதன் சேர்மேன் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.

    கோவில் சமையலறை (Temple Kitchen) ஊழியர்கள் சம்பளம் உயர்வு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராயவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    அதுபோக கோடங்கல், கரீம்நகர், உபமகா, அனகபலே, குர்னூல், தர்மவரம், தலகோனா, திருப்பதி (கங்கம்மா கோவில்) ஆகிய இடங்களில் உள்ள கோவில்களை புனரமைக்க நிதியுதவி வழங்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பிட்ட விஐபி மற்றும் விஐபி அல்லாத விருந்தினர் மாளிகையை புனரமைக்கவும், அலிபிரியில் அறிவியல் நகரம் மற்றும் மியூசியம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட முடிவு ரத்து செய்யுள்ளது.

    • 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • எம்.பி.க்களின் தினசரி கொடுப்பனவு ரூ.2000 இல் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடருக்கு மத்தியில், மத்திய அரசு எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தியுள்ளது.

    இதனுடன், முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் (ALLOWANCE) மற்றும் ஓய்வூதியச் சட்டம், 1954-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற விவகார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி எம்.பி.க்களின் சம்பளம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எம்.பி.க்களின் தினசரி கொடுப்பனவு ரூ.2000 இல் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும் முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

    • காலம் காலமாக சிறுபான்மையின மக்களுக்கு நட்பாகவும் அரணாகவும் இருந்து திமுக தான்.
    • அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கும் அரசாக திமுக உள்ளது.

    சென்னை திருவான்மியூரில் இஃப்தார் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில், பங்கேற்று நோன்பு திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காலம் காலமாக சிறுபான்மையின மக்களுக்கு நட்பாகவும் அரணாகவும் இருந்து திமுக தான்.

    அரசியல் ரீதியிலான அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கும் அரசாக திமுக உள்ளது.

    பேரறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் இணைக்கும் பாலமாக இருந்தது இஸ்லாமிய சமூகம் தான்.

    மற்ற மாநிலங்களில் வருந்தத்தக்க சூழல் இருந்தாலும் தமிழ்நாட்டில் மதரீதியிலான மோதல் ஏற்படாமல் திமுக அரசு காக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3,324 பல்க் லிட்டர் ஸ்பிரிட், 470 பல்க் லிட்டர் ஒயின் மற்றும் 19,915 பல்க் லிட்டர் பீர் ஆகியவை விற்கப்பட்டதாக தெரிவித்தார்.
    • மதுவிற்பனை செய்ய வெஸ்ட் இந்தியா ரிக்ரியேஷன் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் தி கிராண்ட் மெர்குரி ஆகிய இரு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    1960ல் பம்பாய் மாகாணத்தில் இருந்து பிரிந்து குஜராத் மாநிலம் உருவானத்தில் இருந்து அங்கு மதுபான உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு தடைசெய்யப்பட்டுள்ளது. 

    ஆனால் அங்கு ஆளும் பாஜக அரசு, கடந்த 2023 இல் காந்திநகர் கிஃப்ட் சிட்டியில் (Gandhinagar Gift City) பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விருந்தினர்களுக்கு மதுவிலக்கில் இருந்து விலக்கு அளித்தது.

    இந்நகருக்கு வரும் உலகளாவிய முதலீட்டாளர்கள், அங்கு பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்காக இந்த தளர்வு அளிக்கப்பட்டிருந்ததது. அதன்படி இந்நகரில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் மது விற்பனை நடந்து வருகிறது.

    இந்நிலையில் கிஃப்ட் சிட்டியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு விற்ற மதுபானங்களின் மூலம் குஜராத் அரசு ரூ. 94.19 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த தகவலை இன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

    மதுவிலக்கு மற்றும் கலால் இலாகாவை தன்வசமே வைத்துள்ள பூபேந்திர படேல், மதுபான விற்பனைக்கு வழங்கப்பட்ட உரிமம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ அமித் சாவ்தா சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    பூபேந்திர படேல் பேசியதாவது, ஜனவரி 31, 2025 நிலவரப்படி, கிஃப்ட் சிட்டியில், 3,324 பல்க் லிட்டர் ஸ்பிரிட், 470 பல்க் லிட்டர் ஒயின் மற்றும் 19,915 பல்க் லிட்டர் பீர் ஆகியவை விற்கப்பட்டதாக தெரிவித்தார்.

    இங்கு மதுவிற்பனை செய்ய வெஸ்ட் இந்தியா ரிக்ரியேஷன் ப்ராஜெக்ட்ஸ் மற்றும் தி கிராண்ட் மெர்குரி ஆகிய இரு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் மதுபான விற்பனையிலிருந்து மாநில அரசு ரூ.94.19 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது என்றும் பூபேந்திர பாகல் தெரிவித்தார். பூரண மதுவிலக்கு அமலில் இருந்தும் வணிக நோக்கங்களை கருத்தில் கொண்டு குஜராத் அரசு வழங்கியுள்ள இந்த தளர்வும், அதன்மூலம் வருமானம் ஈட்டி வருவதும் விமரிசனத்துக்குள்ளாகி வருகிறது.

    • அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ, சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா?
    • பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது தானா ?

    தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (கே.வி) தமிழ் கற்பிப்பதற்கு தமிழாசிரியர்களே இல்லை என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் "0". ஆனால், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது ஒன்றிய பாஜக அரசு.

    அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா? அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா?

    கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது.

    இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த சாராய அமைச்சர், சிறையில் ஜாமீன் கிடைப்பதற்காக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடி, ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சர் பதவியேற்றதை, உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, அதற்கு விளக்கம் கொடுக்குமாறும் சாராய அமைச்சருக்கு உத்தரவிட்டிருந்தது.

    ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும், சாராய அமைச்சர் இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை, இன்று உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதே சாராய அமைச்சர் மீது கூறிய குற்றச்சாட்டுக்களை வசதியாக மறந்து, வெட்கமே இல்லாமல் இன்று தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    ஜாமீன் கிடைப்பதற்காகப் பொய் சொல்லி, உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றியுள்ள சாராய அமைச்சர், அமைச்சர் பதவியில் தொடர எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி முன்பகுதி முழுவதும் சிதைந்ததில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
    • சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை மற்றும் பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே டிராக்டர் மீது பளளி வாகனம் மோதிய விபத்தில் எல்கேஜி குழந்தை உள்பட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி முன்பகுதி முழுவதும் சிதைந்ததில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்தில், டிராக்டரில் இருந்த பெண், 8 குழந்தைகள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில், சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை மற்றும் பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது.
    • ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா தெரிவித்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடுத்த நிதியாண்டில் சாதி கணக்கெடுப்பை நடத்தப்படும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.

    ஜார்க்கண்ட் வருவாய், நில சீர்திருத்தங்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தீபக் பிருவா இன்று சட்டமன்றத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

    இன்று பட்ஜெட் கூட்டத்தின்போது சட்டமன்றத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பிரதீப் யாதவ், கடந்த வருடம் பிப்ரவரியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டு ஒரு வருடம் ஒரு மாதம் கடந்துவிட்டது. இதுவரை அதில் என்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன என அரசு விளக்க வேண்டும்.

    தெலுங்கானா மாநிலம் நம்மை விட தாமதமாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்தது, அதன் அறிக்கையும் கடந்த பிப்ரவரியில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் தீபக் பிருவா, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு எங்கள் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பணி மத்திய அரசின் பொறுப்பு. ஆனால் அடுத்த நிதியாண்டில், எங்கள் அரசு சாதி கணக்கெடுப்பு பணியைத் தொடங்கும்.

    இதற்கான பொறுப்பு எந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுவது என்பதை முடிவு செய்வதற்கான செயல்முறை நடந்து வருகிறது.  சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தேவைப்படும் மொத்த ஆட்களின் எண்ணிக்கை, பணியின் அளவுகள் மற்றும் நிதி அம்சத்தை உறுதி செய்வதற்கான பொறுப்பு மாநில பணியாளர் மற்றும் நிர்வாகத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4ஆம் தேதி  ஒரு நிறுவனத்தை பணியமர்த்த இந்த துறை மூலம் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக பிருவா கூறினார்.

    • தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க 24 ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர்.
    • தமிழ் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு TVA அகாடமி மூலம் கற்பிக்கப்படுகிறது.

    பாராளுமன்ற கூட்டத்தில் கேந்திரிய வித்யாலயாவில் தமிழ், இந்தி, சமஸ்கிருத ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.

    கனிமொழி எம்.பி கேட்ட கேள்விக்கு தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க 24 ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

    கூடுதலாக 21 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு TVA அகாடமி மூலம் கற்பிக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 86 இந்தி, 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றுகின்றனர்.

    தமிழ்நாட்டில் 21,725 பள்ளிகளில் ஒரு மொழி மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 35,092 பள்ளிகளில் இரு மொழி, 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிக்கப்படுகிறது என்றார். 

    • மகாத்மா பட்டம் நாட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலானது. அதை இரண்டு பேர் மட்டுமே அனுபவித்தனர்.
    • ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் ஆகியோர் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் கல்வியில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள்.

    சமூக சீர்திருத்தவாதிகளான மகாத்மா ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோருக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அமைச்சர் ஜெயக்குமார் ராவல் தீர்மானத்தை தாக்கல் செய்ய, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. சாகன் புஜ்பா், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய் வடேட்டிவார் ஆகியோர் ஆதரித்து பேசினர்.

    மகாத்மா பட்டம் நாட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் மேலானது. அதை இரண்டு பேர் மட்டுமே அனுபவித்தனர். அவர்கள் மகாத்மா காந்தி மற்றும் மகாத்மா பூலே என அமைச்சர் ஜெயக்குமார் ராவல் தெரிவித்தார்.

    ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் ஆகியோர் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் கல்வியில் முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள்.

    ×