என் மலர்
ஆசிரியர் தேர்வு
- ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதல்.
- 101 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றச்சாட்டு.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து இன்று 2ஆவது நாளாக இரவு நேரத்தில் ரஷியா டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழ்ந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கீவில் உள்ள டெஸ்னியான்ஸ்கி மாவட்டத்தில் உள்ள இரண்டு குடியிருப்பு கட்டிடம் ரஷியாவின் டிரோன்கள் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்தது. 9 மற்றும் 16 மாடி குடியிருப்புகளில் இருந்து மக்களை மீட்புக்குழுவினர் வெளியேற்றினர். 74 வயது மூதாட்டியால் வீட்டில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதனால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
மேலும் 19 வயது இளம் பெண் மற்றும் அவருடைய 46 வயது தாய் ஆகியோரும் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 101 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியு்ளது. இதில் 90 டிரோன்களை தடுத்து நிறுத்தியும், தாக்கியும் அழித்ததாக உக்ரைன் விமானப்படை தெரிவித்து்ளளது. ஐந்து டிரோன்கள் நான்கு இடங்களை தாக்கியது எனவும் தெரிவித்துள்ளது.
நேற்று ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி 4 பேர் கொலை செய்த நிலையில், இந்த தாக்குதலை ரஷியா நடத்தியுளள்து.
- பீகாரில் SIR பணி மேற்கொள்ளப்பட்டு, தேர்தல் நடைபெற இருக்கிறது.
- அடுத்த வருடம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாக்கு உரிமையை தேர்தல் ஆணையம் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
என்றாலும், நடைமுறைப்படுத்தி அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நாடு தழுவிய SIR குறித்து அறிவிக்க, நாளை மாலை செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அப்போது விரிவான விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களுடன் 10 முதல் 15 மாநிலங்களில் முதற்கட்டமாக SIR பணியை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபர் நிச்சயம் இருப்பார்.
- ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துகிறார்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராக பதவியேற்றார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
கமலா ஹாரிஸ் கொடுத்த சமீபத்திய நேர்காணலில், "எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபர் நிச்சயம் இருப்பார். அது நானாக கூட இருக்கலாம். ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துவார் என்ற எனது கணிப்புகள் உண்மையாகிவிட்டன" என்று தெரிவித்தார்.
- விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார்.
- யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக, படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். சமீபத்தில் படங்களில் நடிக்காதது பற்றி நடிகை ரோஜா தெரிவித்துள்ள கருத்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோஜா அளித்த பேட்டியில், "நடிகர் விஜய்யுடன் 'நெஞ்சினிலே' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். அப்போது விஜய் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார். யாரிடமும் அதிகம் நெருங்கி பேசமாட்டார். சில வருடங்கள் கழித்து, அவரது நடிப்பில் 'காவலன்' படத்தில் அசின் அம்மாவாக நடித்தேன்.
அந்தப் படப்பிடிப்பில் என்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய், 'மேடம்.. நீங்கள் எனக்கு மாமியாராக நடிக்கிறீர்களா?. படக்குழுவில் சொன்னபோது, அவர்கள் சும்மா சொல்கிறார்கள் என்று நினைத்தேன். நீங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களை நாங்கள் இன்னும் நாயகியாகவே பார்த்து வருகிறோம்' என்று கூறினார்.
விஜய் மட்டுமல்ல தெலுங்கில் நடிகர் கோபிசந்துக்கு மாமியாராக நடித்தபோது, அவரும் இதே விஷயத்தைக் கூறினார். அதனால் தான் நான் சினிமாவில் அம்மா, மாமியார் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று ஒதுங்கினேன். 'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்ததுபோல ஒரு கதாபாத்திரம் கிடைத்தால், மீண்டும் நடிப்பது பற்றி யோசிப்பேன்" என்று கூறியுள்ளார்.
- தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும்.
- தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும்.
சென்னை:
தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது. இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இருந்தது. மேலும் விலை அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால் அந்த விலையில் திடீரென்று சரியத் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை விலை குறைந்து வந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயருமா? அல்லது ஏற்ற-இறக்க நிகழ்வு தொடருமா?, விலை குறையும் இந்த நேரத்தில் தங்கத்தின் மீது முதலீடு மேற்கொள்வது சரியாக இருக்குமா? என்ற கேள்வி பலருடைய மனதிலும் ஓடும்.
இதுகுறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு இடைவேளைதான் இந்த விலை குறைவு. இது பின்னர் மீண்டும் வேகம் எடுக்கும்.
தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) 4,100 டாலர் என்ற அளவில் இருக்கிறது. இது விரைவில் 4,500 டாலர் முதல் 4,800 டாலர் வரை செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு 2 முதல் 3 மாதங்கள் காலம் எடுக்கும்.
ஆகவே தங்கம் விலை நிச்சயம் உயரும். அதே சமயம் ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் குறைய வாய்ப்பே கிடையாது.
பொருளாதார சூழ்நிலை, பிரிக்ஸ் நாடுகளின் சில முன்னேற்பாடுகள், அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள், கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு சரிவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கிறது. மேலும் அமெரிக்காவின் பெடரல் வங்கியில் வைப்புநிதிக்கான வட்டிவிகிதம் நவம்பர் மாதம் குறைந்தால், முதலீட்டாளர்கள் அதில் இருந்து பணத்தை எடுத்தும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.
அப்படி பார்க்கையில் தங்கத்தின் தேவை வருங்காலங்களில் அதிகரிக்கும். தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும். குறுகியகால முதலீட்டுக்கு தங்கம் ஏற்றது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- என்ன சாதனை படைத்தாலும் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம்.
- எனக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவில் விளையாடுவது பிடிக்கும் என்றார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரவெற்றி பெற்றது.
இந்நிலையில், போட்டி முடிந்தபின் இந்திய அணியின் சீனியர் வீரர் ரோகித் சர்மா பேசியதாவது:
எனக்கு எப்போதுமே ஆஸ்திரேலியாவில் விளையாடுவது பிடிக்கும்.
இங்கு 2008-ம் ஆண்டு நான் முதல் முறையாக வந்து விளையாடிய இனிமையான நினைவுகள் உள்ளன.
நானும் விராட் கோலியும் மீண்டும் ஆஸ்திரேலியா வந்து விளையாடுவோமா என்பது எங்களுக்கு தெரியாது.
என்ன சாதனைகள் படைத்தாலும், பாராட்டுகளைப் பெற்றாலும் எங்கள் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம்.
இந்த தொடருக்காக பெர்த் வந்தபோது கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டு புதிதாக தொடங்கினோம்.
ஆஸ்திரேலியாவில் கடினமான ஆடுகளத்தையும், தரமான பந்து வீச்சையும் எதிர்பார்க்கலாம். இங்கு விளையாடுவது ஒருபோதும் எளிதானது கிடையாது.
நாங்கள் தொடரை வெல்லவில்லை. ஆனால் நேர்மறையான விஷயங்கள் அதிகம் கிடைத்துள்ளன. இது ஒரு இளம் அணி. எனவே அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும்.
நான் இந்திய அணிக்குள் வந்தபோது சீனியர் வீரர்கள் அதிகம் உதவினார்கள். தற்போது அந்தப் பணியை நாங்கள் செய்கிறோம்.
இளம் வீரர்களை வழிநடத்த வேண்டும். ஆட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும். அடிப்படையான விஷயங்களைச் செய்ய வேண்டும். நான் இங்கு விளையாடும் ஒவ்வொரு முறையும் அதனை தான் செய்கிறேன் என தெரிவித்தார்.
- மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு கேரள அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
- இந்நிலையில் திடீர் மனமாற்றமாக கேரள அரசு மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றது.
திருவனந்தபுரம்:
மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தது. இதில் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்கள் இணைய தொடர்ந்து மறுத்தது. இதனால் மத்திய அரசு அந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்திற்கு அனுப்ப வேண்டிய நிதியை நிறுத்தி வைத்தது.
இந்தத் திட்டத்தை ஏற்றால்தான் நிதி என்றால், அந்த நிதியே வேண்டாம் என தமிழக அரசு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதே நடைமுறையை கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் பின்பற்றியது.
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்துக்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், பா.ஜ.க.வுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மறைமுக கூட்டணி வைத்துள்ளது, பி.எம்.ஸ்ரீ திட்டம் மூலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது என குற்றம்சாட்டியது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பினோய் விஸ்வம் கூறுகையில், மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளி கல்வி வளர்ச்சி திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கேரள அரசு கையெழுத்திட்டதாக வெளிவரும் செய்தி உண்மையானால், அது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது. இது தொடர்பாக, இடது முன்னணியில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் தேசிய பொது செயலாளர் எம்.ஏ.பேபியின் கருத்தை கூட கேரள அரசு மதிக்கவில்லை. இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொது செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் எனதெரிவித்துள்ளார்.
இதனால் தற்போது கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் விரிசல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் ஆளும் கட்சியின் ஆதரவு மாணவர் அமைப்பான இந்திய மாணவர் பெருமன்றமும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2-ம் வாரம் அப்சரா சிஜேவும் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே யார் எல்லாம் வரப்போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் சின்னத்திரை நட்சத்திர ஜோடி பிரஜன்-சான்ட்ரா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.
இதற்கு முன்னர் 2வது சீசனில் தாடி பாலாஜி மற்றும் நித்யா ஜோடியாக பிக் பாஸில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.
- ரூ.20 லட்சம் நிவாரண தொகையானது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். மேலும், அவர்களது குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அப்போது விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் கூறினார்.
இதனையடுத்து கடந்த 17-ந் தேதி விஜய் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண தொகை வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பானது நடைபெறவில்லை. இதனிடையே கடந்த 18-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரண தொகையானது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால் கரூருக்கு எப்போது சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டது. ஆனால், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனிடையே, த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்து, அவர்களை அழைப்பதற்காக த.வெ.க. நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்றுள்ளனர்.
பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விரைவில் சென்னைக்கு சென்று விஜய்யை சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் தேதியானது விரைவில் தெரிவிக்கப்படும் எனவும், போக்குவரத்து ஏற்பாடுகள் த.வெ.க. சார்பில் செய்து தரப்படும் எனவும் த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்பட்டது.
கரூரில் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை மொத்தமாக நாளை மறுநாள் மாமல்லபுரத்துக்கு வரவழைத்து த.வெ.க. தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது சந்திப்பு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் 41 அறைகளில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், பின்னர், விஜய் ஒவ்வொரு அறைக்கும் சென்று அவர்களை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
- 24 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது தென்ஆப்பிரிக்கா.
- ஆஸ்திரேலியா 199 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க பேட்டராக களம் இறங்கிய கேப்டன் வால்வார்த் 31 ரன்னில் வெளியேறினார். அதன்பின் தென்ஆப்பிரிக்கா வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் அலனா கிங் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்ஆப்பிரிக்கா பேட்டர்கள் திணறினர்.
அவர் ஏழு ஓவரில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்க்க, தென்ஆப்பிரிக்கா 24 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 97 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா கேப்டனை தவிர்த்து விக்கெட் கீப்பர் ஜாஃப்டா 29 ரன்களும், நடின் டி கிளெர்க் 14 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் 98 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. அந்த அணி 16.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து, 199 பந்துகள் மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஏழு போட்டிகளில் 6-ல் வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து மூலம் 13 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் காலிறுதியில் வருகிற 30ஆம் தேதி மோத வாய்ப்புள்ளது.
- பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.
- அந்த பேருந்து விதிமுறைகளை மீறி ஸ்லீப்பர் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற ஆம்னி பஸ் நேற்று காலை ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது.
பஸ்சில் இருந்த 19 பயணிகள் மற்றும் பைக்கில் வந்த வாலிபர் உட்பட 20 பேர் பலியானார்கள்.
இந்நிலையில் ஆம்னி பஸ்ஸில் பார்சலில் வைக்கப்பட்டிருந்த ரூ.46 லட்சம் மதிப்புடைய 234 ஸ்மார்ட்போன்கள் வெடித்ததே தீவிபத்து தீவிரமடைய காரணம் என்று தெரியவந்துள்ளது.
பேருந்தின் சரக்கு வைக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள லித்தியம் அயன் பேட்டரிகள் வெப்பம் காரணமாக வெடித்ததால் தீ மளமளவென பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயணிகள் பேருந்தில் செல்போன்கள் பார்சலை எடுத்துச் சென்றது கடுமையான பாதுகாப்பு விதிமீறலாக பார்க்கப்படுகிறது. மேலும் அந்த பேருந்து விதிமுறைகளை மீறி ஸ்லீப்பர் பேருந்தாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
பைக்கில் வந்து பேருந்துடன் மோதியவர்கள் விபத்துக்கு சிறிது நேரம் முன் பெட்ரோல் பங்கில் மதுபோதையில் காணப்பட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது. எனவே விசாரணை முழுமையாக நிறைவடைந்த பின்னரே பஸ் விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.
- 2001 முதல் 2008 வரை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி செய்து வந்தார்.
- அமெரிக்கா எப்போதும் சர்வாதிகார அரச தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.
1999 இல் ராணுவ தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரத் அப்போதைய நவாஸ் ஷெரீப் ஆட்சியை ராணுவ புரட்சி மூலம் கவிழ்த்து தன்னை ஆட்சியாளராக அறிவித்துக்கொண்டார். 2001 முதல் 2008 வரை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி செய்து வந்தார்.
இந்நிலையில் அவரது ஆட்சி காலத்தில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏ -வின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.
15 ஆண்டுகள் சிஐஏவில் பணியாற்றிய ஜான் கிரியாகோ 2002 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பணிபுரிந்த அனுபவங்களை செய்தி நிறுவனத்திடம் அண்மையில் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பர்வேஸ் முஷாரப்பும் அமெரிக்காவும் நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் கொண்டிருந்தார்கள். இராணுவ மற்றும் மேம்பாட்டு உதவி வடிவில் அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்களை செலுத்தி பர்வேஸ் முஷாரப்பின் ஒத்துழைப்பைப் பெற்றது. நாங்கள் வாரத்திற்கு பல முறை முஷாரப்பை சந்தித்தோம்.
அமெரிக்கா இந்த அணு ஆயுதங்களை சுதந்திரமாக கையாள முஷாரப் அனுமதித்தார். பாகிஸ்தான் அரசாங்கத்துடனான எங்கள் உறவு மிகவும் அன்பானது. அமெரிக்கா எப்போதும் சர்வாதிகார அரச தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது.
அவர்கள் பொதுக் கருத்தைப் பற்றியோ அல்லது ஊடகங்களைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. எனவே நாங்கள் அடிப்படையில் முஷாரப்பை விலைக்கு வாங்கினோம்" என்று தெரிவித்தார்.






