என் மலர்
இந்தியா
- மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்றுக்கொண்டு இருந்தவர் மோனாலிசா.
- மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது.
மும்பை:
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்றுக்கொண்டு இருந்தவர் மோனாலிசா. தனது காந்த விழி கண்களால் சமூக வலைதளங்கள் வாயிலாக ஒரே நாளில் இந்திய அளவில் மோனாலிசா பிரபலம் அடைந்தார். அவருடன் செல்பி எடுப்பதற்கு ஏராளமானோர் திரண்டதால் வேறு வழியின்றி கும்பமேளாவை விட்டு சொந்த வீட்டிற்கு திரும்பினார்.
இந்நிலையில் மோனாலிசாவுக்கு சினிமா வாய்ப்பு வீடு தேடி வந்தது. இந்தி திரை உலகில் பிரபல இயக்குநரான சனோஜ் மிஸ்ரா இயக்க இருக்கும் புதிய படமான 'தி டைரி ஆப் மணிப்பூர்' என்ற படத்தில் நடிப்பதற்கு மோனாலிசாவுக்கு வாய்ப்பு வழங்கினார்.
இதை அடுத்து மோனாலிசா மும்பைக்கு வரவழைக்கப்பட்டு அவரது தோற்றத்தை மாற்றியதுடன் சினிமா நடிப்புக்கென பயிற்சிகளும் வழங்கப்பட்டது. காந்த கண்ணழகி என வர்ணிக்கப்பட்ட மோனாலிசா சினிமா மட்டுமின்றி, நகைக்கடை திறப்பு விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்றார்.
கேரளாவில் நடந்த பிரபல நகைக்கடை திறப்பு விழாவுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய மோனாலிசாவை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.
இந்நிலையில் மோனாலிசாவை நடிகையாக அறிமுகப்படுத்திய சனோஜ் மிஸ்ரா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதனால் அந்த பெண் 3 முறை கருக்கலைப்பு செய்து உள்ளார். இந்நிலையில் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவுடன் சுற்றிக்கொண்டு இருந்ததால் அந்த பெண் சனோஜ் மிஸ்ரா மீது புகார் கொடுத்தார். அவரது புகாரின் பேரில் சனோஜ் மிஸ்ரா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதை அடுத்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பி உள்ளார் மோனாலிசா. அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தி வருகின்றனர்.
கைதான சனோஜ் மிஸ்ரா வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் போலீசார் மோனாலிசாவிடம் சனோஜ் மிஸ்ரா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாரா? என விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
- இந்த நாடகம் எல்லாம் அவர்களின் சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே.
- ஏமாற்றவும் பிரிக்கவும் மட்டுமே தி.மு.க.வுக்குத் தெரியும்.
சென்னை:
வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்ற அறிவிப்புக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பதும், வக்ஃப் மசோதாவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கப் போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதும் உட்பட இன்று சட்டமன்றத்தில் தி.மு.க.வின் துரதிர்ஷ்டம் மிகவும் கணிக்கத்தக்கதாகிவிட்டது! இந்த நாடகம் எல்லாம் அவர்களின் சிறுபான்மை வாக்கு வங்கியின் ஒரு பகுதியை காப்பாற்றுவதற்காகவே.
முந்தைய வக்பு சட்டத்தால் இந்துக்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களும் கூட பாதிக்கப்பட்டார்கள் என்பதை தமிழக முதல்வர் உணரவில்லையா? தயவுசெய்து உங்கள் நாடகத்திற்காக சட்டமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
அவர்களின் நாடகத்தின் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு "2025 வக்பு மசோதாவை எதிர்க்க அப்பாவின் முயற்சிகள்" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுத தி.மு.க. ஒருவரை நியமிக்கும். தி.மு.க இதை ஒரு தேர்தல் பிரசாரமாக முன்னெடுத்து, 2026 சட்டமன்ற மற்றும் 2029 பாராளுமன்றத் தேர்தல்களில் அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழிநடத்தும்.
ஏமாற்றவும் பிரிவினைப்படுத்தவும் மட்டுமே தி.மு.க.வுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
- 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்ட முடிவு.
- பார்க்கிங் வசதி பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருப்பதி மலையில் 55 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகள் மட்டுமே உள்ளன.
தினமும் தரிசனத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் அவர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து அமராவதியில் நேற்று முதல் மந்திரி சந்திரபாபு தலைமையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ், இணை செயல் அலுவலர் வெங்கைய்ய சவுத்ரி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி மலையில் பக்தர்களின் நெரிசல் குறித்தும், தங்கும் இட வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் அலிபிரியில் 3 தனியார் ஓட்டல்கள் கட்ட 35 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
தனியார் ஓட்டல் கட்ட ஒதுக்கப்பட்ட நிலங்களை சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை அலிபிரியில் நிறுத்திவிட்டு மின்சார பஸ்களில் செல்வதால் காற்று மாசு ஏற்படுவது குறையும். பார்க்கிங் வசதி பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
மேலும் அலிபிரியில் ஆன்மீக சூழ்நிலை, தூய்மையை உறுதி செய்வ தற்கான ஏற்பாடுகளை செய்ய தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதியில் நேற்று 72,721 பேர் தரிசனம் செய்தனர். 25,545 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
- மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர்.
பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.
சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், சட்டசபை வளாகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர்.
* இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே!
* ஒன்றிய அரசே சிறுபான்மையினரை வஞ்சிக்காதே!
* இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிராகரிக்காதே!
என்று வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
- மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி.சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சி.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பத்தின் பிடியில் சிக்கித்தவித்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக ஆண்டிபட்டி, அரண்மனைப்புதூர், தேனி, வைகை அணை, பெரியகுளம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில நாட்களாக வறண்டு கிடந்த நீர் நிலைகளுக்கும், குளங்களுக்கும் தண்ணீர் செல்லும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்த நிலையில் தற்போது 68 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 72 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2949 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1392 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 85.48 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 26.56 அடியாகவும், சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 30.87 அடியாகவும் உள்ளது.
ஆண்டிபட்டி 30.8, அரண்மனைபுதூர் 23, வீரபாண்டி 8.4, பெரியகுளம் 9.2, சோத்துப்பாறை 12, வைகை அணை 27.2, போடி 7.2, கூடலூர் 1.6, தேக்கடி 3.6, சண்முகாநதி 2.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கொடைக்கானலில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் தருமத்துப்பட்டி, கன்னிவாடி ஆகிய இடங்களில் மின் தடை ஏற்பட்டது. வட்டப்பாறை, கோனூர், கசவனம்பட்டி ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை பெய்த போது மின்தடை நிலவியதால் தேர்வுக்கு படித்து வந்த மாணவர்கள் அவதியடைந்தனர்.
திண்டுக்கல், சிறுமலை உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.
- கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை எடுப்பது அவருக்கு செய்யப்படும் பெரும் சிறப்பு ஆகும்.
- இந்தக் கடமையை 18 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொதுவுடைமை புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஜெர்மனியில் பிறந்து உலகம் முழுவதும் வாழும் பாட்டாளிகளின் தோழராக உருவெடுத்த கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை எடுப்பது அவருக்கு செய்யப்படும் பெரும் சிறப்பு ஆகும்.
இந்தக் கடமையை 18 ஆண்டுகளுக்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி செய்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவரான கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு தைலாபுரத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனது முன்னிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.இராசா அவர்கள் திறந்து வைத்தார்.
இவ்வார் அவர் கூறியுள்ளார்
- அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1100 கனஅடியாக குறைந்து வந்தது.
நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மணிப்பூர் தீர்மானம் நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார்
- இத்தீர்மானம் தாக்கலாகி 40 நிமிடங்களுக்குள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து நள்ளிரவு 2.30 மணிக்கு மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கான தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
இத்தீர்மானம் தாக்கலாகி 40 நிமிடங்களுக்குள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மணிப்பூர் விவகாரம் விரிவாக விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த தீர்மானம் நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- விசாரணையில் ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
- சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது.
அங்கு சுவிகியா என்பவர் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. அதில் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலை உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதில் அரசு அதிகாரிகளிடம் ஒரு புதிய திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கிறேன். நமது அலுவலக வங்கி கணக்கில் உள்ள தொகையை மற்றொரு வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனை உண்மை என்று நம்பிய சுவிகியா ரூ.5 கோடியே 10 லட்சத்தை அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் இது தொடர்பாக தனது உரிமையாளரிடம் பேசினார். அப்போது மர்ம ஆசாமிகள் உரிமையாளர் பெயரில் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் ரூ.5 கோடியே 10 லட்சம் தொகையில், ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.
பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 2 கோடி பணத்தை போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் மேலும் 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் வெளிநாட்டை சேர்ந்த கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இதுபோன்று பலரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட மொபிகுல் ஆலம் முலாவை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
- வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேக மூட்டமாக காட்சி அளித்தது.
- காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் ஆத்தூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேக மூட்டமாக காட்சி அளித்தது. அதனை தொடர்ந்து நேற்றிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
குறிப்பாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய சாரல் மழை இன்று காலையும் தொடர்ந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை சூறைக்காற்றுடன் கனமழையாக கொட்டியது.
இந்த சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏற்காடு மலையில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் ஏற்காடு மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவிற்கு மேல் சாலையின் ஓரம் இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.
இதே போல சேலம் மாவட்ட கிழக்கு பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை மழை பெய்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் ஆத்தூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் மேக மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- எதிர்க்கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வருவார்கள்.
- ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது என்பது தேவையற்றது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகின்றனர்.
* இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதா என்பது போன்ற நிலையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
* மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் என்பது போல மாயை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.
* பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியில் ஒரு இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் எதிர்ப்பு, குறை ஏற்பட்டால் சொல்லலாம். ஆனால் மாநில அரசு மத்திய அரசை இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பு அரசாங்கம் என்பது மாயை போல உருவாக்கி வாக்கு வங்கி அரசியலை தேடிக்கொண்டிருக்கிறது என்பது வருத்தத்திற்குரியது. வேதனைக்குரியது.
* குறிப்பாக சட்டமன்றத்தில் கோஷம் போட்டது இதுதான் முதல்முறை என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சியினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வருவார்கள். ஆனால் ஆளுங்கட்சியினரே கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது என்பது தேவையற்றது.
* முதலமைச்சர் தான் எல்லாருக்கும் நீதி வழங்கணும். முதலமைச்சரே நீதிமன்றத்திற்கு போனால் நாம் என்ன செய்வது? என்றார்.
- அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
- காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. 4 பக்கமும் மலைகள் சூழ்ந்துள்ள இந்த கோவில் பகுதி அடர்ந்த வனப்பகுதியை கொண்டது.
சித்தர்கள் வாழும் பூமியாக அறியப்படும் இந்த மலையில் உள்ள சிவனை வழிபட்டால் நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்து வருவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. இதனால் விசேஷ நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பக்தர்கள் சென்று வந்தனர்.
இந்த நிலையில் மலையில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோரை வனத்துறையினர் பல்வேறு மீட்டனர்.
இதை தொடர்ந்து சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது வரை இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக சதுரகிரி கோவில் பிரபலமடைய தொடங்கியது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். ஒவ்வொரு முறையும் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை, சிவராத்திரி போன்ற விழாக்களின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பக்தர்களை தினமும் தரிசனம்செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தர விட்டதோடு சில வழிகாட்டு தல்களையும் வழங்கினர்.
மதுரை ஐகோர்ட்டு உத்தரவை நடை முறைப்படுத்துவது குறித்து விருதுநகர் மாவட்ட அதிகாரிகள், வனத்துறை யினர் தீவிர ஆலோசனை நடத்தினர். இறுதியில் இன்று (3-ந் தேதி) முதல் நாள்தோறும் பக்தர்களை சதுரகிரிக்கு அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் கூறுகையில், மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சதுரகிரிக்கு தினமும் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே சோதனை சாவடி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படு வார்கள். மாலை 4 மணிக்குள் லையில் இறங்கி திரும்பி வந்துவிட வேண்டும்.
உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கி இருந்தால் கடுமு நடவடிக்கை எடுக்கப்படும். சதுரகிரிக்கு அனு மதிக்கப்பட்ட வழியில் மட்டுமே செல்ல வேண்டும். வேறு எந்த பகுதியிலும் நுழையக்கூடாது. மதுரை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றி பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இதற்கிடையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்பட்டி இன்று முதல் சதுரகிரிக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட னர். காலை 6 மணிக்கு தாணிப்பாறை அடிவார கேட் திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் யாரும் வரவில்லை.
நேற்று இரவு உத்தரவு வந்ததால் பொது மக்களுக்கு உடனடியாக விபரம் தெரியவில்லை. இதனால் இன்று பக்தர்கள் யாரும் சதுரகிரிக்கு வரவில்லை. இனிவரும் நாட்களில் பக்தர்கள் நாள்தோறும் வர ஆர்வம் காட்டுவார்கள் என தெரிகிறது.






