என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஏற்காட்டில் சூறைக்காற்றுடன் கனமழை- சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

    • வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேக மூட்டமாக காட்சி அளித்தது.
    • காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் ஆத்தூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இந்தநிலையில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மேக மூட்டமாக காட்சி அளித்தது. அதனை தொடர்ந்து நேற்றிரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு தொடங்கிய சாரல் மழை இன்று காலையும் தொடர்ந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை சூறைக்காற்றுடன் கனமழையாக கொட்டியது.

    இந்த சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஏற்காடு மலையில் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் ஏற்காடு மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவிற்கு மேல் சாலையின் ஓரம் இருந்த ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

    இதனால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

    இதே போல சேலம் மாவட்ட கிழக்கு பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை மழை பெய்தது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காலை நேரத்தில் திடீரென மழை பெய்ததால் ஆத்தூர் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

    சேலம் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் மேக மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷண நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×