என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: ED-க்கு எதிரான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற கோரிக்கை- நீதிபதிகள் ஏற்க மறுப்பு
    X

    டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: ED-க்கு எதிரான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற கோரிக்கை- நீதிபதிகள் ஏற்க மறுப்பு

    • இறுதிக்கட்ட விசாரணை வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறும்.
    • வழக்கை வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற கோரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், இந்த சோதனையின் அடிப்படையில் மேல் நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை முதலில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் விசாரித்து, மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வாய்மொழியாக அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக 2 நீதிபதிகளும் கூறினர். இதனால், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தபோது, மூத்த வக்கீல் கே.எம்.விஜயன் ஆஜராகி, டாஸ்மாக் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வக்கீலாக கே.ராஜா உள்ளார். இவர் நீதிபதி கே.ராஜசேகரின் இளைய சகோதரர் என்பதால், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றலாம்' என்றார்.

    ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    இந்த நிலையில், ஐகோர்ட்டு தலைமை நீதி பதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு இன்று காலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல் ஆஜராகி, ''டாஸ்மாக் துறையை கவனித்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வக்கீலாக, நீதிபதி கே.ராஜசேகரின் தம்பி உள்ளதால், இந்த வழக்கை வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.

    இதை ஏற்க மறுத்த நீதி பதிகள், 'இதுகுறித்து சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் முறையிடலாம்' என்று கூறினர்.

    Next Story
    ×