என் மலர்tooltip icon

    இந்தியா

    • செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வோடு விளையாடும் கொடுஞ்செயலாகும்.
    • அனைவரையும் உடனடியாக கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களை, கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய கடந்த 4 ஆண்டுகளாக தி.மு.க. அரசு மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

    தமிழ்நாடு முழுவதும் தற்போது காலியாக உள்ள 2500 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது கிராமப்புற பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வோடு விளையாடும் கொடுஞ்செயலாகும்.

    ஆகவே, தமிழ்நாடு அரசு தம்முடைய பிடிவாதத்தை இனியேனும் கைவிட்டு, செவிலியர் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எவ்வித நிபந்தனையுமின்றி அவர்கள் அனைவரையும் உடனடியாக கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இறுதிக்கட்ட விசாரணை வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறும்.
    • வழக்கை வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற கோரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், இந்த சோதனையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை முதலில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்து, மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வாய்மொழியாக அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக 2 நீதிபதிகளும் கூறினர். இதனால், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தபோது, மூத்த வக்கீல் கே.எம்.விஜயன் ஆஜராகி, டாஸ்மாக் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வக்கீலாக கே.ராஜா உள்ளார். இவர் நீதிபதி கே.ராஜசேகரின் இளைய சகோதரர் என்பதால், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றலாம்' என்றார்.

    ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    இந்த நிலையில், ஐகோர்ட்டு தலைமை நீதி பதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு இன்று காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல் ஆஜராகி, ''டாஸ்மாக் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வக்கீலாக, நீதிபதி கே.ராஜசேகரின் தம்பி உள்ளதால், இந்த வழக்கை வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்க மறுத்த நீதி பதிகள், 'இதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் முறையிடலாம்' என்று கூறினர்.

    • சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரளா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.

    மேலும், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தென்தமிழகத்தின் அநேக இடங்களில், வடதமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

    நாளை கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    5-ந்தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    • கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
    • புவிசார் குறியீடு அங்கீகாரத்தில் இந்திய அளவில் 69 பொருட்களுடன் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.

    ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

    சமீபத்தில் கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம் மற்றும் ராமநாதபுரம் சித்துறைகார் அரிசி ஆகிய பொருட்களுக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

    தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

    புவிசார் குறியீடு அங்கீகாரத்தில் இந்திய அளவில் உத்தரப்பிரதேசம் 79 பொருட்களுடன் முதல் இடத்திலும், 69 பொருட்களுடன் தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளது.

    • நியமனத்தில் குறைபாடு, களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
    • மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறை கேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன.

    இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பு அளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது.

    மேற்கு வங்காள அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற் படுத்திய இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட்டு நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பீல் வழக்கில் இன்று தீர்ப்பளித்தது.

    கொல்கத்தா ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

    நியமனங்கள் ரத்து செய்யப்பட்டவர்கள் தங்கள் சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை திருப்பி தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தனர். அதே நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளித்து அவர்கள் பணியில் நீடிப்பார்கள் என்றும் கூறினர்.

    புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகும்.

    • கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • போலீசார் எடியூரப்பாவிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    பெங்களூரு:

    பால் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து கர்நாடக பா.ஜ.க. சார்பில் பகல்-இரவு தர்ணா போராட்டம் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று காலை தொடங்கியது. கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் தொடங்கிய இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீடித்த இந்த போராட்டத்தில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா கலந்து கொண்டார். பின்னர் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் எடியூரப்பாவிடம் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து எடியூரப்பா உள்பட கட்சி நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.



    • விகாஸ் நம்பியாரின் வீட்டில் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட நாயை காணவில்லை.
    • விகாஸ் நம்பியாரின் வீட்டில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளும் வனத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை, புலி, காட்டுயானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. இதனால் மலையோர கிராம மக்கள் அச்சத்துடனே வாழக்கூடிய நிலை நிலவுகிறது.

    இந்தநிலையில் காசர்கோட்டில் ஊருக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காசர்கோடு கல்லடசீட்டா பகுதியை சேர்ந்தவர் விகாஸ் நம்பியார். இவர் தனது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார்.

    இதனால் கல்லடசீட்டாவில் உள்ள அவரது வீட்டை கிரிஷ் என்பவர் பராமரித்து வருகிறார். இந்தநிலையில் விகாஸ் நம்பியாரின் வீட்டில் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட நாயை காணவில்லை. அதனை கிரிஷ் தேடியபோது சற்று தொலைவில் எஸ்டேட் பகுதியில் நாயின் ஒரு கால் பகுதி துண்டாக கிடந்தது.

    ஏதே விலங்கு கொன்றிருப்பதை யூகித்த அவர், அதுபற்றி டெல்லியில் உள்ள விகாஸ் நம்பியாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த வீடியோவை டெல்லியில் இருந்தவாரே பார்த்தார்.

    அப்போது ஒரு நாள் இரவில் சிறுத்தை ஒன்று நாய் இருந்த பகுதியில் நடந்து சென்றதும், அதற்கு மறுநாள் வீட்டின் மாடியில் சிறுத்தை நடமாடியபடி நின்றதும், மாடியில் இருந்து கீழே இருக்கும் நீச்சல் குளத்தை பார்த்துக்கொண்டு சிறுத்தை நின்றதும் பதிவாகியிருந்தது. இதனால் ஒரு சிறுத்தை தொடர்ந்து அந்த பகுதியில் நடமாடி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் விகாஸ் நம்பியாரின் வீட்டில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளும் வனத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனடிப்படையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    • வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
    • விசாரணையை வருகிற ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளின் விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில், பா.ஜ.க.வை சேர்ந்த வக்கீல் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், ''அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், ஆளும் கட்சியின் நிர்வாகி ஆவார். அவருக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    தி.மு.க. நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழ்நாடு போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கோ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ மாற்ற உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரனுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விரிவான விவரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன.
    • 'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    மலைகளின் அரசியான ஊட்டிக்கு சாதாரண நாட்களை விட விடுமுறை தினங்களில் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். அதுவும் கோடை விடுமுறை சீசனில் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், நீலகிரிக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது.

    கோடை சீசன் தொடங்க உள்ளதால், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரநாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டது.

    இந்த கட்டுப்பாடு ஏப்.1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு மற்றும் கோத்தகிரி வழியாக ஊட்டி செல்லும் வாகனங்களை இ-பாஸ் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என கல்லாறு, குஞ்சப்பனை சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை செய்தனர்.

    இ-பாஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டதால் மலைப்பாதையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. இ-பாஸ் பதிவு செய்யாமல் வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களை, ஊட்டிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    'இ-பாஸ்' முறையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட இ-பாஸ் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், தற்போதைய வாகன கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த மறு ஆய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தன மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் என கார்கே சவால்
    • காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன

    மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.

    இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே குடும்பத்தினர், வக்பு சொத்துகளை ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அனுராக் தாகூர் குற்றசாட்டு குறித்து மாநிலங்களவையில் பேசிய கார்கே, "தன் மீது அப்பட்டமான குற்றச்சாட்டை பாஜக முன்வைத்துள்ளது.அனுராக் தாக்கூரின் பேச்சு தன்னை கடுமையாக பாதித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் ராஜினாமா செய்யத் தயார். நிரூபிக்காவிட்டால் அனுராக் ராஜினாமா செய்வாரா?

    கார்கே மீதான குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

    • கோவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
    • சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி காசி விஸ்வநாதர்-உலகம்மன் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றது. கோவில் ராஜகோபுரம் வர்ணம் தீட்டப்பட்டு, மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

    7-ந் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று தொடங்கியது. அதிகாலை 5 மணி அளவில் உலகம்மன் சன்னதி மண்டபத்தில் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியம் முழங்க நடை பெற்றது.

    நிகழ்ச்சியில சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆதினங்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பால கிருஷ்ணன் பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இன்று அதிகாலையில் தொடங்கிய யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

    • 83 அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்ட திருவண்ணாமலை கலெக்டரை பாராட்டுகிறோம்.

    திண்டிவனம்:

    திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்பது குறித்து பேசவேண்டும். கடந்த 3 மாதத்தில் 147 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 19 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்னகவே 20 மீனவர்கள் இலங்கை சிறையில் கடும் துன்பம் அனுபவித்து வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது.

    இந்திய பிரதமர் இலங்கை சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசும்போது மீனவர்கள் முறைவைத்து மீன்பிடிப்பது, கச்சத்தீவை மீட்பது குறித்து இலங்கை அதிபரிடம் வலியுறுத்தி ராமேஸ்வரம் வரும்போது நல்ல செய்தியை பிரதமர் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்டமாக 1118.9 கிலோ மீட்டர் பாதை அமைக்க டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கியது சமூகநீதிக்கு பாதிப்பை உள்ளாக்கும்.

    இந்தியா முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பல்கலை கழகங்களில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 83 அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழக சித்த நூல்களை ஆயுர்வேத நூலாக ஆயுஷ் மாற்றியுள்ளது. இதன் மூலம் சித்த மருத்துவத்தை கண்டுபிடித்தவர்கள் வட இந்தியர்கள் என சொல்லும் வாய்ப்புள்ளது.

    எனவே மே 7-ந் தேதிக்குள் தமிழக அரசு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும். "எம்புரான்" மலையாளப் படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

    இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் தமிழகத்தில் திரையிட தடைவிதிக்க வேண்டும். தமிழகத்தில் தொடர் என்கவுண்டர் சம்பவங்களால் குற்றங்கள் பெருகி வருகிறது என்பது தெரிகிறது.

    வக்பு வாரிய திருத்த சட்டத்தை பா.ம.க. ஆதரிக்கவில்லை. அதனால்தான் தமிழக அரசின் தீர்மானத்தை பா.ம.க. உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர். தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என உத்தரவிட்ட திருவண்ணாமலை கலெக்டரை பாராட்டுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×