என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி விடுதியில் தாக்கப்பட்ட சென்னை மாணவர் - கைதான சக மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு
- மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர்.
- மாணவர் பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.
கோவை:
கோவை அருகே தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவரும் படித்து வந்தார்.
இந்த நிலையில் கல்லூரி விடுதியில் அடிக்கடி பணம் திருடுபோனது. எம்.எஸ்.சி. படிக்கும் சென்னை மாணவர் தான் இதில் ஈடுபட்டதாக நினைத்த, முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேர் அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, மாணவரை தாக்கிய 13 மாணவர்களையும் இடைநீக்கம் செய்தது. அத்துடன் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் க.க.சாவடி போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் மாணவரை தாக்கியவர்களில் 6 பேரை கைது செய்தனர். இதில் 5 பேர் மைனர் என்பதால் அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், ஒருவர் கோவை மத்திய ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்ட எம்.எஸ்.சி மாணவரை அவரது பெற்றோர் சென்னைக்கு அழைத்து சென்றனர்.
மாணவர் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து அந்த மாணவருக்கு கவுன்சிலிங் அளிக்க முடிவு செய்துள்ளனர். கவுன்சிலிங் அளித்து அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.






