என் மலர்
இந்தியா
- ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
- சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.
பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அம்மாநில உள்துறை அமைச்சர் யோகேஷ் ராம்தாஸ் கதம் இது குறித்து கூறும் போது, "உச்சநீதிமன்றம், இந்திய பிரதமர், இந்து கடவுள்களை அவமதிப்பாய் எனில், நீ தண்டனை அனுபவிக்க வேண்டும். நீ செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மகாராஷ்டிரா அல்லது இந்தியாவில் இதுபோல் நடந்து கொள்ள முடியாது. நாங்கள் நகைச்சுவையை ஏற்றுக் கொள்வோம், ஆனால் இத்தகைய நகைச்சுவை மகாராஷ்டிராவில் ஏற்றுக் கொள்ளப்படாது," என தெரிவித்தார்.
இதேபோல் அமைச்சர் குலாப் ரகுநாத் பாட்டீல் இதுகுறித்து கூறும்போது, "அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், நாங்கள் அவரிடம் எங்கள் மொழியில் பேசுவோம். சிவசேனா அவரை விட்டுவிடாது.. இந்த அவமானத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் வெளியில் வந்து எங்கு மறைந்து கொள்ள முடியும்? சிவசேனா அதன் உண்மை முகத்தை காண்பிக்கும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் கார் காவல் துறை சார்பில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விசாரணை அதிகாரியிடம் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குணால் கம்ரா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- காலை 6 மணி முதல் 7 மணி வரை நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
- நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரை இந்த நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
இந்த சம்பவம் 1 மணி நேரத்தில் நடந்துள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கும்பல் பள்ளிக்கரணையில் இருந்து கிளம்பி அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 1 மணிநேரத்தில் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவாகி உள்ளது போலீசாரின் சிசிடிவி காட்சிகள் ஆய்வில் தெரிய வந்தது.
நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விமான நிலையத்தில் போர்டிங் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு தயாரானபோது அவர்கள் 2 பேரையும் சுற்று வளைத்த போலீசார் கைது செய்தனர்.
கொள்ளையர்கள் ஐதராபாத்திற்கு தப்பி செல்ல முயன்றதும், அவர்கள் உ.பி.யை சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- சோலார் பேனல் குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் பேசினார்.
- சாரி... சாரி.. பழக்க தோஷத்தில் பேசிட்டேன்" என்று கருப்பண்ணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள், விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் "தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல் நிறைய அமைத்து வருகிறார்கள். அதில் EB கொள்திறன் 100 கிலோவால்ட் தான் அனுமதி வழங்குகிறார்கள். வெயில் காலங்களில் 100 கிலோவால்ட் போதுமானதாக இல்லை ஆகவே 120 கிலோவால்ட் அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும். இது மாப்பிள்ளைக்கு (செந்தில் பாலாஜி) தெரியும்" என்று பேசவே அவையில் சிரிப்பலை எழுந்தது.
இதனையடுத்து, சாரி... சாரி.. பழக்க தோஷத்தில் பேசிட்டேன்" என்று கருப்பண்ணன் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும்" என்று தெரிவித்தார்.
- எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது.
- ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் அடிக்கடி ஐ.நா. சபையில் எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஐ.நா. அமைதிகாக்கும் படையின் எதிர்காலம் குறித்த விவாதத்தின் போது பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் பாத்தேமி, ஜம்மு-காஷ்மீர் குறித்து பேசி இருந்தார். இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வ தனேனி ஹரிஷ், பாதுகாப்பு கவுன்சிலில் பேசியதாவது:-
ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். பாகிஸ்தானின் பிரதிநிதி ஜம்மு-காஷ்மீர் என்ற இந்திய யூனியன் பிரதேசம் குறித்து மீண்டும் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து உள்ளார். இது ஆதாரமற்றது.
இதுபோன்ற தொடர்ச்சியான கருத்துக்களால் அவர்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. தற்போதும் உள்ளது. எப்போதும் இருக்கும்.
ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோத மாக ஆக்கிரமித்து உள்ளது. அங்கிருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும். இந்த மன்றத்தின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு நாங்கள் அறிவுறுத்துகி றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டிரோன்கள், காமிராக்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று படப்பிடிப்பு.
- அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு வனப்பகுதியில் தடை செய்யப்பட்ட இடத்திற்குள் துப்பாக்கிகள், டிரோன்கள், காமிராக்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் சென்று படப்பிடிப்பு நடத்திய ஆவண படக்குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய விவரம் வரு மாறு:-
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அரணாமலை அருகே உள்ள மாப்பிளா தாளமுடி வன மண்ட லத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் உரிய அனுமதி பெறாமல் அத்துமீறி சென்று படப்பிடிப்பு நடத்துவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் அதிகாரிகள் வினோத், ரிஜேஷ் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது தடை செய்யப பட்ட வனப்பகுதிக்குள் ஆவணப்பட குழுவினர் போலி துப்பாக்கிகள், புகை துப்பாக்கிகள், டிரோன்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தினர். இதையடுத்து படப்படிடிப்பு நடத்தியவர்களை வனத்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவர்களிடமிருந்து படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காமிராக்கள், டிரோன்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், ஆவணப் படங்கள் எடுக்கும் குழுவினர் என்றும், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
ஆவணப்படம் எடுப்பதற்காக கேரளா வந்த அவர்கள், இங்குள்ளவர்கள் சிலரின் உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்று படப்பிடிப்பு நடத்தி இருக்கின்றனர். அவர்கள் சென்ற பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் படப்பிடிப்பை நிறுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிந்து ஆவண பட குழுவினரான ஐதராபாத்தை சேர்ந்த ஹரிநாத், சைதன்ய சாய், ரமேஷ்பாபு, ரேவந்த் குமார், கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஹரி, அபிராஜ், பவன் பி. நாயர், பிரவீன் ராய், மற்றொரு ஸ்ரீஹரி, சருண் கிருஷ்ணா, அதுல், முகமது அப்துல் மஜீத், சஞ்சல் பிரசாத் உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஹரிநாத் என்பவர் தான் ஆவண படத்தின் இயக்குனராக செயல்பட்டுள்ளார். கைதானவர்களின் மீது தடை செய்யப்பட்ட வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து படப்பிடிப்பு நடத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.
- மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர்.
- மாணவர் பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.
கோவை:
கோவை அருகே தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரும் படித்து வந்தார்.
இந்த நிலையில் கல்லூரி விடுதியில் அடிக்கடி பணம் திருடுபோனது. எம்.எஸ்.சி. படிக்கும் சென்னை மாணவர் தான் இதில் ஈடுபட்டதாக நினைத்த, முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேர் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, மாணவரை தாக்கிய 13 மாணவர்களையும் இடைநீக்கம் செய்தது. அத்துடன் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் க.க.சாவடி போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர். இதில் 5 பேர் மைனர் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், ஒருவர் கோவை மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட எம்.எஸ்.சி மாணவரை அவரது பெற்றோர் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
மாணவர் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து அந்த மாணவருக்கு கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்துள்ளனர். கவுன்சிலிங் அளித்து அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
- வடமாநிலங்ககளில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை
- வடஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா?
இந்தியை தவிர வேறுமொழி தெரியாதவர்கள், எங்களை 3 மொழிகள் கற்றுக் கொள்ள சொல்கிறார்கள் என்று திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய கலாநிதி வீராசாமி, "நாடு முழுவதும் உள்ள வறுமையின் நிலையை நீங்கள் கணக்கிட்டு பார்த்தால் தென்னிந்திய மாநிலங்களின் வறுமை குறியீடு 0.5 முதல் 2% வரை தான் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் பல ஆண்டுகால முயற்சியினால் வறுமை ஒழிக்கப்ட்டுள்ளது.
வட இந்திய மாநிலங்களில் குறிப்பாக பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வறுமை குறியீடு 9 -10% ஆகவும் பீகாரில் 20% ஆகவும் உத்தரபிரதேசத்தில் 15 -20% ஆகவும் உள்ளது.
தமிழ்நாட்டின் கடந்த 50 ஆண்டுகளை எடுத்து பாருங்கள். 1967 பேரறிஞர் அண்ணா ஆட்சியில் இருந்து ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியும் எல்லோருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டின்படி தான் செயல்பட்டு வருகிறது.
நாங்கள் வறுமை என்று பேசுவது நீங்கள் சொல்வது போல வருடத்திற்கு ரூ.27,000 சம்பாதிப்பவர்கள் பற்றி அல்ல. வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மாதா மாதம் ரூ.1,000 வழங்குகிறோம்.
அரசுப்பள்ளியில் இருந்து கல்லூரிக்கு படிக்க செல்லும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்குகிறோம். இதனால் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்பவர்களின் விகிதம் (GER) 25%. ஆனால் தமிழ்நாட்டில் தற்போதைய GER விகிதம் 52%.
10 ஆண்டுகளில் ரூ. 8 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது தமிழ்நாடு, ஆனால் எங்களுக்கு திரும்ப கிடைத்தது ரூ. 2.4 லட்சம் கோடிதான்.
தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் போது கூட மத்திய அரசு பேரிடர் நிதி வழங்குவதில்லை.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் ரூ.2,157 கோடி கல்வி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு மிரட்டுகிறது.
எங்களுக்கு அந்த ரூ.2,157 கோடி வேண்டாம் என்றும் ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தால் கூட மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எங்களது முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் 3 மொழி கொள்கையை அமல்படுத்தியதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படி இருக்க வடமாநிலங்ககளில் இருந்து வரும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை. வடஇந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இந்தியை தவிர வேறு ஏதேனும் மொழி பேச தெரியுமா?
அவர்கள் 3 மொழியை கற்பதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தியை தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. ஆனால் தென்னிந்திய மக்கள் 3 மொழிகளை கற்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
இருமொழி கொள்கை தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளது. சுதந்திரம் அடையும்போது இந்தியாவின் ஏழ்மையான 3 ஆவது மாநிலத்தில் இருந்து தற்போது 2 ஆவது பணக்கார மாநிலமாக உயர்ந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
- சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
- டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர்.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர்.
இருப்பினும், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் பயணம் கூட்டணி குறித்தாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
- பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார்.
- கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோத்தக்கோட்டையில் அரசு பஸ் உரிய இடத்தில் நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார்.
பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார். மாணவி அதில் ஏறிய வீடியோ வைரலானது.
கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி பஸ் பின்னாலேயே ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பஸ் ஓட்டுநர் - நடத்துநரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
- மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
- ஆறு பேர் கொண்ட குழு நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ராமேசுவரம்:
தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே பாக் ஜலசந்தியில் மீன்பிடித்ததல் தொடர்பாக வெகுநாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
கடந்த 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையே ஏற்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் காரணமாக, அப்பகுதி இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போதிலிருந்து ராமேசுவரம் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை வைத்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் கைது செய்து வந்த இலங்கை அரசு இதன் மூலம் தமிழக மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் பல அரசியல் வாதிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் வந்துள்ளனர். ஆனால் சில ஆண்டுகளாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்காமலே சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே ராமேசுவரம் மீனவர்கள் முயற்சியால் ராமேசுவரத்திலிருந்து விசைப்படகு தலைவர் ஜேசு ராஜா, சகாயம், ஆல்வின், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழு இன்று (செவ்வாய் கிழமை) விமானம் மூலம் புறப்பட்டு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சென்றடைகின்றனர்.
ஏற்கனவே நாகப்பட்டினம் சேர்ந்த சுரேஷ் என்பவர் இலங்கையில் இருப்பதால் அவருடன் சேர்ந்து ஆறு பேர் கொண்ட குழு நாளை புதன்கிழமை அன்று வாவுலியாவில் உள்ள அருந்ததி தனியார் தங்கும் விடுதியில் இருநாட்டு மீனவர்களும் சந்தித்து காலை 10 மணி அளவில் சந்தித்து மீனவர்களின் பிரச்சனைகளை ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதைத்தொடர்ந்து இலங்கையில் உள்ள மீன்வளத்துறை அமைச்சர்களையும் மற்றும் அதற்குரிய அதிகாரிகளையும் சந்தித்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்று விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் கூறுகின்றனர்.
- பதநீர், கள் விற்பனையை அனுமதிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- 100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தால் 6 லிட்டர் கழிவு நீர் போக, 94 லிட்டர் நல்ல நீர் கிடைக்கும்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள், விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது, கள் மீதான தடையை நீக்கி கள், பதநீரை அரசே கொள்முதல் செய்து ஆவின் போல விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அமைச்சர் பொன்முடி, கள் தடை நீங்குமா? என்ற கேள்விக்கு, கள்ளில் சிலவற்றை கலந்தால் அது போதைப்பொருளாக மாறிடும். அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது, பதநீரை கள் ஆக்குவது சரி, போதைப்பொருள் ஆக்குவதால் தான் சிக்கல். பனை பொருள் இணையதளம், கைபேசி வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.
பதநீர், கள் விற்பனையை அனுமதிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனிடையே, அமைச்சர் கே.என்.நேரு, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கழிவு நீரில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படும் நீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள். ஆனால் நம் மக்கள் அது வேண்டவே வேண்டாம் என்கிறார்கள்.
100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தால் 6 லிட்டர் கழிவு நீர் போக, 94 லிட்டர் நல்ல நீர் கிடைக்கும். சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயம் அல்லது ஆற்றில் விடலாமா என்பது குறித்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் முடிவு செய்யப்படுகிறது என்று கூறினார்.
- சம்பவத்தன்று இவர் வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
- 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரத்துக்கு உட்பட்ட ஆர். பாலக்குறிச்சியில் வைரவன்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எம். அந்தோணி பணியாற்றி வந்தார்.
10-க்கு உட்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட இந்த பள்ளியில் அந்தோணி ஒற்றை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இவர் வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தனர்.
தொடர் புகாரின் காரணமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சண்முகம், பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராம திலகத்திடம் முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் நடைபெற்ற விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி அந்தோணியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அருகாமையில் உள்ள இன்னொரு பள்ளி ஆசிரியரை பணியமர்த்தி உள்ளனர். இது தொடர்பாக பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினர் இந்திரா கூறும் போது, தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். ஆனால் அந்தோணியின் நடத்தையால் தற்போது 7 குழந்தைகள் மட்டுமே கல்வி பயின்று வருகிறார்கள். ஆகவே தலைமை ஆசிரியர் பிரச்சனையை கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






