

ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடலுக்கு நடுவில் ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரெயில்வே மேம்பாலம் திறப்பு விழா நாளை மறுநாள் (6-ந்தேதி) நடைபெற உள்ளது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
அதேபோல் பாம்பன் கடல் பகுதியை கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் புதிய ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தையும் பிரதமர் மோடி திறந்துவைத்து அதன் வழியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் செல்வதை பாம்பன் ரோடு பாலத்தில் இருந்தவாறு பார்த்து ரசிக்கிறார்.
இதையடுத்து அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமேசுவரம் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபடும் பிரதமர் மோடி உலக பிரசித்தி பெற்ற பிரகாரங்களை சுற்றி வருகிறார்.
பின்னர் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே நடைபெறும் விழா மேடைக்கு பிரதமர் மோடி வருகை தருகிறார். அந்த விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் தாம்பரம்-ராமேசுவரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இதற்காக இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் நேரடியாக பாம்பன் வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதி மாலையிலிருந்து 6-ந்தேதி வரை ராமேசுவரம் தீவு பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் பிரதமர் வருகையின்போது இரண்டு மணி நேரம் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படும் என்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே பிரதமர் வருகையையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி. நவநீத்குமார் மேத்ரா தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் மண்டபம் ஹெலிபேட் தளத்தில் இருந்து ஆய்வை தொடங்கினர்.
அதன் பின்னர் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழாவிற்காக சாலை பாலத்தில் தற்காலிக மேடை அமைய உள்ள இடம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் முதல் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் தற்போது செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், மேலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பிலான ஆலோசனைக் கூட்டம் ஆலயம் விடுதியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், போலீஸ் சூப்பிபிரண்டு சந்தீஷ், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சியின் நடைபெறும் இடத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் கூறுகையில், பிரதமர் 6-ந்தேதி மதியம் சுமார் 12 மணி அளவில் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து இறங்குகிறார். பின்னர் மீண்டும் 2 மணிக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.
பிரதமரின் வருகையை ஒட்டி கடலோர காவல் படை, கடற்படை, உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் என 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிரதமர் இரண்டு மணி நேரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். எனவே அந்த இரண்டு மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
இதற்கிடையே பிரதமர் வருகையை முன்னிட்டு இன்று (4-ந்தேதி) முதல் வருகிற 6-ந்தேதி வரை ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
மேலும் கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக யாரும் தென்பட்டால் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கவும் அறிவித்துள்ளதோடு கடற்படை போலீசார் 24 மணி நேரமும் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தத்தில் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.