என் மலர்
நீங்கள் தேடியது "Salt Production Impact"
- 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.
- தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பகல் வேலைகளில் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று, பகலில் மீண்டும் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து, மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யத் தொடங்கி கனமழையாக மாறியது.
இதனால் தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.
தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் உற்பத்தியாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.
அத்திமரப்பட்டி, காலங்கரை, கோரம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நெல் அறுவடை பணியும் பாதிப்படைந்துள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கிடங்குகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
குறிப்பாக திருச்செந்தூர் சாலையில் வடிகால் இல்லாததால் முழு தண்ணீரும் சாலையில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கீழே இறங்கி வாகனத்தை உருட்டி சென்று அவதி அடைந்தனர்.
இதுபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளான திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் , கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டி னத்தில் 96 மில்லிமீட்டர், தூத்துக்குடி 16.20 மி.மீ, திருச்செந்தூர் 55 மி.மீ, குலசேகரப்பட்டினம் 6 மி.மீ, சாத்தான்குளம் 6.40 மி.மீ, கோவில்பட்டி 18 மி.மீ, கழுகுமலை 80 மி.மீ, கயத்தார் 70 மி.மீ, கடம்பூர் 1.50 மி.மீ, எட்டையாபுரம் 5.10 மி.மீ, விளாத்திகுளம் 17 மி.மீ, காடல்குடி 5 மி.மீ, வைப்பார் 9 மி.மீ, சூரங்குடி 20 மி.மீ, ஓட்டப்பிடாரம் 73.50 மி.மீ, மணியாச்சி 9 மி.மீ என மாவட்டத்தில் மொத்தம் 487.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 25.67 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதியம்புத்தூர் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தஞ்சையில் திடீரென வானம் திரண்டு மழை பெய்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை நேரத்தில் வானம் கருமேகத்துடன் காட்சி அளித்தது. இதனால் மழை வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் 2-வது நாளாக இரவு மழை பெய்ய தொடங்கியது. லேசான தூறலாக தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது.
இதனால் தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இரவு மழை பெய்ததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை அதன்பின் நின்றது. இதனால் தஞ்சை மேரீஸ் கார்னரில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. அதைத் தொடர்ந்து மழை நின்ற பின் மோட்டார் மூலமாக தண்ணீர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது. திருவாரூரில் வெயில் வாட்டி எடுத்த நிலையில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்ய வில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. நேற்று வானம் திரண்டு மழை கொட்ட தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக பெய்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாகை மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மேலும் வேதாரண்யம் பகுதிகளில் மழை பெய்ததால் அந்த பகுதியில் உப்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் 25 ஆயிரம் உப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மணல்மேடு, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
டெல்டா மாவட்டங்களில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், மழை பெய்யத் தொடங்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:-
வலங்கைமான் - 72.4
பாபநாசம் - 67.2
நன்னிலம் - 51.4
குடவாசல் - 44.8
அணைக்கரை - 32.6
நீடாமங்கலம் - 24.4
பாண்டவையாறு - 15.4
வெட்டிக்காடு - 14.8
திருவாரூர் - 13.8
நெய்வாசல்தென்பாதி - 11.6
கோரையாறு - 10.2
ஒரத்தநாடு - 8.9
பூதலூர் - 7.4
மஞ்சளாறு - 3.8
ஈச்சன்விடுதி - 2






