என் மலர்tooltip icon

    இந்தியா

    • எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
    • பட்டினப்பாக்கத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இதற்கிடையே மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஏப்.4-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்து இருந்தது.

    அதன்படி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று த.வெ.க. போராட்டம் நடத்த உள்ளது.

    இந்நிலையில் த.வெ.க. போராட்டத்தை முன்னிட்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பட்டினப்பாக்கத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்காக மேடை போட த.வெ.க.வினர் அனுமதி கேட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    • 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் வேலைகளில் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று, பகலில் மீண்டும் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து, மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யத் தொடங்கி கனமழையாக மாறியது.

    இதனால் தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.

    தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் உற்பத்தியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

    அத்திமரப்பட்டி, காலங்கரை, கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நெல் அறுவடை பணியும் பாதிப்படைந்துள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கிடங்குகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    குறிப்பாக திருச்செந்தூர் சாலையில் வடிகால் இல்லாததால் முழு தண்ணீரும் சாலையில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கீழே இறங்கி வாகனத்தை உருட்டி சென்று அவதி அடைந்தனர்.

    இதுபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளான திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் , கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டி னத்தில் 96 மில்லிமீட்டர், தூத்துக்குடி 16.20 மி.மீ, திருச்செந்தூர் 55 மி.மீ, குலசேகரப்பட்டினம் 6 மி.மீ, சாத்தான்குளம் 6.40 மி.மீ, கோவில்பட்டி 18 மி.மீ, கழுகுமலை 80 மி.மீ, கயத்தார் 70 மி.மீ, கடம்பூர் 1.50 மி.மீ, எட்டையாபுரம் 5.10 மி.மீ, விளாத்திகுளம் 17 மி.மீ, காடல்குடி 5 மி.மீ, வைப்பார் 9 மி.மீ, சூரங்குடி 20 மி.மீ, ஓட்டப்பிடாரம் 73.50 மி.மீ, மணியாச்சி 9 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 487.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 25.67 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதியம்புத்தூர் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. 

    • நுழைவுத்தேர்வுகள் மாணவர்களின் உயர்வுக்கு வகை செய்ய வேண்டும்.
    • மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வை இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை :

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தையம்பட்டியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்ற அச்சம் காரணமாக நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி சத்யாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாணவி சத்யா ஏற்கனவே 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், நீட் தேர்வையும் எழுதியுள்ளார். அதில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில் மீண்டும் நீட் தேர்வு எழுதுவதற்காக சேலம் ஜலகண்டாபுரத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இம்முறையும் தம்மால் அதிக மதிப்பெண் பெற முடியாதோ என்ற அச்சத்தில் கடந்த 31-ஆம் தேதி நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சத்யா நேற்று உயிரிழந்திருக்கிறார்.

    நீட் தேர்வு மருத்துவப்படிப்பை ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாற்றுகிறது என்பது மட்டுமின்றி, அவர்களின் தன்னம்பிக்கையையும் சிதைக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்ததற்கு இது தான் காரணம் ஆகும். நடப்பாண்டில் மட்டும் கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு மாதத்தில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

    இந்தியாவில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட பயன்கள் என்ன? பாதிப்புகள் என்ன? என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்திருந்தால், மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை உனர்ந்து அதை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கும்.

    ஆனால், மத்திய அரசு அத்தகைய ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அதன் மீது தொடர் நடவடிக்கை எடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி செய்யவில்லை.

    நுழைவுத்தேர்வுகள் மாணவர்களின் உயர்வுக்கு வகை செய்ய வேண்டும். மாறாக மாணவர்களின் உயிர்களை பறிப்பதாக இருக்கக்கூடாது. மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வை இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதே நேரத்தில், கல்வியை விட உயிர் பெரிது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சிகளை மாணவச் செல்வங்கள் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார். 

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது.
    • சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34.10 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நாளை வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி பரவலாக மழை பெய்து வருகிறது.

    தேனி மாவட்டத்திலும் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள், குளம், கண்மாய், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 56.40 அடியாக உள்ளது. நீர்வரத்து 110 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2949 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 396 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.15 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1417 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 34.10 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை.

    ஆண்டிபட்டி 25.2, அரண்மனைபுதூர் 14, வீரபாண்டி 18.2, வைகை அணை 27.6, போடி 4, உத்தமபாளையம் 3.8, கூடலூர் 4.4, பெரியாறு அணை 34.8, தேக்கடி 4.2, சண்முகாநதி 7.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • தினந்தோறும் பஸ் இயக்க கோரிக்கை.
    • 505 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 11 மணி நேரம் ஆகும்.

    திருப்பதி:

    திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி அரசு சொகுசு பஸ் போக்குவரத்தை துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் நேற்று தொடங்கி வைத்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் யாத்திரையாக பழனிக்கு சென்ற போது அங்கிருந்த பக்தர்கள் திருப்பதிக்கு நேரடி பஸ் வசதி இல்லை என தனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். தினந்தோறும் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதுகுறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் பிரசாத் ரெட்டி ஆகியோருடன் கலந்து பேசினேன்.

    உடனடியாக பழனிக்கு பஸ் வசதி தொடங்க முடிவு செய்யப்பட்டது. 2 ஆன்மிக தலங்களுக்கும் இடையே பஸ் வசதி தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் அரசு பஸ் காலை 7 மணிக்கு பழனியை சென்றடைகிறது. 505 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 11 மணி நேரம் ஆகும் எனக் கூறப்படுகிறது.

    இதேபோல் பழனியில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு திருப்பதியை வந்து அடைகிறது.

    பெரியவர்களுக்கு ரூ.680, சிறியவர்களுக்கு ரூ.380 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து நேரடியாக பழனிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் நேரடியாக பாம்பன் வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • கடலோர காவல் படை, கடற்படை, உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் என 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடலுக்கு நடுவில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரெயில்வே மேம்பாலம் திறப்பு விழா நாளை மறுநாள் (6-ந்தேதி) நடைபெற உள்ளது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    அதேபோல் பாம்பன் கடல் பகுதியை கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்து அதன் வழியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் செல்வதை பாம்பன் ரோடு பாலத்தில் இருந்தவாறு பார்த்து ரசிக்கிறார்.

    இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமேசுவரம் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபடும் பிரதமர் மோடி உலக பிரசித்தி பெற்ற பிரகாரங்களை சுற்றி வருகிறார்.

    பின்னர் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே நடைபெறும் விழா மேடைக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். அந்த விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் தாம்பரம்-ராமேசுவரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    இதற்காக இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் நேரடியாக பாம்பன் வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதி மாலையிலிருந்து 6-ந்தேதி வரை ராமேசுவரம் தீவு பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் பிரதமர் வருகையின்போது இரண்டு மணி நேரம் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதற்கிடையே பிரதமர் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி. நவநீத்குமார் மேத்ரா தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் மண்டபம் ஹெலிபேட் தளத்தில் இருந்து ஆய்வை தொடங்கினர்.

    அதன் பின்னர் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழாவிற்காக சாலை பாலத்தில் தற்காலிக மேடை அமைய உள்ள இடம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் முதல் ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், மேலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பிலான ஆலோசனைக் கூட்டம் ஆலயம் விடுதியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், போலீஸ் சூப்பிபிரண்டு சந்தீஷ், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சியின் நடைபெறும் இடத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் கூறுகையில், பிரதமர் 6-ந்தேதி மதியம் சுமார் 12 மணி அளவில் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து இறங்குகிறார். பின்னர் மீண்டும் 2 மணிக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.

    பிரதமரின் வருகையை ஒட்டி கடலோர காவல் படை, கடற்படை, உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் என 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிரதமர் இரண்டு மணி நேரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். எனவே அந்த இரண்டு மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

    இதற்கிடையே பிரதமர் வருகையை முன்னிட்டு இன்று (4-ந்தேதி) முதல் வருகிற 6-ந்தேதி வரை ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    மேலும் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக யாரும் தென்பட்டால் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கவும் அறிவித்துள்ளதோடு கடற்படை போலீசார் 24 மணி நேரமும் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தத்தில் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் நடவடிக்கை.
    • டெல்லி ஜமா மமூதி முன்பாக துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்ட கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.

    இதைதொடர்ந்து, மாநிலங்களவையிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

    அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    இதன்பிறகு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்பட்டது.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், டெல்லி ஜமா மமூதி முன்பாக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்ட கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது.

    துணை ராணுவப்படையினர் லத்தி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர்.
    • எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

    வடவள்ளி:

    கோவை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. பக்தர்களால் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என இந்த கோவில் அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 வருடங்கள் நிறைவு பெற்று விட்டது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

    பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மங்கல இசை, திருமறை, திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, இறை அனுமதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை யாகசாலை பூஜை நடைபெற்றது. மேலும் முதல் கால வேள்வி, 2-ம் கால வேள்வி, 3-ம் கால வேள்வி பூஜைகளும் நடைபெற்றது.

    திருச்சுற்று தெய்வங்கள், அடிவாரத்தில் உள்ள தான்தோன்றி விநாயகர் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் எண் வகை மருந்து சாற்றுதல் நடைபெற்றது.

    இதையடுத்து கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருள செய்தல், மூலவரிடம் இருந்து யாகசாலைக்கு திருக்குடங்களை எழுந்தருள செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று 4 மற்றும் 5-ம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, திருமறை, திருமறை பாராயணம் மற்றும் 6-ம் கால வேள்வி பூஜை நடந்தது.

    அதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

    காலை 8.30 மணிக்கு மருதாசலமூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாச்சலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜபெருமாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடும் நடந்தது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், அறங்காவலர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராஜரத்தினம், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேகத்தை யொட்டி அதிகாலை முதலே மருதமலை முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்களிலும் பயணித்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.


    கோவில் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பக்தர்கள் முருகப்பெருமனை சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் மலைப்படிக்கட்டுகள், அடிவார பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, அதில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதனை பக்தர்கள் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோவில் படிக்கட்டுகள், மலைப்பாதைகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.


    பக்தர்கள் வசதிக்காக மலைப்படிக்கட்டுகளில் பச்சைப்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே குடிநீர் வசதியும், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், அன்னதானமும் வழங்கப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று மாலை 4.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வருகிறார். இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மருதமலை முருகன் கோவில் பகுதியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 1100 கனஅடியாக வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை அளவு குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1000 கனஅடியாக குறைந்து வந்தது.

    நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்து விரோதிகள்.
    • தி.மு.க. ஆட்சிக்கு வருவது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 1300 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்த கரிகாலன் கட்டிய சந்திர சுவாமிகள் கோவில் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

    * வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்து விரோதிகள்.

    * மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சிக்கு வருவது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து.

    * வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த எது வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறினார்.

    • வக்பு அமைப்புக்கு சொந்தமான பணம் ஏழை முஸ்லிம்களை சென்றடையும், இடைத்தரகர்களால் கொள்ளயைடிக்கப்பட்டது.
    • வக்பு சொத்துகளை முறையாக பராமரித்து சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதை உறுதி செய்வது அவசியம்.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.

    இதைதொடர்ந்து, மாநிலங்களவையிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    இதன்பிறகு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றி வரலாறு படைத்துள்ளது.

    வக்பு சட்டத் திருத்த மசோதா சிறுபான்மை சமூகத்தின் வளர்ச்சிக்கும் வக்பு சொத்துகளின் பாதுகாப்புக்கும் உதவும்.

    வக்பு அமைப்புக்கு சொந்தமான பணம் ஏழை முஸ்லிம்களை சென்றடையும், இடைத்தரகர்களால் கொள்ளயைடிக்கப்பட்டது.

    வக்பு சொத்துகளை முறையாக பராமரித்து சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதை உறுதி செய்வது அவசியம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நேற்று தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
    • வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியில் இருந்து தாறுமாறாக அதன் விலை எகிறி வருகிறது. கடந்த 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 480 ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தையும், 31-ந்தேதி ரூ.67 ஆயிரத்தையும் தாண்டியது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயர்ந்து, கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்தது. நேற்று முன்தினம் விலை மாற்றம் இல்லாமல் சற்று ஆறுதலை கொடுத்த நிலையில், நேற்று மீண்டும் விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,400-க்கும் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.67,200-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், கிலோவுக்கு நான்காயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

    02-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    01-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600

    30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-04-2025- ஒரு கிராம் ரூ.112

    02-04-2025- ஒரு கிராம் ரூ.114

    01-04-2025- ஒரு கிராம் ரூ.114

    31-03-2025- ஒரு கிராம் ரூ.113

    30-03-2025- ஒரு கிராம் ரூ.113

    ×